‘டாடி’ நான் எம்.டி நுழைவுத் தேர்வில் பூஜ்ஜியம் மார்க் வாங்கி விட்டேன், உங்கள் கனவை நினைவாக்கிவிட்டேன். என்னை வாழ்த்துங்கள் டாடி என்று உளம் பூரிக்க அலைபேசியில் பேசினான் மகன்.
அப்பாடா, என் வயிற்றில் பால் வார்த்து விட்டாயடா. மகனே உனக்காக லட்ச லட்சமாய் செலவு செய்து கோச்சிங் வகுப்புகளுக்கு நான் அனுப்பி வெச்சது வீண் போகவில்லை. பூஜ்ஜியம் வாங்கி சாதித்து விட்டாய், கடவுளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும் என்று நிம்மதி பெருமூச்சு விட்டார் டாடி
பூஜ்ஜியத்தின் மதிப்பதைக் கண்டறிய பல கணித மேதைகள் ஏராளமான ஆராய்ச்சிகளை செய்துள்ளனர், ஆனால் அதற்கான விடை நமது முன்னோர்கள் உருவாக்கிய சனாதனத்தில் இருக்கிறது என்ற உண்மை இந்த சயின்ஸ் படித்த மர மண்டைகளுக்கு ஏனோ புரியவில்லை.
பூஜ்ஜியம் நமது சனாதன தர்மத்திலேயே இருந்திருக்கிறது. அதுதான் நமது பண்பாடு, அதுதான் நமது வாழ்க்கை முறை என்றார் ஒரு சனாதன பார்ப்பனர். ஆமாம் ஆமாம் நீங்கள் சொல்வது தான் வேத வாக்கு என்று பின்பாட்டு பாடுகிறது அனுமார் படை.
அது எப்படி அந்த காலத்தில் இருந்தது என்பது தெரியுமோ, நன்னா கேட்டுக்கோங்க, பிராமணரல்லாத சூத்திர பஞ்சம பசங்கள பள்ளிக்கூடமே போகக் கூடாதுன்னு தடுத்து நிறுத்தினாளே ஏன் தெரியுமா? பள்ளிக்கூடம் போனாதானே அவன் பரிட்சை எழுதுவான், பரிட்சை எழுதுனாதானே பூஜ்ஜியம் மார்க்கை எட்ட முடியும், நாங்கள் அப்போதே பூஜ்ஜியத்துக்கு செய்துட்டோம், இதுதான் எங்கள் சனாதனத்தின் பூஜ்ஜிய ரகசியம் என்று பூரிப்புடன் கூறி பூநூலை இழுத்துவிட்டுக் கொண்டார் வேதப் பார்ப்பனர்.
சரிங்கோ மாமா, அப்போ பள்ளிக்கூடத்துக்கு போக விடாம பூஜ்ஜியம் போட்டிங்க, இப்போ நீட் தேர்வு எழுதினால் தான் பூஜ்ஜியம் கிடைக்கும்னு சொல்றிங்க, இது என்ன மாமா நியாயம் என்று கேட்டான் அந்த மாணவன்.
அம்பி… அது அன்றைய சனாதனம், இது இன்றைய சனாதனம். அந்த காலத்துல எவனும் சனாதனத்த மீறல, இப்போ கீழ்ஜாதிக்காரனுங்க படிக்க வந்துட்டானுங்க. போதாக்குறைக்கு இந்த பெண்டுகளும் வந்துட்டாளுங்க, இப்படி சனாதனத்த மீறுகிற போது நாங்க என்ன செய்யுறது, வேறு வழியில்லாம நீட்,நெக்ஸ்ட், மற்றொரு நீட் என்று பரிட்சை சுமைகளை முதுகில் ஏத்தி இந்த பசங்களின் படிப்புக்கு முழுக்கு போட வெச்சுட்டா எங்க சனாதனம் ஜெய்ச்சுருமில்ல. இந்த தனியார் மெடிக்கல் காலேஜ் காரனெல்லாம் கட் ஆஃப் மார்க் இருக்குற காரணத்தால மாணவர்கள் இல்லாம திண்டாடுறான். கல்லா கட்ட முடியவில்லை, அவா மட்டுமா கோச்சிங் வகுப்பு நடத்துறவனும் கீழ் சாதிக்காரன் படிக்க வந்தா தான் துட்டடிக்க முடியும். அதனால் தான் தேர்வையும் வைத்து பூஜ்ஜியத்தையும் பாஸ் செய்ய வைக்கிறோம். நாங்களெல்லாம் வித்தியாசமான ஆளுங்கடா, நாங்கெல்லாம் பூஜ்ஜியத்தையே புரட்டிப்போட்டு அதுக்கு சனாதனம்னு பேரு வெச்சிருக்கோம் தெரியுமோ” என்றார் அந்த வேதப் பார்ப்பனர். அப்படியா மாமா இனி பூஜ்ஜியத்துக்கும் கோயில் கட்டுவிங்க, பூஜ்ஜிய சரஸ்வதி என்று பெயர் சூட்டுவிங்க,அதுக்கு பூஜை நடத்த ஆகமத்த தூக்கிகிட்டு வந்துருவிங்க, அடேங்கப்பா..! உங்களுக்கு சனாதனம் என்பது சர்வ ரோக நிவாரணி.
– கோடங்குடி மாரிமுத்து