
சுருள் அலைகள் புரளும் கடலில்
மிதக்கின்றன
சுடப்பட்ட எம்மீனவர் உடல்கள்
மேற்புர மீன்களைக் கொத்துவதைப் போல
கொத்தி சாகடிக்கின்றன
சிங்கள ராணுவக் கழுகுகள்
குருதிச் சிவப்பாய் மாறிக்கிடக்கிறது
குமரிக்கடலில் ‘நீலப்புரட்சி'
வாழ்வைப் பிடிக்க வலையோடு
சென்றவர்களுக்கு
சாவைக் கொடுக்கிறது
எல்லைக் கோடுகளால்
கண்களைக் கட்டிக் கொண்டு
இலங்கை ராணுவம்
செத்தவர்களின் உடல்களின் மீது
கட்சிக்கொடிகளைப் போர்த்துகிறது
தமிழக அரசியல்
வடக்கெல்லையில் செத்தால் தேசிய கவுரவம்
தெற்கெல்லையில் செத்தால் மவுனத்துரோகம்
தன் குடிமக்களைக் கொன்றாலும்
வாய்திறக்க மறுக்கும்
இந்திய தேசத்தின் துரோகத்தை
எந்தக் கடலில் கொட்டுவது?
-யாழன் ஆதி