இலங்கையின் தொடர் குண்டு வெடிப்புகள்

இலங்கையில் கிறித்துவர்களைக் குறி வைத்து அவர்களின் வழிபாட்டு இடங்களிலும் நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டு வெடித்து 310க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகிவிட்டனர். 500 பேருக்கு மேல் படுகாயமடைந்துள்னர். மட்டக் களப்பில் ஈஸ்டர் நாள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த தமிழர்களும் குண்டு வெடிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவைச் சார்ந்த 5 பேர் உயிர்ப் பலியாகியுள்ளனர்.

srilanka blast 650சிறுபான்மை மக்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதல் கடும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என்றாலும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு மீது இலங்கை அரசு சந்தேகம் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் தாக்குதலுக்கு குறி வைக்கப்பட்டவர்கள் - மதத்தின் அடிப்படையில் தான் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. உலகம் முழுதும் மத பயங்கரவாதம் மனித குலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஈரான், சிரியா, ஆப்கானிஸ்தான் என்று இந்த பட்டியல் விரிவடைந்து நிற்கிறது.

தங்களின் ‘கடவுள்’ ஆணையை ஏற்று ‘மத அரசாட்சியை’ உருவாக்குவதற்காக மனித உயிர்களைக் காவு கேட்டுக் கொண்டிருக்கிறது மத வெறி.

இந்தியாவில் ஜனநாயக அமைப்பு வழியாக அதிகாரத்தைப் பிடித்து இங்கேயும் ஒரு மத ஆட்சியை நிறுவும் முயற்சிகளை மதவாத சக்திகள் திட்டமிட்டு அரங்கேற்றி வருகின்றன.

தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்ற பகுத்தறிவாளர்கள் இந்து ராஜ்யம் அமைக்கத் துடிக்கும் ‘சனாதன சன்ஸ்தா’ என்ற மதவெறி அமைப்பைச் சார்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த அமைப்பை மோடி ஆட்சி தடை செய்யக் கூட தயாராக இல்லை.

பல குண்டுவெடிப்புகளை நடத்தி பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ள பிரக்யா சிங் தாக்கூர் என்ற பெண் இந்து தீவிரவாதி, இப்போது பா.ஜ.க.வின் சார்பில் போபால் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மாலேகான் குண்டுவெடிப்பு, சம்ஜவுத்தா எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் குண்டு வெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு என்று தொடர் குண்டு வெடிப்புகள் 2006, 2007, 2008ஆம் ஆண்டுகளில் நடந்தன. இந்த குண்டு வெடிப்பில் பலர் கொல்லப்பட்டனர். ‘அபிநவ் பாரத்’ என்ற மதவெறி அமைப்பு இந்தத் தொடர்குண்டு வெடிப்புகளை நடத்தியதை தேசிய புலனாய்வுத் துறை கண்டுபிடித்தது. இதில் மூளையாகச் செயல்பட்டவர்களில் ஒருவரான பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் என்பவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. பல ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு உடல்நலனைக் காரணம் காட்டி பிணையில் வெளி வந்துள்ளார். பா.ஜ.க. என்ற  அரசியல் கட்சியோடு தொடர்பில்லாத ஒரு பயங்கரவாதக் குழு உறுப்பினரான இவரை இப்போது பா.ஜ.க. தனது கட்சி உறுப்பினராக அங்கீகரித்து ம.பி. மாநிலம் போபாலில் பா.ஜ.க. வேட்பாளராக காங்கிரஸ் வேட்பாளர் திக் விஜய் சிங்கிற்கு எதிராக களமிறக்கியுள்ளது. பயங்கரவாத செயலில் ஈடுபட்ட ஒருவரை பா.ஜ.க. வேட்பாள ராக்கியதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தாலும் பா.ஜ.க. அது குறித்து கவலைப்படவில்லை.

கர்கரே என்ற நேர்மையான போலீஸ் அதிகாரி மும்பை தாக்குதலின் போது கொல்லப்பட்டதை நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார் இந்த பெண் சாமியார்; தான் விட்ட ‘சாபம்’ தான் அவர் உயிரைப் பறித்தது என்று பேசியுள்ளார். தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தவுடன் வருத்தம் தெரிவித்தார். இப்போது பாபர் மசூதியை அதன் உச்சியில் நின்று உடைத்தவர்களில் நானும் ஒருவள் என்று பெருமையோடு பேசியிருக்கிறார்.

இராமர் கோயிலைக் காட்டி இந்தியாவில் இராமஇராஜயத்தை உருவாக்கப் போவதாகக் கூறும் பா.ஜ.க. ஆட்சி கோட்சே உயிருடன் இருந்திருந்தால் அவரை பிரதமர் வேட்பாளராகவே அறிவித்திருக்கும். இப்போதும் ‘கோட்சே’யின் புகழ்பாடுகின்றன ‘சங் பரிவாரங்கள்’.

அல்லாவின் பெயரால் உலகம் முழுதும் நடக்கும் இஸ்லாமிய பயங்கரவாதமானாலும் இந்துத்துவ பயங்கரவாதமானாலும் எல்லாவற்றுக்கும் அடிப்படை மதம் கட்டமைக்கும் வெறி தான். சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டிய மதங்கள் மக்களைப் பிளவு படுத்தி வன்முறை வெறியாட்டங்களைத் தங்கள் கடவுளின் பெயரால் நடத்திக் கொண்டிருக்கின்றன. ‘கடவுள் இராஜ்யத்துக்கு’ மனித உயிர்களைப் பலி கேட்கும் மதவெறியை ஒரு நாகரிக சமூகம் எப்படி ஏற்க முடியும்?

Pin It