ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து கிடப்பில் போடுவதைக் கண்டித்து மார்ச் 14, 2019 அன்று பகல் 11 மணியளவில் நுங்கம்பாக்கத் திலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யில் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், த.தே.பேரியக்கத்தின் அருண பாரதி, த.தே.வி. இயக்கத்தின்   தியாகு, த.தே.ம. முன்னணியின் மீ.த.பாண்டி யன், த.வாழ்.கட்சி வேணுகோபால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  அன்சாரி, த.பெ.தி.க.  குமரன், த.வி.க. சுந்தர மூர்த்தி, தொ. சீ.இயக்கத்தின் சேகர்  உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

chennai ceylon 600நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் பங்குபெற்ற சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டு மாலையில் விடுதலை செய்யப் பட்டனர். முற்றுகைப் போராட்டம் குறித்து கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை:

இந்திய அரசே! இனக்கொலை இலங்கையைப் பாதுகாக்காதே! கால நீட்டிப்பைத் தடுத்து நிறுத்து! தற்சார் புள்ள பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழி செய்!

இந்திய வான்படை வீரர் அபி நந்தன் வர்த்தமான் பாகிஸ்தானிடம் மாட்டிக் கொண்ட போது அவரது புகைப்படமும் காணொளியும் வெளி வந்தபோது ஜெனீவா உடன்படிக்கை யின்படி போர் கைதிகளின் புகைப் படத்தை வெளியிடக் கூடாதென்று இந்தியா தெரிவித்ததோடு ஐ.நா. மனித உரிமை அமைப்பில் முறை யிடப் போவதாகவும் சொன்னது. அதே சர்வதேச சட்ட விதிகள் மீறப்பட்டே ஈழத்து இசைப்பிரியாக்களும் பாலச் சந்திரன்களும் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்களும் கொல்லப் பட்டனர். தன்னாட்டு வீரர்கள் பொருட்டு ஜெனீவா மன்றத்தில் முறை யிடப் போவதாக சொல்லும் இந்திய அரசு, ஈழத் தமிழர்களின் பொருட்டோ குற்றமிழைத்த இலங்கையை ஆதரித்து நிற்கிறது. அபிநந்தன் வர்த்தமான்களுக்கு ஒரு நீதி? பாலச்சந்திரன்களுக்கு ஒரு நீதியா?

ஐ.நா. மனித உரிமை அமைப்பின் கூட்டத் தொடர் பிப்ரவரியில் 25இல் தொடங்கியது, மார்ச் 25 வரை நடக்க-விருக்கிறது. மார்ச் 20 அன்று இலங்கை மீதான விவாதம் நடக்கவிருக்கின்றது. 2015 அக்டோபரில் அமெரிக்கா வுடனும் பிற நாடுகளுடனும் சேர்ந்து சிறிலங்கா கூட்டாக முன்மொழிந்த தீர்மானம்

(30/1) மனித உரிமை அமைப் பில் ஒரு மனதாக நிறைவேறியது. அத்தீர்மானம் காமன் வெல்த் உள்ளிட்ட பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடன் கூடிய சிறப்புத் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியது. பின்னர், 2017 மார்ச் மாதம் 34/1 தீர்மானத்தில் சிறிலங்கா விற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட்டு அதுவும் நிறைவடைந்து விட்டது.

இப்போது கனடா, ஜெர்மனி, மாசிடோனியா, மாண்டிநீக்ரோ, பிரித்தானியா ஆகிய நாடுகளடங்கிய சிறிலங்கா தொடர்பான முதன்மைக் குழு சிறிலங்காவுக்கு மீண்டுமொரு முறை காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என்று பிப்ரவரி 13ஆம் நாள் நிலையெடுத்து அறிவித்துள்ளது. மார்ச் 1 அன்று மேலும் ஈராண்டு காலம் நீட்டிப்புக் கொடுக்கும் பிரித்தானியாவின் தீர்மான வரைவு வெளி வந்துள்ளது. இத்தகைய கால நீட்டிப்பை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு நீதிமன்றத்தை அமைப் பதில் ஓரங்குலம்கூட முன்னேறாத நிலை யில் மீண்டுமொரு ஈராண்டு கால அவகாசம் என்பது எவ்வித மாற்றத்தை யும் கொண்டுவரப் போவதில்லை. இங்கு சிக்கல் காலம் போதவில்லை என்பதல்ல, நடை முறைப்படுத்துவதற்கு இலங்கை அரசிடம் அரசியல் மனத்திட்பம் இல்லை என்பதே. எனவே, இலங்கைக்கு கால நீட்டிப்பு தருவ தென்பது 2009க்குப் பின்பு இலங்கை செய்துவரும் கட்டமைப்பு ரீதியான தமிழின அழிப்புக்கு துணை செய்வதே!

பன்னாட்டுப் புலனாய்வுக் கோரியும் அரசியல் தீர்வுக்கு ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்திய அரசு எள்முனையளவும் மதிக்கவில்லை. தமிழகத்தின் இறை யாண்மையைக் காலில் போட்டு மிதித்து வருகிறது இந்திய அரசு.

சிறிலங்காவிற்கு காலநீட்டிப்பு வழங்கப்படக் கூடாது. சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதி மன்றத்தின் பார்வைக்கு அல்லது போர்க் குற்றப் புலன் விசாரணைக் கென்று சிறிலங்காவுக்காக அமைக்கப் படும் சிறப்புப் பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். 

போரினால் பாதிப்புற்றவர்களின் துயரம் குறித்தும், ஏனைய பன்னாட்டு மனிதவுரிமை, மனிதநேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக் கொரு முறை அறிக்கையளிக்கும் பொறுப்பில் சிறிலங்காவுக்கான ஐநா சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும்.

இன அழிப்புச் சான்றுகளை அழிய விடாமல் காக்க ஒரு நடுநிலையான பன்னாட்டுப் பொறி முறை அமைக்கப் பட வேண்டும்.

மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தக்கூடிய தீர்மானத்தை இந்திய அரசு ஐ.நா. மனித உரிமை அமைப்பில் முன்மொழிய வேண்டும். மேலும் அரசியல் தீர்வுகாண ஈழத் தமிழர் களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதைப் பன்னாட்டு மன்றத்தில் வலியுறுத்த வேண்டும் - என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

Pin It