சூழ்ச்சிகளின் இருட்சிறைகளில்
பதுக்கப்பட்டிருக்கிறது நம் வாழ்க்கை
Womanஅறியாமையின் சிறகுகளடியில்
வைக்கப்பட்டிருக்கிறது நம் சிந்தனை
புறக்கணிக்கப்படும் ஆந்தைக் குரலாய்
அவமதித்துத் தள்ளப்படுகிறது நம் அறிவு
மூடத்தின் கிளைகளில் அமர்ந்து
பேசவைக்கப்படுகின்றன நம் கிளிகள்
பெருநெருப்பாய்க் கிளர்ந்த
பகுத்தறிவின் மீது சாம்பலைத் தூவி
காயடிக்கப்படுகின்றன நம் கண்கள்
சிந்தனைகளின் ஊற்றுக்கண்களை அடைத்து
யாகத்தீயின் புகைமண்டிக் கிடக்க
நம்மைப் புதைத்திருக்கிறது மதம்
பூக்கள்மீது அவர்கள் நடக்கவும்
தீக்குண்டத்தில் நாம் இடறவும்
நீள்கின்றன நிர்பந்தங்கள்
வேல்குத்தி நாவில் வழியும்
ரத்தத்துடன் நாமிருக்க
நெய்தடவிய வாழையிலையில்
பேண்டுவைக்க
தொண்டைக்குழி வலிக்காமல்
பஞ்சாமிர்தத்தை சுவைக்கின்றனர் அவர்கள்
.
-யாழன் ஆதி
Pin It