"இந்தப் புதிய பெயர், தீண்டாமை என்னும் கொடூரத்திலிருந்து, தீண்டத்தகாத மக்கள் விடுபடுவதற்கு வழிவகுப்பதாக இல்லை. பழைய பெயருடன் அவர்கள் எவ்வாறு பழிக்கப்பட்டார்களோ, அதைப்போலவே புதிய பெயருடனும் இழிவுபடுத்தப்படுகிறார்கள். மேலும், தீண்டத்தகாத மக்கள் என்று அழைக்கப்படுவதையே தாங்கள் விரும்புவதாக அவர்கள் கூறுகிறார்கள். தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை அதன் பெயராலேயே குறிப்பிடுவதுதான் சரியானது என்பதே அவர்களுடைய வாதம். நோயாளிக்கு தான் எந்த நோயால் துன்புறுகிறோம் என்று தெரிந்திருப்பது நல்லது. தீங்கு இழைப்போருக்கு, அந்தத் தீங்கு அகற்றப்படாமல் அப்படியே நீடித்துக் கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்திருப்பது அவசியம். எதையும் மூடிமறைப்பது, நிலவும் உண்மை நிலை குறித்து இரு வகையிலும் தவறான புரிதலை ஏற்படுத்த மட்டுமே வழிவகுக்கும். பழைய பெயரை மூடிமறைப்பதற்குக் கொண்டு வரப்பட்ட இந்தப் புதிய பெயர், தீண்டத்தகாத மக்களுக்கு இழைக்கப்படும் மோசடி என்பதோடு, இந்துக்களை அவர்களது குற்றவுணர்ச்சியில் இருந்து தவறான முறையில் விடுவிக்க செய்யப்படும் முயற்சியுமாகும்.''

- டாக்டர் அம்பேத்கர்

தீண்டத்தகாத மக்கள் தங்களை எப்படி அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமைகூட, இனி அவர்களுக்கு இல்லை என்று தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது. அதனால்தான் ‘தலித்' ‘தாழ்த்தப்பட்ட மக்கள்' என்பது போன்ற சொற்களை உச்சரிக்கக்கூட கூடாது; அது இழிவானது என்று வன்மத்துடன் ஆணை வெளியிட்டுள்ளது. ஆனால், இது எந்த வகையில் இழிவானது என்று அது தெளிவுபடுத்தவில்லை. ‘தாழ்த்தப்பட்ட மக்கள்' என்று சொல்வது இழிவு எனில், ‘பிற்படுத்தப்பட்ட மக்கள்' என்ற சொல்லாடல் மட்டும் இழிவாகாதா? தமிழ்த் திரைப்படங்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கும் தமிழக அரசு, அத்திரைப்படங்களில் தொடர்ந்து தலித்துகளை இழிவுபடுத்தி வரும் ‘சண்டாளன்' என்பது போன்ற பெயர்களைத் தடை செய்ய முன்வந்திருக்கிறதா? ஓர் இனத்தின் அடையாளத்தை அதிகாரிகளும், அரசியல்வாதிகளுமா நிர்ணயிப்பது? அறிவீனத்துடன் அரசாணை வெளியிட்டுள்ளது அரசு. தமிழக முதல்வர் அடிக்கடி பயன்படுத்துகிறாரே ‘சண்டாளன்' என்று அதுதான் இழிவான பெயர்; அதுதான் சட்டப்படி குற்றம். ஆனால், அதற்காக சிறு வருத்தம்கூட தெரிவிக்காத கருணாநிதி அரசுதான், தலித் மக்கள் தங்களை தங்கள் விருப்பப்படி அழைத்துக் கொள்வதை இழிவு என்கிறது.

"இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, ‘செட்யூல்ட் காஸ்ட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில் பட்டியல் இனம் அல்லது அட்டவணைப் பிரிவினர் அல்லது தலித், தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் அரிசன் என்ற வார்த்தைகளுக்கு பதிலாக, ‘ஆதிதிராவிடர்' என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசு ஆணை வெளியிட்டிருந்தும் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், மொழிபெயர்ப்பாளர்களும், ஊடகங்களும், தொலைக்காட்சிகளும், அனைத்து நாளிதழ், வார இதழ் பத்திரிகைகளும், தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மக்கள், தலித், தலித்துகள், தலித் மக்கள், தலித் சாதி, தலித் சமுதாயம் என்ற இழிவு பெயர்களில் ஆதிதிராவிடர்களை அடையாளப்படுத்தி வருவது, அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதை அரசு ஆய்வு செய்தது. அதன்படி, இனி ஆதிதிராவிடர்களை தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மக்கள், தலித், தலித்துகள், தலித் மக்கள், தலித் சாதி, தலித் சமுதாயம் போன்ற இழிவுப் பெயர்களில் அழைக்கவோ, உச்சரிக்கவோ, எழுதவோ, ஆவணங்களில் பதிவு செய்யவோ கூடாது என இந்த ஆணை மீண்டும் வலியுறுத்துகிறது.''

- "தினத்தந்தி' 3.3.2007

‘தலித்' என்ற மராத்திய சொல்லை 19 ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தத் தந்தையான மகாத்மா ஜோதிபா புலேதான் முதன் முதலில் பயன்படுத்தினார். அதன் பிறகு 1970களில் ‘தலித் சிறுத்தைகள்' என்கிற அமைப்பு அதைப் பரவலாக்கியது. தலித் மக்கள் தாங்களாகவே சூட்டிக் கொண்ட பெயர் இது மட்டுமே. பிற பெயர்கள் எல்லாம் மற்றவர்களால் திணிக்கப்பட்டவையே! 1980களுக்குப் பிறகு இச்சொல் பிரபலமாகத் தொடங்கி, 1990களில் ஏறக்குறைய அனைத்து ஆங்கில நாளேடுகளும், ஊடகங்களும் - உலகளவில் இச்சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டன.
இச்சொல்லுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள், மண்ணின் மக்கள் என்று பொருள். இச்சொல்லுக்கு இந்து மதத்தின் எந்தச் சார்பும் இல்லை; ஜாதி அடிப்படையோ, உட்சாதி அடிப்படையோ இதற்கு இல்லை. இந்நாட்டின் தொல்குடி மக்களாக இருந்து, பிறகு தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்ட மக்களைக் குறிக்கும் சொல்லாகவே இன்றுவரை இச்சொல் பயன்பாட்டில் உள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவியுள்ள, மக்கள் தொகையில் அய்ந்தில் ஒரு பகுதியாக இருக்கும் தீண்டத்தகாத தலித்துகள் நாள்தோறும் கடும் தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும், சொல்லொணா இழிவுகளுக்கும் ஆட்பட்டு வருகின்றனர். அண்மையில் மகாராட்டிர மாநிலம் கயர்லாஞ்சியில் நால்வர் கொல்லப்பட்டது போல, இம்மக்கள் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டாலும், அவர்களுக்கென்று குரல் கொடுக்க இந்த சாதிய மண்ணில் நாதியில்லை. பல்வேறு மொழிகளாலும், மாநில எல்லைகளாலும், உட்சாதிகளாலும் பிளவுபடுத்தப்பட்டிருப்பதால் இவர்களுக்குள்ளேயே ஓர் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கும் வாய்ப்பின்றிப் போகிறது. பட்டியல் இனம் என்பது ஓர் அரசு மொழி பயன்பாட்டுச் சொல்லாகவே இருக்கிறது. ‘ஆதிதிராவிடர்' இதற்கு இணையான சொல் அல்ல. ஆக, எல்லா தடைகளையும் கடந்து ‘தலித்' என்ற சொல்லுக்கும் - பாபாசாகேப் அம்பேத்கருக்குமே இம்மக்களை தார்மீக ரீதியாக ஒன்றிணைக்கக் கூடிய ஆற்றல் இருக்கிறது; இம்மக்களிடையே சகோதரத்துவத்தை வலியுறுத்தக் கூடியதாகவும் இது அமைந்துள்ளது.

‘தமிழன்', ‘திராவிடன்' என்று தங்களை அழைத்துக் கொள்ள தலித்துகளும் ஏங்குகிறார்கள். ஆனால், நடைமுறையில் அவர்களை தமிழ்ச் சமூகம் தமிழனாகவும், திராவிடனாகவும் அங்கீகரித்திருக்கிறதா? தலித்துகள் சாதனை செய்தால், அது தமிழனின் சாதனையாகப் போற்றப்படுகிறது. அதே தலித் தாக்கப்பட்டால், அரவணைக்க யாருமில்லையே! என்ன காரணம்? நாள்தோறும் ஈழத் தமிழனுக்காகவும், காவிரிக்காகவும், முல்லை பெரியாறுக்காகவும், பாலாறுக்காகவும் தொடர் போராட்டங்களை நடத்துகிறார்கள். ஆனால், தாய் நாட்டில் தமிழன் இன்னொரு தமிழனால் தாக்கப்படும்போது மட்டும், மயான அமைதி நிலவுகிறதே? இங்கு பட்டியலிடப்பட்டுள்ள ‘தலித் தமிழன்' மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து - ஒட்டுமொத்த தமிழர்களுக்காக நடத்தப்படும் எந்தக் கட்சி/இயக்கம்/அமைப்பு குரல் கொடுத்திருக்கிறது? தீண்டாமையை ஒழிக்க, இதுவரை ஒரே ஒரு அனைத்துக் கட்சி கூட்டமாவது கூட்டப்பட்டிருக்கிறதா?

சிங்களன் தாக்கினால் ‘தமிழன்' தாக்கப்பட்டதாகப் பொருள்; பாகிஸ்தான்காரன் தாக்கினால் இந்தியன்/இந்து தாக்கப்பட்டதாகப் பொருள். ஆனால், அதே ‘இந்து' இந்தியனும் திராவிடத் தமிழனும் பல நூற்றாண்டுகளாக - சொந்த இந்தியனை, தமிழனைத் தாக்கினால், அதற்குப் பொருள் வேறு. அது உள்நாட்டுப் பிரச்சினை; பேசித் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால், தலித்துகளின் வாழ்வியல் பிரச்சினை இன்றுவரை ‘பேசப்படாமலேயே' தீர்த்துக்கட்டப்படுகிறது! அதனால்தான் இந்தியனில் இருந்தும், தமிழனில் இருந்தும் தலித்துகள் தங்களை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதுநாள் வரை இம்மக்கள் பெற்ற உரிமைகள் அனைத்தும், அவ்வாறு வேறுபடுத்திக் கொண்டு பெற்ற உரிமைகள்தானே! யார் மறுக்க முடியும்?

தந்தை பெரியார் தன் வாழ்நாள் முழுக்க தமிழனை ‘சூத்திரன்' என்று விளித்தாரே! ஏன்? தமிழன் ஆண்ட பரம்பரைக் கனவில் மிதந்து, அடிமையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான்! சூத்திர இழிவை நிலைநிறுத்த அல்ல. ஆனால், இன்றைக்கு நெஞ்சு நிமிர்த்தி தமிழன் எனப் போர் முரசு கொட்டும் எல்லாரும் சூத்திரர்கள்தானே - ‘தமிழினத் தலைவர்' மு. கருணாநிதி உட்பட! ஏன் இதே முதலமைச்சர், தனது அரசை இன்றுவரை ‘சூத்திரர் அரசு' என்று கூறி பெருமிதம் கொள்ளவில்லையா? அப்போதெல்லாம் வராத இழிவா, நாங்கள் ‘தலித்' என்று அழைத்துக் கொள்ளும்போது மட்டும் வந்து விட்டது?

தலித்துகளை எந்தப் பெயரைக் கொண்டு அழைத்தாலும், அவர்களுடைய உண்மை நிலை என்னவாக இருக்கிறது? தி.மு.க. கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர்

என். வரதராஜன், ‘இந்து' நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘தமிழ் நாட்டின் 75 சதவிகித கிராமங்களில் பலவகைப்பட்ட வடிவங்களில் தீண்டாமை நிலவுவதாகவும், சில பகுதிகளில், அது மிகக் கொடூரமான வடிவங்களில் வெளிப்படுவதாகவும்' குறிப்பிட்டுள்ளார். அண்மைக் காலங்களில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க முன்வந்திருப்பது, மிகுந்த பாராட்டுக்குரியது. நக்கலமுத்தன்பட்டி தலைவர் ஜக்கையன் கொல்லப்பட்ட சில மாதங்களிலேயே மருதங்கிணறு சேர்வாரன் கொல்லப்பட்டிருக்கிறார்.

மேலும், அருந்ததியர்கள் ஊராட்சித் தலைவர்களாக இருக்கக்கூடிய 12 இடங்களில் அவர்கள் அச்சுறுத்தப்பட்டு, சாவை எதிர்நோக்கியுள்ளனர். நாள்தோறும் தலித்துகள் சந்திக்கும் வன்கொடுமைகளைத் தடுக்கத் திராணியற்ற தமிழக அரசு, இம்மக்களுக்கான பெயர் சூட்டும் உரிமையில் கை வைப்பதை, வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலவளவு படுகொலை பேசப்பட்ட அளவுக்கு, இவ்விரு ஊராட்சித் தலைவர்களின் படுகொலைகளும் முக்கியத்துவம் பெறவில்லை என்பது வேதனையானது. அருந்ததியர்கள் வன்கொடுமைகளை சந்திக்கும்போது, தலித் இயக்கங்கள் வெகுண்டெழுந்து போராட வேண்டாமா? ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் இது குறித்து அரசின் கவனத்தை ஈர்க்காதது, பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. நடக்கவிருக்கின்ற சட்டப் பேரவையில், தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த, கவன ஈர்ப்புத் தீர்மானத்தை விடுதலைச் சிறுத்தைகள் கொண்டுவர வேண்டும். தி.மு.க. அரசுடன் கூட்டணி சேர்ந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள், தலித்துகளைப் பாதுகாக்க, அரசியல் நெருக்கடியை உருவாக்க வேண்டும். இல்லையெனில், "அரசியல் அதிகாரம்/கூட்டணி, சாதிக் கொடுமைகளைக் கட்டுப்படுத்தும்; தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தும்; பலவீனமான அரசே எளிய மக்களுக்குப் பாதுகாப்பானது'' என்ற தேர்தல் முழக்கங்கள் எல்லாம் பொய்யாகிப் போய்விடும்; வரலாறும் மன்னிக்காது.

* 22.11.2006 நெல்லை மாவட்டம் நக்கலமுத்தன்பட்டி ஊராட்சித் தலைவர் ப. ஜக்கையன் படுகொலை.

* 26.1.2007 கடலூர் மாவட்டம் அம்புஜவல்லிப்பேட்டை ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலித் மாணவர்கள் நடனப் போட்டியில் பங்கேற்கத் தடை.

* 19.2.2007 நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் வட்டம் மருதங்கிணறு பஞ்சாயத்து தலைவர் சேர்வாரன் படுகொலை.

* 2.3.2007 உடுமலை வட்டம் துங்காவி கிராமத்தில் கைரப்பன் என்ற தலித் ஊராட்சியில் எழுத்தராக வேலை செய்பவர், இரு சக்கர வாகனத்தில் தனது தம்பி வருவார் என்று எதிர்பார்த்து மங்கிய இருளில் எதிரே வந்த வேறு சாதியினரின் இரு சக்கர வாகனத்தை கை காட்டி நிறுத்தியதால் அடித்துக் கொலை.

* 4.3.2007 கோவை ஒண்டிப் புதூரில் கோயில் அன்னதானத்திற்குச் சென்ற தலித் இளைஞர் தண்டபாணி அடித்துக் கொலை.

* இன்றுவரை மேலவளவு படுகொலையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.

* தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ‘டாக்டர் அம்பேத்கர் மய்யம்' சார்பில் பேராசிரியர் அய். இளங்கோவன், அனைத்து மாவட்டங்களிலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற தகவலை கேட்டுப் பெற்றிருக்கிறார். அதில் 11 மாவட்டத்தில் இருந்து மட்டும் வந்த தகவல்கள் இவை: தமிழ் நாட்டின் 11 மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 4,006. இதில் தண்டனை பெற்றோர் 150 பேர் மட்டுமே.

விடுதலை செய்யப்பட்டவர்கள் 1,381. தவறுதலாக வழக்குப் பதிவு செய்யப்பட்டவை 1,173. எஞ்சியவை நிலுவையில் உள்ளன.
Pin It