கீற்றில் தேட...

 

ஒரு சமூகத்துக்குப் புத்துயிரூட்ட, அரசியல் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், சமூக, பொருளாதார மற்றும் நெறி சார்ந்த கொள்கைகளே வேறு எதைவிடவும் முக்கியமானதாக எனக்குத் தெரிகிறது. இவைகளின் எழுச்சிக்கான ஒரு வழியாக மட்டுமே அரசியல் இருக்கிறது'' சமூக மய்யம் அமைப்பது குறித்த தனது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் அம்பேத்கர். அம்பேத்கர் அவர்கள், அரசியல் குறித்து கொண்டிருந்த பார்வையை, இதில் தெளிவாக நம்மால் அனுமானிக்க முடிகிறது. தமது முப்பத்தொன்பதாம் வயதில் வட்டமேசை மாநாட்டில், அவர் முன்வைத்த கருத்துகள், அவருடைய அரசியல் பார்வையை மேலும் தெளிவாக்குகிறது.

Dalit Politics
‘ஒடுக்கப்பட்ட மக்களின் சிக்கல் ஒரு சமூகச் சிக்கல்; அதற்குரிய தீர்வு அரசியலில் இல்லை; வேறு இடத்தில் உள்ளது என அடிக்கடி கூறப்படுகிறது. இக்கருத்தை வன்மையாக மறுக்கின்றோம். அரசியல் ஆதிக்க உரிமை கிடைத்தாலன்றி, ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் சிக்கல் தீராது' (அம்பேத்கர் பேச்சும் எழுத்தும், தொகுதி 5, பக்கம் : 11). அவர் இங்கு குறிப்பிடும் அரசியல் என்பதன் உட்கிடைதான் சமூக மய்யம் குறித்த அறிக்கையில் சொல்லியிருப்பது. ஒடுக்கப்பட்ட வகுப்பாருக்கு அரசியல் மிகவும் அவசியம். அதுவே அவர்களின் சிக்கலைத் தீர்க்கும் வழி. ஆனால் அந்த அரசியல், சமூக, பொருளாதார, நெறி சார்ந்த கொள்கைகளை உள்ளடக்கியதாக, எழுச்சி கொள்ளச் செய்வதாக, அவற்றுக்கு முதன்மையளிப்பதாக இருக்க வேண்டும்.

சமூக நோக்கிலான அரசியலுக்கும், அதிகாரத்துக்கான அரசியலுக்கும் பாரிய தொலைவு வேறுபாடுகள் கிடக்கின்றன. அம்பேத்கர் முன்னதைப் பின்னதன் வழியாக வலியுறுத்துகிறார். அவருடைய செயல்பாடுகளும் கூட, அப்படியாகவேதான் இருந்தன. அவருக்குக் கிடைத்த பதவிகளையும், வாழ்க்கை வசதிகளையும் தலித் மக்களுக்கென துச்சமாகத் தூக்கி எறிந்திருக்கிறார். ‘‘நான் என்னுடைய மக்களுக்கு நேர்மையாக இருந்தேன்'' என்று அவரைப்போல இன்று எந்தத் தலைவராலும் சொல்லிவிட முடியாது. அவருடைய வாக்குமூலம் அதைத் தெளிவுபடுத்துகிறது (27.10.1951 - ஜலந்தர் உரை ‘தலித் முரசு' சூலை, 2006). அப்படி அவரைப் போல இன்று சொல்ல வேண்டுமெனில், பெரும் குற்ற உணர்வுக்குதான் நாம் ஆட்பட வேண்டியிருக்கும்.

அம்பேத்கர் அவர்களின் அரசியல் பார்வை பிற கட்சிகள் கொண்டிருந்த, இன்றளவும் கொண்டிருக்கிற அரசியல் பார்வையிலிருந்து மாறுபடுகிறது. அவருடைய சமூக நோக்குதான் அதற்கான காரணம். ஆனால், உருவான அரசியல் அமைப்புகளில் பெரும்பாலானவை, ஆதிக்கச் சாதியினரின் பதவித்தினவை போக்கிக் கொள்வதற்கான வழியாக உருவானவையே. அவை இன்றளவும் அந்த வேலையை தப்பாமல் செய்தே வருகின்றன. ஆனால், தலித் அரசியல் அமைப்புகள் அதிகாரத்தைக் குறிவைத்து உருவாக்கப்பட்டவையல்ல. அவைகளின் தன்மை நோக்கம் சமூகச் சீர்திருத்தம், சமூக மாற்றமாகும். இந்த அடிப்படைகள் இன்றும் மாற்றம் கொள்ளவில்லை.

தலித் சமூக மாற்றத்துக்கான அடிப்படைப் பணிகளைப் பின்தள்ளி, பிற அரசியல் கட்சிகளைப் போன்றே அதிகார அரசியலுக்கான பாதையை, தலித் அமைப்புகள் இன்று தேர்வு செய்கின்றன. இந்த நிலை இந்தியா முழுமையும் நிலவுவதாகவே சமூகவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். இது, ‘தலித் அதிகாரத்திற்கான வேட்கை' என்று சில அறிஞர்களால் அழைக்கப்படுகிறது. உத்திரப்பிரதேசத்தில் வலுவான அரசியல் அமைப்பாக இயங்கிவரும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியைப் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையொன்றில், பேராசியர் டி.எல்.சேத், அக்கட்சியின் நிலைப்பாடுகளை அலசுகிறார். (Atrophy in Dalit politics, Editor : Gopal Guru, DIC Book Series 2005) நீண்ட கால குறிக்கோள்கள் மற்றும் குறுக்குவழி அதிகாரம் என்பவற்றில் பின்னதை அக்கட்சி இன்று தெரிவு செய்திருக்கிறது. தேர்தல்களையும் அதிகாரத்தையும் மட்டுமே குறிவைத்து மேற்கொள்ளப்படும் செயல்திட்டங்களே குறுக்கு வழி அதிகாரத்துக்கான அரசியலுக்குத் தேவையாக இருக்கின்றன.

உண்மையில், அதிகாரத்துக்கான அரசியல் நடத்தும் எல்லா கட்சிகளுமே இவ்வகையான அணுகுமுறையைதான் கைக்கொள்கின்றன. அதிகாரம் வரும்போது, சமூக மாற்றத்துக்கான பணிகளை இன்னும் முனைப்போடு முடுக்கிவிடலாம் என தலித் அமைப்புகள் கருதுவதால், அவையும் அந்த நிலைக்கே தள்ளப்படுகின்றன. உத்திரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து பகுஜன் சமாஜ் கட்சி ‘தலித் - பார்ப்பன - இசுலாமியர்' கூட்டமைப்பைக் கொண்டதாக தமது கட்சியை அறிவித்துக் கொண்டுள்ளது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட 200 பேர் அடங்கிய அதன் வேட்பாளர்களின் முதல் பட்டியலில், சுமார் 30 சதவிகித ஆதிக்கச் சாதியினர் இடம் பிடித்திருக்கிறார்கள்.

சமாஜ்வாடி மற்றும் பா.ஜ.க. கட்சிகளிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த பலருக்கும் இப்பட்டியல் முன்னுரிமை அளித்திருக்கிறது. பார்ப்பனர் உள்ளிட்ட ஆதிக்கச் சாதியினர் பகுஜன் சமாஜ் போன்ற தலித் கட்சியில் பெருமளவில் இடம் பெறுவது, அதன் மய்ய நிலைப்பாட்டையே அசைத்து விடும். அவர்களின் கருத்துகளுக்கும், விருப்பத்துக்கும் தலையசைக்க வேண்டிய நிலை உருவாகும். நீண்டகாலப் போக்கில் கட்சியின் தலித் அடையாளம் மெல்ல மறையும். இப்படியான அடையாள மறுப்பு அரசியல், அதிகாரத்துக்கான வழியை உருவாக்க உதவினாலும் சமூக மாற்றத்துக்கான வழியை உருவாக்க உதவுமா என்பது கேள்விக்குறிதான். இந்திய அளவிலும், தமிழக அளவிலும் தொடக்க கால தேர்தல்களிலிருந்தே தலித் அரசியல் கட்சிகள், ஏதேனும் ஓர் அரசியல் கட்சியுடன் கூட்டணி வைத்தேதான் தேர்தலை சந்தித்திருக்கின்றன. கூட்டணி என்கின்ற நிலையை மாற்றி, தனது அமைப்புக்குள்ளேயே தலித் அல்லாதோருக்குப் பிரதிநிதித்துவம் தரும் செயலை பகுஜன் சமாஜ் கட்சி செய்திருக்கிறது. இதைத் துணிச்சலானதொரு பரிசோதனை முயற்சி என்று ஊடகங்களும், பிற அமைப்புகளும் கருதுகின்றன.

ஆனால், இது பின்னடைவுக்கான முயற்சி என்றே சொல்லத் தோன்றுகிறது. ‘தலித் அரசியல் தொய்வு' எனும் நூலுக்கு முன்னுரை எழுதும் தலித் அறிஞர் கோபால் குரு, சற்றுக் கடுமையாகவே தமது விமர்சனங்களை முன்வைக்கிறார். அவருடைய நீண்ட முன்னுரையிலிருந்து சுருக்கமாக சிலவற்றை இப்படி தொகுக்கலாம் : ‘‘தலித் அரசியல் இன்று இரண்டு பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறது. மாற்றத்துக்குரிய பன்முகத்தன்மையுடன் இயங்கும் தலித் இயக்கத்தினுடைய உள்ளீடைப் பாதிக்கும் வகையில் அறிவு சார்ந்தோ, அரசியல் தளத்திலோ புதிய வகை மாதிரிகளை உருவாக்கும் நோக்கில், எந்தவிதமான மூலதனத்தையும் அது எதிர்பார்க்கவில்லை. தலித் அரசியலின் வரலாற்று உருவாக்கத்தில் பங்கு வகித்த புதிய வகை மாதிரிகளை, இனம் காண்பதற்கு முடியாத வகையிலான கொள்கைத் திறன் அற்ற அரசியலாகிறது. அறிவார்த்தமான அல்லது அரசியல் பயிற்சி அற்ற நிலை ஊடகங்களால் உருவாக்கப்படுகிறது. தலித் தலைவர்கள் தமது விருப்பம் போல் முடிவுகளை மேற்கொள்கின்றனர். அம்முடிவுகள் மக்களின் ஈடுபாட்டோடும், அறிவார்ந்த முறையிலும் உருவாகாமல் குறுக்கு வழியில் சென்று விடுகின்றன.

புதிய திட்டங்கள் செயற்கையாக உருவாக்கப்படுவதுடன் மேலிருந்து அளிக்கப்படுகின்றன. போராட்டங்களிலிருந்து அவை உருக்கொள்வதில்லை. தலித் அரசியல், ஊடகங்களின் மூலம் செயல்படும் அரசியலாக அது இருக்கிறது. இந்திய மின்னணு ஊடகமோ கருத்தியல் உருவாக்கத்திற்கும், தத்துவார்த்த சிந்தனைக்கும் அனுமதிப்பதில்லை. அது உடலுக்கான மொழியை மட்டுமே புரிந்து கொள்கிறது; மனதுக்கானதையல்ல. எனவே, தலித் இயக்கங்கள் ஊடகத்தை மட்டுமே அணி திரட்டுவதற்கான சாதனமாக ஏன் பார்க்க வேண்டும்? ஒதுக்குதல்கள், ஒடுக்குமுறை, வன்கொடுமை ஆகியவற்றின் வழியே ஏன் அணிதிரட்சி முகிழ்த்தெழுவதில்லை? இதற்கு ஒரு பதில் சக்தி வாய்ந்த சமூக இயக்கம் இல்லை என்பதுதான். தலித் அரசியல் ஊடகம், எழுத்து, கருத்தரங்குகள் ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றுகின்றன; வீதியில் இறங்கிப் பணியாற்றுவதை விட!'' கோபால் குரு அவர்களின் இந்தவகை விமர்சனங்கள், நமக்கு ஒரு சார்பானவை போல தோற்றம் தந்தாலும், ஆழமான எதார்த்தக்கூறுகளை அவை கொண்டிருக்கின்றன. அவரின் விமர்சனங்கள் தலித் இயக்கங்களின் மாற்றத்துக்கான உண்மையான அக்கறையைக் கொண்டிருக்கின்றன. தலித் இயக்கங்கள் தம்மை ஆற்றல் வாய்ந்த சமூக இயக்கங்களாகவும் கருதிக்கொண்டு செயல்பட்டாக வேண்டும். அந்த செயல்பாடே மக்களை மிக எளிதில் அணி திரட்டும். ஆனால், நிலவும் சமத்துவமற்ற, ஊழல் நிறைந்த, நரித்தனமான, அதிகார வெறிகொண்ட அரசியல் சூழலுக்கு தலித் இயக்கங்களும் ஆட்படுகின்றன.

தமது அடையாளத்தையும், இருப்பையும் காட்ட வேண்டிய நிர்பந்தத்திற்கு அவர்களைப் பிற இயக்கங்கள் தள்ளுவதன் மூலம், தலித் இயக்கங்கள் சமரசங்களுக்கு உள்ளாகின்றன. இத்தகைய சூழல், தலித் இயக்கங்கள் தம்மை வலுவான சமூக இயக்கங்களாக நிலைநிறுத்திக் கொள்ளாததாலேயே உருவாகின்றன. வலுவான கீழ்மட்ட அளவிலான அமைப்புகளும், தலித் மக்களின் சிதறாத அணி திரட்சியும் இருந்தால், சமரசங்களுக்கு ஆட்பட வேண்டியதிருக்காது. ஆனால், பின்னடைவு இதில்தான் இருக்கிறது.

சமூக இயக்கம், நெறிசார்ந்த கொள்கைகளை மக்களுக்கு இடை விடாது கற்பிப்பதன் மூலம் உருக்கொள்கிறது. இந்தியா முழுமைக்கும் அத்தனை தலித் மக்களுக்கும் நெறிசார்ந்த கொள்கைகள், ஆழமாகக் கற்றுத் தரப்படுமானால், பேராசான் அம்பேத்கர் அவர்களின் கனவு நொடியில் நனவாகிவிடும். கற்பிப்பதிலே தான் இன்று மிகப் பெரும் தேக்கம் நிலவுகிறது. தலித் அமைப்புகளில் இருக்கும் அடிமட்ட தொண்டனுக்கு எதுவும் கற்பிக்கப்படுவதில்லை. அம்பேத்கர் என்ற பெயரும், ஊடகம் வழியான அரைகுறை செய்திகளும், அவன் தினசரி வாழ்வில் அடையும் சாதிய அவமானங்களும், கோபம் மட்டுமே அவனை இயக்கங்களோடு பிணைத்துள்ளன. அவன் தனது அரசியலை அதிகாரத்துக்கானதொரு அரசியலாகப் புந்து கொள்கிறான்.

இந்து மதம் சாராத, மதமாற்றம் சார்ந்த, பொருளாதாரத் தன்னிறைவு சார்ந்த, நிலம் சார்ந்த திட்டங்களோ, உறுதியான கொள்கை முடிவுகளோ தலித் இயக்கங்களிடம் இல்லை. தேர்தலையும், அதிகார அரசியலையும் மட்டுமே குறிவைத்து அவை இயங்குகின்றன. மநுஸ்மிருதி எதிர்ப்பு, கோயில் நுழைவுப் போராட்டம், பொதுக் குளத்தில் நீர் எடுக்கும் போராட்டம், பவுத்த ஏற்பு, சாதி ஒழிப்பு, இந்து மத எதிர்ப்பு என்று அம்பேத்கர் அவர்களின் வாழ்வில் பண்பாட்டு ரீதியிலான போராட்டங்கள் நிறைந்துள்ளன. அவையே அம்பேத்கரை தலித் மக்களின் மாபெரும் தலைவராகவும் இனங்காட்டின. இத்தகு போராட்டங்கள் இன்று மேற்கொள்ளப்படுவதில்லை. நாடு முழுக்க அதிகரித்து வரும் தீண்டாமை வன்கொடுமைகளுக்கும், தலித் மக்கள் மீதான தாக்குதல்களுக்கும் எதிரான திட்டமிடப்பட்ட நாடு தழுவிய போராட்டங்கள் எதுவுமில்லை. நடைபெறும் போராட்டங்கள், குளத்து நீரின் அலைகளாய்ப் பரவாமல், ஓடும் நீரில் எறிந்த கல்லென மூழ்கிவிடுகின்றன. பெரும்பாலான போராட்டங்கள், அறிக்கை விடுவதோடு முடிந்து போகின்றன.

Pamaran and Azhakiya periyavan
தலித் அணிதிரட்சி என்பது, சமூக நெறி சார்ந்த செயல்பாடுகளின் வழியேதான் உருவாகும். இத்திரட்சி, தலித் வாக்கு வங்கியாகவும் செயல்படும். வெறுமனே தலித் வாக்கு வங்கி உருவாக்கம் என்பது, மலிவான அரசியல் நோக்கங்களைக் கொண்டது. தேர்தலையும், அதிகார அரசியலையும் குறிவைத்து உருவாக்கப்படுவதுதான் வாக்கு வங்கி. ‘கொடுத்து வாங்குதல்' என்ற மலிவுபடுத்தப்பட்ட அரசியல் உத்திக்கு, வாக்கு வங்கிகள் பழக்கப்படுத்தப்பட்டு வெகுகாலம் ஆகின்றன. இந்த வங்கிகள் நிலையானதுமல்ல. சூழலுக்கு ஏற்ப அவை மாற்றம் காண்கின்றன. கருத்தியல் தளத்தின் வழியே உருவாக்கப்படும் அணிதிரட்சிதான், நிலையான ஆற்றலாய் எழுந்து மாற்றத்துக்கு வழிவகுக்கும். இந்த திசை வழிப் பயணமே தலித் இயக்கங்களின் உறுதியான எதிர்காலத்தை உருவாக்கக் கூடியவை. இல்லையெனில், நம் இயக்கங்களின் சுழலில் சிக்கி இக்கரைக்கும் அக்கரைக்கும் அலைவுரும் படகுகள்தான்.

மேட்டுப்பாளையத்தில் இயங்கிவரும் புலே கல்வி மய்யம் நடத்திய தலித் கல்வி விழாவுக்குப் போயிருந்தேன். மேட்டுப்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 15 இடங்களில் மாலை நேரப் பயிற்சி வகுப்புகளை இம்மய்யத்தினர் நடத்தி வருகின்றனர். இளம் தோழர்கள் ராமச்சந்திரன், சுரேஷ் அம்பேத்கர், புலே, பால்ராஜ், நாகேந்தர் போன்றோரின் முயற்சியால் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எழுத்தாளர் பாமரன், பொறியாளர் கருணாகரன், செந்தில் உள்ளிட்ட தோழர்களை, அம்மய்யத்தினர் விழாவுக்கு அழைத்திருந்தனர். விழா மாலையில் என்பதால், பகல் முழுவதும் தோழர்களுடன் பேசுவதிலேயே கழிந்தது.

துப்புரவுப் பணியாளர்களை, எப்படி அவர்களின் நிலையிலிருந்து மீட்டெடுப்பது? அவர்களுக்கு மாற்றுத் தொழில் வழங்கப்படும் வரை, அவர்களின் அன்றாட வாழ்வுக்கான திட்டங்களும், உத்திரவாதங்களும் என்ன? போன்ற கேள்விகளை சிலர் எழுப்பினர். இன்னும் சில தோழர்கள் செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கான நல வாரியம் ஒன்று தேவை என கருத்து தெரிவித்தார்கள். கோவை போன்ற பெருநகரின் மய்யத்தில் அங்காடி வளாகம் ஒன்று அத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுமானால், அத்தொழிலாளர்கள் மேம்படுவார்கள் என்றும் அவர்கள் சொன்னார்கள். இவ்விவாதம் கேள்விகளும், துடிப்பும் வேகம் கொண்ட இளம் தலித் தோழர்களிடமிருந்து எழும்பியவை என்பது உள்ளூற மகிழ்ச்சியை தந்தது.

கையால் மலம் அள்ளும் தொழிலைப் போன்றதுதான் செருப்புத் தைத்திடும் தொழிலும். இரண்டையும் ஒரு தலித் சமூகமே செய்வதால் இழிவானதாகக் கருதப்படுகின்றன; இழிநிலைக்கும் காரணமாய் அமைகின்றன. எனவே, அவ்விரு தொழில்களையுமே தலித் மக்களிடமிருந்து எப்படியாகிலும் ஒழித்தெறிவதே தன்மையானதாக இருக்கிறது. மாற்றுப் பணிகளும், திட்டங்களும் இணையாக செயல்படுத்த வேண்டியவைகளாகின்றன. பொதுவுடைமை இயக்கங்கள் கேட்பது போல, அத்தொழிலில் பணி நிரந்தரம், கூலி உயர்வு போன்ற முழக்கங்களும், என்.ஜி.ஓ.க்கள் கோருவது போல, அத்தொழிலை நவீனப்படுத்தும் கோரிக்கைகளும் அந்த இழி தொழில்களை இருத்தவே பயன்படும். நாம் இத்தொழில் செய்யவே பிறந்துள்ளோம் என்ற அடிமை உணர்வு, தலித் மக்கள் பலரிடம் ஊறிக்கிடக்கின்றது. அதை அழிக்க சிறந்த வழி, அந்தத் தொழில்களை முற்றிலுமாக ஒழிப்பது அன்றி வேறல்ல.

மாலையில் நடந்த விழாவிலே ஆச்சர்யங்கள் காத்திருந்தன. மேல்நிலை வகுப்பிலும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு, நினைவுப்பரிசுகளை வழங்கினார்கள். மேல்நிலை வகுப்பில் முதல் பரிசு பெற்ற மாணவி ஒருவர், 1200க்கு 1136 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். பத்தாம் வகுப்பிலும் 400க்கு மேல் சிலர் பெற்றிருந்தனர். அரசுப் பள்ளிகளில், வசதி குறைவுடன் படிக்கின்ற பல தலித் மாணவர்கள் பல்வேறு இடர்ப்பாடுகளையும் கடந்து இந்தவகையான உயர் மதிப்பெண்களைப் பெறுவது, ஒரு சாதனையாகக் கருதப்பட வேண்டியது ஆகும்.

ஊடகங்கள் தகுதி, திறமை என்று மீண்டும் மீண்டும் ஒரு சாரரின் பிள்ளைகளையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. தனியார் பள்ளிகள் புகைப்படங்களோடு முழுப்பக்கம் விளம்பரங்களைத் தருகின்றன. ஆனால், வறுமையையும், வாழ்க்கைச் சிக்கல்களையும் வெற்றி கொண்டு, படிப்பிலும் வெற்றி கொள்கிற மாணவர்களை யாரும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதில்லை. அவர்களை மேடையேற்றி உச்சி முகரவும், ஊக்கப்படுத்தவும் இந்த வகையான தலித் விழாக்கள் தேவைப்படுகின்றன.

விழாவில் பேசிய சிலர், தனியார் மற்றும் சிறுபான்மையினரின் பள்ளிகளில் தலித் மாணவர்களுக்கு இடங்கள் மறுக்கப்படுவதைக் குறிப்பிட்டனர். இது, கவனத்துக்குரிய ஒரு சிக்கலாக வளர்ந்து வருகிறது. பிரதிநிதித்துவ அடிப்படையில், தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்குப் பள்ளிகளில் இடங்கள் வழங்கப்படுவது இல்லை. அரசுப் பள்ளிகள் மட்டுமே இந்த சேர்க்கை விசயத்தில் 30 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட இடங்களை ஒதுக்கியுள்ளன. தனியார் பள்ளிகளில் சுமார் 3 சதவிகிதத்துக்கும் குறைவான இடங்களே தலித் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கிடைத்த இந்தப் புள்ளிவிவரம், இந்த ஆண்டும் தொடரவே செய்திருக்கும். தலித் தன்னார்வ அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் ஒவ்வொரு மாவட்டம் தோறும் கல்வி அதிகாரிகளை இதில் கவனம் கொள்ளச் செய்யும் வகையில் செயல்புரிய வேண்டியது அவசியம். எல்லா பள்ளிகளிலும் ஒதுக்கீட்டுக்கு ஏற்ப, தலித் மாணவர்களுக்கு இடங்கள் வழங்கப்பட்டுள்ளதா என அரசு ஆண்டு தோறும் ஓர் ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.

 

-அழகிய பெரியவன்