சமூக உறவுகளிலும் உற்பத்தி முறைகளிலும் விரவிக்கிடக்கும் முரண்பாடுகளும் பாகுபாடுகளும் பெருகியும் இறுகியும் வரும் இன்றைய காலகட்டத்தில் கருத்தியல்களின் தாக்கங்கள் விரிவடைந்தும், சிக்கலாகவும் மாறி வருகின்றன. ஆகவே, கருத்தியல் கண்ணோட்டத்திலேயே சமூக அமைப்புகளையும் உறவுகளையும் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தையோ, அரசியல் அதிகாரத்தையோ அடிப்படையாகக் கொண்டு செயல்படும் சமூக ஆய்வு முயற்சிகள், புதிது புதிதாக முளைத்து வரும் முரண்பாடுகளையும், மிகவும் சிக்கலாகி வரும் சமூக உறவுகளையும் விளக்க இயலாமல் நின்று விட்டது கண்கூடு. கருத்தியலை உத்தியாகக் கொண்டு, சமூக ஆதிக்கச் செயல்பாடுகளையும் அதன் எதிர்ப்பு இயக்கங்களையும் ஆராயத் தொடங்கியுள்ளது, சமூக அறிவியலின் ஒரு முன்னேற்றம்.

இக்குறுந்தொடரின் நோக்கம், இன்றைய இந்தியாவில் பெரும்பான்மை சமூகத்திற்குள் எழுந்த ஆதிக்கக் கருத்தியலின் உற்பத்தியையும் வளர்ச்சியையும் சித்தரிப்பது; ஆதிக்கக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நிலைகளிலும் எழுந்த சொல்லாடல்களை விமர்சிப்பது. இக்கருத்தியலை இடையறாது எதிர்த்து வரும் உதிரியான, சிதறிக்கிடக்கும் எதிர்க்கருத்தியலின் தன்மைகளையும் இலக்கையும் வெளிப்படுத்துவது; அத்துடன் ஆதிக்கக் கருத்தியலை எதிர்க்கத்தக்க மாற்றுக் கருத்தியல் எழுவதற்கான சாத்தியக் கூறுகளை சுட்டிக் காட்டுவதுமேயாகும். அதற்குமுன் கருத்தியலைப் பற்றிப் பொதுவான சில கண்ணோட்டங்களை முன்வைப்பது தேவையாகிறது.

ஆதிக்கமும், அதற்கு எதிரிடையான செயல்பாடுகளும் எக்காலச் சமூகங்களுக்கும் பொதுவானவையே. சமூக முரண்பாடுகளோ அல்லது அவற்றின் அடிப்படையில் எழும் ஆதிக்க - ஆதிக்க எதிர்ப்பு இல்லாத சமூகங்களோ வரலாற்றில் என்றுமே இருந்ததில்லை, ஏன் இனி இருக்கப்போவதுமில்லை. ஆனால், பண்டைய (அன்றைய) சமூகங்களுக்கும் இன்றைய (நவீன) சமூகங்களுக்கும் இடையே சமூக சக்திகளின் இயங்கியலைப் பொருத்தமட்டில், ஒரு பெருத்த வேறுபாடு உண்டு. அன்றைய சமூகம் ஒரு வகையில் வெளிப்படையான சமுதாயம் என்றே கூறவேண்டும். அது தெளிவில்லாத வரையறுப்பைக் கொண்டது, முழுமையான கட்டுக்கோப்புக்கு உட்படுத்தப்படாதது. மேலும் இயல்பாகவோ, வலிந்தோ மய்யப்படுத்தப்படாதது. இத்தகைய காரணங்களால் அன்றைய சமூகத்தின் பாகுபாடுகளும் முரண்பாடுகளும் பெரும்பாலும் வலிமை பெறாமல் நின்று விட்டன. அன்றைய அரசுகளின் நிலையற்ற தன்மையும் இதற்கு ஒரு காரணம்.

ஆனால், இதற்கு மாறாக இன்றைய (நவீன) சமுதாயம் ஒரு கட்டுக்கோப்பான, தெளிவாக வரையறுக்கப்பட்ட மய்யப்படுத்தப்பட்ட சமூகமாக இயங்குகிறது. இன்றைய எல்லா சமூகங்களுமே தேசியச் சமூகங்களாக வெளிப்படுகின்றன. அதாவது, இவை யாவும் பல பொருளில் இறுக்கமான சமுதாயங்கள். அப்படியென்றால் இவைகளுக்குள் எழும் முரண்பாடுகளும் பாகுபாடுகளும், வேறு வடிகால் இல்லாத காரணத்தால் பெரும்பாலும் மேலும் மேலும் வலிமை பெற்றே வந்துள்ளன.

முரண்பாடுகள் சமூகத்தை உடைத்து விடுவதில்லை. மாறாக என்றும் போலவே இயக்குகின்றன. இதற்கு முக்கிய காரணம் கருத்தியலின் புதிய நீட்சியும், அதன் நுட்பமான செயல் திறனுமே. நவீன சமூகங்களில் இயங்கும் பரந்துபட்ட மற்றும் நுட்பமான கருத்தியலே, பொங்கி வரும் முரண்பாடுகளை சமன்படுத்தி, சமூகத்தின் ஒற்றுமையை வலியுறுத்தி அதை உடைய விடாமல் காக்கின்றன. சமூகத்தின் இருத்தலிலும் அதன் முரண்பாடுகளைத் தணிப்பதிலும் கருத்தியலின் பங்கு மிக முக்கியமானது. இதே பணியை அன்றைய சமூகங்களில் ‘மரபு' செய்து வந்தது. சமூகத்தை ஒருங்கிணைந்த ஒன்றாகக் காட்டி வந்தது அச்சமூகத்தின் மரபுகளே. ஆனால் அந்நிலை இன்றைய சமுதாயங்களில் இல்லையென்றாகிவிட்டது.

அன்று மரபு செய்த பணியை இன்று கருத்தியல் செய்கிறது. மரபு அல்லது பண்பாட்டுக்கும் இன்றைய கருத்தியலுக்குமான தொடர்பு பின்னர் விளக்கப்படும். இருப்பினும், மரபுகளினின்று எழுவதே கருத்தியல் என்பதை உணரலாம். கருத்தியலாக்கப்பட்ட மரபு அல்லது பண்பாட்டு முறைகளே சமூகத்தின் பல்வேறு நெளிவு சுளிவுகளிலும் உறவு உற்பத்தி, அறிவு, அதிகாரம் - நுண் இழைகளாகப் பிரிந்து, நுழைந்து, இழைந்து, பொங்கி எழும் முரண்பாடுகளைத் தணித்தும், சமன்படுத்தியும் வருகின்றன. இன்றைய சமூகத்தின் பகுப்பாய்வு கருத்தியலின் வெளிப்பாடுகளையும் செயல்பாடுகளையும் தவிர்க்குமானால் அது முழுமை பெறாது.

சமூகப் பகுப்பாய்வில், கருத்தியல் கண்ணோட்டத்தை வலியுறுத்துவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. சமூக ஆதிக்கத்திற்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒன்று, எல்லா சமூக ஆதிக்கங்களுக்குமான பொதுமையானது; மற்றையது தனிப்பட்ட ஒரு சமுதாயத்திற்கே உரித்தானது. இந்த இரண்டு முகங்களையும் ஒருங்கிணைத்து, ஒரே அடிப்படையில் புரிந்து கொள்ளுதலே முழுமையான சமூக அறிவியலாகும். பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டோ அல்லது அரசு அதிகார அமைப்புகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டோ சமூக ஆதிக்கச் செயல்பாடுகளை விளக்கும் முறையானது, அச்சமூகத்தின் பொதுமையான முகத்தை மட்டுமே புரிந்து கொள்ள உதவும்.

பொருளாதார, அரசு அதிகார அடிப்படையில் சிறுபான்மையினர், சமூகத்தின் பெரும்பகுதியினரை ஆதிக்கத்திற்குட்படுத்துவதும் அதிகாரத்தின் அண்டைய நிலைகளிலிருந்து அப்புறப்படுத்துவதும் எல்லா சமூகங்களிலும் நடக்கும் செயல்பாடுகளே. இவற்றை மட்டுமே சுட்டிக்காட்டுவது ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்தமான அல்லது உட்கருவின் புரிதலுக்கு இட்டுச் செல்லாது.

பொதுமையான சமூக முகம், அச்சமூகத்தின் வரலாறு, பண்பாடு, மதிப்பீடுகள், மரபு இவை வழியாக இவற்றைச் சார்ந்து ஒரு தனித்துவ முகமாகவே வெளிப்படும். ஆகவே, ஒரு சமுதாயத்தை அதன் தனித்துவத்திலும் புரிந்து கொள்ள அச்சமூகத்தின் ஆதிக்க - ஆதிக்க எதிர்ப்புக் கருத்தியல்களின் மூலமே முடியும். எல்லா சமூகங்களிலும் வெளிப்படும் பொதுமை முகத்திற்கு தனித்துவ முகம் கொடுத்து, அதைத் தக்க வைத்து, காலத்திற்கு காலம் அதனைப் புதுப்பிப்பதும் இந்தக் கருத்தியலே. ஆதிக்கமும் அதன் எதிர்ப்புமாகப் பிரிந்து இயங்கும் இக்கருத்தியல், பொருளாதார முரண்பாடுகளையும் அரசு அதிகாரப் பாகுபாடுகளையும் உள்ளடக்கியே செயல்படும். ஆகவே, கருத்தியல் கண்ணோட்டத்திலான சமூகப் பகுப்பாய்வை பொருளாதாரம் தவிர்த்த ஆய்வாகக் கொள்வது தவறு.

பொருளாதாரம், கூட்டு வாழ்க்கையின் பல்வேறு துறைகளையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிர்ணயிக்கின்றது என்பது உண்மைதான். பல்வேறு சமூக முரண்பாடுகள் நேரடியாக அவ்வாறு வெளிப்படாவிடினும் பொருளாதார உடன்பாடாகவே இயங்குவதும் உண்மையே. ஆனால், அதே பொருளாதாரம் இயங்கக்கூடிய திசையைத் தீர்மானிப்பது கருத்தியலே என்பது, இப்பொழுது பரவலாக உணரப்படுகிறது.

இங்கு கொண்டுள்ள கருத்தியல் கண்ணோட்டத்தை நியாயப்படுத்த இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன: ஒன்று, நவீன காலகட்டத்தில் கருத்தியலின் உருவாக்கம், வளர்ச்சி, பரவல் ஆகியவை சமூக முரண்பாடுகளை தனித்து சமன்படுத்திச் செல்வதில் ஆற்றும் மிகையான பங்கு. இரண்டு, பொருளாதார அல்லது அரசு அதிகார அணுகுமுறைகளோடு ஒப்பிடும் பொழுது கருத்தியல் கண்ணோட்டமானது, சமூகத்தில் நிலவும் ஆதிக்கத்தின் பொதுவான மற்றும் தனித்துவமான இரண்டு முகங்களையும் ஒரு சேர வெளிப்படுத்தக்கூடிய இயல்பை கொண்டுள்ளமை.

இக்கருத்தியலின் தன்மைகள் தான் என்ன? இக்கருத்தியல் ஒரு சமூகத்தில் இயங்கும் போது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன? சமூகத்தைத் தக்க வைப்பதிலும் தவிக்க வைப்பதிலும் அதன் பங்கு என்ன? கருத்தியல் என்னும் சொல்லுக்கான சமூகப் பொருளை வரையறுக்க வேண்டுமானால், அதனை மூன்று இயங்கியல்களுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். 1)சமூக அரசியல் அதிகாரம் 2) அறிவு 3) மதிப்பீடுகள். கருத்தியல் என்பது அதிகாரம், அறிவு, மதிப்பீடுகள் இவற்றிடையே ஊடுருவி, பின்னிப் பிணைந்து வெளிப்படும். ஓரளவுக்கு ஒருங்கிணைக்கப்பட்டவை வெளிப்படும் கண்ணோட்டங்கள், கருத்தியல்கள் அதிகார அறிவு மதிப்பீடுகளினால் அமைந்த ஒரு முழுமையைச் சுட்டுகிறது.

கருத்தியல் நவீனத்தின் ஓர் உருவாக்கம். சுய உணர்வு பெற்ற ஒரு சமுதாயமும் அதன் பண்பாடும், தன் நவீன தேவைகளுக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு மென்பொருள் எனக் கொள்ளலாம். ஒரு சமூகம் தன் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து, இன்றைக்கும் நாளைக்கும் பொருந்தக்கூடிய ஒரு சமூக உளவியலுக்கான உலகை ஏற்படுத்திக் கொண்ட நிலைதான் நவீனக் கருத்தியல். இந்தப் புதிய மானசீகமான உருவாக்கத்திற்கான கச்சாப் பொருள் வரலாறு, மரபு, சமயம், பண்பாடு இவற்றிலிருந்தும் இன்றைய நவீன மதிப்பீடுகளாக ஏற்றுக் கொள்ளளப்பட்ட அறிவு, அதிகார நிலைகள் இவற்றிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முழுமையே. இது வரலாற்று மீட்சியாகவும், மரபுகளின் கண்டுபிடிப்பாகவும், பண்பாட்டின் நவீன உருவாகவும் காட்டப்படும். அதே சமயத்தில், இதுவே வரலாற்றிற்கும் மரபிற்கும் தொடர்பற்ற, முற்றிலும் நவீன கருத்துருவாக்கமாகவும் தேவைகளுக்கு ஏற்ப மொழியப்படும்.

எப்படி முன்வைக்கப்பட்ட போதிலும் கருத்தியலை, அன்றைய பண்பாட்டின் விட்ட குறை தொட்ட குறையாகக் கொள்ளலாகாது. நவீன காலகட்டத்தில் மொழியப்படும் பண்பாடு என்பது ஒரு கருத்தியலே. இதனை பண்பாட்டரசியல் என்றோ, சொல்லாடல்கள் என்றோ, ஒரு சமூகத்தின் மதிப்பீடுகள் என்றோ, அச்சமூகத்தின் ஆதிக்க இயங்கியலைப் புரிந்து கொள்வதற்கான அடிப்படை வரையறுப்புகள் என்றோ ஆய்வாளர்கள் பல்வேறு கோணங்களில் நின்று பார்க்கின்றனர். எனவே கருத்தியல் என்பது, நவீன கருத்தியலில் எழும் போட்டி அதிகார இயங்கியலுக்காக வரலாறு, பண்பாடு இவற்றினின்றும், இன்றைய சமூக மதிப்பீடுகளினின்றும் தேர்ந்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பன்முகக் கண்ணோட்டமே.

நவீன கருத்தியல் ஒரு சமூகத்தில் முழுமையாக விரவி, பரவி செயல்படுகிறது. சமூகத்தின் பல்வேறு நிலைகளிலும் துறைகளிலும் அதன் வெளிப்பாடுகளைக் காணலாம். கருத்தியலிலிருந்து விடுபட்ட சமூக உறவுகளே இல்லை எனக்கூறலாம். இது ஒரு பக்கம் உண்மை என்றால், மறுபக்கம் அதே கருத்தியலுக்கு, சமூகத்தின் பல்வேறு உறவுகளும் முறைகளும் தனக்கும் தனது பாதிப்புக்கும் அப்பாற்பட்டவையாகக் காட்டவேண்டிய நிர்பந்தமும் எழாமல் இல்லை. கருத்தியல் நாம் சுவாசிக்கும் காற்றைப் போல எங்கும் படர்ந்திருப்பது அதன் இருப்பையே மறைக்கும், மறக்க வைக்கும் நிலைக்கு அடிப்படையாகிறது. ஒரு குறிப்பிட்ட சமூக உறவோ, உற்பத்தி அமைப்போ, உணரும் முறையோ, கருத்தியலுக்கு அப்பாற்பட்டவை என்று காட்ட முடிந்தாலே – அந்தக் கருத்தியலின் வெற்றிகரமான செயல்பாடாகக் கொள்ளப்படும்.

இக்காரணங்களால் ஓரு சமூகத்தில் கருத்தியலின் வெளிப்பாடும் செயல்பாடும் பொதுவாக மூன்று நிலைகளில் விளைகின்றன என்று கொள்ளலாம். ஒன்று, மேலளவிலான நிலை. இந்நிலையில் கருத்தியல் பன்முகமாக ஏன் பல கருத்தியல்களாக உதிரியாக, சிதறியதாக ஒன்றுக் கொன்று தனக்குள் முரண்பட்டவையாகவே வெளிப்படும். சமூக முரண்பாடுகளும் இந்நிலையில் பன்முக, முறையற்ற ஒருங்கிணைக்கப் படாத முரண்பாடுகளாகத் தெரியப்படும். இந்த வெளிப்பாட்டினால் கருத்தியலின் பின்புலமான ஒருங்கிணைக்கப்பட்ட சமூக சக்தி மறைக்கப்படுகிறது. இதனால் மேலெழுந்த வாரியாகப் பார்ப்போருக்கு ஆதிக்கம் செலுத்துபவரின் ஒருங்கிணைப்பு முகம் வெளிப்படுவதில்லை.

இரண்டாம் நிலையில் சற்று அடித்தளத்தில், கருத்தியல் ஒருமையில், ஒருங்கிணைக்கப்பெற்றதாக அறியப்படும் மேல்மட்டத்தில் வெளிவரும் பன்முகக் கருத்தியல் முரண்பாடுகள் – இக்கீழ்மட்டத்தில் ஒன்று சேர்க்கப்பட்டு கோர்வையான ஒரே கருத்தியலாக, சமூகத்தின் அடிப்படை முரண்பாட்டின் பிரதிபலிப்பாக உணரப்படுகிறது. மேல் மட்டத்தில் உதிரியாகவும், சிதறியும் தென்பட்ட கருத்தியல்கள் இங்கு அடிப்படை முரண்பாட்டைச் சுற்றி ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இக்கீழ்நிலைச் செயல்பாட்டினையும் கடந்த ஆழ்ந்த அடி நிலையே மேற்கூறப்பட்ட கருத்தியல் கடந்த நிலையெனக் காட்டப்படும் ‘பொருளா'க்கப்பட்ட கருத்தியல் நிலை. சமூக உறவுகளும் முரண்பாடுகளும் கருத்தியலை கடந்து தானியங்கியாக செயல்படுவதாகக் காட்டப்பெறும் நிலை. இந்நிலையினைப் பகுப்பாய்ந்து, இந்நிலையிலும் கருத்தியலின் இயக்கங்களை உணர்வதற்கு ஆய்வும், பிரதிபலிப்புக் கண்ணோட்டமும் தேவை. மானிட வரலாற்றுக்குட்பட்ட செயல்பாடுகள், இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட, இயற்கையால் அல்லது தெய்வச் செயலால் ஏற்பட்டதாக அல்லது உருவாக்கம் பெறாத ‘பொருளா'கக் காட்டப் பெறுவனவற்றை திரும்பவும் மீள்கண்ணோட்டம் மூலம் கருத்தியலுக்கு உட்பட்டு, போட்டி அதிகாரச் சக்தி மூலம் உருவாக்கப்பெற்றவையே என்று எடுத்துரைக்க இடையறாத பகுத்தாய்வு முயற்சியும் தேவை.

- இன்னும் வரும்
Pin It