சபர்மதி ரயில் எரிப்பைத் தொடர்ந்து நரேந்திர மோடியின் ஆசியுடன் களமிறங்கிய சங்பரிவாரங்கள், 2000 முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர். இந்த இனப்படுகொலை உலகையே உலுக்கியது. 1,50,000 பேர் வீடுகளை இழந்தனர். சிசுக்கள் கொலை, பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு என ஆர்.எஸ்.எஸ். இன் குறிக்கோள்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகின்றன. பில்கிஸ் பானுவை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி அவரது 3 வயது மகளை தெருவுக்கு இழுத்து வந்து தரையில் அடித்துக் கொன்றார்கள். அதைத் தொடர்ந்து பில்கிஸின் குடும்பத்தார் 14 பேர் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்ட பில்கிஸின் உறவினர்கள் அனைவரையும் குஜராத் காவல் துறையினர் மூட்டை மூட்டையாக உப்பை கொட்டிப் புதைத்தது பின்னர் தெரிய வந்தது. அங்கு புதைக்கப்பட்ட எந்த பிணத்திற்கும் தலை இல்லாதிருந்தது!

பிணங்களைத் தோண்டி எடுத்து தடயவியல் ஆய்வுகள் நடத்தப்பட்ட நீண்ட நெடிய விசாரணைகளுக்குப் பிறகு 2008 பிப்ரவரியில் தீர்ப்பு வெளிவந்தது. காவல் துறையினர் 6 பேர் மற்றும் குற்றவாளிகள் 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை குஜராத் நீதிமன்றத்தில் விசாரித்தால் தீர்ப்பு என்னவாக இருந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. பில்கிஸ் பானுவின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 2004 ஆகஸ்டில் இவ்வழக்கை விசாரிக்கும்படி சி.பி.அய்.க்கு உத்தரவிட்டது. குஜராத் மாநிலம் எவ்வாறு மனநோய் அகமாக உருமாறியுள்ளது என்பதனை தொடர் நிகழ்வுகள் நமக்கு உணர்த்திக் கொண்டே வருகின்றன.

மதவெறியர்களின் செயல்களுக்கு உறுதுணையாக இருக்கும் அரசு, ஆயுதங்கள் கொடுத்துதவும் காவல் துறை, வழக்குகளை சுக்கு நூறாய் பிரித்தெரியும் நீதிமன்றங்கள். இவைதான் 21ஆம் நூற்றாண்டில் உள்ள குஜராத்தின் சித்திரம். கடந்த இரு மாதங்களாக குஜராத் அரசு மூடி மறைக்க முயலும் ஒரு புதிய கதைக்குள் இனி நாம் செல்லலாம். குஜராத்தின் சற்றும் முன்னேற்றம் காணாத கிராமப்புறத்தில் வசிக்கும் தலித் பெண் சரஸ்வதியின் கதை இது.

குடும்பம் : மேகசானா மாவட்டத்தின் விச்நகர் வட்டத்தில் உள்ள சேதல்வசானா கிராமத்தில் வசிக்கும் சரஸ்வதியின் தந்தை ஒரு தினக்கூலி. சரஸ்வதியுடன் பிறந்தவர்கள் அய்வர். பத்தாம் வகுப்பில் 89% மதிப்பெண் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் 70% மதிப்பெண் பெற்றார் சரஸ்வதி. தங்கள் மகள் எந்த சிறப்புப் பயிற்சியும் இல்லாமல் கல்வியில் சிறந்து விளங்குவதை உணர்ந்த பெற்றோர், கல்விக்கு செலவாகும் பணத்தைத் திரட்ட முடியாததால் தங்கள் மகளின் கல்வியை பாதியில் நிறுத்தினர். மருத்துவப் படிப்பை லட்சியமாகக் கொண்ட சரஸ்வதியால் குடும்பச் சூழல் காரணமாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தான் சேர முடிந்தது. சூலை 24, 2007 அன்று அவர் பத்தான் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார்.

பத்தான் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஆசிரியர்கள் : பேரா. மகேந்திர பிரஜாபதி, எம்.எஸ்.சி., பி.எட்.; பேரா. அதூல் பட்டேல், எம்.எஸ்.சி., எம்.பில்., பிஎச்.டி.; பேரா. சுரேஷ் பட்டேல், எம்.ஏ., பி.எட்., (சமூகவியல்); பேரா. கிரண் பட்டேல், எம்.எஸ்சி., பி.எட்., பி.எச்டி., (கணிதம்); பேரா. அஸ்வின் பர்மர், எம்.ஏ., பி.எட்., எல்.எல்.பி.; பேரா. மணிஷ் பர்மர், ஓவியத்தில் பட்டதாரி, ஓவிய ஆசிரியர்; பேரா. பாரதி பட்டேல், 1997இல் விரிவுரையாளராக பத்தான் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பணியில் சேர்ந்த இவர் 2001இல் பணிமாற்றம் செய்யப்பட்டார். வழக்கு தொடுத்து மீண்டும் பத்தான் பள்ளிக்கு வந்தார்; ஜசோதா சோசி :பெண்கள் விடுதியில் உள்ள காப்பாளர்.

திட்டங்கள் : பேடி பச்சாவோ (மகளை காப்பாற்று), கன்யா கேள்வாணி (பெண் குழந்தை கல்வி) என்கிற பெண் குழந்தைகளை மேம்படுத்தும் சிறப்புத் திட்டங்கள் முதல் மலம் அள்ளி மோட்சம் பெறும் திட்டம் வரை, அனைத்தும் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வரலாற்று சாதனைகளே!

கொடுமை : பத்தான் கல்லூரியில் இருக்கை கிடைத்ததும் சரஸ்வதியின் தந்தை, அந்தக் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் பலூச் அவர்களை பொருளாதார உதவிக்காக நாடினார். அவருடன் அவரது சக பேராசிரியர்களின் கூட்டுதவியுடன் பணத்தை திரட்டிக் கொடுத்தார்.

செப்டம்பர் 11, 2007 அன்று பேராசிரியர் அஸ்வின் பர்மர் சரஸ்வதியை கல்வி தொழில்நுட்ப அறைக்கு வரச் சொன்னார். சரஸ்வதி அந்த அறைக்குச் சென்ற பொழுது அங்கு உள்ளே ஏற்கனவே மனிஷ் பர்மர் மற்றும் மகேந்திர பிரஜாபதி இருந்தனர். சரஸ்வதி உள்ளே நுழைந்ததும் அஸ்வின் பர்மர் கதவை பூட்டினார். சரஸ்வதியின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி அவரை வன்புணர்வுக்கு உட்படுத்தினார் அஸ்வின். அதன் பின்னர் மற்ற இருவரும் அவரை வல்லுறவுக்கு ஆட்படுத்தினர். மூவரும் அவர்களது கைபேசி புகைப்படக் கருவியில், சரஸ்வதியின் நிர்வாணத்தை பல கோணங்களில் புகைப்படம் எடுத்தனர். மூவரும் அவரை கடுமையாக மிரட்டினார்கள். ஒரு வார்த்தை வெளியே பேசினால் கூட புகைப்படங்கள் வெளி வந்துவிடும்; கல்வியை தொடர இயலாது என்பது தான் அந்த மிரட்டலின் உட்பொருள்.

இந்த சம்பவம் நடந்து 15 நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதனை கூடத்திற்கு அழைக்கப்படுகிறார் சரஸ்வதி. இந்த முறை அங்கு பேராசிரியர்கள் மனிஷ்பர்மர், கிரண் பட்டேல் மற்றும் சுரேஷ் பட்டேல் காத்திருக்கிறார்கள். பாலியல் வன்புணர்வு தொடர்கிறது. அடுத்து டிசம்பர் 31, 2007 முதல் சனவரி 11, 2008 வரை மாணவிகள் அனைவரையும் கும்பவா கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்குள்ள பள்ளியில் நேரடியாக கல்விச் சூழல் பரிசோதனைகள் செய்வது என்பது படிப்பின் ஒரு பகுதி. அங்கு நள்ளிரவில் பல பேராசிரியர்கள் தங்கள் விருப்பம் போல் பாலியல் இச்சையை எண்ணற்ற முறை நிறைவு செய்கிறார்கள்.

ஒரு மாதம் கழித்து சனவரி 25, 2008 அன்று மொத்த பேராசிரியர் கூட்டத்தின் தலைவராகத் திகழும் பேராசிரியர் அதூல் பட்டேல், கல்லூரியின் கணினி அறையில் சரஸ்வதியுடன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு, வெளியே இது பற்றி பேசினால் கொன்று விடுவதாக மிரட்டினார். ஏற்கனவே இந்த நிகழ்வுகள் நடந்த பின்னணியில் இந்த பேராசிரியர்கள் சரஸ்வதியை பேய் ஓட்டுபவரிடம் அழைத்துச் சென்று இந்தப் பெண்ணின் உடலில் தீய ஆவி உள்ளது என்று கூறினர். இது அந்த பெண்ணைப் பற்றிய ஒரு குழப்பமான சித்திரத்தை உருவாக்கவே புனையப்பட்டது.

சூழ்நிலையின் அழுத்தம் தாளாமல் சனவரி 30 அன்று இந்த கூட்டு பாலியல் வன்புணர்வு நிகழ்வுகளைப் பற்றி தனது சக மாணவிகளிடம் கதறினார். அடுத்த நாள் சனவரி 31 அன்று கல்லூரி பிரார்த்தனையின் பொழுது மயங்கி விழுந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பாலியல் வன்புணர்வுக்கு சரஸ்வதி உட்படுத்தப்பட்டதை மருத்துவர் உறுதிப்படுத்தினார். அடுத்து சரஸ்வதி கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டார். சில பேராசிரியர்களைப் பார்த்த மாத்திரத்தில் பல முறை மயங்கி விழுந்தார். உடனே பேராசிரியை பாரதி படேலின் தலைமையில் 97 மாணவிகள் கோரிக்கை மனு ஒன்றை தயாரித்து சனவரி 31 அன்று முதல்வரிடம் அளித்தனர்.

பிப்ரவரி 1 அன்று முதல்வர் தனது உயர் அதிகார அலுவலகத்துக்குச் சென்று சம்பவம் பற்றி தெரிவித்து மனுவை அளித்துள்ளார். பிப்ரவரி 5க்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் மீது நம்பிக்கை அற்றுப் போன நிலையில், பாரதி பட்டேல் மற்றும் மாணவிகள் உடனே தங்கள் பெற்றோருக்கு தகவல் கொடுக்க முடிவெடுத்தனர். பிப்ரவரி 4 அன்று மாணவிகளுடன் ஒரு பெரும் படையே வந்து குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்களை அடித்து உதைத்தது. உடனே நொடிப் பொழுதில் காவல் துறை சம்பவ இடத்திற்கு வந்தது. வந்திருக்காவிட்டால் அந்த பேராசிரியர்களின் தோல் உரிக்கப்பட்டிருக்கும். பிப்ரவரி 5 அன்று 25,000 பேர் பங்கேற்ற கண்டனப் பேரணி முழக்கங்கள் ஊரை நிலை குலையச் செய்தன. கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன் பிறகு தான் அரசின் துரித கவனம் கிடைத்தது. பேராசிரியர்களின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டன. உடனே குஜராத் ஊடகங்களின் விவாதப் பொருளாக இந்த சம்பவம் மய்யம் கொண்டது. இருப்பினும் அரசு மருத்துவர்கள் சரஸ்வதியை மோசமாகவே நடத்தினர். தேசிய பெண்கள் ஆணையத்தின் குழு உடனே பத்தான் சென்று தனது விசாரணையை தொடங்கியது. பல பரிந்துரைகளை அந்தக் குழு அளித்தது. பெண்கள் கல்லூரியில் பெண் பேராசிரியர்களை மட்டுமே நியமிப்பது எனப் பல கோரிக்கைகள் அளிக்கப்பட்டன.

பிப்ரவரி 4 அன்று சம்பந்தப்பட்ட 6 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் விந்து பரிசோதனை மற்றும் சம்பவ இடங்களில் கிடைத்த தடயங்கள் என ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டன. பிப்ரவரி 7 அன்று சரஸ்வதியின் வாக்குமூலத்தை மாவட்ட மாஜிஸ்திரேட் பதிவு செய்தார். பிப்ரவரி 7 அன்று மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து நரேந்திர மோடியை சந்திக்க ஊர்வலமாக காந்திநகர் சென்றனர். ஆனால் நரேந்திர மோடியும், கல்வி அமைச்சர் ராமாலால் வோராவும் இவர்களை சந்திக்க மறுத்து விட்டனர். 2000 முதலே இந்த கல்லூரி குறித்த பல்வேறு புகார்கள் எழுந்தும் எந்த நடவடிக்கையையும் கல்வித் துறை எடுக்கவில்லை.

கல்வி ஆண்டு தொடங்கியதும் அனுமதிக்கப்பட்ட பெண்கள் அனைவரையும் தங்கள் கைபேசி புகைப்படக் கருவியில் புகைப்படம் எடுத்து அதனை அலவலக கணினிக்கு மாற்றி விடுவார்கள் பேராசிரியர்கள். பிறகென்ன கல்வி கற்பித்தல் தொடங்குகிறதோ இல்லையோ, பேராசியர்களின் பாலியல் ஆண்டு தொடங்கிவிடும். இந்த கல்லூரியில் மாணவர்களின் மதிப்பெண்களில் 40 -44% வரை அதாவது 200-250 மதிப்பெண்கள் வரை வழங்கும் அதிகாரத்தை அந்த கல்லூரியின் பேராசிரியர்களுக்கு வழங்கியுள்ளது கல்வி முறை. இந்த அதிகாரத்தின் அடிப்படையில் தான் பெண்களின் மீதான பாலியல் வன்முறை தொடங்குகிறது. குஜராத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் முதுகலை மாணவர்கள், ஆய்வு செய்யும் மாணவிகள் என இவர்களும் இந்த பாலியல் சித்தரவதைகளுக்கு தப்பவில்லை என்பதனை பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மாணவிகள், பெற்றோரின் தொடர் போராட்டத்தால் புதிய முதல்வராக ஜமுனா தரல் பதவியேற்றார். ஜமுனா பதவியேற்ற மறுகணமே பா.ஜ.க. அடியாட்களுடன் இணைந்து மாணவிகள் அனைவரையும் அவர் மிரட்டியுள்ளார். ஜமுனாவை மாற்றக்கோரி போராட்டம் தொடர்ந்தது. பிப்ரவரி 25 அன்று கல்வி அமைச்சர் ராமாலால் வோரா 15 பேர் கொண்ட குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பிப்ரவரி 26 அன்று பெற்றோர் சங்கத் தலைவர் கேமார் சவுத்ரியின் தலைமையில் சரஸ்வதியின் தந்தை உட்பட குழு காந்தி நகருக்குப் பயணமானது.

டிசம்பர் கூட்டத்தொடர் அடுத்த நாள் தொடங்க இருந்ததால், அரசு நிறையவே பதட்டத்துடன் காணப்பட்டது. பல அமைச்சர்கள் சூழ்ந்து 15 பேர் கொண்ட குழுவை மிரட்டினர். பாதிக்கப்பட்ட பெண் தலித் என்பதால் சாதிய தந்திரங்களைப் பயன்படுத்தி, அந்தப் போராட்டக் குழுவை பலவீனப்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டன. சரஸ்வதியின் பாலியல் வன்புணர்வு தொடர்புடைய வீடியோ பதிவை எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பி விடப் போவதாக மிரட்டல்கள் வந்தன. அரசு அறிவித்த உதவி இன்று வரை வழங்கப்படவில்லை.

நரேந்திரமோடி, அவரது அமைச்சரவை, சங் பரிவாரங்கள் என இந்த கூட்டணியின் நல்லாசி பெற்றவர்கள் இது போன்ற காரியங்களில் சுதந்திரமாகவே ஈடுபடும் சூழல் தான் குஜராத்தில் நிலவுகிறது. ‘தெகல்கா’ புலனாய்வில் பல்கலைக் கழக தலைமை தணிக்கையாளர் சுதந்திரமாக இனப்படுகொலையில் ஈடுபட்டதை விவரிக்கிறார். சங் பரிவாரத்தின் தொண்டர்கள் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதை தங்கள் மாணவிகளின் முன்னிலையில் விவரிக்கின்றனர். அது சரி, நரேந்திரமோடியின் அனுமதி இல்லாமல் குஜராத்தில் அணுவும் அசையாது.
Pin It