இடஒதுக்கீடு என்பது சட்டரீதியாக அளிக்கப்பட்டுள்ள உரிமை என்றபோதும், அதை நடைமுறைப்படுத்துவது, பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாக வாய்ப்புகள் முற்றாக மறுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவத்தை - ஆதிக்கச் சாதியினருக்கு எதிரானதாகவும்; சமூக சமத்துவத்திற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையால் (Affirmative Action) பயன்பெறும் மக்களை - அறிவற்றவர்களாகவும் சித்தரிக்கும் வேலையை, சாதிய ஊடகங்கள் முழு வீச்சுடன் செய்து வருகின்றன. ‘சட்டத்தின் ஆட்சி' நடைபெறுவதாகச் சொல்லப்படும் இந்நாட்டில், இடஒதுக்கீட்டை சரிவர பின்பற்றாமல் எத்தனையோ அரசுத் துறைகள் இன்றும் இருக்கின்றன. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக இடஒதுக்கீட்டை எள்ளளவும் நடைமுறைப்படுத்தாமல் - அரசு உதவிபெறும் ஆய்வு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதுதான் ‘சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்'.

M.Ramakrishnan
சென்னை அடையாறில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், சென்னை பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், ‘யுனெஸ்கோ'வின் முன்னாள் உறுப்பினருமான மறைந்த மால்கம் ஆதிசேஷையா மற்றும் அவரது துணைவியார் எலிசபெத் ஆகியோரால் 1971 இல் தொடங்கப்பட்டது. கிராம மற்றும் விவசாய மேம்பாடு, சமூக, பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினர் முன்னேற்றம் போன்றவைகளுக்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் அவர்கள் இதை நிறுவினர்.

அதன்பிறகு 1977 ஆம் ஆண்டில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ‘இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம்' மற்றும் தமிழ் நாடு அரசு ஆகியவற்றின் நிதி உதவி பெறும் தேசிய நிறுவனம் என்ற நிலையை அது பெற்றது. அதிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக ஒரு முழுமையான அரசு உதவி பெறும் ஆய்வு நிறுவனமாக செயல்பட்டு வரும் ‘சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்', மத்திய - மாநில அரசுகளின் இடஒதுக்கீடு சட்டத்தை துளியும் பின்பற்றுவது இல்லை. தற்பொழுது இந்நிறுவனத்தில் 16 பேராசியர்களும், 25 அலுவலக ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். மேலும், 17 ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளனர். ஆய்வுப் பணிகளை தன்மையாகக் கொண்ட இந்நிறுவனம், இந்தியாவில் உள்ள சமூக, அறிவியல் ஆய்வு நிறுவனங்களில் முக்கியமான ஒன்று.

இந்நிறுவனத்தில் இதுவரை பேராசியர் மற்றும் அலுவலக ஊழியர் நியமனங்களில், இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை. இதனால் இங்குள்ள பேராசியர் மற்றும் அலுவலக ஊழியர்களில், பெரும்பான்மையான இடங்களைப் பார்ப்பனர்களும் சாதி இந்துக்களும்தான் ஆக்கிரமித்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்டோருக்கும், தலித் மற்றும் பழங்குடியினருக்கும் சட்டப்படி வந்து சேர வேண்டிய வேலைவாய்ப்பை, இந்நிறுவனம் இவ்வளவு நாட்களாகத் தடுத்து வந்திருப்பது, தற்பொழுதுதான் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இந்நிறுவனம், 10.4.2006 அன்று பேராசியர், இணைப் பேராசியர் மற்றும் துணைப் பேராசியர் பதவிகளுக்கான விண்ணப்பம் கோரும் விளம்பரத்தை ‘தி இந்து' ஆங்கில நாளிதழில் வெளியிட்டது. வழக்கம்போல இந்த முறையும் இடஒதுக்கீடு குறித்த எந்தத் தகவலும் அந்த விளம்பரத்தில் இல்லை. ஆனால், இந்த விளம்பரத்தைப் பார்த்து துணைப் பேராசியர் பதவிக்கு விண்ணப்பித்த ராமகிருஷ்ணன், இந்நிறுவனம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கெதிராக செயல்படும் போக்கைத் தடுத்து நிறுத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், பேராசியர் நியமனத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறும், அதுவரை தேர்வுப் பட்டியலைத் தயார் செய்யக்கூடாது என்றும் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இவ்வழக்கைத் தொடர்ந்த ராமகிருஷ்ணன், நாட்டுப்புறக் கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்; புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் குறியீட்டியலில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும், பேராசியர்களுக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். கோழிக்கோடு பல்கலைக் கழகம், நாட்டுப்புறக் கலை உதவி மய்யம் ஆகியவற்றில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, தற்பொழுது மைசூரில் உள்ள இந்திய மொழிக்கான நடுவண் நிறுவனத்தில் முனைவர் பட்டத்திற்குப் பிறகு, ‘பல்கலைக் கழக மானியக் குழு' (யுஜிசி) அளிக்கும் ஊக்கத் தொகையில் ஆய்வுப் பணி செய்து வருகிறார்.

இந்நிறுவனத்திற்கு விண்ணப்பித்த எம். ராமகிருஷ்ணனின் விண்ணப்பத்தைத் திருப்பி அனுப்பிய ‘சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன'த்தின் இயக்குநர் பத்மினி சுவாமிநாதன், பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும், இந்நிறுவனத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இதுவரை இருந்ததில்லை. எனவே ‘பல்கலைக் கழக மானியக் குழு' விடமிருந்து ஊக்கத் தொகையை பெற முடியாது என்று கூறிவிட்டார். ஆனால், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதே ‘பல்கலைக் கழக மானியக் குழு ' உதவித் தொகையை பிரேமா ராஜகோபாலன் என்பவருக்கு,’சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்' வழங்கியுள்ளது. இந்நிலையில், தலித் சமூகத்தைச் சார்ந்த ராமகிருஷ்ணன் விண்ணப்பித்த போது மட்டும் இந்த உதவித் தொகையை அளிக்க மறுத்தது ஏன்?

இந்நிறுவனத்தில் அலுவலக ஊழியர்களாகப் பணியாற்றி வரும் தலித்துகளுக்கு, முறையாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு தடுக்கப்பட்டுள்ளது என்ற பிரச்சினை சில மாதங்களுக்கு முன்பு எழுந்தது. அப்போது தலித் ஊழியர்கள், தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளை வழங்கக்கோரி விண்ணப்பத்தை அளித்துள்ளனர். அதன் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் அய்ந்து ஆய்வு மாணவர்களைத் தேர்வு செய்து வருகிறது இந்நிறுவனம். தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு மாணவருக்கும், இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம், ஒவ்வொரு மாதம் ஆறாயிரம் ரூபாய் உதவித் தொகையை மூன்று ஆண்டுகளுக்கு வழங்குகிறது. இந்த ஆய்வு மாணவர்கள் தேர்விலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. தற்பொழுது ஆய்வு மாணவர் விண்ணப்பத்திற்கான இதன் இணையத்தள (mids.ac.in) விளம்பரத்தைப் பார்த்தே இதைத் தெரிந்து கொள்ளலாம். இந்நிறுவன வரலாற்றில் எத்தனையோ பார்ப்பன, சாதி இந்து ஆய்வு மாணவர்களை உருவாக்கிய இந்த ஆய்வு நிறுவனம், ஒரு தலித் மாணவரைக்கூட இதுவரை உருவாக்கவில்லை. தற்பொழுது ஒரே ஒரு தலித் பேராசியரும், சில தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஆய்வு மாணவர்களும் உள்ளனர். ஆனால், இவர்கள் அனைவருமே பொதுப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இடஒதுக்கீட்டை மறுப்பதன் மூலம் தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்பைத் தடுக்கும் இந்நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏழு துணைப் பேராசியர்களை நியமித்திருக்கிறது. இந்த நியமனம் இடஒதுக்கீட்டைப் புறக்கணித்த நியமனமாகவே இருந்துள்ளது. இந்நிறுவனத்தின் நிறுவனர் மால்கம் ஆதிசேஷையா தலைமையில் 22.8.1980 அன்று நடைபெற்ற சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன நிர்வாகக் குழு கூட்டத்தில், தலித்துகளுக்கான முன்னுரிமை குறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்கின்றனர். அத்தீர்மானத்தில், ‘‘சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு துணை ஆய்வாளர், இணை ஆய்வாளர், அலுவலக ஊழியர் மற்றும் ஆய்வு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விளம்பரத்தில் எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தல் வேண்டும்'' (GC/V/80-ix) என்ற கொள்கை முடிவை எடுத்திருக்கின்றனர்.

இப்பிரச்சினை குறித்து அந்நிறுவனத்தில் பணியாற்றும் பேராசியர் ஒருவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘இந்தியாவிலுள்ள இதே போன்ற பிற ஆய்வு நிறுவனங்களில், இடஒதுக்கீடு சட்ட ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் பின்பற்றப்படுகிறது. இந்நிறுவனத்தில் இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவது குறித்து பேராசியர் கூட்டத்தில் ஏற்கனவே இரண்டு முறை பேசியும், அதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊருக்கு உபதேசம் என்பது போல, பேச்சளவில் சமூக நீதியை வலியுறுத்தும் இந்நிறுவன நிர்வாகம், அதை நடைமுறைப்படுத்துவதில் தனது சாதிய மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறது'' என்றார்.

இடஒதுக்கீடு அரசியல் சட்டமாக, நிறுவனத்தின் கொள்கை முடிவாக இருந்தும்கூட, இத்தனை ஆண்டுகளாக அதைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல் ‘சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்' செயல்படுவதன் உள்நோக்கம் என்ன? ‘அய்யர் - அய்யங்கார் தொழில் நுட்ப நிறுவனம்' அய்.அய்.டி. போலவே இந்நிறுவனம் செயல்படுகிறதா என்ற கேள்வியை, இது மக்கள் மன்றத்தில் எழுப்பியுள்ளது. அய்.அய்.டி. மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பிரச்சினை எழுந்தபோது, சமூக நீதியை ஆதரித்துக் குரல் கொடுத்த முன்னாள் துணைவேந்தர்களும், அறிவு ஜீவிகளும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரச்சினையில் ஏன் அமைதி காக்கின்றனர்?

 

-தலித் முரசு செய்தியாளர்
Pin It