இதயத்தின் துடிப்புக்கு ஜாதி கிடையாது, மதம் கிடையாது, ஆண்-பெண் பாகுபாடு கிடையாது. தேசம்-மொழிகளையும் கடந்து நிற்கிறது. இந்த உடலின் இயக்கம்; மனித உடலும், உடல் இயக்கமும் வெளிப் படுத்தும் ஒரே அடையாளம் மனிதர்கள் என்ற ஒன்றை மட்டும்தான். 27 வயதே நிறைந்த இளைஞன் லோகநாதன் சாலை விபத்துக்குள்ளாகி அவரது மூளையின் இயக்கம் மரணித்துவிட்ட நிலையில் இதயம் மட்டும் உயிர்ப்புடன் துடித்தது. அதே நேரத்தில் அடையாறு தனியார் மருத்துவமனை ஒன்றில் இதயப் பாதிப்புக்கு உள்ளான மும்பையைச் சார்ந்த அலோவி என்ற 27 வயது பெண்ணுக்கு மாற்று இருதயம் ஒன்று கிடைத்துவிட்டால் உயிர் பிழைத்துவிட முடியும்!

மரணத்தைத் தழுவிவிட்ட தனது மகனின் இருதயம் வேறு ஒரு உடலில் துடித்துக் கொண்டிருக்குமானால் - அன்பு மகனின் மறக்க முடியாத நிலைத்த நினைவாக இருக்குமல்லவா? அப்படி ஒரு அறிவார்ந்த முடிவுக்கு வந்தார் அந்தத் தாய். அவர் அரசு மருத்துவமனையில் செவிலியர். பெருமைக்குரிய அவரது பெயர் இராஜலட்சுமி. துடிக்கும் இருதயத்தை ஆம்புலன்சில் சுமந்து கொண்டு 11 கிலோ மீட்டர் தூரத்தை, 11 போக்குவரத்து ஒழுங்குமுறைக் கருவிகள், 6 வேகத் தடைகளைக் கடந்து 13 நிமிடம் 22 நொடிகளில் பாதுகாப்பாகக் கொண்டுவந்து சேர்த்தார் - ஆம்புலன்சின் ஓட்டுனர் கதிர். போக்குவரத்தை ஒழுங்கு செய்ய காவல்துறையும் மனிதாபிமானம் காட்டி செயல்பட்டது. துடிப்பு அடங்குவதற்குள் இருதயம் வந்து சேர்ந்து விடுமா என்று துடிக்கும் இதயங்களோடு அந்த மருத்துவமனை வாயிலில் காத்திருந்த மருத்துவர்களுக்கு கிடைத்தது நிம்மதி பெருமூச்சு! அந்தப் பெண்ணுக்கு மாற்று இருதயம் கிடைத்தது; அவர் உயிர் பெற்றார்.

“எங்களுடைய மகாராஷ்டிரா மாநிலத்தில் இது குறித்த விழிப்புணர்வு எதும் இல்லை. தமிழ்நாட்டில்தான் இவை எல்லாம் அதிகம் நடக்கின்றன” என்று பெருமையுடன் கூறினார், அந்தப் பெண்ணின் தாயார். உடல் உறுப்புகளையும், உடல் குருதியையும் பரிமாறிக் கொள்ள மனித உடல்கள் தயாராகவே இருக்கின்றன. ஆனால், மனிதர்கள்தான் மதங்களால், ஜாதிகளால், இனப்பாகுபாடுகளால் மக்களைப் பிரித்துக் கூறு போடுகிறார்கள். மனித உடலின் தலை, தோள், தொடை, கால்களைப் பிரித்துப் போட்டு, அவற்றை பிறப்பு உறுப்புகளாக கற்பனையாக்கி, அதிலிருந்து ‘ஜனித்து’ வருவதாக மானுடர்களை மனுதர்மக் கூண்டுக்குள் அடைத்து வைத்து அடைகாத்து நிற்கிறார்கள். அதுவே மதம்; ஆச்சாரம் என்று கதைக்கிறார்கள்!

“ஓ, மானுடத்தை வதைக்கும், மாபாதகர்களே! மனித நேயத்தின் பண்புகளை எப்போதுதான் நீங்கள் அரவணைக்கப் போகிறீர்கள்? மனித உடலுக்கு பூணூல், விபூதி, நாமம், சிலுவை, குல்லாய் என்ற மத அடையாளங்களைத் திணித்து, ஏன் மானுடத்தைச் சிதைக்கிறீர்கள்?
மனித உடல்களை ஜாதி, மதம் என்ற மோதல் களங்களில் இறக்கி, மோதவிட்டு அதுவே கடவுளின் சித்தம் என்று ஏன் கதை விடுகிறீர்கள்?” உண்மையான சமத்துவத்தை வேண்டி நிற்கும் மனிதர்களின் ஏக்கப் பெருமூச்சாக, இந்தக் கேள்விகள் வெடித்து நிற்கின்றன.

உண்மைதான்! உடல் உறுப்புகளை கொடையாக வழங்குவதில் இந்தியாவிலேயே முதலிடத்தில் நிற்பது தமிழகம்தான் என்ற செய்தி தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கிறது. தமிழகத்தில் இப்படி உறுப்புகளை கொடையாகப் பெற்றவர்கள் எண்ணிக்கை இதுவரை 2649 என்று புள்ளிவிவரம் கூறுகிறது. இதில் மூளைச் சாவுக்குள்ளாகி உடல் உறுப்புகளை கொடையாக்கியவர்கள் எண்ணிக்கை மட்டும் 483. நாம் தலைநிமிர்ந்து பெருமைப் படலாம். தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையும் இனத்துக்கான விழுமியங்களும் இப்படித்தான் இருக்க வேண்டும்! மாடுகளோடு முட்டி மோதுவதில் எங்கள் பழும் பெருமை பதுங்கியிருக்கிறது என்பதைவிட மாற்று இதயங்களை வழங்குவதில் நாங்கள் முதலிடத்தில் இருக்கிறோம் என்று மார்தட்டுவதில்தான் தமிழனுக்குப் பெருமை! பண்பாட்டுக்கான விழுமியங்களை சமூக நாகரிகம், சமத்து நோக்கோடு வரையறுத்துக் கொள்ள நாம் தயாராக வேண்டும்! இதை உரத்துக் கூறுவோம்!

பெரியார் கூறுகிறார்:

“ஒரு மனிதன் வாழக்கை இலட்சியம் எதுவாக இருக்கவேண்டும் என்றால், அவன் எந்த மனிதச் சமுதாயத்தின் வாழ்வில், நடப்பில், தன்மையில் கலந்து வாழுகின்றானோ அந்தச் சமுதாயத்தின் பொது நன்மைக்கு ஆன காரியம் செய்வதும் அந்தச்சமுதாயம் புகழக் கூடியதான நலம் செய்வதும் ஆக இருக்க வேண்டும்.” (‘விடுதலை’ 10.9.53)

Pin It