பா.ஜ.க. தன்னை பிற்படுத்தப்பட்டோர் நலன் காக்கும் அமைப்பாக அடையாளம் காட்டத் தொடங்கியிருப்பது வாக்கு வங்கிக்குக் குறி வைக்கும் ஒரு சதி வலை என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த செப். 18, 19 தேதிகளில் பா.ஜ.க.வின் பிற்படுத்தப்பட்டோர் அணி உ.பி. மாநிலம் அயோத்தியில் மாநாடு ஒன்றை நடத்தியிருக்கிறது. இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வெளியிட்டுள்ள (செப்.18, 2021) ஒரு ஆய்வில், “அதிக வாக்கு சதவீதத்தைக் கொண்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவை ‘இந்துத்துவா’ அரசியலுக்கு நெருக்கமாகக் கொண்டு வந்து அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலுக்கு வாக்கு வங்கியாகப் பயன்படுத்துவதே இதன் நோக்கம்” என்று எழுதியிருக்கிறது.

இந்தக் கூட்டத்துக்கு அயோத்தியைத் தேர்வு செய்தது ஏன் என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். தரப்பில் கூறப்படும் விளக்கத்தையும் அந்த ஏடு சுட்டிக் காட்டியிருக்கிறது. பகவான் ராமனுடன் பிற்படுத்தப்பட்டோர் உணர்வுபூர்வமாக நீண்டகாலமாக நெருக்கமாக இருப்பதால் அந்த மத உணர்வைப் பயன்படுத்திக் கொள்ளவே அயோத்தியைத் தேர்வு செய்ததாக கூறியிருக்கிறார்கள். பா.ஜ.க.வின் பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவரான நரேந்திர கஷ்யாப் அளித்துள்ள பேட்டியில், உ.பி. அமைச்சரவையிலும் ஒன்றிய அமைச்சரவையிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்குவோம் என்று பேட்டி அளித்திருக்கிறார்.

இந்துத்துவா அரசியல் பிடியில் சிக்கியுள்ள ‘பிற்படுத்தப்பட் டோருக்கும்’ சமூக நீதி கொள்கையோடு பிணைத்துக் கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

பா.ஜ.க. அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் அல்லது பட்டியல் இனப் பிரிவினர் எவ்வளவு அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் மதவாதத் தலைமையின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள்தான். சமூக நீதிக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல; பா.ஜ.க.வின் ‘இந்துத்துவ’ பார்ப்பனியத் தலைமை. ‘நீட்’ தேர்வைத் திணிப்பதையும் உயர்ஜாதி ஏழைகளுக்கு தனியாக பத்து சதவீத இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவதையும் உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்டோருக்கு கல்வி - பேராசிரியர் நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய பங்கினை வழங்க மறுப்பதையும் பா.ஜ.க.வின் ‘இந்துத்துவ’ பிற்படுத்தப்பட்டோரால் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. தலைமையின் முடிவுகளைப் பணிந்து ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். மட்டுமின்றி, ‘நீட்’ போன்ற சமூக அநீதிகளை மக்கள் மன்றத்தில் நியாயப்படுத்திப் பேசியாக வேண்டும்.

‘இந்துத்துவா’ அரசியலே - சமூகநீதிக்கு எதிரானதுதான்; பல்வேறு சமயக் குழுக்களாகப் பிரிந்து கிடந்தவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் நோக்கத்தோடு சாவர்க்கர் முன் வைத்த கோட்பாடு ‘இந்துத்துவம்’. அதன் நோக்கம், இஸ்லாம் என்ற எதிரியைக் கட்டமைத்து அதற்கு மாற்றாக, ‘மத அரசியலை’ முன்னெடுப்பதே தவிர, ‘இந்து’ எனும் ‘வேத மதத்தால்’ புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவத்தையும் சமூக நீதியையும் வழங்குவது அல்ல. அந்த ‘இந்துத்துவ’ அரசியலை நிலைநாட்ட அவர்களுக்கு அதிகாரம் தேவைப்படுகிறது.

சமூக நீதியை விலக்கி மதத்தை முன்னிறுத்துவதே இந்துத்துவத்தின் முதன்மையான நோக்கம்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் தலைவராகவும் முன்னணி பொறுப்பாளர்களாகவும் உள்ள ‘இந்துத்துவ’ பிற்படுத்தப்பட்டோர் தான் ‘நீட்’ தேர்வு வேண்டும் என்கிறார்கள். அதற்காக தி.மு.க. ஆட்சி நியமித்த ஏ.கே. ராஜன் குழுவைக் கலைக்க வேண்டும் என்று நீதிமன்றம் போகிறார்கள்.

பிரதமர் மோடி, பிற்படுத்தப்பட்டவராக அடையாளம் காட்டப்படுகிறார். ஆனால் அவரது அதிகாரம் நிறைந்த பிரதமர் அலுவலகத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனப் பிரிவு அதிகாரிகூட இல்லை என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்கள் கூறுகின்றன.

மருத்துவ உயர் பட்டப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வழங்க ஒன்றிய ஆட்சி மறுத்த போது ‘பா.ஜ.க.’ பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிய ஆட்சியை எதிர்த்தார்களா? இல்லை. சமூகநீதி பேசும் திராவிடர் இயக்கமான தி.மு.க. தான் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி அனைத்து மாநிலத்திலுள்ள “இந்துத்துவ” பிற்படுத்தப்பட்டோருக்கும் சமூக நீதி பிற்படுத்தப்பட்டோருக்கும் உரிமைகளை மீட்டுத் தந்தது.

மேலும் பிற்படுத்தப்பட்டோராக அடையாளப்படுத்தப்படும் ஜாதிக் குழுக்களை ஜாதி அமைப்புக்குள்ளே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே ‘இந்துத்துவா’வின் நோக்கம். இந்து மத வர்ணாஸ்ரமம் வழியாக உருவான ஜாதியக் கட்டமைப்பு ‘இந்துத்துவ’ அரசியலுக்கு தேவைப்படுகிறது.

ஜாதியை இந்துத்துவ அரசியல் ஏற்கவில்லை என்று இதுவரை பா.ஜ.க.வோ ‘சங்’பரிவாரங்களோ அறிவித்ததாக வரலாறே இல்லை. மாறாக அதைக் கட்டிக் காப்பாற்றவே துடிக்கிறார்கள்.

‘சமூக நீதி’க்கான நாளாக பெரியார் பிறந்த நாளை தமிழக அரசு அறிவித்தபோது அதை எதிர்த்து அதே நாளில் குஜராத் மோடிக்கு தமிழ்நாட்டில் விழா எடுத்ததுதான் இந்துத்துவ - பிற்படுத்தப்பட்டோர் தலைமையிலான தமிழக பா.ஜ.க.

ஆக, பிற்படுத்தப்பட்டோர் பற்றிப் பேசுவதாலோ அவர்களை அணி திரட்டுவதாலோ அவர்களை அமைச்சர்களாக்குவதாலோ சமூக நீதியை பா.ஜ.க. ஆதரிக்கிறது என்று கருதிவிடக் கூடாது; மாறாக பார்ப்பனியத்துக்கு வலிமை சேர்க்கவும் சமூக நீதியைக் குலைக்கவும் இந்துத்துவ அரசியலுக்கான கருவிகளாகப் பயன்படுத்துவதுமே அவர்களின் நோக்கம்.

- விடுதலை இராசேந்திரன்