சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆய்வு மய்யத்திற்கு, ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி பண்டிதர் அயோத்திதாசர் பெயரைச் சூட்ட வேண்டும். இம்முடிவிலிருந்து பின்வாங்கக் கூடாது; அங்குள்ள ஒரு துறைக்கு மட்டும் அவர் பெயரை சூட்டுவதையும் ஏற்க மாட்டோம் என்று கூறி மாபெரும் போராட்டம் 28.9.2005 அன்று தாம்பரம் அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு ஆ. சக்திதாசன் தலைமை வகித்தார். டாக்டர் எம். நாகப்பன், ஜி. ரங்கநாதன், எஸ். நடராஜன், பெ. தமிழினியன், சத்தியசீலன், அயோத்திதாசருடைய பேத்தி ரேவதி நாகராசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று, விரிவான விளக்கவுரையாற்றி, இறுதியாக கைது செய்யப்பட்டனர்.

இப்போராட்டத்தில், இந்தியக் குடியரசுக் கட்சி, அம்பேத்கர் இளைஞர் இயக்கம், அகில இந்திய எஸ்.சி./எஸ்.டி. கூட்டமைப்பு, மக்கள் குடியரசுக் கட்சி, புதிய தமிழகம், ரெட்டமலை சீனிவாசன் பேரவை, பகுஜன் சமாஜ் கட்சி, லோக் ஜனசக்தி, அம்பேத்கர் இயக்கங்கள் கூட்டமைப்பு, டாக்டர் அம்பேத்கர் இயக்கங்கள் அரசு ஊழியர் சமூக அமைப்புகள் இணைப்புக் குழு உள்ளிட்ட பல்வேறு தலித் இயக்கங்கள் பண்டிதர் பெயர் சூட்டும் வரை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.
Pin It