கடலூர் மாவட்டத்தில் தற்போது திரும்புகிற திசைகளில் எல்லாம் ரத்தக் கறை படிந்து காணப்படுகிறது. ஓயாத ஒப்பாரிகளும், காய்ந்து போகாத கண்ணீர்த் துளிகளும் அதன் சோக வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. சாதிவெறிக்கு பலியாகிப் போன தலித்துகளின் பட்டியலைப் பார்க்கும்போது, அதன் உண்மையை உணர முடியும். அந்தப் பட்டியல் நீண்டு 2007 இன் புத்தாண்டு தினத்தன்று முதல் படுகொலை அரங்கேறியது. சனவரி 1, 2007 இல் சேடப்பாளையம் சிவாவை கொன்ற அடுத்த பத்தாவது நாளில் சேத்துக் கொல்லை சுப்ரமணியனின் உயிரும் பறிக்கப்பட்டது.

கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள கிராமம் சேடப்பாளையம். இங்குள்ள சகஜானந்தா காலனியில் சுமார் 95 தலித் குடும்பங்கள் இருக்கின்றன. இவர்களின் குடியிருப்பில் இருந்து சற்று தூரத்தில் சுமார் 200க்கும் அதிகமான வீடுகளில் வன்னியர்கள் வசிக்கின்றனர்.

டிசம்பர் 31, 2006 அன்று இரவு புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தை சேடப்பாளையம் மெயின் ரோட்டில் வன்னிய இளைஞர்கள் தொடங்கினர். கையில் வீச்சரிவாள்களை எல்லோரும் வைத்துக் கொண்டு, வருபவர்க்கெல்லாம் இனிப்புகள் வழங்கியுள்ளனர். இதனை பூவராகவன் மற்றும் அவருடைய நண்பர்கள் முன்னின்று நடத்தி இருக்கிறார்கள். அப்போது இரவு மணி சுமார் 10.30க்கு சகஜானந்தா காலனி முருகேசன் என்பவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட, கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து வந்தார் சிவா. இவர்களின் ஆட்டோவை வழி மறித்து வன்னிய இளைஞர்கள் இனிப்பு வழங்கினர். ‘வயிற்று வலி தாங்க முடியாமல் துடிக்கிறார், அவரை அழைத்துக் கொண்டு கடலூர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்; எங்களை விடுங்கள்' என்றார் சிவா. இந்த இனிப்பைக் கொடுங்கள் வயிற்று வலி இன்னும் அதிகமாகட்டும் எனக் கூறி கிண்டலடித்துள்ளனர். ஆட்டோவையும் செல்ல விடாமல் தடுக்கவே இருதரப்பினர் இடையே வாக்குவாதம் மூண்டது.

சிவா ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். இதனால் இவரை கேப்டனாகக் கொண்ட கிரிக்கெட் அணி ஒன்று சகஜானந்தா காலனியில் இருந்தது. இந்தப் பகுதியில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் பெரும்பாலும் சிவா அணியே வெற்றி பெறும். இதன் காரணமாக சிவாவின் மீது வன்னியர்களுக்கும், அவர்களின் அணி கேப்டன் பூவராகவனுக்கும் வெறித்தனமான கோபம் இருந்தது.

31.12.2006 அன்று இரவு நடந்த புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் சிவா வந்த ஆட்டோவை மறித்து தகராறு செய்தனர். அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் பேசிக் கொண்டிருக்கும்போதே சிவாவின் தலையில் இரண்டு இடத்திலும், கழுத்திலும் வீச்சரிவாளால் வெட்டி பகை வெறியைத் தீர்த்துக் கொண்டனர் வன்னிய சாதிவெறியர்கள். வயிற்றிலும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டதால், கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சிவா. ரத்தம் வெளியேறுகிற அளவு அதிகரித்துக் கொண்டே சென்றதால், கடலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், சிவாவை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு பரிந்துரை செய்தனர். சனவரி 1, 2007 அன்று புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட சிவா, அன்று இரவு சிகிச்சைப் பலனின்றி இறந்து போனார்.

‘சிவாவை வெட்டிய வன்னியர்கள், சாதியைச் சொல்லி வெட்டவில்லை. அதனால் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது” என கடலூர் முதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் மறுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகளின் மாநில வழக்கறிஞர் பிரிவைச் சார்ந்த தாமரைச் செல்வன் தலையீட்டிற்குப் பின் குற்ற எண்.2/2007இல் கொலை மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகுதான் எட்டு குற்றவாளிகளில் ஏழு பேரைக் காவல் துறை கைது செய்தது.

இத்தனையும் முடிந்த நிலையில் 2.1.2007 அன்று சிவாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மாலை 4 மணியளவில் சகஜானந்தா காலனியில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. சடங்குகள் எல்லாம் முடிந்தப் பிறகு சவ ஊர்வலத்தில் 3000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். சேடப்பாளையம் மெயின்ரோட்டில் செல்லும்போது, ‘வீர வணக்கம், வீர வணக்கம் சிவாவிற்கு வீர வணக்கம்” என சிந்தனைச் செல்வன் (மாநில இணைப் பொதுச்செயலர் விடுதலைச் சிறுத்தைகள்) முழக்கமிட்டார். அப்போது சாதிவெறியர்கள் வெறித்தனம் அடங்காத நிலையில் ஊர்வலத்தினர் மீது கல்லை எறிந்தனர். இதனால் காயமடைந்த தலித் இளைஞர்கள், மெயின் ரோட்டில் இருந்த சில சாதி இந்துக்களின் வீடுகளை கொளுத்தினார்கள். சிவா என்ற இருபத்தைந்து வயது தலித் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டபோது பொங்கி எழாத போலிஸ், வன்னி யர்களின் வீடுகள் எரிந்ததைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஊர்வலத்தினர் மீது தடியடிநடத்தினர். அப்போது காட்டுமன்னார் கோயில்சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் அய்ந்து நிர்வாகிகள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். 29 தலித்துகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் இறந்துபோன சேடப்பாளையம் சிவாவிற்கு கருமாதி நடப்பதற்குள், அடுத்த பத்துநாட்களில், இன்னொரு தலித் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சிதம்பரம் வட்டம் கிள்ளை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமம் தெற்கு பிச்சாவரம். இங்குள்ள சேத்துக் கொல்லையில் தலித்துகளும், வன்னியர்களும் வசிக்கின்றனர். தலித் தெருவில் 12.1.2007 அன்றிரவு ரத்தின வேலு மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. பல்வேறு ஊர்களில் இருந்து உறவினர்கள் வந்திருந்தனர். அப்போது, இரவு 10.30 மணியளவில் தலித் தெருவின் முக்கூட்டில் வன்னியர் சாதியினரான சந்திரன் உட்பட மூன்று பேர் சீட்டு விளையாடினார்கள். ஊரில் விசேஷம் நடப்பதால், இங்கு சீட்டு விளையாடக் கூடாது என அவர்களை சுப்ரமணியன் கண்டித்தார்.

‘ஒரு கீழ் சாதிக்காரன் சொல்லி நாம் கேட்பதா' என்கிற சாதித் திமிரில் விளையாட்டை நிறுத்தாமல் தொடர்ந்தார் சந்திரன். அதனால் கோபமடைந்த சுப்ரமணியன், அவர் வீட்டிற்கு எதிரே இருந்த தெரு விளக்குகளை அணைத்தார். அப்போது வேகமாகச் சென்ற சந்திரன், அன்று இரவு 11 மணியளவில் சுப்பிரமணியனின் தம்பி மதியழகனும் குமாரசாமியும் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்ததை பார்த்தான். அடுத்த சில நிமிடங்களில் வீச்சரிவாளோடு வந்த சந்திரன், மதியழகனின் பின்புறமாக இடது முதுகில் இரண்டு முறை வெட்டினான். சத்தம் கேட்டு சுப்ரமணியன் ஓடி வந்தார். சுப்ரமணியனின் கழுத்தில் முன்னும் பின்னுமாக மாறி மாறி வீச்சரிவாளால் வெட்டிய சந்திரன், கொலை வெறியின் உச்சிக்குச் சென்று சுப்ரமணியனின் வலது கையிலும் வெட்டினான். பிறகு ரத்தம் பீரிட்டு அதே இடத்தில் விழுந்து துடி துடித்து இறந்தார் சுப்ரமணியன். இதனையெல்லாம் கண்டு கதறி அழுதபடி தடுக்க வந்த அவரின் தாயார், மனைவி லதா மற்றும் எதிர் வீட்டுப் பெண் இளவரசி ஆகியோரையும் வெட்டி வெறி தீர்த்துக் கொண்டான்.

கிள்ளை காவல் நிலையத்தில், எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெட்டுப்பட்ட மீதம் நான்கு பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தலித்துகளுக்கான உயிர்ப் பாதுகாப்பு என்ன என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

சேடப்பாளையம் சிவா படுகொலையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் 11.1.2007 அன்று கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால், அது சேரிப்படுகொலைகளைத் தடுப்பதாக இல்லை என்பதை வலுவாக நிரூபித்துக் காட்டியுள்ளது, அடுத்த பத்து நாட்களில் விழுந்த சேத்துக் கொல்லை சுப்ரமணியன் படுகொலை. அதனால் அடுத்த கொலை எத்தனை நாட்கள் இடை வெளியில் - எந்த ஊரில் விழப்போகிறது என்கிற அச்சத்தோடு மக்கள் பரிதவிக்கின்றனர். அடுத்த படுகொலையில் இறக்கப் போவது நீயா? இல்லை நானா? என்று முடிவடையாமல் அந்தப் படுகொலைப் படலம் தொடர்கிறது. இனியும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ஆயுதமேந்துவதைப் பற்றி சிந்திக்காமலிருந்தால், சேரிகளின் காற்றில் ரத்த வாடையே வீசும்.
Pin It