வாக்களிப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும் என்று எண்ணும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும். தன் நலனைவிட, பொது நலனே முக்கியம் என்பதை நம்பும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும்.

பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு (Scheduled Castes Federation), பட்டியல் சாதியினருக்காக நிறுவப்பட்ட அகில இந்திய அரசியல் கட்சியாகும். இனிவரும் பக்கங்களில் அதன் கோட்பாடுகள், கொள்கை, செயல் திட்டங்கள், பிற அரசியல் கட்சிகளுடனான ஒருங்கிணைப்பு குறித்த அடிப்படைகள் ஆகியவற்றை விளக்க முற்பட்டிருக்கிறோம்.

கட்சியின் கோட்பாடுகள்

Ambedkar
1. பொது செயல் முறைகளில் கட்சியின் செயல்பாடுகள், கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் அமையும் :

(i) சட்டத்தின் முன் இந்தியர்கள் அனைவரையும் சமமெனக் கருதுவதோடு, அனைவருக்கும் சம உரிமை உண்டு என்பதும், அப்படி சம உரிமை இல்லாத இடங்களில் அதனை செயல்படுத்தி, அது மறுக்கப்படும் இடங்களில் அதனை வலியுறுத்தும்.

(ii) ஒவ்வொரு இந்தியனுக்கும் தான் விருப்பப்பட்ட முறையில் தன் வளர்ச்சிக்கான வழிகளைத் தேடிக் கொள்ளும் உரிமை உண்டு என்பதையும், அரசு என்பது, அதற்கு உதவியளிக்கும் ஓர் எந்திரம் மட்டுமே என்பதையும் ஏற்றுக் கொள்கிறது.

(iii) ஒவ்வொரு இந்தியனுக்கும், மத, பொருளாதார, அரசியல் சுதந்திரம் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், அந்த சுதந்திரமானது எவ்வகையிலும் நாட்டில் இருக்கும் பிற இந்தியர்களுக்குத் தீங்கு இழைக்காதவாறு இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

(iv) அனைத்து இந்தியர்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதே வேளையில், கடந்த காலத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

(v) ஒவ்வொரு இந்தியனையும் தேவை மற்றும் அச்சம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு வாழ வைப்பது, அரசின் கடமை என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தும்.

(vi) சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவை நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, மனிதனை மனிதன், ஒரு வகுப்பினரை மற்றொரு வகுப்பினர், ஒரு இனத்தவரை மற்றொரு இனத்தவர் சுரண்டும் ஒடுக்கும் நிலையை மாற்றுவதற்கான முயற்சியில் முழுமையாக ஈடுபடும்.

(vii) நாடாளுமன்ற ஆட்சி முறையே, நாட்டின் நலனுக்கும், தனி மனித நலனுக்கும் உகந்தது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தும்.

2. மேற்சொன்ன கோட்பாடுகளின் தேவையையும், நேர்மையையும் அறிந்து கொள்ள இரண்டு அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலாவதாக, இக்கோட்பாடுகள் கூட்டமைப்பின் கோட்பாடாக இருப்பினும், இந்தியாவில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்விற்கு மானதாகும். அதன் அடிப்படையில், கூட்டமைப்பை, ஒரு சாதி அமைப்பென குற்றம் சாட்ட முடியாது. கூட்டமைப்பு, எல்லோரும் பங்கேற்பதாக இல்லாது இருக்கலாம்; ஆனால், அனைவருக்கும் பணியாற்ற, ஒருங்கிணைவதற்குத் தகுதியுடைய அனைவருடனும் ஒருங்கிணைந்து செயல்படக் கூடியதே.

3. பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் கோட்பாடுகளில் புதிதாக ஒன்றும் இல்லாது இருக்கலாம். பெரும்பாலான அரசியல் கட்சிகளின் அறிக்கைகளில் அவை இருக்கலாம். ஆனால், பிற அரசியல் கட்சிகளிடமிருந்து கூட்டமைப்பை வேறுபடுத்திக் காட்டக் கூடிய இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, கூட்டமைப்பின் கோட்பாடுகள் அரசியல் தளத்தில் மதிப்புடையவர்களாக காட்டிக் கொள்வதற்காகவோ, வாக்காளர்களை ஏமாற்றுவதற்காகவோ கடைப்பிடிக்கப்படுபவை அல்ல. அவை கூட்டமைப்பிற்கு இயற்கையானவை. பட்டியல் இனங்களின் சமூக நிலையின் அடிப்படையில் எழுந்தவை. இக்கோட்பாடுகளைக் கடைப்பிடிக்காமல், அவற்றை உயர்த்திப் பிடிக்காமல், கூட்டமைப்பு செயல்பட இயலாது. இக்கோட்பாடுகள், பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் வாழ்வியல் ஆதாரமாகும். இது, எவ்வகை அரசியல் நம்பிக்கையின் குறியீடும் அல்ல. உள்ளார்ந்த அனுபவங்களின் வெளிப்படையான பதிவாகும். பல கட்சிகளும் இவற்றைக் கடைப்பிடிக்கலாம். ஆனால், பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு அளவிற்கு இக்கோட்பாடுகளுக்கு உண்மையாக வேறு எவரும் இருக்க முடியாது. இதுதான் கூட்டமைப்பின் கோட்பாடுகளை, தரத்தைப் புரிந்து கொள்வதற்கான இரண்டாவது அடிப்படையாகும்.

கட்சியின் கொள்கை

4. மேற்சொன்ன கோட்பாடுகளை செயல்படுத்துவதே கட்சியின் கொள்கையாகும். கட்சியின் கொள்கை - கம்யூனிசம், சோசியலிசம், காந்தியம் அல்லது எந்த "இசத்'தின் அடிப்படையிலோ, அவை போன்ற எவ்விதத் தத்துவத்தின் அடிப்படையிலோ உருவாக்கப்பட்டது அல்ல. மக்களின சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு உதவக்கூடிய எந்தத் திட்டத்தையும் ஏற்றுக் கொள்ள கட்சி தயாராக இருக்கும். கட்சியின் அணுகுமுறை அறிவுப்பூர்வமாகவும், நவீனமாகவும், தத்துவங்களின் அடிப்படையில் இல்லாமல், அனுபவங்களின் அடிப்படையில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.

கட்சியின் செயல் திட்டங்கள்

பழைய பிரச்சினைகள்

5. இந்தியாவில் உள்ள எந்த அரசியல் கட்சியின் செயல் திட்டங்களும், ஆங்கிலேயர் விட்டுச் சென்றவற்றின் அடிப்படையிலேயே இருக்க முடியும். ஆங்கிலேயர் விட்டுச் சென்றவற்றில் நல்லவையும் உண்டு, தீயவையும் உண்டு. நல்லவற்றில் கீழ்காண்பவற்றை எடுத்துக் கொள்ளலாம். (1) பொதுவான சட்டம் (2) பொதுவான நீதி (3) பொதுவான நிர்வாகம். தீயவற்றில் கீழ்காண்பவற்றைக் கூறலாம் (1) நாட்டு மக்களிடையே பழங்கால சமூக முறையை நிலவச் செய்வது (2) முற்படுத்தப்பட்ட வகுப்பினரே கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ராணுவம் மற்றும் பொதுப் பணி ஆகியவற்றில் முன்னுரிமை பெற்றிருப்பது. (3) பிற்படுத்தப்பட்ட, தீண்டத்தகாத மற்றும் பழங்குடியினரை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பது (4) நாட்டை ஏழ்மை நிலையில் வைத்திருப்பது.

(அ) பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை உயர்த்தும் பிரச்சினை

6. பிற்படுத்தப்பட்ட, தீண்டத்தகாத, பழங்குடி மக்களை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்த்த பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு பாடுபடும். இதுவே கூட்டமைப்பின் செயல் திட்டங்களில் முதன்மையானதாகவும், அடிப்படையானதாகவும் கருதப்படும். எவ்வகையான தாமதமோ, பொருளாதார சிக்கல்களோ, இந்த செயல் திட்டத்தை செயல்படுத்துவதற்குத் தடையாவதை, கூட்டமைப்பு ஒருபோதும் அனுமதிக்காது. இவ்வகுப்பினருக்கான கல்வி எனும்போது, கூட்டமைப்பின் மனதில் இருப்பது வெறும் தொடக்கக் கல்வியோ, உயர்நிலைக் கல்வியோ அல்ல. அதன் மனதில் இருப்பது, இந்நாட்டிலும் வெளியிலும் இருக்கக்கூடிய மிக உயர்ந்த கல்வியாகும். அக்கல்வியானது, அம்மக்களை நிர்வாகப் பொறுப்பேற்கும் தகுதி பெற உதவக் கூடியதாக இருக்க வேண்டும்.

அதைப் போலவே வேலைவாய்ப்பில், ராணுவம் மற்றும் பொது வேலைவாய்ப்புகளில் தங்களுக்கான இடங்களைத் தாங்களே பெறும் நிலை வரும் வரை, இம்மக்களுக்கு இடஒதுக்கீட்டை பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு வலியுறுத்தும். தற்போது கட்டுப்பாடற்ற இனப் பாகுபாடு, நாட்டில் உள்ள பொது மற்றும் ராணுவ வேலை வாய்ப்பில் முற்படுத்தப்பட்ட சாதியினரால் செயல்படுத்தப்படுகிறது. இத்தகு வேலைகள், சில குறிப்பிட்ட சமூகங்களின் தனிப்பட்ட ஆதிக்கத்தில் இருக்கின்றன. தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கான பங்கைக் கேட்டு, இந்த ஆதிக்கத்தைத் தகர்க்க முற்படும்போது, அவர்கள் சாதி வெறியர்களாக முத்திரை குத்தப்படுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்கள் இந்நாட்டின் நட வடிக்கைகளில் தங்களுக்கு உரிய இடத்தைப் பெறுவதற்கான உரிமைக்குத் தடையாக இருக்கும் இத்தகு திரிக்கப்பட்ட அடிப் படைகளை, பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு எவ்வகையிலும் அனுமதிக்காது.

7. இந்நாட்டில் முற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடையிலான இடைவெளி மிகப் பெரியதாக இருப்பதாக பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு நம்புகிறது. இந்த இடைவெளியானது, அம்மக்களிடையே ஒரு பகைமை உணர்வை ஏற்கெனவே ஏற்படுத்தியுள்ளது. 1948 ஆம் ஆண்டு திரு. காந்தி கொல்லப்பட்டபோது, இந்தியாவின் சில பகுதிகளில் முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்திய கொலைகள், கொள்ளைகள் ஆகியவை இந்தப் பகைமை உணர்வு, எந்த அளவுக்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதைக் காட்டியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயர் கல்வி அளித்து, வேலைவாய்ப்பிற்கான கதவுகளை அவர்களுக்குத் திறந்து விடுவதே - இந்தச் சிக்கலுக்கான ஒரே தீர்வாகவும், இந்தப் பகைமை உணர்வைப் போக்கக் கூடியதாகவும் இருக்குமென பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு கருதுகிறது. முற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரிடையே நிலவும் பிறப்பு அடிப்படையிலான இந்த செயற்கை வேறுபாடு, விரைவில் ஒழிய வேண்டும். ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களை கல்வி அடிப்படையில், முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இணையாக உயர்த்தாமல் - இந்த வேறுபாட்டை ஒழிக்க முடியாது.

ஆ. வறுமை குறித்த பிரச்சினை

8. இந்தியாவின் பொருளாதார நிலை, திட்டக் குழுவால் மிக உண்மையாக விவரிக்கப்பட்டிருக்கிறது :

(i) இந்தியாவின் மக்கள் தொகை (ஜம்மு - காஷ்மீர் நீங்கலாக) 1901இல் 23 கோடியே 55 லட்சமாக இருந்தது. 1951இல் 35 கோடியே 65 லட்சமாக உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் ஏறத்தாழ 52 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. முதல் இருபது ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருந்தது. ஆனால், பிறகு உயர்ந்துள்ளது. 1921 - 1931இல் 14.3 சதவிகிதமாகவும் 194151இல் 13.4 சதவிகிதமாகவும் இருந்தது.

(ii) தொழில் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருந்தபோதும், மக்களின் தொழில் அமைப்பில் குறைந்த அளவு மாற்றமே இருந்தது. 1911இல் ஏறத்தாழ 72 சதவிகிதம் உழைக்கும் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். 1948இல் தேசிய வருமான குழு, இதை 68.2 சதவிகிதமெனக் கூறியது. விவசாயத் தொழிலில் வேலைவாய்ப்பு, ஆண்டின் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே சாத்தியமானது. அதனால் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலான தொழிலாளர்கள், ஆண்டின் எஞ்சிய பகுதியில் வேலையற்றவர்களாகவே உள்ளனர். ஆகையால், நாட்டில் மிக மோசமான வேலை குறைவு சிக்கல் உள்ளது.

(iii) தனி மனிதனுக்கான விதைக்கப்பட்ட நிலத்தின் அளவு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்திருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1911-12 இல் 0.88 ஏக்கராக இருந்தது, 1941-42 இல் 0.72 ஆக வீழ்ச்சியடைந்தது. 1948இல் அதாவது, பிரிவினைக்குப் பிறகு இந்தியாவின் தனிமனித விதை நிலத்தின் அளவு 0.71 ஆக இருந்தது. ஒரு ஏக்கருக்கான விளைச்சலின் அளவு தெளிவாக இல்லை. கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், சில உணவு தானியங்களைப் பொருத்தவரையில், விளைச்சல் விகிதம் இறங்குமுகமாகவே இருக்கிறது. விவசாயத்தின் ஒட்டுமொத்த விளைச்சல் விகிதத்தைக் கணிப்பது கடினம் என்றபோதும், இருக்கிற நிலையை வைத்துப் பார்க்கையில், ஒரு தேக்க நிலை இருப்பதைக் காண முடிகிறது.

9. ஆக, வறுமை குறித்த பிரச்சினை என்பது, இரு முனைச் சிக்கலாகும். ஒரு பக்கம் அது விவசாயம் மற்றும் தொழில் துறையில் அதிக உற்பத்தியினால் ஏற்படும் சிக்கலாகும். மறுபுறம், அதிகளவு மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் சிக்கலாகும். இரு புறமும் சம அளவில் முக்கியமானவையே. பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு, வறுமைக்கு எதிராக இந்த இருபுறங்களிலிருந்தும் போராடும்.

10. மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைக்க, மக்களிடையே குடும்பக் கட்டுபாட்டு முறையைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. குடும்பக் கட்டுப்பாடு சுகாதார நிலையங்களை, நாட்டின் பல பகுதிகளிலும் பெருமளவு திறக்க வேண்டுமென அறிவுறுத்துகிறது. மக்கள் தொகை பெருக்க விகிதம் மிக வேகமாக வளர்வது பெரும் தீங்கானது என்பதும், அதனால் அதனைக் கட்டுப்படுத்த மிகத் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறது.

11. உற்பத்தியை அதிகரிக்க பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு, எத்தகைய தத்துவத்தையோ அல்லது வடிவத்தையோ, பின்பற்றாது. தொழில் துறைக்கான வடிவம் என்பது, காலநிலையையும் சூழலையும் பொறுத்து அமையும். தேசியமயமாக்கல் அவசியமாகவும் சாத்தியமாகவும் இருக்கும் சூழலில், பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு அதனை ஆதரிக்கும். இந்நாட்டு மக்களின் கடுமையான வறுமைச் சூழலைப் பார்க்கும்போது, மேலும் உற்பத்தி, மென்மேலும் உற்பத்தி என்பதே அதற்கானத் தீர்வாக இருக்க முடியும். முன்பே தீர்மானிக்கப்பட்ட தொழில் வடிவம் என்பது, சரியான தீர்வாக இருக்க முடியாது. வறுமைக்கான மாற்று உற்பத்தியைப் பெருக்குவதே அன்றி, உற்பத்தி வடிவமைப்பில் இல்லை. பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு எப்படியும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். உற்பத்திக்கான எந்தத் திட்டமும், உழைக்கும் வர்க்கத்தினரை எந்த வகையிலும் சுரண்டுவதாக இருந்துவிடக் கூடாது என்பதற்கே பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு முக்கியத்துவம் அளிக்கிறது.

12. அதிவேகத் தொழில் வளர்ச்சி நாட்டிற்கு அவசியம் என்பதே கூட்டமைப்பின் கருத்தாக இருந்த போதும், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு விவசாயமே அடிப்படையாக இருக்க முடியும். உற்பத்தி வளர்ச்சிக்கான எந்தத் திட்டமும் இந்திய விவசாய சீரமைப்பைக் கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்டால், அது ஏமாற்றத்திலேயே முடியும்.

13. விவசாய உற்பத்திப் பெருக்கத்திற்கு, கீழ்க்காணும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமெனக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது :

(i) விவசாயம் எந்திரமயமாக்கப்பட வேண்டும். பழங்கால முறைகளையே பயன்படுத்தும் வரையில், இந்திய விவசாயம் செழிக்கப் போவது இல்லை.

(ii) எந்திரமயமாக்கலை நடைமுறைப்படுத்த, சிறு விவசாய நிலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, பெரிய பண்ணைகளாக மாற்றப்பட வேண்டும்.

(iii) விளைச்சலைப் பெருக்க, தேவையான உரங்களும், தரமான விதைகளும் வழங்கப்பட வேண்டும்.

14. ஒரு சாதாரண விவசாயிக்கு இத்திட்டத்தை ஏற்று செயல்படுத்துவது, இயலாத செயலாகும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பொருளாதாரம் அவர்களிடம் இருக்க முடியாது. இத்திட்டத்தை அரசு ஏற்று செயல்படுத்த வேண்டுமென, பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு நம்புகிறது. இத்திட்டத்தின் முதல் குறிப்பு அரசின் பொறுப்பாகும். விவசாயிகளுக்கு நவீன எந்திரங்களை அரசே வாடகைக்கு அளிக்க வேண்டும். நில வரியோடு அவ்வாடகையை கட்டும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

15. சிறு விவசாய நிலங்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதால், பெரிய பண்ணைகளை உருவாக்குவது மிகவும் கடினமானதாகும். ஆனால், கூட்டுறவுப் பண்ணைகள் அல்லது கூட்டுப் பண்ணைகள் உருவாக்குவதன் மூலம் இச்சிக்கல் தீர்க்கப்பட வேண்டும்.

16. இந்தியா ஒரு விவசாய நாடாக இருந்த போதும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் பெருமளவில் இருக்கின்றனர். அவர்கள் மிக மோசமான வாழ்வியல் நிலையில், நில உடைமையாளர்களால் சுரண்டப்படுபவர்களாகவும் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தீண்டத்தகாதவர்களாகவும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவுமே உள்ளனர். இத்தகைய நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், இத்தகு துன்பமான சூழலில் தவிக்கவிடப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது, தீர்க்கப்படவே முடியாத பிரச்சனையும் அல்ல என்பதே மேலும் வருந்தத்தக்க செய்தியாகும். இதற்கு இந்தியாவில் இருக்கும் நிலங்கள் குறித்த இந்தத் தகவல் பயனுடையதாக இருக்கும் (பட்டியல் காண்க).

மொத்த நிலப்பரப்பு 81 கோடியே 10 லட்சம்
மொத்த விவசாய நிலம் 57 கோடியே 70 லட்சம்
மொத்த காடு பகுதி 8 கோடியே 40 லட்சம்
விவசாயத்திற்கு ஏற்ற தரிசு நிலம் 9 கோடியே 30 லட்சம்
விவசாயத்திற்குப் பயன்படாத தரிசு நிலம் 9 கோடியே 30 லட்சம்
உழுது பயிர் செய்யப்படாத நிலம் 6 கோடியே 20 லட்சம்
நிகர விவசாய நிலம் 24 கோடியே 40 லட்சம்

மேற்கண்ட புள்ளிவிவரத்திலிருந்து 9 கோடியே 30 லட்சம் ஏக்கர் நிலம், விவசாயத்திற்கு உகந்ததாக இருப்பினும், தரிசாக கிடப்பதையும், அவற்றையும் விவசாய நிலங்களாக மாற்ற இயலும் என்பதையும் காணலாம். நவீன அறிவியலைப் பயன்படுத்தி, இந்த நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றுவது முடியாத ஒன்றல்ல. பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு இக்கேள்வியை எழுப்புகிறது.

17. விவசாயிகளின் செழிப்பு, காடுகளைப் பராமரிப்பதில் இருக்கிறது. காடுகளின்றி தேவையான மழைக்கு உத்திரவாதமில்லை. இதனால் இந்தியாவில் விவசாயம் மழையை நம்பிய ஒரு சூதாட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. இனியும் இப்படியே இருக்கும். விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்களைக் காடுகளாக்க வேண்டும் எனக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

18. விவசாயம், ஒரு குறுகிய நோக்கில் லாபம் ஈட்டக்கூடிய தொழில் அன்று. அவற்றிற்குத் துணையாக குடிசைத் தொழில்கள் இருக்க வேண்டும். ஆனால், எந்த குடிசைத் தொழிலுக்கும் அடிப்படைத் தேவை மின்சாரம். ஆகவே, மின்சார உற்பத்தி நாட்டின் வளத்திற்கு மிக அடிப்படைத் தேவையான ஒன்றாகும் என பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு கருதுகிறது. எனவே, பாசனத்திற்கும், மின்சார உற்பத்திக்கும், வெள்ளங்களைத் தடுக்கவும் பயன்படும் ஆற்றுப்படுகைத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு பாடுபடும்.

19. நிலங்கள் புறக்கணிக்கப்பட்டது போன்றே நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும் புறக்கணிக்கப்படுகின்றனர். பயிர் செய்யப்படாத நிலங்களில் ஒரு பகுதியை நிலமற்ற தொழிலாளர்களுக்காக கூட்டமைப்பு பதிவு செய்யும்.
.
தொடரும்
- தமிழில் : பூங்குழலி

 

Pin It