மழை பல ஆண்டுகளுக்குப் பிறகு பாட்டம் பாட்டமாய்ப் பெய்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் எல்லாம் நீரிலே நனைந்தும், சில இடங்களில் மூழ்கியும் இருக்கின்றன. பல ஆண்டுகளாக நீர் இன்றி காய்ந்திருந்த ஏரிகளும், ஆறுகளும், வெள்ளப் பெருக்கால் குதூகலித்துக் கொள்கின்றன. காவிரியின் கரையுடையும்படி வெள்ளம்! எங்களூர் பக்கமிருக்கும் பாலாற்றில் இருகரை தொட்டு வெள்ளம் ஓடுகிறது. இனிமேல் பாலாற்றில் வெள்ளமே வராது என்றிருந்தோம். இயற்கை அதை மாற்றிவிட்டது. பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, வனவாசம் போய்த் திரும்பும் ஆரவாரத்தோடு, எங்களாற்றில் ஓடுகிறது நீர்.

இயற்கை மாற்றும் விதிகள் பல உண்டு. ஆனால், மாறாத விதியென இங்கு ஏழைகளின் நிலையிருக்கிறது. மழையைப் பாடாத கவிஞன் இல்லை. மழையை எழுதாத எழுத்தாளன் இல்லை. மழையைப் படம் பிடிக்காத ‘கேமரா' கலைஞன் இல்லை. மழையை அனுபவிக்காத, ரசிக்காத மனிதர் இல்லை. ஆனால், மழையின் போது ஏழைகளின் பாட்டை நினைத்துப் பார்க்கிறவர்கள் இங்கே யாருமில்லை. நீர் நிரம்பியதால் துளைகளைவிட்டு வெளியேறிச் சாகும் மண் புழுக்களைபோல இருக்கிறார்கள் ஏழைகள்.

ஆற்றோரங்களிலும், ஏரிக்கரைகளிலும், மாநகரின் நடைபாதைகளிலும், வெள்ளம் புகும் தாழ்வான பகுதிகளிலும், கடற்கரையோரங்களிலும் வசிப்பவர்கள் யார்? தலித்துகளும், ஏழைகளும்தான். பிச்சைக்காரர்களும், நாடோடிகளான குறவர்களும் மழை பெய்யும்போது, எங்கே போகிறார்கள் என்பது யாருக்கேனும் தெரியுமா? வெள்ளப்பெருக்கில் காவிரியின் கரையைக் கண்காணிக்க, பல அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக அரசு சொல்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க, அதே அளவு அதிகாரிகளை அரசு நியமிக்கிறதா? எல்லாருக்கும் போதிய நிவாரணம் போய்ச் சேருகிறதா?

மழை வந்தால் ஏழைகளின் வேலை போய்விடும். குடிசைகள் ஒழுகும். சில நேரங்களில் சுவர்கள் இடிந்து உயிர்களை மூடும். சாப்பிட ஒன்றும் இருக்காது. படுக்க, போர்த்திக் கொள்ள எதுவும் கிடையாது. கழிவறை வசதிகள் இல்லாததால், இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்வது இக்காலங்களிலே ஏழைகளின் பெரும்பாடுகளில் ஒன்று. புதுத் தண்ணீர் எங்கெங்கிருந்தெல்லாமோ கழிவுகளையும் கசடுகளையும் கொண்டு வந்து நீர் நிலைகளில் சேர்த்து நோய் பெருக்கும். ஆற்றோரங்களிலும், ஏரியோரங்களிலும் கையகலம் இடம் பிடித்துப் பயிர் செய்யும் ஏழைகளால் அதுவும் முடியாது. மணலோ, நீரோ நிரம்பிவிடும். பெருமழை வெள்ளத்தின் மறுபக்கம் கொடூரமானது. இதில் பாதிக்கப்படுவது விளிம்பு நிலை மக்களே, தலித்துகளே, ஏழைகளே!

இயற்கைச் சீற்றங்களைச் சமாளிக்க தனித் துறையொன்றை நிறுவ இருப்பதாக அரசு சொல்லி வருகிறது. அதில் பூகம்பம், புயல், சூறாவளியோடு பெருமழை மற்றும் வெள்ளக் காலங்களையும் சேர்க்க வேண்டும். இக்காலங்களில் பாதிக்கப்படும் எல்லோருக்கும் உரிய நிவாரணம், உதவிகளும் போய்ச் சேரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் சுவர் இடிந்தால், அக்குடிசைகளைச் சீரமைக்க உதவிடும் திட்டம் ஒன்று நடைமுறையில் இப்போது இருக்கிறது. அதனோடு சேர்த்து உணவு மற்றும் பிற இன்றியமையாதப் பொருட்களை வழங்கவும் அரசு வகை செய்ய வேண்டும். இதே போன்றதொரு மழைக்காலத்தில் முன்பு எழுதிய என் கவிதையொன்று நினைவுக்கு வருகிறது...

மழை வரும் போதெல்லாம்
அம்மா
வானம் எங்களுக்குப்
பிழை செய்வதாய் அழுவாள்

ஆடிக்காற்றிலே ஆடிப்போன வீட்டுக்கூரை
வாடிப்போன எங்களை வாய்திறந்து திட்டும்
வீட்டுக்குள்ளும் மழை பெய்யும்

அம்மா பாத்திரங்களைத் தேடி
ஒழுகும் இடங்களிலெல்லாம்
ஓடி ஓடி வைப்பாள்
சின்னத்தம்பி மழை நிறைந்த பாத்திரங்களில்
கைவிடுவான்
சொன்ன பேச்சைக் கேட்க மாட்டான்

நானும் கருப்பனும்
காகிதக் கப்பல் செய்வோம்
பக்கங்களை இழந்த எங்களின்
பள்ளி ஏட்டுச் சுவடிகள்
சோகத்தில் இளைத்துப் போகும்

கப்பலையும், இருக்கும் ஒரு உடுப்பையும்
தொப்பலாய் நனைத்துக் கொள்வோம்
அப்பாவுக்கு போதை தெளிந்தபின்
எண்ணிக்கொண்டிருப்பார்
ஒழுகும் கூரையை மாற்ற

சோறு இருக்காது
வேர்க்கடலை வறுத்துத் தருவாள் அம்மா
முருங்கைக்கீரையும் அவித்துப் போடுவாள்
நான் தூக்கி வந்த நாய்க்குட்டி
தன் பங்கைக் கேட்டு முனகும்

இரவில் ஒழுகாத ஓரத்திலே
ஒதுங்கிக் கொண்டபின்
அம்மாவின் பழம்புடவையைத்தான்
அனைவரும் போர்த்திக் கொள்வோம்

அம்மா
ராஜாக்களின் கதை சொல்வாள்!


மனிதத் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிற அனைத்து இழிவான நடைமுறைகளையும் ஒழித்தே ஆக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. மானுட இழிவுகளைப் போக்க உழைத்த தலைவர்கள், தொடக்கக் காலம் முதலே இவற்றை வலியுறுத்தி வந்துள்ளனர். மனிதனை விலங்கிலும் கீழாய் கருதுகிற சாதி எனும் இழிவை ஒழித்தே ஆகவேண்டும் என்றார் அம்பேத்கர். தொடக்கக்கால தலித் தலைவர்கள் பலர், இழிவான செயல்களாகத் தாங்கள் கருதியவற்றைப் பட்டியலிட்டு, அதை ஒழிக்க சமூகக் கட்டுமானங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

பறை அடிக்கக்கூடாது. சாவு சொல்லப் போகக்கூடாது. பிணம் புதைக்க குழிவெட்டக்கூடாது. பிணம் தூக்கவும், செத்த மாட்டைத் தூக்கவும் போகக்கூடாது என்று பல தீர்மானங்களைப் போட்டு, தலித் மக்கள் தமது இழிவுகளிலிருந்து தாங்களே விலக்கிக் கொள்ள வழிகாட்டி இருக்கின்றனர். இந்த இழிவான செயல்களைச் செய்ய மறுத்த தலித்துகள் ஆதிக்கச் சாதியினரால் தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும், கட்டாயப்படுத்தப்பட்டும் இருக்கிறார்கள். தொடக்கக்கால தலித் மக்களின் வரலாறுகள் இவற்றை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

இந்த இழிவு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்றும் தொடர்கின்றன. சாதி இந்துக்களால் புனித நூல்களாகக் கருதப்படும் வேதங்களிலும், இதிகாசங்களிலும் தலித்துகளை இழிவுபடுத்தும் பல பகுதிகள் உள்ளன. அவற்றை நீக்கிவிட்டு, அந்நூல்களைப் பதிப்பிக்க வேண்டும் என்று ‘தேசிய எஸ்.சி./எஸ்.டி. ஆணைய'த் தலைவர் சூரஜ்பான் கோரிக்கை விடுத்துள்ளார்.

வேதங்களையும், இதிகாசங்களையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் அம்பேத்கர். அவைகளின் அடிப்படையே ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிக்கும் கருத்தியல்தான். அந்நூல்களை சாதி நீக்கம் செய்து பதிப்பிப்பது என்பது, அழுக்குகளுக்கு ஒப்பனைகளை செய்து, அதன் தன்மைகளை மறைப்பது போலத்தான். அந்நூல்களை எரித்துப் போராட்டங்களை நடத்திய பெரும் தலைவர்களின் செயல்பாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது போலாகும் இக்கோரிக்கைகள். இத்தகு நூல்களின் சாதியத்தன்மையைத் தோலுரித்து, அவைகளை சாதிய அதிகாரத்தளங்களில் மதிப்பிழக்கச் செய்வதே சரியானதாக இருக்கும்.


தீண்டாமையைக் குற்றமாக அறிவிக்கும் சட்டத்தின் வாசகத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும் என்று தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் விருப்பம் கொண்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவரான சூரஜ்பான், அரசமைப்புச் சட்டப் பிரிவு 17இல் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று நாடாளுமன்றத்தைக் கோரியுள்ளார். அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆவது பிரிவு, தீண்டாமை இந்தியாவில் ஒழிக்கப்படுவதாகக் கூறுகிறது. இதில் சாதியும் ஒழிக்கப்படுவதாகத் திருத்த வேண்டும் என்கிறார் பான். அதன்படி சாதி முறையும், தீண்டாமையும் இந்தியாவில் ஒழிக்கப்பட்டுள்ளது என்று திருத்தம் அமையும். சாதிறையை சட்டப்படி ஒழிப்பது என்பது, மிகச் சரியானதே. தீண்டாமை மட்டும் ஒழிக்கப்பட்டு சாதியம் இருக்க வேண்டும் என்பது காந்தியப் பார்வை. தீண்டாமையும் சாதி முறையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. அதிலும் தீண்டாமையின் அடிப்படையாக இருப்பதே சாதிதான். எனவே, கிளைகளை மட்டும் வெட்டிப் பயனில்லை. வேருடன் தோண்ட வேண்டும் என்கிறது சூரஜ்பானின் கருத்து.


அவர் இன்னொன்றையும் சொல்கிறார். இடஒதுக்கீடு கேட்காதீர்கள், மேற்கூறிய சட்டத் திருத்தத்தைக் கேளுங்கள் என்கிறார். இடஒதுக்கீட்டைக் கோராமலிருப்பது என்பது, நிகழ்கால எதார்த்தத்தில் தலித்துகள் தங்களையே இழப்புக்குள்ளாக்கிக் கொள்வதற்குச் சமம். இடஒதுக்கீட்டினைக் கேள்விக்குள்ளாக்கும் யுக்தியின் அடிப்படையிலான கோரிக்கையாக இச்சட்டத் திருத்தம் இருக்குமென்றால், நாம் இதை கவனமாய் பரிசீலிக்க வேண்டும்.


Hand Rikshaw மனிதனை, மனிதன் கை ரிக்ஷாக்களில் வைத்து இழுத்துப் போகும் முறை, இன்னும் மேற்கு வங்கத்தில் இருக்கிறது. நீண்டகாலமாக அங்கே ஆண்டுவரும் கம்யூனிஸ்ட் அரசு, இதை ஏன் ஒழிக்கவில்லை என்று தெரியவில்லை. மனித உயர்வை, மாண்பைப் பேசும் கொள்கையைக் கொண்ட அந்த அரசு, இதை எப்போதோ செய்திருக்க வேண்டும். மிகத்தாமதமாக முடிவெடுத்திருக்கிறது. இன்னும் சட்டம் கொண்டு வரவில்லை. அப்படியே கொண்டுவந்தாலும், சில தேவைகளுக்கு மட்டும் கை ரிக்ஷாக்களை அனுமதிப்போம் என்றிருக்கிறார்கள். அது ஏனென்று தெரியவில்லை.

கை ரிக்ஷாக்களை வடிவமைத்தது ஒரு அமெரிக்க மிஷினரியாம் (ஏகாதிபத்திய நாட்டுக் கருவி என்று சீக்கிரம் சட்டம் கொண்டுவரலாம்)! தன் மனைவியை இழுத்துப் போக இதை வடிவமைத்திருக்கிறார். அவர் அப்போது ஜப்பானில் இருந்ததால், ஜப்பான் முழுவதும் இது பிரபலமாயிருக்கிறது (ஆண்டு 1874). ஜப்பானில் நவீன வாகனங்கள் அறிமுகமானபோது கை ரிக்ஷாக்கள் ஒழிந்துவிட்டன. கை ரிக்ஷா 1920களில் சில சீன வணிகர்களால் கல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றுவரை அது நடைமுறையில் இருக்கின்றது. இன்று கல்கத்தாவில் 18 ஆயிரம் கை ரிக்ஷா தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

இதை ஒழித்துவிட்டு, மாற்றுத் தொழிலையோ அல்லது நவீன வாகனங்களையோ அரசு அவர்களுக்கு வழங்கலாம். சுற்றுலா பயணிகளுக்காகவோ, கை ரிக்ஷா தொழிலாளர்களின் போராட்டத்துக்கு அஞ்சியோ இந்தத் தொழிலை விட்டு வைத்திருந்தால் அது தவறு. நுகங்களில் பூட்டப்பட்டு காளைகள் வண்டிகளை இழுப்பதுபோல், மனிதனும் சக மனிதனை இழுத்துப் போனால் கோட்பாடுகள் பேசிப் பயனில்லை.

Pin It