டெல்லியில் 70 இடங்களில் 67 இடங்களைக் கைப்பற்றி சாதனைப் படைத்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ராம் லீலா மைதானத்தில் கூடியிருந்த தொண்டர்கள் கையில் பிடித்திருந்த பதாகைகளில் ‘ஏ.கே.70’ என்று எழுதப்பட்டிருந்தன. ‘ஏ.கே.47’ துப்பாக்கியைப்போல் அரவிந்த் கெஜ்ரிவால் 70 இடங்களைப் பிடித்து, பா.ஜ.க. - காங்கிரசை வீழ்த்தியதை இப்படி குறியீடாக தொண்டர்கள் வெளிப்படுத்தினர். டெல்லி நகரத்தின் அடித்தள மக்கள் - ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, அனைத்துப் பிரிவினரும் ‘ஆம் ஆத்மி’யை ஏற்றுக் கொண்டுள்ளனர். 2014 மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 60 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்த பா.ஜ.க., அதில் 57 தொகுதிகளை இப்போது பறி கொடுத்திருக்கிறது. காங்கிரசுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

காங்கிரசுக்கான வாக்கு வங்கி தான் முழுமையாக ‘ஆம் ஆத்மி’க்கு திரும்பியிருக்கிறது என்று பா.ஜ.க. கூறும் சமாதானம் ஏற்கக்கூடியதாகஇல்லை. அந்த வாக்கு வங்கி, ஏன் பா.ஜ.க. பக்கம் திரும்பவில்லை என்ற கேள்வி எழத்தான் செய்யும். நாடாளுமன்றத் தேர்தலில் மோடி கூறிய வாக்குறுதிகள் காற்றில் பறந்து போய்விட்டன. எனவே மக்கள் இம்முறை பா.ஜ.க.வை புறந்தள்ளியிருக்கிறார்கள். ‘

ஆம் ஆத்மி’ கட்சி எந்தத் தத்துவங்களுக்குள்ளும் தன்னை முடக்கிக் கொள்ளத் தயாராக இல்லை என்று கூறுகிறது. ஊழல் ஒழிப்பு; மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள்; ஆடம்பர அரசியலுக்கு முற்றுப்புள்ளி என்ற பிரச்சினை களையே முன்நிறுத்துகிறது. மிக மோசமாக சீரழிவுப் பாதை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் அரசியல் கலாச்சாரத்துக்கு இந்த கோரிக்கைகள் ஒரு சவால் என்றுதான் கூறவேண்டும். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம்” என்று மக்களிடம் பறைசாற்றக்கூடிய துணிவே இல்லாத நிலையில் கட்சிகள் ஊழல்களில் கரைந்து போய் கிடக்கின்றன. ஆடம்பரம்; பகட்டு; விலை கொடுத்து வாங்கும் விளம்பரம் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் - குறுநில மன்னர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்திய ஜனநாயகத்தில் எளிமையாக வாழ்ந்துகாட்ட முயற்சிப்பதே ஓர் அதிசயம் தான். வெற்றி பெற்ற ஆணவத்தில் மிதக்க வேண்டாம் என்று கெஜ்ரிவால் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியும் அந்த ஆணவத்தில் மூழ்கியிருந்ததை ஒப்புக் கொண்டிருப்பதோடு 49 நாள்கள் மாநில முதல்வராக இருந்து, மக்களின் கருத்து கேட்காமலே பதவி விலகியதற்கு தொகுதி தொகுதியாக சென்று மன்னிப்பும் கேட்டிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் தோல்விக்குப் பிறகு, ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களோடு அக்கட்சி நடத்திய ‘நேரடி சந்திப்பு நிகழ்ச்சிகளே’ வெற்றிக்கான அடிப்படை என்று ஏடுகள் எழுதுகின்றன.

இங்கே, தமிழ்நாட்டில் தேர்தல் காலங்களில் இரவோடு இரவாக மக்கள் சந்திப்புகள் ‘பணப்பட்டுவாடாவுக்காக’ மட்டும் நடக்கிறது. ‘இலை மறைவு காய்மறைவாக’ இருந்த ஓட்டுக்கு பணம் கொடுக்கும் ‘கலாச் சாரத்தை’ திட்டமிட்டு விரிவுபடுத்தி ஒழுங்குபடுத்தப்பட்ட முறையாக தி.மு.க. ஆட்சி காலத்தில் திருமங்கலத்தில் அரங்கேற்றப்பட்டது. அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அதை மேலும் விரிவுபடுத்தி செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

96 சதவீத வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்க காத்திருக்கிறார்கள் என்று ஸ்ரீரங்கம் தொகுதியில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இப்படித்தான் தமிழ்நாட்டில் “ஜனநாயகம் பூத்துக் குலுங்கி”க் கொண்டிருக்கிறது. 

தேனீர்க் கடையில் ‘டீ’ விற்ற தொழிலாளியாக தன்னை ஏழ்மையின் சின்னமாக அடையாளப்படுத்தி வாக்கு கேட்ட மோடி, ரூ.10 இலட்சம் செலவில் அய்ரோப்பாவில் தயாரிக்கப்பட்ட சிறப்பு ஆடைகளை அணிந்து கொண்டு, தனது ‘ரேஸ் கோர்ஸ்’ வீட்டிலிருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள ‘கர்கர்டோமா’ என்ற பகுதிக்கு போவதற்குக்கூட விசேட ஹெலிகாப்டரில்தான் பறக்கிறார். தான் பயன்படுத்திய வாகனத்துக்கு ‘பெட்ரோல்’ என்ஜின் இருப்பதுகூட கூடுதல் செலவு என்று கருதி, ‘டீசல் என்ஜீனாக’ மாற்றிக் கொண்டு 92 வயதிலும் பயணித்த தலைவர் பெரியாரை நினைத்துப் பார்க்கிறோம்.

இப்போது அத்தகைய தலைவர்களைப் பார்க்க முடியுமா? எப்படி இருந்தாலும், இலஞ்சமும் அதிகார முறைகேடுகளும் ஊழல் கொள்ளைகளும், எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கும் இந்த ‘ஜனநாயகத்துக்கு’ புதிய நெருக்கடியை உருவாக்கக் கூடிய ஒரு அரசியல் கட்சி ‘ஆம் ஆத்மி’யாக களத்துக்கு வந்திருப்பதாகவே தெரிகிறது. இந்தக் கட்சி சாதிக்குமா?

வாக்குறுதிகளை நிறைவேற்றுமா? என்பது குறித்து எந்த உறுதியும் நாம் கூற முடியாது. ஆனாலும், சீழ் பிடித்து நிற்கும் அரசியல் கலாச்சாரத்துக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கினாலே வெற்றிதான் என்ற கண்ணோட்டத்தில் ஆம் ஆத்மியை வரவேற்கத்தான் வேண்டும்.

Pin It