மூத்த தலித் எழுத்தாளர் கே. டானியல் அவர்களின் ஆறு நாவல்களையும் ஒரே தொகுப்பாக "அடையாளம்' பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பெரிய, தடிமனான புத்தகம். நேர்த்தியான பதிப்பு. இந்த ஆறு நாவல்களில் "அடிமைகள்', "கோவிந்தன்' ஆகிய இரு நாவல்களும் அடிமைகளின் வாழ்வைச் சொல்வதால் மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகின்றன.

சாதியக் கொடுமைகளுடன் அடிமை முறையும் இணைந்தேதான் தொடக்கக் கால இந்தியச் சமூகம் இருந்து வந்திருக்கிறது. ஆண்டை அடிமை முறை என்பது, நேற்று வரை இருந்த, இன்றளவும் வேறு வடிவங்களில் தொடருகின்ற ஓர் அடிமை முறையே. காளைக்குப் பதிலாக அடிமையான கீழ்ச் சாதிக்காரரை நுகத்தில் வைத்துப் பூட்டி உழுத கதைகளை கேரளத்தின் வரலாற்றில் படிக்க முடிகிறது. தமிழகத்தில் நிலவிய அடிமை முறைகளைப் பற்றி ஆ. சிவசுப்பிரமணியத்தின் ("தமிழகத்தில் அடிமை முறை') நூலின் வாயிலாக விரிவாக நாம் அறியலாம்.

கருப்பர்களின் அடிமைத்தனத்தை விடவும் இந்திய சாதிமுறை மிகக் கொடூரமானதென்கிறார் அம்பேத்கர். சாதியக் கொடுமைகளோடு, அடிமை முறையின் துன்பங்களும் இணைந்து, இந்திய தலித் ஒருவன் வாழ்வு கற்பனைக்கெட்டாத நரக வாழ்வாக நிலைப்பெற்று இருந்திருக்கிறது. இந்த வாழ்வை தமிழகத்தில் எழுதப்பட்ட எந்த தொடக்கக் கால நாவலும், கதையும் பதிவு செய்யவில்லை. இன்றளவிலும்கூட வெளிவந்திருக்கும் படைப்புகள், தலித் அடிமை முறையின் வலுவான வரலாற்றுப் பின்னணியையும், கதைக்களனையும் கொண்டு எழுதப்பட்டதாக இல்லை. ஆனால், கே. டானியலின் நாவல்கள் இதைச் செய்திருக்கின்றன.

"அடிமைகள்' நாவல் 1890 முதல் 1956 வரைக்குமான அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலவெளியில் நடைபெறும் நிகழ்வுகளைச் சொல்கிறது. யாழ்ப்பாணம், அதன் கிராமப் பகுதிகள் ஆகியவற்றில் நிகழும் சமூக மாற்றங்களை விரிவாகப் பதிவு செய்கிறது இந்நாவல்.

"சாதிப் பிரச்சனைகளோடு பின்னிப் பிணைந்திருக்காத தமிழர்களின் வாழ்க்கை என்பது இல்லவே இல்லை என்பது, எனது துணிவான முடிவு. இது சரியானதே. அதனாலேயே நான் இந்த இயல்பான தமிழனின் வாழ்க்கையை இலக்கியம் ஆக்குகிறேன்' என்று கருதும் டானியல், அதற்கு ஏற்ற மாதிரியே சாதியின் அத்தனை சலுகைகளையும், மேன்மைகளையும், அதிகாரங்களையும் அனுபவிக்கிற ஆதிக்க சாதித் தமிழர்களின் வாழ்வை மிக நெருக்கமாக நின்று பார்க்கும்படி செய்கிறார்.

வேலுப்பிள்ளை, சீதேவி நாச்சியார் ஆகியோரின் வாழ்வை முன்வைத்துக்கொண்டு கிளை கிளையாகப் பிரிந்து பரவுகிறது நாவல். சீதேவியின் அப்பா யாழ்ப்பாணம் மட்டுமின்றி, நாடு முழுவதும் புகழ்ப் பெற்ற புத்தூர் பல்லக்கு தலித் தம்பி. வேலுப்பிள்ளையின் தந்தையோ யாழ்ப்பாணம் கோட்டையில் வேலை செய்தவர். இந்த வகையான செல்வாக்கு மிகுந்த குடும்பங்களுக்கிடையிலே நடக்கும் திருமணத்துக்கு, ஓர் அடிமைக் குடும்பம் சீர்வரிசையாகத் தரப்படுகிறது. அடிமைக் குடும்பங்களை மணப்பெண் சார்பாக சீர்வரிசையாகத் தருவது என்பது, அப்போது இருந்த வழக்கம். அப்படி சீதேவி நாச்சியாருக்குத் தரப்படும் அடிமைகளான இத்தினி, எல்லுப்போலை ஆகியோடமிருந்து தொடங்கி சுமார் 12 கிளைக் கதைகளாக இருக்கிறது நாவல்.

இந்த நாவலை இரு பகுதிகளாகப் பிரித்து புரிந்து கொள்ளலாம். அக்காலத்திலேயே ஈழத்தில் இருந்த சாதிய நடைமுறைகள் கட்டுப்பாடுகள் மற்றும் தீண்டாமைக் கொடுமைகள் இது ஒரு பகுதி. இந்தக் கொடுமைகளை எதிர்த்திடும் தலித்துகளின் செயல்பாடுகள் இது மற்றொரு பகுதி. வெறுமனே தலித்துகளின் அவலங்களை மட்டுமே சொல்லிவிட்டு நிற்கவில்லை கே. டானியலின் நாவல்கள். அவலங்களின் சித்தப்புக்கும் இணையாக தலித் மக்கள் காட்டிய எதிர்ப்புகளையும் அது பதிவு செய்கிறது. இது டானியலின் குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சம் ஆகும். இந்நாவலில் வரும் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் வலுவாக தமது எதிர்ப்புணர்வைக் காட்டுகின்றவர்களாக இருக்கின்றனர். தமது கணவர்களை எதிர்த்துப் பேசி, சாதிய இழிவிலிருந்து அவனை தப்பும்படி தூண்டுகிறவர்களாக இருக்கின்றனர்.

ஆதிக்க சாதியர்க்குத் தொண்டூழியம் புரிபவர்களாக கோவியக்குடிகள், மாராயக் குடிகள், பள்ளக்குடிகள், நளக்குடிகள் பண்டாரம், கட்டாடி, பரியாரி என்று வகை வகையான அடிமைச் சாதிகள் நாவலில் குறிக்கப்படுகின்றன. இவர்களிடமிருந்து வேலையை, உழைப்பைச் சுரண்டும் ஆதிக்க சாதியினர், அவர்கள் தடைகளை மீறுகையில் கொல்லவும் செய்கின்றனர். சுயநலம் கருதி சாதியக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி காயம் சாதித்துக் கொள்கிறவர்கள், வகை வகையான கட்டுப்பாடுகளைப் போட்டு இறுக்கியும் வைக்கின்றனர்.

சாதி இந்துவான தன் ஆண்டையுடன் "கோச்' வண்டியில் உட்கார்ந்து போகும் அடிமை எல்லுப்போலை வெட்டிக் கொல்லப்படுகிறான். கோச் வண்டியில் சாதிக்காரர்கள் மட்டும்தான் ஏறலாம். யாழ்ப்பாணத்துக்கு ரயில் வருகிறபோது, அதில் எல்லா சாதியினரும் உட்கார்ந்து பயணம் செய்வார்கள் என்பதற்காகவே சாதி இந்துக்களால் மறியல் செய்யப்படுகிறது. தலித்துகள் கோவிலில் நுழையவும், தண்ணீர் எடுக்கவும், தெருவைப் பயன்படுத்தவும் தடை இருக்கிறது. மருத்துவர்கள் அவர்களைத் தீண்டி நாடி அறிவதில்லை. சாதி இந்துக்களின் தெருவில் நடக்கிறபோது காவோலை பிடித்திழுத்தபடிதான் நடக்க வேண்டும். இப்படி எண்ணற்ற சாதியக் கட்டுமானங்கள். இதைத் தமது திறத்தாலும், திறமையாலும் தலித்துகள் மீறுகிறபோது கும்பிடுகிறார்கள் சாதி இந்துக்கள்.

நாவலில் வரும் ஆட்டிறைச்சிப் பரியாரியும், கயித்தான் துரும்பனும், இத்தினியும், பண்டாயன், அண்ணாவி செல்லன் போன்ற தலித் பாத்திரங்கள் வலுவான எதிர்ப்புகளை நேரடியாகவோ, மறைமுக மாகவோ சாதிக்கு எதிராகக் காட்டுகின்றவர்களாக இருக்கின்றனர்.

தலித்துகளின் களிப்பு, எதிர்ப்புணர்வு ஆகியவற்றை மிக இயல்பாக எழுதிப் போகிறார் டானியல். ஈழத்தைப் புரிந்து கொள்ள மிகவும் ஏதுவாக இந்த நாவல் இருக்கிறதென்று கருதுகிறேன். இந்த நாவலை வாசிக்கும் முன்பாக தொலைக்காட்சியில் பணியாற்றும் ஈழத் தமிழர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தமிழகத்தின் கிராமங்களுக்குப் போகிறபோது, சேரியும், ஊருமாகப் பிந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்ததாகச் சொன்னார். ஈழத்தில் சாதி ஒழிக்கப்பட்டுவிட்டதென்றார். டானியலின் நாவல்கள் படம் பிடிக்கும் மிகச் சிக்கலான, கடுமையான சாதிய முறையைக் கொண்ட ஈழம் இன்று சாதியற்றதாக மாறிவிட்டிருக்கிறது என்பதைக் கேட்கிறபோது மகிழ்ச்சியாக இருக்கிறது. நசமாகவே அங்கு சாதி ஒழிக்கப்பட்டு விட்டிருந்தால், அதைவிடப் பேரானந்தம் வேறில்லை.

********

வெளியாகின்ற நூல்களைக் காட்டிலும், வெளியீட்டு விழாக்கள் சர்ச்சைகளைக் கிளப்புவதாக அமைந்து விடுகின்ற காலமாக இருக்கிறது இப்போது. "அம்ருதா' பதிப்பகத்திற்காக, திலகவதி அவர்களால் தலித் படைப்புகள் சில தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நூலின் பெயர் "கோடை உமிழும் கானல்'. அந்த நூல் சுந்தர ராமசாமிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அந்த நூலை வெளியிட்டுப் பேசிய சுஜாதா, தன்னையும் தலித் எழுத்தாளராகக் கருத வேண்டும் என்றிருக்கிறார்... தமிழக இலக்கியச் சூழல் இறுக்கமாகவும், கோபமாகவும் இருந்தால் நன்றாயிருக்காது என்பதற்காக, அவ்வப்போது இப்படியான சில நகைச்சுவைமிக்க தருணங்களும் வந்து போகின்றன.

Sujatha
சுஜாதாவிற்கு அறிவுஜீவி என்கிற பட்டத்தை யார் வழங்கினார்களோ தெரியவில்லை. உண்மையாகவே மனிதர் மிகவும் சிரமப்படுகிறார். கதை, கவிதை, நாவல், குழந்தை இலக்கியம், திரைப்படம் என்று அவர் "தடம்' பதித்த துறைகளில் கடைசியாக பாக்கியாக இருந்தது தலித் எழுத்தாளர் என்பதுதான்! அதையும் எப்படியாவது பெற்றுவிட்டால், மனிதரின் சிரமம் ஓய்ந்துவிடும் என்று நினைக்கிறார். அந்தப் புலம்பல்தான் அங்கு வெளியாகியிருக்கிறது.

இலக்கியத்தின் "தண்டத்தை' நாங்களா பிடித்துக்கொண்டு "பெரியவாளாக' உலவுகிறோம்? இல்லையே. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம்தானே! என்ன, தலித் இலக்கியம் எழுத கொஞ்சம் மெனக்கிட வேண்டும்! இணையத் தளத்தில் மானாவாரியாய் கொட்டிக் கிடப்பதையும், ஓசியில் கிடைக்கும் ஆங்கில நூல்களையும் மேய்ந்து புதுசாக ஒன்றை எழுதி, அறிஞர் பட்டம் போட்டுக் கொள்வதைப் போன்று அவ்வளவு எளிதானதொன்றும் இல்லை தலித் இலக்கியம் எழுதுவது!

பிற இலக்கியத்தைப் போல, தலித் இலக்கியத்துக்கு நோக்கம் எதுவும் இல்லை என்று சுஜாதா நினைத்துக் கொண்டிருக்கிறார். வடநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கதாநாயகிகளின் பின்புறத்துக்கும், முன்புறத்துக்கும் ஏற்ப உடைகளைத் தைப்பதுபோல் வசனத்தைத் தைப்பதல்ல தலித் கதை எழுதுவது. நவீன சென்னையின் எரிந்தெரிந்தப் பகுதிகளில் எரிந்தெரிந்தப் பெண்கள் வருவார்கள்; எப்படி அவர்களைச் சீண்டலாம் என்ற ஆலோசனை சொல்வதல்ல தலித் கதை எழுதுவது. தலித் படைப்புகள் நிசமாகவே, மெய்யாகவே, உண்மையாகவே தம் மக்கள் விடிவு பெறவேண்டும் என்ற உணர்வின் வெறியில் எழுதப்படுவது. இந்த தாத்பரியத்தைக் கொஞ்சம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உணர்வு இருக்கும் ஒருவரால் நிச்சயம் தன்னை ஒரு சாதியாளனாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது.

ஆனால், சுஜாதா அதைச் செய்கிறார். தமிழ் நாடு பார்ப்பனச் சங்கத்தின் வெள்ளி விழா மாநாட்டில், "எனக்கு வாழ்நாள் சாதனை விருது' கொடுத்தார்கள். பல மிகப் பெரிய பார்ப்பன சாதனையாளர்கள் திருநாமங்களின் வரிசையில் அடியேனையும் சேர்த்ததற்குத் தன்யனானேன்' ("ஆனந்த விகடன்', 15.1.06) என்று சொல்லும் சுஜாதாவிற்கு தலித் இலக்கியத்தை எழுதியிருப்பதாகச் சொல்வதற்கு எந்தத் தகுதியும் இல்லை.

அறிவுஜீவி என்கிற அளவிலும்கூட தன்னை ஒரு பார்ப்பனராகத்தான் எப்போதும் சுஜாதா அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். கீதையைப் பற்றியோ, பார்ப்பனர்களைப் பற்றியோ, யாராவது விமர்சனக் கருத்துகளைச் சொன்னால் போதும். உடனே தான் எழுதும் "கற்றதும், பெற்றதும்' போன்ற பத்திகளில் வரிந்து கட்டிக் கொண்டு மறுப்பு எழுதுகிறார்.

இப்போது திடீரென்று சுஜாதா தன்னையும் இந்த மாபெரும் மானுட சமூகத்தின் அங்கமாக உணர்ந்து விட்டார் போலிருக்கிறது. எங்கு போய் தவமிருந்து இந்த ஞானத்தைப் பெற்றாரோ தெரியவில்லை. எல்லா மனிதர்களும் "ஒய்' குரோமோசோமின் தொடர்ச்சியிலிருந்து வரும் ஆப்பிக்க "டுட்சி' இனத்திலிருந்து வந்தவர்கள் என்கிறார். பார்ப்பனர்கள் தமிழர்கள்தான் என்கிறார். தலித்துகளையும், பார்ப்பனர்களையும் சில பொதுவான சிக்கல்களைக் கொண்ட ஒத்த இனம் என்கிறார்.

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குதூகலம் பொங்குகிறது. இதைத் தானே நாங்கள் எதிர்பார்ப்பது. இனியென்ன சுஜாதாவினரும், தலித்துகளும் உறவின் முறையினர்தான்! இனிமேல் அவர்கள் "பீ' அள்ளவும், சாக்கடையைச் சுத்தம் செய்யவும், தொண்டூழியம் புரியவும், உழவும், செத்தமாடு தூக்கவும், பிணம் எக்கவும், சிரட்டையில் தேநீர் குடித்துவிட்டு வெற்றுடம்புடன் செருப்பில்லா காலில் நடக்கவும், இன்ன பிறவுமான வேலைகளுக்கு கோவில்களையும், நீதிமன்றங்களையும் விட்டுக் கீழிறங்கி வருவார்கள்!

வருக சுஜாதாவினரே வருக! மாடறுத்த கையின் ரத்தப் பிசுபிசுப்போடும், பீ வாளி பிடித்த கையின் நாற்றத்தோடும் கதைகளையும் எழுதுக!

********

மராத்தி தலித் இலக்கியத் தொகுப்பான "நஞ்சுள்ள ரொட்டி'யில் (Poisoned Bread) "சேரி' என்றொரு கவிதை இருக்கிறது. கேசவ் மேஷ்ராமின் கவிதையான இதை வி.ஜி. நந்து, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். நகைச்சுவையும், உணர்வெழுச்சியும் கொண்ட அக்கவிதையைப் படிக்கும் யாருக்கும், சேரிக்குள் நுழைந்து அலையும் அனுபவம் கிட்டும். அக்கவிதையைப் படிக்கின்ற சேரியில் வாழ்பவரும், ஊரில் வாழ்பவருமான எல்லாரும் சேரிக்குள் நுழைந்து அலையலாம். 

Dalit boy
எங்கள் சேரியில்
அஞ்சல்காரர்கள் குழம்பிப் போவார்கள்
அறிவுரைகள் குழம்பிப் போகும்
நாகரிகம் தடுமாறும்
சூரியன் கூட கறுத்துப் போவான்
சகதியில் பதிந்திருக்கும் கால்நடைகளின்
குளம்படிகள் போலிருக்கின்றன
எங்கள் வீடுகள்.
இவைகளின் நடுவிலே
நீரோட்டத்தின் திசையில் நீந்த விரும்பும்
ஓர் ஆன்மா இருக்கிறது.

எங்கள் சேரி
மண்ணில் புதைந்திருக்கும்
பூஞ்சைப் பிடித்த பாரம்பரியத்திலிருந்து
உதறி எழும்
கருப்பு உடல்களின், கருத்த முடிகளின்
கர்ச்சிக்கிற, பொங்குகிற, கலகம் செய்கிற கடல்

இங்கிருக்கும் மக்கள்
மென்மையான பஞ்சுப் பொதிகளை
தோள்களில் சுமக்கிறார்கள்
அவர்களின் கரங்கள் ரடானவை; ஆனால் பலமற்றவை
வளையல்கள் வளைந்த வானத்திடம் மினுக்குகின்றன

தகிக்கும் வெப்பத்தில் வியர்வைப் பெருக்கெடுக்க
சுற்றுகிறார்கள் குழந்தைகள்
சிலர் சரக்கு வண்டிகளில் வேலை செய்கிறார்கள்
அவர்களின் நாளங்கள் புடைத்திருக்கின்றன
அரைகுறையாய் மூடியிருக்கின்றன கண்கள்.

எங்கள் சேரி
நாட்டுச் சாராயத்தில் மூழ்கியிருக்கிறது.
மிளகாய் வைத்து செய்த, காரமான குழம்பில் மிதக்கும்
கறியில் உயிர் வாழ்கிறது
அரை வயிறாய் உண்டு, நாள் முழுதும் உழைத்தும்
ஒவ்வொரு புதிய நாளையும்
விளக்கின் மெல்லிய ஒளியில்
உன்னிப்பாய்த் தேடுகிறது

அஞ்சல்காரன் காலடி ஓசையைக் கேட்கும்போது
கலங்குகிறது எங்கள் சேரி
அஞ்சல்காரர்
எச்சில் ஊறிய பென்சில் முனையைக் கொண்டு
பழுப்பு உறைகளின் மீது கிறுக்கப்பட்டிருக்கும்
பெயரையும், முகவரியையும் கண்டுபிடிப்பதற்குள்
களைத்துப் போகிறார்
அம்மணமான வழிகாட்டிகள் சூழ
ராணு நாராயணனைத் தேடுவதில் ஏமாற்றம் அடைந்தாலும்
சந்துகளில் இடிப்பட்டுக் கொண்டே
உச்சுக் கொட்டியபடி வேதனையோடு - மவுனமாக
ராணு நாராயணனைத் தேடித் திரிகிறார்
மோசமான சீருடையில் வியர்த்துக் கொட்டியபடி
சேற்றிலும், சொத சொதக்கும் தரையிலும்
குனிந்தும், நகர்ந்தும்...
தேடுதல் முடிந்துவிட்டது
"ராணுவின் பாட்டி இறந்துவிட்டாள்'
சேரி அந்தச் சேதியை
ஒரு பருந்து தன் இரையின் மீது
பாய்ந்து பிடித்துக் கொள்வது போல்
பிடித்துக் கொள்கிறது.

எங்கள் சேரியில்
சீர்திருத்தங்கள் குழம்பிப் போகின்றன
பாதைகள் சிதிலமடைகின்றன.
திட்டங்கள் தடுமாறுகின்றன
இப்போதுதான் அதுவும் இப்போதுதான்
பையன்கள் படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்
அவர்கள் கவிதைகளை, கதைகளை, இந்திய இலக்கியத்தை
எழுதுகிறார்கள்
இதமாக மழையைப் போல்
புதிய அனுபவங்களின் உண்மைகள்
இலக்கியத்தின் கனவுகள் மீது பொழிகின்றன
வார்த்தைக் கோடரிகள் மரபின் மரத்தின் மீது விழுகின்றன.

காவல்காரர்களின், அஞ்சல்காரர்களின்
ஊர் சுற்றல் மீண்டும் தொடங்குகிறது.
சூரியனை விழுங்கிப் பெருக்கிறது இருள்
எங்கள் சேரியில் இப்போதுகூட
அலைக்கழிக்கப்படுகிறார்
அஞ்சல்காரர்.

தமிழில் : அழகிய பெரியவன்
Pin It