  ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் மதத்தைப் பின்பற்ற வழிபாடு செய்ய சட்டம் உரிமை வழங்கியிருக்கிறது. மதம் சார்ந்த நம்பிக்கைகளை அரசிய லாக்குவதற்கு அதை இஸ்லாமியர் எதிர்ப்புக்குப் பயன்படுத்துவதற்கும் சட்டம் அனுமதிக்கிறதா?

 விநாயகன் ஊர்வலத்தை முன்னின்று நடத்தும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் - மத அமைப்புகள் இல்லை. மதத்தை வைத்து அரசியல் நடத்துபவை. இவர்கள் நடத்தும் ஊர்வலம் - மதத்தின் ஊர்வலமாக தமிழக ஆட்சியும், காவல் துறையும் அங்கீகரித்து அனுமதியும் வழங்குவது மதவெறி அரசியலை ஊக்கப்படுத்தும் செயல்பாடு அல்லவா?

 ‘இரசாயனம்’ கலந்த விதவிதமான ‘விநாயகன்’களை கடலில் கரைப்ப தால் கடல் நீர் மாசுபட்டு, கடல் வாழ் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாவ தால் மாசு கட்டுப்பாடு வாரியம் இதற்கு தடைபோட வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஆனால், ‘இரசாயன விநாயகன்’கள் வேறு மாநிலங்களிலிருந்து இறக்குமதி யாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றை கடலில் கரைக்கும்போது, தடுத்து நிறுத்தவோ, அல்லது கண்காணிக்கவோ ஆட்சியாளர்கள் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை?

 10 அடி உயரத்துக்கு மேல் விநாயகன் சிலைகளை வைத்து, போக்குவரத்துக்கு - பொது மக்களுக்கு இடையூறு செய்யக் கூடாது; ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதில் கட்டுப்பாடு வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அத்தனையும் மீறப்படுகின்றன. ஆட்சியும், காவல் துறையும் வேடிக்கைப் பார்க்கிறது.

மக்களிடையே பகுத்தறிவையும், சமூக ஒற்றுமையையும், சமத்து வத்தையும் பரப்பிடும் பெரியார் இயக்கங்களின் நிகழ்ச்சிகள், பரப்புரைகளுக்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்படுகிறது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையையே ஆட்சியும் காவல்துறையும் பறிக்கிறது.

 செப்டம்பர் 17 தமிழர்களின் தன்மானத் தலைவர் பெரியார் பிறந்த நாள். இவ்வாண்டு அதே நாளில் வரலாறு ஏதுமற்ற அறிவுக்கு ஒவ்வொத புராணங்களின் கற்பனைக் கடவுளான ‘விநாயகனும்’ இந்த ஆண்டில் ‘பிறக்கிறான்’! தமிழக அரசு, பெரியார் பிறந்த நாள் விழாக்களுக்கு தடைபோட்டுவிட்டு, ‘விநாயகன் பிறந்த நாளை’ மட்டும் கொண்டாட வேண்டும் என்கிறது. ஆனால் பெரியார்-அண்ணா படங்களை இவர்கள் கொடிகளிலும் சுவரொட்டிகளிலும் மட்டும் பயன்படுத்திக் கொள்வார்கள்! வெட்கம்; அவமானம்!

மதவெறி தலைதூக்காத நிலம் தமிழகம்!

மதவேறுபாடுகளைக் கடந்து தோழமையும் உறவும் பூத்துக் குலுங்கிய மண் தமிழ்நாடு!

மத உணர்வுகளை வெறியூட்டும் களமாக்கி, அதிகாரத்தின் அர வணைப்போடு சமூகத்தை மீண்டும் அடிமைப்படுத்த ஒடுக்கப்பட்ட மக்களிடம் பார்ப்பனர்கள் சூழ்ச்சி வலை விரிக்கிறார்கள்.

விநாயக அரசியல் ஊர்வலங்களின் பின்னணியில் இந்த சதி அடங்கியிருக்கிறது.

“மத ஓடத்திலேறிய மாந்தரே - பலி

 பீடத்திலே சாய்ந்தீரே”

என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளை நினைவு கூர்ந்து,

பெரியாரின் கைத்தடியை மதவெறிக்கு எதிரான குறியீடாக்கி-

மக்கள் ஒற்றுமை காக்க, மதவெறி அரசியல் சக்திகளை வீழ்த்த அணி திரளுவோம்!

வாரீர்! வாரீர்!

Pin It