பசுமை வேட்டை நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பதினான்கு கோரிக்கைகளை முன்வைத்து, பிப்ரவரி 16, 2011 அன்று ஒரிசாவின் மல்காங்கிரி மாவட்ட ஆட்சியர் வினீல் கிருஷ்ணா, உதவிப் பொறியாளர் பபித்ரா மோகன் மஜி ஆகிய இருவரும் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டனர். மாவட்ட ஆட்சியராக வினீல் கிருஷ்ணா பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இப்பகுதியின் கிராம மக்களை நேரடியாகச் சென்றடையும் வகையில், ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்டங்களை செயல்படுத்தியதாலும், கிராம மக்களை தேடிச் சென்று குறைகள் கேட்டு பணி செய்ததாலும், இப்பகுதியின் கிராம மக்கள் அவர் மீது நல்லெண்ணம் கொண்டிருந்தனர். அதிகார வர்க்கத்தின் வஞ்சகமான அணுகுமுறைகள் குறித்து எவ்வித சந்தேகங்களையும் எழுப்பத் தெரியாத பழங்குடிமக்கள், மாவட்ட ஆட்சியரை மாவோயிஸ்டுகள் விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து பேரணி ஒன்றும் நடத்தினர். இதை மாவோயிஸ்டுகளுக்கு எதிரான மக்களின் உளக்கிடக்கை என ஊடகங்கள் சித்தரிக்க முயன்றன.

காடுகளுக்குள் புதிய தார்ச்சாலைகள் அமைப்பது, அரசு எந்திரத்திற்கான அலுவலகங்களை உருவாக்குவது, உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது ஆகியன மேலோட்டமாகப் பார்த்தால், மக்களின் பயன்பாட்டுக்கானது – சமூக வளர்ச்சிக்கானது என்ற தோற்றத்தைத் தான் தரும். ஆனால், கூலிப்படைகள், துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட பசுமை வேட்டை நடவடிக்கையின் பயங்கரவாதக் கருவிகள், பழங்குடி மக்களின் பகுதிகளுக்குள் இலகுவாகப் புழங்குவதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளாகவே, இவை காலப்போக்கில் பயன்படுத்தப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை. கனிம வளங்களைக் கொள்ளையிடவும், பழங்குடி மக்களை பலவந்தமாக வெளியேற்றவும், பழங்குடி மக்களைப் பாதுகாக்கும் மாவோயிஸ்டுகளை அழிக்கவும்தான், ஒரிசா, ஆந்திரா, சட்டீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இது போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

kanpathe_270வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரிலான இப்பணிகளுக்கு பழங்குடி மக்களால் இடையூறு ஏற்படாமல் இருக்கவே, நலத்திட்டங்கள் என்ற பெயரில் அவர்களுக்கு சில சலுகைகள் திசைதிருப்பும் நோக்கில் வழங்கப்படுகின்றன. அப்படியான நலத்திட்டங்களைத்தான், மல்காங்கிரி மாவட்டத்தில் பழங்குடி மக்களின் எதிர்ப்பு வலுவாக இருக்கும் பகுதிகளில், கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா நடைமுறைப்படுத்தத் துணிந்தார். அதிகார வர்க்கத்தின் முதன்மையான வேலைத் திட்டம் பசுமை வேட்டை நடவடிக்கையே. அதற்கு முட்டுக் கொடுக்கும் நலத்திட்ட உதவிகள் என்ற நயவஞ்சக வேலைத்திட்டத்தை, மற்றவர்கள் தயங்கிய போது கிருஷ்ணா துணிந்து செயலாற்ற முனைந்தார்.

ஆனால், ஊடகங்கள் ஊதிப் பெருக்கும் அரசு எந்திரங்களுக்கு ஆதரவான செய்திகளில் குளிர்காயும் நடுத்தர வர்க்கமோ, மக்கள் சார் பணியாளர் ஒருவரை "தீவிரவாதிகள் கொலை செய்யத் திட்டமிடுகின்றனர்' என்பது வரை கற்பனை செய்து உச்சுக் கொட்டிக் கொண்டிருந்தனர். ஒடுக்கும் – சுரண்டும் சமூக அமைப்பின் அத்தனை கேவலங்களுக்கும் இடங்கொடுத்து வாழப்பழகிக் கொண்ட பிழைப்புவாத வர்க்கங்கள், கொடுமைகளில் சிக்கி உழலும் தலித்துகள், பழங்குடியினர் போன்ற அடித்தள மக்களின் பிரச்சனைகளைத் துளியும் புரிந்து கொள்வதில்லை. மாறாக, பிரச்சனைகள் தீவிரமடையும்போது, நிகழும் உபரி விளைவுகள் மீது தங்கள் கரிசனத்தைக் கொட்டி அங்கலாய்க்கின்றனர்.

அதிகார வர்க்கம் இடும் கட்டளைகளுக்கு இயங்கப் பழகிக் கொண்ட, ஒட்டுமொத்த சமூகத்தின் ஒரு தனி நபர் அங்கமாக மட்டுமல்ல, அரசு எந்திரத்தின் ஓர் உறுப்பாகவும் இருப்பவர்தான் கிருஷ்ணா போன்ற மாவட்ட ஆட்சியர். தனது கொலை வெறி வேட்டைக்கு இந்த மாவட்ட ஆட்சியர் போன்ற தனது உறுப்புகளை அரசு எந்திரம் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தும்போது, மக்கள் விடுதலைப் போராளிகள் அதே துருப்புச் சீட்டையே தங்கள் கோரிக்கைகளுக்கான பிணைகளாகப் பயன்படுத்த வேண்டிய அவசியம் நேர்கிறது.

"சாஷிமுலியா ஆதிவாசி சங்க'த்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மீதும், ஏனைய பழங்குடி மக்கள் மீதும் கடந்த சில ஆண்டுகளில் 9018 வழக்குகள் புனையப்பட்டுள்ளன. மருந்துக்கும் பயனற்ற இவ்வழக்குகள் மூலம் பழங்குடி மக்களை அலைக்கழித்து, அவர்களின் போராட்ட உணர்வைக் கொன்றுவிடலாம் என ஆளும் வர்க்கம் தப்புக் கணக்கு போடுகிறது. எவ்வித ஆதாரமும் இல்லாத இவ்வழக்கு களைத் திரும்பப் பெறவும், பிணை மறுக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களை விடுவிக்கவும், தங்கள் கட்சியின் முன்னணித் தலைவர்களை சிறையிலிருந்து மீட்கவும், யாவற்றுக்கும் மேலாக பச்சை வேட்டை பயங்கரவாதத்தை நிறுத்தவும் மாவோயிஸ்டுகள் அவ்வப்போது அதிகார வர்க்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதை, ஊடகங்கள் "சிவப்பு அச்சுறுத்தல்' (Red alert) என ஊதிப் பெரிதுபடுத்துகின்றன.

மாவோயிஸ்டுகள், பழங்குடி மக்களின் உரிமைகளுக்கான தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற, மாநில அரசிடம் உத்தரவாதங்களைப் பெற்றுக் கொண்ட பிறகே, மக்களின் கருணை ததும்பும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கிருஷ்ணாவை விடுதலை செய்தனர். மாவோயிஸ்டுகள் முன்வைத்த 14 கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என மாநில உள்துறை செயலாளர் யு.என். பெஹெரா பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி அளித்த பிறகே, மாவட்ட ஆட்சியர் விடுவிக்கப்பட்டார். சிறைப்படுத்தப்பட்டிருக்கும் சுமார் 700 பழங்குடி மக்கள், மூன்று மாதங்களில் படிப்படியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதும் இக்கோரிக்கைகளில் முக்கியமான ஒன்று. ஏனைய கோரிக்கைகளும், தம் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதையும் அரசு ஒடுக்குமுறையிலிருந்து தம்மை விடுவிப்பதையுமே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்திருக்கும் பழங்குடி மக்களை மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஒருபோதும் இவர்களால் நிறுத்த முடியாது.

ராஜேந்ரா கன்பதே, வயது 58. மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மிகுந்த மகாராட்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத் துணை ஆட்சியர். இம்மாவட்டமும் சட்டீஸ்கரின் எல்லையோர மாவட்டங்களும் பரந்து விரிந்த, அடர்ந்த வனப் பகுதியால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. அரசின் படைகள் நுழைய முடியாத உள்ளடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அபுஜ்மார் என அழைக்கப்படும் இவ்வனப்பகுதியில் 250 கி.மீ. தொலை வுக்குள் ஆகஸ்ட் 23, 2010 அன்று, பயணம் மேற்கொண்டு திரும்பியிருக்கிறார் கன்பதே. அவரது ஊழியர்கள் எவரும் அவருடன் செல்ல முன்வரவில்லை. ஆபத்து மிகுந்த இப்பயணத்திற்கு காவல் துறை அனுமதிக்கவில்லை; அவரது உயிருக்கு உத்தரவாதம் தர இய லாது எனவும் அச்சுறுத்தியது.

"நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் சென்று வருவது, தனது அடிப்படை உரிமை' என அவர்களிடம் தெரிவித்து விட்டு, கன்பதே இப்பயணத்தைத் தொடங்கினார். மகாராட்டிர காவல் துறையின் கடைசி சோதனைச் சாவடியிலிருந்து 100 கி.மீ. தொலைவில், எல்லையில் அமைந்திருக்கும் பீனகோண்டா என்ற கிராமத்தை, தன்னுடன் இணைந்து கொண்ட ஏழு தன்னார்வத் தொண்டர்களுடன் எவ்விதக் குறுக்கீடுகளும் இன்றி சென்றடைந்தார். “நக்சலைட் அச்சுறுத்தல் – தீவிரவாதம் என்பதெல்லாம் காவல் துறையால் மிகைப்படுத்தப்படுபவை. நக்சலைட்டுகளை "துர்தேவதை' களாகப் பிரச்சாரம் செய்வதன் மூலம்தான், அவர்கள் ஊதிய உயர்வையும் அதிக அளவிலான நிதி ஒதுக்கீட்டையும் பெற்று வருகிறார்கள்'' என விமர்சிக்கிறார் கன்பதே.

கட்சிரோலி மாவட்ட காவல் துறையின் நக்சல் ஒழிப்புப் பிரிவு, தனது எல்லைக்குள் சீருடை தரித்த நக்சலைட்டுகள் 300 பேர் இருக்கலாம் என அனுமானித்துள்ளது. ஆனால், இவர்களை எதிர்கொள்ள சி.ஆர்.பி.எப்.இன் நான்கு பட்டாலியன்கள், எஸ்.ஆர்.பி.எப்.இன் 11 கம்பெனிகள், ஒரு சி – 60 கமாண்டோ படை மற்றும் மாநில காவல் துறையின் படைப் பிரிவுகளை உள்ளடக்கிய 9,000 அரசுப் படையினர் இம்மாவட்டத்தில் மட்டும் பணியில் இருக்கின்றனர். 1980 முதல் 2010 வரை குண்டு வெடிப்பு மற்றும் மோதல்களில் நக்சலைட்டுகளால் காவல் துறையினர் கொல்லப்பட்ட நிகழ்வுகள், இம்மாவட்டத்தில் மட்டும் 57 என, கட்சிரோலி மாவட்ட திட்டக் குழுவின் அறிக்கை கூறுகிறது ("தெகல்கா', அக்டோபர் 30, 2010). அதாவது, கடந்த 30 ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு நிகழ்வு கள் நடந்தேறியுள்ளன. “துணை ராணுவப் படையினரைத் திரும்பப் பெற வேண்டுமே யொழிய, படைகளைக் குவிப்பதாலோ, தேடுதல் வேட்டைகளைத் தொடர்வதாலோ, நக்சலைட்டுகளின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது'' எனக் கூறும் கன்பதே, துறைசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.

பள்ளிக்கூட தலைமை ஆசிரியரின் மகனாகப் பிறந்த கன்பதே, மத்தியப் பிரதேச மாநிலத்தில் காபுவா என்னும் ஊரில் தனது பள்ளிக் கல்வியை அரசு பள்ளிக்கூடங்களில் நிறைவு செய்த பின்னர், நாக்பூர் பல்கலைக் கழகத்தில் கணிதம் மற்றும் இயற்பியலில் முதுநிலை அறிவியல் பட்டத்தைப் பெற்றவர். நாக்பூர் உயர்நிலைப் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். 1984 இல் மாவட்ட கல்வியியல் அலுவலகத்தில் தனக்கான ஆசிரியர் பயிற்சி சான்றிதழைத் தருவதற்கு, அவர்கள் இரண்டு ரூபாய் கையூட்டு கேட்டபோது, கோபமுற்று தர மறுத்திருக்கிறார். அரசாங்க அமைப்பை முதன்முதலில் எதிர்த்த இந்நிகழ்வை நினைவுகூறும் இவர், 1985இல் குடிமைப் பணியில் சேர்ந்தபோது, இந்த ஊழல் அமைப்பைத் திருத்த வேண்டும் என விரும்பியிருக்கிறார். ஆனால், விரைவிலேயே "நேர்மை என்பது தவறான கொள்கை' என கண்டு கொண்டதாக வருந்துகிறார். 1988இல் துணை வட்டாட்சியராகப் பணியிலிருந்தபோது, சட்டவிரோதமாக வனப் பகுதியில் மரங்கள் வெட்டுபவர்களைப் பிடிக்க வேண்டுமென திட்டமிட்டிருக்கிறார். அதை அறிந்த அவரது உயர் அதிகாரி ஒருவர், "இவ்வாறு செய்வதாக இருந்தால், உங்கள் ஆசிரியர் பணிக்கே நீங்கள் திரும்பிப் போக நேரிடும்' என அறிவுறுத்தியிருக்கிறார் (மிரட்டினார் என்பதை சட்டப்பூர்வமாக நிரூபிக்க முடியாது அல்லவா?).

கன்பதே 2010 மார்ச் மாதத்தில்தான் மாவட்டத் துணை ஆட்சியராகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். மாவட்ட ஆட்சியரான அதுல் பட்னே, மாவட்டத்திலுள்ள கடைநிலை பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டுமென, தனக்குக் கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட, அவ்வகையில் கன்பதேவுக்கு ஒதுக்கப்பட்ட இடம்தான் பீனகோண்டா கிராமம். “என்னைப் பழி தீர்ப்பதாக நினைத்து, சாலைவசதிகூட இல்லாத, நக்சலைட்டுகளின் செல்வாக்கு மிகுந்த இப்பகுதியை எனக்கு ஒதுக்கினார். ஆனால், நான் செல்வதாக முடிவு செய்த பிறகு, அவர்களால் தடுக்க முடியவில்லை'' என்கிறார் கன்பதே. தனது பயணத்தில் 20 கி.மீ. அளவிலான மலைப்பாதைகளையும் சிற்றாறுகளையும் நடந்தே கடந்து சென்று, தனது குழுவினரோடு பீனகோண்டா கிராம மக்களைச் சந்தித்தார். 35 குடிசைகளும் 219 பேரும் மட்டுமே இருந்த அக்கிராமத்தில் இரண்டு கிணறுகள் இருந்ததாகவும், அவற்றில் ஒன்று தூர்ந்து போயும் மற்றொன்றில் மழை நீர் தேங்கி இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். மேலும், “கலங்கிய நீர் குட்டையிலிருந்துதான் குடிப்பதற்கு அவர்கள் நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். மின்சாரம் இல்லை. பொருட்கள் வாங்குவதற்கான சந்தை அக்கிராமத்திலிருந்து 57 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அரசாங்கத்தின் அடையாளமாக பழங்குடியின நலத்துறையின் நிதியில் கட்டப்பட்டிருந்த அங்கன்வாடி பள்ளிக்கூடமும், கிராம சுகாதார மய்யக் கட்டடமும் இருந்தன. ஆனால், அவை இயங்கவில்லை'' எனவும் குறிப்பிடுகிறார்.

கன்பதே குழுவினர் அன்று இரவு அக்கிராமத்தில் தங்கினர். நாக்பூரில் இயங்கும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய மய்யத்தால் நடத்தப்படும் அப்பள்ளிக்கூடத்தை கன்பதே ஆய்வு செய்தார். 188 மாணவர்கள் பயின்று வருவதாகப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 39 மாணவர்களே கிராமத்தில் இருந்தனர். ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் 14 பேர் பணியில் இருப்பதாகக் குறிப்பு இருந்தது. ஆனால், மூவர் மட்டுமே பணியில் இருப்பதை அறிந்தார். வருகைப் பதிவேடு உள்ளிட்ட எவ்வித நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. பராமரிப்பு இன்றி உடைந்தும் சிதிலமடைந்தும் இருந்த அப்பள்ளிக்கூடத்தில், சூரிய ஒளி மின்னாற்றலால் இயங்கும் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருந்தது. அரசாங்கத்தின் நலத் திட்டங்கள் எவையும் தமக்குக் கிடைப்பதில்லை என அக்கிராமத்தினர் அவரிடம் முறையிட்டனர்.

“அரசு உதவிகள் பெறுவதற்கான சான்றாதாரங்கள் எவையும் அம்மக்களிடம் இல்லை. பட்டியல் பழங்குடியினருக்கான சான்றிதழ்களை ஒவ்வொரு தனி நபரும் பெறுவதற்கு உதவுவதாக, நான் அவர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளேன்'' என்கிறார் கன்பதே. “நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு மிதி வண்டியும், டார்ச் மற்றும் அரிக்கேன் விளக்குகளுமே அவர்களின் உடனடித் தேவையாக இருக்கின்றன. அரசாங்கம் அவர்களின் இத்தேவைகளை உடனடியாக நிறைவேற்ற முடியும். இரண்டு கான்ஸ்டபிள்களின் ஆண்டு வருமானத்தைவிட, இத்தொகை அதிகம் இல்லை. ஆனால், துணை ராணுவப் படைகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை ஆண்டுதோறும் செலவிட்டு வருகிறது அரசு. அப்படைகள் தேவையற்றவை'' என்கிறார் கன்பதே.

2005 இல் நாக்பூர் உயர் நீதிமன்றத்தில் ஒரு தொண்டு நிறுவனம், எவ்விதக் குடிமை உரிமைகளும் வழங்கப்படாமல் பீனகோண்டா கிராமம் புறக்கணிக்கப்படுவதாகப் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தது. "மாவட்ட ஆட்சியர் அக்கிராமத்திற்கு ஆய்வுக்கு செல்ல வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் விளைவுதான் அக்கிராமத்தில் தோண்டப்பட்டிருக்கும் இரண்டு கிணறுகள். 2007 பிப்ரவரியில் மாவட்ட ஆட்சியராகயிருந்த நிரஞ்சன்குமார், தேர்தல் பணி நிமித்தம் அக்கிராமத்திற்குச் சென்றிருக்கிறார். கன்பதே அக்கிராமத்திற்குச் சென்றிருக்கும் மூன்றாவது குடிமைப் பணி அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று ஆண்டுகளாக, கட்சிரோலி மிகவும் பின்தங்கிய மாவட்டமாக வரையறுக்கப்பட்டு, ஆண்டுதோறும் 40 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு பெறுகிறது. 2010 ஆகஸ்டில் மாநில திட்டக்குழு 565 கோடி ரூபாய் வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. “அரசாங்கம் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறையோடுதான் செயல்படுகிறது. ஆனால், ஊழல் அதிகாரிகள்தான் ஒதுக்கப்படும் நிதிகளைச் சூறையாடி விடுகின்றனர்'' எனக் கடுமையாகக் குற்றம் சாட்டுகிறார் கன்பதே.

பீனகோண்டாவும் கட்சிரோலியும் இந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் அரசு எந்திரத்தின் செயல்பாட்டையும் ஊழல் அதிகார வர்க்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளங்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட இம்மாவட்டம், 18 கி.மீ. நீளமே கொண்ட இருப்புப் பாதைகளையும், ஒரே ஒரு ரயில்வே நிலையத்தை யுமே உள்ளடக்கியிருக்கிறது. சுஜன்கார் என்னுமிடத்தில் உருவாகி வரும் சுரங்கப் பகுதியின் தேவைக்காகவே, அங்கு இருப்புப் பாதை விரிவுபடுத்தப்பட இருக்கிறது. கன்பதேவும் அவரது சகாக்களும் 48 மணி நேரத்திற்கு வெளியுலகத் தொடர்பற்று இருந்தனர். இவர்களை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்று விட்டனர் என காவல் துறை வதந்தி பரப்பியது. இது, மாநில உள்துறை அமைச்சகம் வரை சென்று, இவர்களைத் தேடும் பணி தொடங்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 26 அன்று, கன்பதேவும் அவரது குழுவினரும் வனப் பகுதியிலிருந்து வெளியேறி, லஹேரியில் உள்ள காவல் துறையின் சோதனைச்சாவடியை வந்தடைந்தனர்.

tribes_240“எங்களை அவ்விடத்திலிருந்து அழைத்துச் செல்ல வட்டாட்சியர் வண்டி காத்திருந்தது. நாங்கள் திரும்பிக் கொண்டிருந்த வழியில், அரசு முத்திரை பொறித்த வண்டி எனத் தெரிந்திருந்தும், ஒரு சோதனைச் சாவடியில் எங்கள் வண்டியை நிறுத்திய ஒரு கான்ஸ்டபிள், துப்பாக்கி முனையில் வட்டாட்சியரைக் காரிலிருந்து வெளியே வரச் சென்னார். காவல் துறைக் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் எங்கள் வண்டி சோதனையிடப்பட்டது. நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தில் இருந்த பகுதியில்கூட, எங்களை எந்தவொரு நக்சலைட்டும் துப்பாக்கி முனையில் எதிர்கொள்ளவில்லை. ஆனால், வட்டாட்சியரின் வண்டி எனத் தெரிந்திருந்தும், அக்காவலர் அப்படி நடந்து கொள்வதைப் பார்த்தபோது, கிராம மக்களை இவர்கள் எப்படியெல்லாம் நடத்துவார்கள் என்பது எனக்கு உறைத்தது'' என தான் உணர்ந்ததை நமக்கும் உணர்த்துகிறார் கன்பதே.

மகாராட்டிர உள்துறை அமைச்சகம் கன்பதேவை அழைத்து, அவரது பயணம் குறித்த அறிக்கை ஒன்றையும் அதை வெளியிட்டு விடாமல் ரகசியம் காக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டதாகத் தெரிய வருகிறது. அதே நேரத்தில் மாவட்ட ஆட்சியர் பட்னே, பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர் கடத்தப்பட்டதாகக் கசிந்த வதந்தி குறித்து தெளிவுபடுத்தி வருமாறும், அரசுக்கு எதிராக எதுவும் சொல்லிவிடக் கூடாது எனவும் கன்பதேவை அறிவுறுத்தியிருந்தார். ஆனால், கன்பதே உண்மைகளை மறைக்க விரும்பவில்லை. “நான் வன்முறையை எதிர்க்கிறேன். அது நக்சலைட்டுகளின் வன்முறையாயிருந்தாலும்; சட்டப்பூர்வமாக்கப்பட்ட அரசின் வன்முறையாயிருந்தாலும். நக்சலைட்டுகளின் வன்முறை எல்லைக்குட்பட்டது. அவர்களின் இலக்கு வரையறுக்கப்பட்டது. ஆனால், காவல் துறையின் வன்முறையோ கட்டவிழ்த்து விடப்பட்டது. கிராமப்புற மக்கள் நக்சலைட்டுகளைவிட, காவல் துறை குறித்தே மிகுந்த அச்சம் கொண்டிருக்கின்றனர். நக்சலைட்டுகளை நியாயப்படுத்த முன்வரவில்லை. ஆனால், அரசுப்படைகள் மோசமானவை என நான் உறுதியாகக் கூறுவேன்'' என அதிகார வர்க்கத்தின் செவிட்டில் அறைந்தார் கன்பதே.

பத்து நாட்களுக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியருக்கு காவல் துறைக் கண்காணிப்பாளரிடமிருந்து ரகசியக் கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அதில், “கன்பதே, அரசுக்கும் காவல் துறையின் நிர்வாகத்திற்கும் எதிராகப் பேசியிருக்கிறார். பொதுமக்களின் எண்ணத்தில் அரசு நிர்வாகம் குறித்து குழப்பத்தை உருவாக்கியிருக்கிறார். காவல் படையினர், தம் குடும்பத்தினரை விட்டு விலகி, பாதுகாப்பற்ற பகுதிகளில் தங்கியிருக்கின்றனர். அவர்களின் கண்ணியத்தை கன்பதே குலைத்திருக்கிறார். ஒரு பொறுப்பான அதிகாரி, நக்சலைட்டுகள் மீது அனுதாபம் உருவாக்க முயன்றிருக்கிறார். ஆகவே, மகாராட்டிர குடிமைப் பணிகள் விதிகள் – 1981 அய் அவர் மீறியிருக்கிறார். அவர் மீது துறைசார் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென நாங்கள் விழைகிறோம்'' என கடுமை காட்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இக்கடிதத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், (கீஞுண்டிஞீஞுணtடிச்டூ) தலைமையிடத் துணை ஆட்சியரின் வழியாக, "அவரது விளக்கத்தின் அடிப்படையில் அவர் மீதான நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்' எனக் குறிப்பெழுதி, எச்சரிக்கும் விதத்தில் விளக்கம் கேட்டு, கன்பதேவுக்கு அறிவிக்கை அனுப்பியிருக்கிறார்.

“இம்மாவட்டத்தில் ஏராளமான காவல் துறையினர் உயிர்த் தியாகம் செய்திருக்கின்றனர். காவல் துறையின் கண்ணியத்தைக் குறைவுபடுத்தியும் நக்சலைட்டுகளைப் புகழ்ந்தும், ஒரு தவறான முன்னுதாரணத்தை கன்பதே உருவாக்கியிருக்கிறார்'' என இப்பிரச்சனை குறித்து சந்தித்த "தெகல்கா' பத்திரிகையிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர். ஆனால், “கன்பதேவுக்குத் தரப்படும் இத்தகைய துறைசார் நெருக்கடி, "எதிர்த் தரப்பின் நியாயங்களைப் பேச முன்வரும் ஒருவர், எதிரியாகத்தான் இருக்க முடியும் என்ற முத்திரையைச் சுமக்கப் பணிக்கப்படுவார்' என்பதை உணர்த்துகிறது'' என தனது விமர்சனத்தை முன்வைக்கிறது, தொடர்ந்து மக்கள் சார் நியாயங்களைப் பேசிவரும் "தெகல்கா' பத்திரிகை.

மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மிகுந்த பகுதிகளில் பழங்குடி மக்களின் நியாயங்களைப் பேசுவதும் செயல்படுவதும், மறுமொழியாக, மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகப் பேசுவதாகவும் செயல்படுவதாகவும்தான், முதலாளித்துவ வணிக ஊடகங்களாலும் அரசு எந்திர உறுப்புகளாலும் கணிக்கப்படுகின்றன. இக்கண்காணிப்பின் அதிகாரத்திலிருந்து, கன்பதே மட்டும் தப்பிவிட முடியுமா என்ன? 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 9.7 லட்சம் மக்கள் தொகை கொண்ட கட்சிரோலி மாவட்டம் 1,521 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் 720 கிராமங்கள் எவ்விதத் தகவல் தொடர்பு வசதிகளும் அற்றவை. 398 கிராமப்புற பள்ளிக்கூடங்கள் இடியும் நிலையில் இருக்கின்றன. 397 அங்கன்வாடிகள் கட்டடங்கள் இல்லாதவை. 392 பள்ளிக்கூடங்கள் மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகளும் பெறாதவை.

ஆனால், நக்சலைட்டுகள் செல்வாக்கு மிகுந்த பகுதி என்பதால், காவலர்களுக்கு மாத ஊதியம் 50 சதவிகிதம் அதிகம். அதிகாரிகளுக்கு 15 சதவிகிதம் அதிகம். 12,000 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, சுரங்க முதலீடுகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து வசதிகளும் வாய்ப்புகளும் பெற்று, வளம் பெற்றிருக்கும் மாவட்டம் என இந்தியாவில் எதுவும் இல்லைதான் – சில மாநகரங்களைத் தவிர. ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் குறைபட்டுக் கொள்ள ஏராளம் இங்கு உண்டு தான். இருப்பினும் மிகவும் பின்தங்கிய, முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட மக்கள் குழுமத்தின் பகுதிகள் இன்று பேசுபொருளாக்கப்பட்டுள்ளன. காரணம், நச்சலைட்டுகள் என அழைக்கப்படும் மாவோயிஸ்டுகள், இப்பகுதிகளில் ஓர் அரசியல் ஆற்றலாகத் தம்மை நிலைநிறுத்தி இருப்பதால் என, மதிப்பிட்டால் அது மிகையல்ல.

பீனகோண்டா இங்கு பேசுபொருளாக்கப்படும் நிலையில், நம் நினைவில் எழுகிறது தமிழகத்தின் குண்டுப்பட்டி எனும் மலைக் கிராமம். கொடைக்கானலிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள பூம்பாறையிலிருந்து இரண்டு மலை மடிப்புகள் அளவிலான 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது குண்டுப்பட்டி. 1960களில் லால்பகதூர் சாஸ்திரி – சிறீமா பண்டாரநாயக ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கை மலையகத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் – சாதியால் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் – குடியமர்த்தப்பட்ட பகுதிதான் இந்த குண்டுப்பட்டி. தங்கள் கடும் உடலுழைப்பினால் இம்மலைச் சரிவுகளை விளைநிலங்களாக்கிய இம்மக்கள், விளைபொருட்களை விற்பனைக்குக் கொண்டு செல்ல சாலை போக்குவரத்து வசதிகள் கேட்டு நெடுநாள் போராடினர். 1997இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலை தம் கோரிக்கையை முன்வைத்து புறக்கணித்தனர். தங்கள் வாக்கு வங்கியை இழந்ததால், ஆத்திரமுற்ற தி.மு.க. கட்சியின் குண்டர்களும் காவல் துறையும் இணைந்து, குண்டுப்பட்டி மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஒருவர் கொல்லப்பட, உடைமைகள் சூறையாடப்பட்டன. வாழ்க்கை உத்தரவாதம் இழந்து நின்ற மக்களைச் சில அரசியல் கட்சியினரும் சில தன்னார்வ அமைப்புகளும் தேடி வந்து ஆறுதல்படுத்தின. அந்த அக்கறை யின் பின்னே, அக்கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் அரசியல் – பொருளியல் பயன்கள் இருந்தன. மதுரையை அடித்தளமாகக் கொண் டிருக்கும் ஒரு தன்னார்வ மனித உரிமை நிறுவனம், அற்ப நிவாரணத் தொகையை அரசிடமிருந்து பெற்று, அம்மக்களிடம் வழங்கி விட்டு, அவர்களின் கோபாவேசத்தை குறுகத் தரித்தது. குண்டுப்பட்டி, கொடியங்குளம், மாஞ்சோலை என காவல் துறையின் கைரேகை பதிந்த இடங்களெல்லாம் பின்னா ளில் அரசியல் உள்ளீடற்று, பாதிப்பின் ரத்த சாட்சியங்களாக மட்டுமே நிலை பெற்றன.

ஆனால், தெலுங்கானா வேளாண்குடிகள் நடுவில் ஓர் அரசியல் ஆற்றலாக முகிழ்த்து, ஆந்திரா – ஒரிசா வனப் பகுதிகளில் வளர்ந்து, பீகாரின் வயல்வெளிகளில் சுரண்டப்பட்டுக் கொண்டிருந்த தலித் மக்களை அரவணைத்துக் கொண்டு, ஜார்கண்ட் – சட்டீஸ்கர் மலை முகடுகளில் பழங்குடி மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் நீடித்து வாழ்கிறது நக்சல்பாரி இயக்கம். கரீம் நகர், வாரங்கல், மங்காங்கிரி, லால்கர், பஸ்தார், தண்டகாரண்யம், கட்சிரோலி என பேசு பொருளாக்கப்பட்டிருக்கும் பெயர் களெல்லாம் பாதிப்பின் சாட்சியங்கள் அல்ல. மாறாக, அரசுப் படைகளுக்கு நெடுநாட்களாக அச்சம் ஊட்டிக் கொண்டிருக்கும் எதிர்ப்பின் அடையாளங்கள். தம்மைத் தற்காத்துக் கொள்ள ஆயுதங்களும் தேவை என்பதை, அரசியல் சிந்தனையாகவும் போராட்ட வழிமுறையாக வும் ஏற்றுக் கொண்டிருக்கும் தளப்பகுதிகள்.

இந்தியாவின் பிற பகுதிகளில் தலித் – பழங்குடி மக்களை நடத்துவது போல, சாதி வெறியர்களும் அரசுப் படைகளும் இப்பகுதிகளில் அவ்வளவு எளிதில் அணுகிவிட முடியாது. அப்படியேயாயினும், அதற்கான விளைவுகளை அவர்கள் கால தாமதமின்றி அனுபவிக்க நேர்கிறது. மக்களின் மீதான உண்மையான அக்கறையும், நீடித்த செயல்திட்டங்களும், வலுவான அரசியல் கட்டமைப்பும் இன்றி வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தலித் அமைப்புகள் யாவையும் போராடும் மக்களுடன் நிரந்தரமாகப் பயணிப்பவை அல்ல. நக்சல்பாரிகளோ மக்களுடனேயே வாழ்கின்றனர்.

துறைசார் நெருக்கடியையும் நடவடிக்கைகயையும் புறந்தள்ளி, மீண்டுமொரு முறை கட்சிரோலியின் உள்ளடர்ந்த அபுஜ்மார் வன கிராமங்களுக்குச் செல்லவும் நக்சலைட்டுகளைச் சந்திக்கவும் ஆவல் கொண்டிருப்பதாகக் கூறும் கன்பதே, "அநீதியை எதிர்ப்பதில் நீங்கள் உண்மையாகவும் உறுதியாகவும் இருந்தால், ஏன் துப்பாக்கியைத் தூக்க வேண்டும்?' என அவர்களிடம் கேட்க விரும்புவதாகக் கூறுகிறார். இதே கேள்வியை பீனகோண்டா கிராம மக்களிடம் கன்பதே எழுப்பியபோது, “நாங்கள் எங்களை அர்ப்பணிக்கும்போதுதான், எங்கள் மீதான அநீதிகளையும் நக்சலைட்டுகளால் துடைத்தெறிய முடியும்'' என உறுதிபடக் கூறியுள்ளனர் அம்மக்கள்.

அர்ப்பணிப்பு என்ற பதத்தின் பொருளை கோழைகள் அறியமாட்டார்கள். அது சக மனிதனுக்காக தன் சுக துக்கங்களைத் துறந்து, தன்னைச் சூழ்ந்திருக்கும் சமூக வாழ்க்கையின் பொறுப்புகளிலிருந்து விலகி நிற்காமல் இருப்பது. எதிரியிடம் அடிபணியாமல் தன்னை நிலைநிறுத்துவது. அடிப்படையில் அது சுயமரியாதையை வெளிப்படுத்துவது. போராட்ட உணர்வைத் தீர்மானகரமாக்குவது – அர்ப்பணிப்பு ஆற்றலே. ஆயுதங்கள் வெறும் கருவிகள் மட்டுமே. அவை போராளிகளின் தற்காப்பு உபகரணங்கள், அவ்வளவே. மேலும், அவற்றின் தேவையைத் தீர்மானிப்பது போராளிகளோ மக்களோ அல்ல. ஒடுக்கி, அழிக்க விழையும் எதிரிகளே. மக்களை விலைபேசும் தலைவர்கள் கோழைகள் மட்டுமல்லர், துரோகிகளும்கூட. ஆனால், மக்களோடு உரையாடவும் போராளிகளோடு விவாதிக்கவும் முன்வரும் கன்பதே போன்றவர்களோ எக்காலமும் பெருமதிப்புக்கு உரியவர்களே! 

– அடுத்த இதழிலும்

Pin It