வாராது வந்த மாமணி - எஸ்.வி. ராஜதுரை

Vallinayagam
தோழர் ஓவியாவை பள்ளிச் சிறுமியாக இருந்தபோதே பார்த்திருக்கிறேன். அச்சமயம் உதகையில் அரசுப் பணியாளராக இருந்தேன். அவரது தந்தையார் உதகையிலிருந்த புகழ்பெற்ற உயர்நிலைப் பள்ளியில் கணக்கியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பெரியாரின் தீவிரப் பற்றாளர்களிலொருவர். உதகையில் பகுத்தறிவாளர் கழகத்தை நிறுவி, அறிவியல் கருத்துகளைப் பரப்பியவர். அவசர நிலைக் காலத்தில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டவர். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் அதே புன்முறுவலுடன், அதே கனிவுடன் நண்பர்களிடமும் பொதுமக்களிடமும் பழகி வந்தவர். 1970களின் இறுதிக்குப் பிறகு எனது வாழ்வின் திசை மாறியதால், இருவருக்குமிடையிலான தொடர்பு அற்றுப் போய்விட்டது. பல ஆண்டுகளுக்குப் பின் தோழர் ஓவியாவின் கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்புப் பெற்றேன். எனினும், அவர் எனது நண்பர் தமிழரசனின் மகள் என்பதைச் சிறிது காலம் கழித்தே அறிந்து கொண்டேன்.

ஏறத்தாழ இருபதாண்டு இடைவெளிக்குப் பின் அவரையும் அவரது வாழ்க்கைத் துணைவர் ஏபி. வள்ளிநாயகத்தையும் சென்னையில் தோழர் வ. கீதாவின் வீட்டில் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றேன். அந்தச் சந்திப்பு மகிழ்ச்சிகரமானதாக இருக்கவில்லை. தோழர் வள்ளிநாயகம் அச்சமயம் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தீவிர ஆதரவாளர். அந்த அமைப்பு இந்திய உளவு நிறுவனத்தின் கைப்பாவை என்னும் எண்ணம் கொண்டிருந்தவன் நான். ஏறத்தாழ இரண்டு மணி நேரம் எங்களிருவரிடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இதில் கடுஞ்சொற்களை அளவுக்கு மீறிப் பயன்படுத்தியவன் நான் தான்.

பேசி விவாதிப்பதற்கான விடயங்கள் இன்னும் பல இருந்தன என்பதையோ, பெண்ணிலைவாதத் தோழர்கள் கீதாவும் ஓவியாவும் சொல்ல விரும்பிய செய்திகள் வேறு இருந்தன என்பதையோ கருத்தில் கொள்ளாத ஓர் ஆணாதிக்க மனோபாவம் பற்றிய ஓர்மையே இல்லாதவனாக நான் வாதம் புரிந்து கொண்டிருந்தேன். தோழர் வள்ளிநாயகமும் எனது கருத்துத் தாக்குதல்களுக்கு ஈடு கொடுத்துக் கொண்டே இருந்தார். அந்த கசப்பான மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, அன்று மாலை நாங்கள் நால்வரும் சென்னை மெரினா கடற்கரையில் மீண்டும் சந்தித்தோம்.

தோழர் வள்ளிநாயகத்துடன் பேசுவதுகூட ‘தமிழ் துரோகம்' என்னும் அதிதீவிர நிலைப்பாட்டுக்கு வந்திருந்த நான், தோழர் ஓவியாவுடன்கூட அதிகம் பேசவில்லை. ஆண்டுகள் உருண்டோடின. எங்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் பல மாற்றங்கள். மார்க்சியத்தோடு அம்பேத்கரியலையும் பெரியாரியலையும் இணைத்துச் செல்லும் நிலைக்கு வந்து சேர்ந்திருந்தேன். தோழர் ஓவியாவின் ஆழமான கட்டுரைகள், எனது சிந்தனையை வளப்படுத்த உதவின.

ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காகவும் விடுதலைக்காவும் பாடுபட்ட ஒப்பற்ற தலைவர்களின் வரலாற்றுச் செய்திகளை, ஓர் அகழ்வாராய்ச்சிக்காரர் போலத் தோண்டியெடுத்து, வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை நிரப்பும் வண்ணம் ‘தலித் முரசில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதி வந்தவர், அதே வள்ளிநாயகம்தான் என்பதைப் பல மாதங்களுக்குப் பிறகே அறிய வந்தேன். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் புள்ளிகள் வளர்ந்துள்ளதை உணர்ந்து மன மகிழ்ச்சி யுற்றேன்.

2001 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து எனது சென்னை வாழ்க்கை முடிவுறத் தொடங்கியதால், எங்கள் இருவருக்குமிடையே நேரடிச் சந்திப்புகள் அவ்வளவாக இல்லை. சென்ற ஆண்டு கோத்தகிரியில் எனது இல்லத்திற்கு வருகை புரிந்தார். சேர்ந்து செய்ய வேண்டிய பணிகள் எனச் சிலவற்றைப் பட்டியலிட்டோம். இவ்வாண்டுத் தொடக்கத்தில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மய்யப் பணிகளுக்கு உதவுமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். என்னை ‘அய்யா' என்றுதான் அழைப்பார். அத்தகைய நேசமும் பாசமும் அவரது உள்ளத்தில் வளர்ந்திருந்தன.

கடைசியாக சென்ற ஏப்ரல் 27இல், எனது இருதய அறுவை சிகிச்சை முடிந்து, மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த இரண்டாம் நாள் என்னைப் பார்க்க வந்திருந்தார். அந்த சந்திப்பும் தோழர் வ. கீதாவின் வீட்டில்தான் நடந்தது! அவரைக் கண்டதும் உற்சாகம் மேலிட்டு வலியை மறந்தவனாய் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போதும் கூட இருவரும் இணைந்து செய்ய வேண்டியவற்றை நினைவுபடுத்திக் கொண்டிருந்தார். அவரது வாழ்க்கையில் மிக ஆக்கப்பூர்வமான காலகட்டம், கடந்த அய்ந்தாண்டுகள் எனச் சொல்லலாம். அதனை இன்னும் செழுமைப்படுத்துவதற்காக மிக அண்மையில்தான் சென்னையில் குடிபுகுந்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் இதயக் குரலாய், அவர்களது வரலாற்றின் பதிவாளராய், அவர்களது மாண்பை நிலை நாட்ட வந்த மாமணியாய்த் திகழ்ந்த அவருக்கு, இப்படி ஒரு எதிர்பாராத திடீர் முடிவு ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. தோழர்கள் யாக்கனும், மதுரை கே.எஸ். முத்துவும் அனுப்பிய அந்தத் துயரச் செய்தி கேட்டுக் கதறியழுதேன். தலித் மக்களின் விடுதலைக்காக குறிப்பாகவும் மானுடத்தின் விழிப்புக்காகப் பொதுவாகவும் உழைக்கும் தன்னலமற்ற அறிவாளிகள், வாராது வந்த மாமணிபோல் ஓராயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருகிறார்கள். எத்தகைய இழப்பு இது. அவரது எழுத்துகளைத் திரட்டி வளப்படுத்தி, அவற்றைச் சீராக வெளியிடுவதும் அவரது உறுதியான, அடக்கம் மிகுந்த, விளம்பரம் நாடாத சமுதாயப் பணிகளைத் தொடர்வதும்தான் நாம் அவருக்குச் செலுத்தக்கூடிய அஞ்சலி. தோழர் வள்ளிநாயகம் அவர்களே, தங்களுக்கு எங்கள் செவ்வணக்கம்.

அவர் இடத்தை நிரப்ப யாருமில்லையே! - கொளத்தூர் தா.செ. மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

தோழர் ஏபி. வள்ளிநாயகம் இன்று நம்மிடையே இல்லை. 35 ஆண்டுகள், களப்பணி, எழுத்துப்பணி என சுற்றிச் சுழன்று வந்த அந்தத் தோழர் இன்றில்லை. இந்த நாட்டு சராசரி வயதுவரைகூட வாழாமல் முதிராச் சாவெய்தி விட்டார்.

மாணவப் பருவத்தில் பெரியாரியக்கம் - திராவிடர் கழகம், தோழர் வீரமணி தலைமையில்; பின்னர் தோழர் கோவை ராமகிருட்டிணன் தலைமையில்; பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தத்துவ அணிச் செயலாளராய் பணியாற்றி, தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்துவதில் பெரும் பங்காற்றியமை; தாத்தா ரெட்ட மலை சீனிவாசன் பேரவை... என இயக்கங்கள் பலவற்றில் இணைந்து பணியாற்றி இருப்பினும் பெரியார், அம்பேத்கர், பெண்ணியம், பவுத்தம் என்பவற்றில் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் உறுதியாக நின்றவர்.

இயக்கப்பணி, களப்பணி என்பவற்றில் இருந்து விலகி, எழுத்துப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பின் சில கட்டங்களைத் தாண்டி, ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகப் பணியாற்றி, மறைந்துபோன பல தலைவர்களின் புதைந்து கிடந்த வரலாறுகளைத் தோண்டி எடுத்து வெளிக்கொணர்வதில் – அவர் ஆற்றிய பெரும்பணி என்றும் நன்றியுடன் எண்ணத்தக்கது. சரியாகச் சொல்வதெனில், அந்தப் பணியில், அவர் இடத்தை இட்டு நிரப்ப யார் இருக்கிறார்கள் என்று எண்ணும்போது, அவரது இழப்பு மேலும் கனமானதாக உணரச் செய்கிறது. அந்தப் பேரிழப்பை ஈடு செய்வதில் முனைந்து பணியாற்றி ஆறுதல் கொள்வோம்!

பெண்ணியப் போராளி - மருத்துவர் என். ஜெயராமன் நிறுவனர் ‘அபெகா நூலகம்'

அண்ணாச்சி ஏபி. வள்ளிநாயகம் அவர்களின் மறைவு, ஏற்கனவே பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தலித்துகளின் வளர்ச்சிப் பணிகளை மேலும் ஓரிடத்தில் நிறுத்தி இருக்கின்றது. தலித்துகள் தங்களின் அனைத்துப்புற அடையாளங்களையும் இழந்து வருவதை, அண்ணாச்சி அவர்கள் பெருத்த வேதனையோடு இதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்தார்.

தலித்துகள் தங்களின் சுய அடையாளத்தையும், தன் பூர்வ வரலாறுகளையும் உணராதவரை, தங்களைத் தாங்களே இந்த பார்ப்பனிய ஏகாதிபத்தியத்திலிருந்து விடுவித்துக் கொள்ள இயலாது என்பதை திட்டவட்டமாகக் கூறுவார். அதற்கான பணிகளைத்தான் நாம் முதலில் செய்ய வேண்டும் என்று பல முறை என்னிடம் வலியுறுத்தி வந்தார்.

‘நீ அடிமை என்பதை அவனிடம் கூறிக்கொண்டேயிரு, அவன் விடுதலையை அவனே தீர்மானிக்கத் தொடங்கி விடுவான்’ என்ற பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் வரிகளை, அவர் தன் லட்சியமாக எடுத்துக் கொண்டார். பவுத்தத்தை தன் வாள் நுனியாலும், வஞ்சகத்தாலும் பார்ப்பனிய இந்துத்துவம் எவ்வாறு வீழ்த்தியது என்பதையும், அவ்வாறு சிதறடிக்கப்பட்ட மக்களை எவ்வாறு இந்துத்துவா மேலும் ‘பஞ்சமர்'களாக்கியது என்று டாக்டர் அம்பேத்கர் நமக்குக் கொடுத்துச் சென்ற வரலாற்று ஆவணங்களையும் அண்ணாச்சி அவர்கள் தன் முழுநேரப் பணியாக எடுத்துக் கொண்டு, அனைத்தை யும் ஆவணப்படுத்தினார் என்பதைத்தான் நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

தலித்துகளின் போராட்ட வரலாறு, மற்ற சமூகத்தின் வரலாறுகளோடு ஒப்பிட முடியாத தனித்துவம் பெற்றது என்பதை உள்வாங்கினார் அண்ணாச்சி. எனவேதான் இருட்டடிப்பு செய்யப்பட்ட தலித்திய சிந்தனையாளர்களை எல்லாம் அகழ்ந்தெடுத்து அவர் கூர்மைப்படுத்தினார். ‘பெண்களை மய்யப்படுத்தாத சமூக மாற்றம் எங்குமே வென்றது கிடையாது. எனவே, நீங்கள் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்களைத் தலைமையேற்க வையுங்கள்; மேடையின் அனைத்துப் பொறுப்புகளையும் அவர்களையே செய்யச் சொல்லுங்கள்’, என என்னை அடிக்கடி வலியுறுத்துவார்.

பெண்ணிய விடுதலையை மய்யப்படுத்த நாம் இருவரும் ஒன்றாகப் பணியாற்ற வேண்டும் என்று, என் கடமையினை அவ்வப்போது வெளிக்கொணர்வார். தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?' நூலினை அபெகா நூலகம் சார்பில், இலவச வெளியீடாகச் செய்யுங்கள் என்று என்னை வலியுறுத்தி வந்தார்.

தந்தை பெரியாரை அறிவுஜீவிகள் விமர்சனப்படுத்தியபோது வெகுண்டெழுந்த அண்ணாச்சி, பெரியாரை உயர்த்திப் பிடித்து, அவர் ஓர் உயிராயுதம் என்பதை வரலாறாகப் பதிவு செய்தார். பவுத்தம் தான் தலித்துகளின் வாழ்வு நெறி. பவுத்தம் மட்டும்தான் இம்மக்களின் சமூக விடுதலையை மய்யப்படுத்தும் என்றார் அயோத்திதாசப் பண்டிதர். அதற்குப் பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு, நம்முடைய காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து ஒரு பவுத்த நெறிப் பயணம் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியது.

தலித்துகளின் சமூக வாழ்வில் பவுத்தம் மீண்டும் புத்துயிர் பெற, அண்ணாச்சியின் பேனா நுனியில் மீண்டும் உயிர்பெறத் தொடங்கியது. பார்ப்பனிய இந்துத்துவாவோடு இயற்கையும்கூட, தலித்துகளுக்கு எதிராகத்தான் நிற்கின்றது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றது. இயற்கையை வெல்ல முடியாது. ஆனால் தொடர்ந்து போராட முடியும்.

‘புத்தமும் அவர் தம்மமும்' என்ற நூலில் அம்பேத்கர் குறிப்பிடுவது போல், இயற்கையின் உண்மைச் சொரூபங்களை ஆதிமனிதன் விளங்கிக் கொள்ள முடியாமல் தவித்தபோது உருவானதுதான் கடவுளும், மதங்களும், பலிகளும், பூசைகளும், பரிகாரங்களும். இந்த மாயையை, அறிவாயுதத்தின் மூலம்தான் வெல்ல முடியும் என்று நிரூபித்தார். அதன் வழியில் டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் ஆகியோரை சமூக விடுதலைக்கான வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு, இம்மக்களின் விடியலைத் தேடிய அந்த ஒப்பற்ற சிந்தனையாளரின் மறைவு தலித்துகளுக்கு மட்டுமல்ல; மானுட வாழ்வில் பகுத்தறிவினைத் தேடும் அனைவருக்கும் அது இழப்பாகும். அழுது புலம்புவது விடுதலை வீரர்களுக்கு அழகல்ல. வரலாற்றில் அழியாத இடம் பெற்றுள்ள ஏபி. வள்ளிநாயகத்திற்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு, அவரின் வழியைப் பின் தொடர்வோம்!

நேர்மையாளர் - ரா. அதியமான், நிறுவனர்-ஆதித்தமிழர் பேரவை

சாதி ஒழிப்புக் களத்தில் முக்கியப் பங்களிப்பு செய்து, ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை மீட்டெடுப்பதில், பல்வேறு நூல்களை உருவாக்கித் தந்த சமநீதி எழுத்தாளர் ஏபி. வள்ளிநாயகம் திடீரென மறைந்தது, ஆதித்தமிழர் பேரவைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1990 இல் தொடங்கி, நெருங்கிய தொடர்பு கொண்டு சமூக நீதியின் பால் ஏற்பட்ட அக்கறை காரணமாக, அருந்ததியர்கள் விடுதலையில் அக்கறை கொண்டு ‘மானுடத்தில் கோலோச்சியவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்' எனும் சிறப்பான இயக்கவியல் பொருள் முதல்வாத நூல் தொட்டு, ‘அடிமைகளின் தலைவன் அய்யன் காளி' உள்ளிட்ட பல்வேறு நூல்களில் என்னிடத்தில் அணிந்துரை பெற்றதோடு மட்டுமின்றி, அருந்ததியர்கள் ஆதிபவுத்தர்கள் எனும் வரலாற்று உண்மையை மீட்டுருவாக்கம் செய்து தந்து, ‘விடுதலை வேர்கள்' எனும் தலைப்பில் தலித் முரசில் வெளிவந்த தொடரில் எல்.சி. குருசாமி அவர்களின் உழைப்பை நேர்மையான முறையில் பதிவு செய்த தோழரின் இழப்பு, சாதி ஒழிப்பு இயக்கத்திற்குப் பேரிழப்பு. அவர் கண்ட சமத்துவ சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுவதே அவருக்கு செலுத்தும் உண்மையான வீரவணக்கமாகும்.

சமூக விடுதலைக்குப் பாடாற்றியவர் - ஜான் ஜெயகரன், இயக்குநர், தலித் ஆதார மய்யம்

அண்ணாச்சி ஏபி. வள்ளிநாயகம் அவர்கள், தலித் ஆதார மய்யத்துடன் தொடர்பு கொண்டது 2000க்குப் பின்புதான். அப்போது அவரது ஒரு நூல் ‘மானுடத்தில் அழகானவர்கள் தீண்டத்தகாதவர்கள்' (1999), என கண்களில் பட்டது. இந்த நூலின் தலைப்பு நினைத்துப் பார்ப்பதற்கே பெருமிதத்தைத் தந்ததோடு, தலித் மக்களின் வரலாற்று மறுகட்டுமானத்தை நோக்கியதாகவும் அது அமைந்தது. இதைத் தொடர்ந்து ‘குடிசையில்தான் மானுடம் வசிக்கிறது' (2001) என்ற சிறுநூலை பெங்களூரில் இருக்கும்போது படித்தேன்.

ஒரு பறையனின் விருந்தோம்பலுக்கு எதையாவது கொடுக்க விரும்பிய அய்ரோப்பிய அறிஞனிடம், ‘அவ்வாறே நீங்கள் விரும்புவதாயின் நான் ஒரு பரிமாற்றத்தை விரும்புகிறேன். உங்கள் புகைக் குழாயை எனக்கு கொடுங்கள். என்னுடையதை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் குழாயில் நான் புகைக்கும்பொழுது, அய்ரோப்பிய அறிஞர் பெருந்தகை ஓர் ஏழைப் பறையனின் விரும்தோம்பலை ஏற்றுக்கொள்ள அறுவறுப்பு கொள்ளவில்லை என்று நினைவு கூர்வேன் என அவன் விடையளித்தான்’ என்ற வரிகள் என் கண்களைக் குளமாக்கின.

சுமார் ஒரு வாரம், அந்தப் பறையனின் நினைவுகளைச் சுமந்தேன். அதன் பின்னர் அண்ணாச்சி ஏபி. வள்ளிநாயகம் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். அதுதான் எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட முதல் தொடர்பு, அதன் பின்னர் பல சந்திப்புகள், கூடுகைகள், கருத்தரங்குகள், அம்பேத்கர் கல்வி வகுப்புகள் என எங்கள் இருவரின் நட்பும், புரிதலும் வளர்ந்தது. அவரது பல நூல்களை தமிழ் நாடு இறையியல் கல்லூரி மாணவர்களுக்கும், ‘இறையியல் மலர்' வாசகர்களுக்கும் அறிமுகம் செய்ததும் ‘மகாத்மா புலேவுக்கு முன் மகராசன் வேதமாணிக்கம்' (2005) என்ற அவரது நூலை, தலித் ஆதார மய்யம் வெளியிட்டதும் அவரை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவியது.

தலித் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும்; தலித் வரலாறு மறுகட்டுமானம் செய்யப்பட வேண்டும்். தலித் பண்பாட்டின் உயர்வை வெளிக் கொணர வேண்டும்; தலித் விடுதலைக்கும் பிற சமூக மக்களின் விடுதலைக்கும் பங்களித்த மறைந்த தலித் தலைவர்களின் வரலாற்றை வெளிக்கொணர வேண்டும்; தலித் விடுதலைக்கு, தலித் மக்கள் பிற்படுத்தப்பட்டோர் இணைவு ஏற்பட வேண்டும்; இந்துமத வேரறுப்பும், பவுத்த எழுச்சியும் அடித்தளமாக அமைதல் வேண்டும் என்ற குறிக்கோள்களுடன் தமது படைப்புகள் அனைத்தையும் கொண்டு வந்தார்.

தலித் விடுதலைப் பணியில் வெற்றிடமாக அமைந்திருந்த இந்தப் பகுதியை மிகப் பொறுப்போடும், விளம்பரம் இன்றியும் சுய ஆதாயம் ஏதுமின்றியும் செய்து வந்தார். அவர் தொடங்கிய புதிய பயணத்தில் புகழ் ஏணியை எட்டிப் பிடிக்க, சில மாதங்களே இருக்கும் நேரத்தில் அவரது இறப்பு நேர்ந்துவிட்டது.

ஆம், தலித் தலைவர்களைப் பற்றிய அவரது நூல் தொகுப்பின் முதல் தொகுதியை, தலித் ஆதார மய்யம் டிசம்பர் மாதம் வெளியிடுவதற்குத் திட்டமிட்டிருந்தது. அவரது இழப்பு, தலித் விடுதலைப் பணியில் ஈடு செய்ய இயலாதது. தனிப் பட்ட முறையில் அவரது இழப்பு என்னைப் பெரிதும் பாதித்துள்ளது. தலித் ஆதார மய்யம் மற்றும் தமிழ் நாடு இறையியல் கல்லூரி, தலித் விடுதலையில் அண்ணாச்சி ஏபி. வள்ளிநாயகம் அவர்களின் பங்களிப்பை என்றென்றும் நன்றியோடு நினைவு கூறும்.


ஏபி. வள்ளிநாயகம் எழுதிய நூல்கள்

1. தலைவர் அம்பேத்கர் சிந்தனைகள்
2. விளிம்பில் வசப்பட்ட மானுடம்
3. போராளி அம்பேத்கர் குரல்
4. பாட்டாளி மக்களும் தோழர் பெரியாரும்
5. புரட்சியாளர் அம்பேத்கர்
6. பெரியார் பிறப்பித்த பெண்ணுரிமைப் பிரகடனங்கள்
7. பெரியார் பெண்மானுடம்
8. மானுடம் நிமிரும்போது
9. மானுடத்தில் அழகானவர்கள் தீண்டத்தகாதவர்கள்
10. அடிமைகளின் தலைவர் அய்யன்காளி
11. நாம் இந்துக்கள் அல்லர் பவுத்தர்கள்
12. உரிமைப் போராளி ரெட்டமலை சீனிவாசனார்
13. அம்பேத்கரின் அறைகூவல்
14. குடிசையில்தான் மானுடம் வசிக்கிறது
15. பவுத்த மார்க்கம் பற்றி விவேகாநந்தர்
16. பவுத்தம் ஓர் அறிமுகம்
17. மானுடத்தில் கோலோச்சியவர்கள் பவுத்தர்கள்
18. நமது தலைவர்கள் எல்.சி. குருசாமி,
எச்.எம். ஜெகந்நாதன்
19. சமநீதிப் போராளி இம்மானுவேல் சேகரன்
20. அடிமைகளின் தலைவர் அய்யன்காளி
21. பூலான் தேவிக்கு முன் ராம்காளி : முன்னி
22. தென்னாட்டு அம்பேத்கர் தளபதி எம். கிருஷ்ணசாமி
23. இந்துத்துவ வேரறுக்கும் உயிராயுதமும்
முதற்குடிகளும்
24. மகாத்மா புலேவுக்கு முன் மகராசன் வேதமாணிக்கம்
25. தாத்ரி குட்டி
Pin It