வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

அண்மையில் நடிகர் ரஜினி காந்த் நடித்த ‘குசேலன்' திரைப்படம் வெளியானது. நம் நாட்டு இளைஞர்கள் அவரின் படம் வெளியான நாளை ஆர்ப்பாட்டத்தோடு கொண்டாடினார்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகளான மின் விளக்கு, மின் விசிறி, கணினி, மிதிவண்டி, இருசக்கர வாகனம் போன்ற எண்ணற்ற கருவிகளை கண்டுபிடித்த அறிவியல் அறிஞர்களை, நாம் அறிந்து வைத்திருக்கிறோமா? அவர்களின் பிறந்த நாட்கள் நம்மால் கொண்டாடப்படுகிறதா? உண்மையாகவே நமக்கு உதவுவது அவர்கள்தானே!
ரஜினி முக்கியமானவரா, திரைப்படத்தை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் முக்கியமானவரா என்றால், யாரை சொல்வீர்கள்? நிச்சயமாய் தாமஸ் ஆல்வா எடிசன் தானே? அவர் திரைப்படம் பிடிக்கும் காமிராவை கண்டறியாவிட்டால் ரஜினியும் இல்லை, கமலும் இல்லை. குழந்தைகளே! பொழுது போக்குவதற்கு உதவுகின்றவர்களை விட, பொழுதைப் பயன்படுத்த உதவிய அறிவியல் அறிஞர்களையே நாம் நமது கதாநாயகர்களாகக் கொண்டாட வேண்டும். அவர்களின் பிறந்த நாட்களை உங்களின் பள்ளியில், வகுப்பறைகளில், சங்கங்களில் கொண்டாட வேண்டும். அப்போது தான் அறிவியல் சிந்தனை வளரும்; அறிவியல் சிந்தனை வளர்ந்தால் மூடப்பழக்க வழக்கங்களும், மூடக் கருத்துகளும் நம் மனதை விட்டுப் போகும். இதோ அப்படி நீங்கள் கொண்டாட எடுத்துக்காட்டுக்கு சில நாட்கள்.
பிப்ரவரி 15 - கலிலியோ பிறந்த நாள்
பிப்ரவரி 28 - தேசிய அறிவியல் நாள் (சர்.சி.வி.ராமன் பிறந்த நாள்)
ஏப்ரல் 19 - சார்லஸ் டார்வின் பிறந்த நாள்
சூலை 21 - நிலவில் மனிதன் கால் வைத்த நாள்
நீங்களும் இப்படி சில அறிவியல் அறிஞர்களின் நாட்களை எழுதி அனுப்பலாமே.