
எப்படியும் எளிதானதல்ல அது
உங்களின் செயலுக்கு நியாயம் கற்பிப்பது
வரைமுறைகளின் மீதன்று
சுதந்திரம் கட்டப்பட்டிருப்பது
முக்கியத்துவம் மிகவும் வாய்ந்தது
உங்களுடையதைப் போன்றே
பிறரின் சுதந்திரமும்
எதிர்க்கருத்தினை எரிக்க முயலும்
வன்முறை பயங்கரமானது
மதமெனினும் மார்க்கமெனினும்
மயக்கத்தின் மருந்துகளையே அவை
புசிக்கத் தருகின்றன
கருத்துக்களின் மீது கவனத்தை வீசுங்கள்
கற்களை அல்ல
நாகரீகமும் சுதந்திரமும்
நாளுக்கு நாள் வளர்வது
காலத்தின் மீது கறைகளை எறிகிறீர்கள்
காலம் புத்தகத்தைப் போன்றே புரட்டப்படுவது
நாளை கறைகளாய் நீங்கள் வாசிக்கப்படுவீர்கள்