நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு பதவி விலகிய பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார், தனது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஜித்தன் ராம் மஞ்சி அவர்களை முதல்வர் பதவியில் அமர்த்தினார்.

பீகார் ஆட்சி, இந்தியாவிலேயே தொழில்பொருளியல் வளர்ச்சியில் முதல் மாநிலமாக முன்னேறியிருப்பதை அண்மையில் வெளிவந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டின. பீகார் தலைநகர் பாட்னாவிலிருந்து 160 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பர்மேஸ்வரிஸ்தான் மாவட்டத்திலுள்ள கோயிலுக்கு முதல்வர் வழிபடச் சென்றார்.

அவர் வழிபட்டுவிட்டு திரும்பியவுடன் ‘சாமி’ தீட்டாகிவிட்டது என்று கூறி, பார்ப்பன புரோகிதர்கள் கோயிலையும் கோயில் உள்ள சிலைகளையும் ‘சுத்தம்’ செய்து தீட்டுக் கழித்துள்ளனர். இது குறித்து முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி கூறுகையில், “மக்கள் தான் என்னை அந்த கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து நான் கிளம்பிய பிறகு, ‘சிலைகள்’ சுத்தம் செய்யப் பட்டதாக எனக்குத் தகவல் கிடைத்தது. இந்தச் செயலைச் செய்தவர்களை நான் கண்டிக்க மாட் டேன். இது குறித்து புகார்அளிக்கப் போகிறேன்” என்று கூறியுள்ளார். ஒரு முதலமைச்சராக இருப்பவருக்கே இதுதான் நிலை என்ற கேவலம், பீகார் போன்ற மாநிலங்களில் தலைவிரித்தாடுகிறது.

இதே பீகாரில்தான் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பாபுஜெகஜீவன்ராம், சம்பூரணானந்தா என்ற சமஸ்கிருதப் பண்டிதர் சிலையை திறந்து வைத்த போது, சிலை தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி, பார்ப்பனர்கள் கங்கை நீரைக் கொண்டு வந்து, சிலையை கழுவி தூய்மைப்படுத்தினார்.

உ.பி.யில் தாழ்த்தப்பட்ட நீதிபதி ஒருவர், பதவி ஓய்வு பெற்றப் பிறகு, அவரது அலுவலகத்தில் பொறுப்பேற்க வந்த பார்ப்பன நீதிபதி, தலித் நீதிபதியின் அறையில் தீட்டுப் பிடித்துவிட்டதாகக் கருதி, தூய்மைச் சடங்குகளை செய்தார். திருவையாறு ‘தியாராயர்’ சங்கீத விழாவில் ‘சூத்திரர்’ தண்டபாணி தேசிகர் பாடியதால் மேடை தீட்டாகிவிட்டது என்று பார்ப்பனர்கள் தீட்டுக் கழித்த சம்பவம் ஒரு வரலாறாக பதிந்து நிற்கிறது. மகத் குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுடன் தண்ணீர் எடுக்கும் உரிமைப் போராட்டத்தை புரட்சியாளர் அம்பேத்கர் நடத்தியபோது, குளம் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி, பார்ப்பனர்கள் ‘பசு மாட்டுச் சாணம் மூத்திரத்தைக்’ கொட்டிக் குளத்தைச் சுத்தப்படுத்தி னார்கள். பார்ப்பனர்களைத் தவிர, வேறு சாதியார் அர்ச்சகர் ஆனால் சாமி சிலை தீட்டாகிவிடும் என்று பார்ப்பனர்கள் கூறுவதை இன்று வரை உச்சநீதி மன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சமூக இழிவை பார்ப்பன மேலாதிக்கத்தைக் கண்டிக்கவோ விவாதத்துக்குள்ளாக்கவோ எந்த புரட்சிகர அமைப்புகளோ சமூக மாற்றம் பேசும் இயக்கங் களோ ஊடகங்களோ முன்வரவில்லை. இந்த ‘அமைதி’க்குள்தான் பார்ப்பனியத்தின் வெற்றியே அடங்கிக் கிடக்கிறது.

மத அடையாளம்: உயர்நீதிமன்றம் தந்த தீர்ப்பு

அரசு ஆவணங்களிலோ, விண்ணப்பங்களிலோ எவர் ஒருவரும் தனது மதத்தை அறிவிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை என்று பம்பாய் உயர்நீதி மன்றம் வரவேற்கத்தக்க ஒரு தீர்ப்பை செப்.24, 2014 அன்று வழங்கியிருக்கிறது. மதத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அந்தத் தீர்ப்பு கூறுகிறது. டாக்டர் ரஞ்சித் மொகைத், கிஷோர் நசரே மற்றும் சுபாஷ் ரானாவேர் ஆகிய மூவரும் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இது. தங்களுக்கு ஏசுநாதர் மீது நம்பிக்கை உண்டு. அதற்காக கிறிஸ்தவ மதத்தையோ, வேறு மதத்தையோ நம்பவில்லை. கடவுளை மட்டுமே நம்புகிறோம். மதத்தை நம்பாதவர்கள் என்று கூறி, தங்களை ‘மதமற்றவர்கள்’ என்று அரசிதழில் பதிவு செய்ய முன் வந்தார்கள். மகராஷ்டிரா அரசு இதை ஏற்க மறுத்தது. அதைத் தொடர்ந்து பம்பாய் உயர்நீதி மன்றத்தில் பொதுநலன் வழக்கை தொடர்ந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். தீர்ப்பில் நீதிபதிகள் வெளியிட்ட கருத்துகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

“எனக்கு எந்த மதமும் இல்லை; எந்த மதத்தையும் பின்பற்றவோ, பரப்பவோ மாட்டேன் என்று அறிவித்துக் கொள்ளும் உரிமை ஒவ்வொரு தனி மனிதருக்கும் உண்டு. இந்தியா, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு நாடு என்பதால் அரசுக்கு மதம் கிடையாது  எனவே, எந்த அரசு அதிகாரமுள்ள அமைப்பும் அரசியல் சட்டம் 25ஆவது பிரிவு வழங்கியுள்ள, அடிப்படை உரிமையில் குறுக்கிட முடியாது.

25ஆவது பிரிவு மனசாட்சி சுதந்திரத்தையும், விரும்பும் மதத்தைப் பின்பற்றிப் பரப்பும் உரிமையையும் வழங்கியிருக் கிறது. மதத்தை ஏற்பதற்கும் ஏற்க மறுப்பதற்கும் இந்த சட்டப் பிரிவு உரிமை அளித்துள்ளது. ஒருவர் மதத்தை நம்பாதவராக இருக்கலாம். ஒரு மதத்தை நம்பி ஏற்றுக் கொண்டிருந்தவர், பிறகு அதில் நம்பிக்கையில்லை என்றால், தனக்கு எந்த மதமும் கிடையாது என்று அறிவிக்கலாம். ஒரு குடிமகனோ அல்லது தனி நபரோ ஏதேனும் ஒரு மதத்தில் இருந்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடிய எந்த சட்டமும் இல்லை.

சட்டத்தின் 25ஆவது பிரிவு வழங்கியுள்ள ‘மனசாட்சி சுதந்திரம்’ எந்த மதத்திலும் நம்பிக்கை கிடையாது என்பதை வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கிய தாகும். ஒரு குடிமகனின் பெற்றோர்கள், எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றியிருந்தாலும் அவர்களுக்குப் பிறந்தவர்கள் மனசாட்சி சுதந்திரப்படி மதமற்றவர்கள் என்று அறிவிக்கவும், மதத்தைப் பின்பற்றாமல் இருப்பதற்கும் உரிமை உண்டு” என்று தீர்ப்பில் கூறிய நீதிபதிகள், மத அடையாளத்தை அரசு கேட்டால், தனக்கு மத அடையாளம் கிடையாது என்று கூறலாம் என்று திட்டவட்டமாக கூறி யுள்ளனர். இந்தியா இந்துக்களின் தேசம்; இந்துக் கலாச்சாரமே இந்தியாவின் தேசிய கலாச்சாரம் என்று கூறிக் கொண்டு அரசு எந்திரத்தை இந்துமய மாக்கும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு பம்பாய் உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சரியான பதிலடியாகும்.

சத்தீஸ்கரில் - இப்படி நடக்கிறது

சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தார் மண்டலத்தில் இந்து மதப் பிரச்சாரம் மட்டுமே நடத்த முடியும்.

இந்து மதத்தைத் தவிர கிறிஸ்தவம் உள்பட ஏனைய மதப் பிரச்சாரங்கள் செய்வதற்கோ, கிறிஸ்தவ நிறுவனங்கள் செயல்படுவதற்கோ தடை செய்து, 50 கிராம பஞ்சாயத்துகள் ஆணைகள் பிறப்பித்துள்ளன.

சட்டீஸ்கர் ‘பஞ்சாயத்து ஆட்சி’ சட்டத்தின் 129(ஜி) பிரிவின் கீழ் இந்த பஞ்சாயத்துகள் இந்த ஆணைகளை பிறப்பித்துள்ளன. அரசியல் சட்டம் அனைத்து மதத்துக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரான இந்த உத்தரவு பிறப்பிக்கக் காரணம், ‘விசுவ இந்து பரிஷத்’ அமைப்புதான்.

இதை எதிர்த்து கிறிஸ்தவ மத அமைப்புகள் பிலாஸ்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. வழக்கை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதி மன்றம் சத்தீஸ்கர் அரசுக்கு விளக்கம் கேட்டு தாக்கீது பிறப்பித்துள்ளது. கிறிஸ்தவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் என்.எல். சோனி, “இந்திய நாட்டுக்குள் இந்தியர்கள் நுழைவதற்கே எப்படி தடை போட முடியும்?” என்ற அடிப்படை யில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பஸ்தார் மாவட்ட விசுவ இந்து பரிஷத் தலைவர் சுரேஷ் யாதவ் கூறுகையில், “கிராம பஞ்சாயத்து எடுத்துள்ள முடிவு இது. இந்த முடிவுக்குக் கட்டுப் பட்டே தீரவேண்டும்” என்று மதவெறியோடு கூறி யுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் 10 பஞ்சாயத்துகள் இதே போன்று ஆணைகள் பிறப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மோடி ஆட்சி வந்த பிறகு இந்து மத வெறி அமைப்புகள் நாட்டை இந்து மயமாக்க அதிகாரத்தை முறை கேடாகப் பயன்படுத்துவதில் தீவிரம் காட்டி செயல்படுகின்றன.

பக்தியின் பெயரால் பெற்ற மகளுக்கு ‘சமாதி’

‘கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி’ என்று பெரியாரியல்வாதிகள் கூறுவதால் மனம் புண்படுகிறது என்று புலம்பும் போலி பக்தர்களுக்கு கீழ்க்கண்ட செய்தியை சமர்ப்பிக்கிறோம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பரத்பூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கும்ஹர் எனும் கிராமம். இந்த கிராமத்தில் தங்களது இரண்டரை வயது மகளை குழி தோண்டி உயிரோடு புதைத்து, சமாதி எழுப்பியுள்ளனர், அந்தப் பெண்ணின் பெற்றோர். அந்தப் பெண் ‘கடவுள்’ ஆகவிட்டதாகக் கூறினாராம். கிராமமே கூடி, இந்த காட்டு மிராண்டித்தனத்தைக் கண்டிக்காமல், சமாதிக்கு பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஊடகங்களும் ‘கடவுள் சமாதி’யைப் படம் பிடிக்க திரண்டு விட்டன. அந்தப் பெண்ணின் பெயர் குஷ்பூ.

சமாதியைத் தோண்டி எடுத்து சவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் அந்த சிறுமி கடுமையான வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. செப். 18, 2014இல் இந்த சம்பவம் நடந்தது. சிறுமியின் தாயார் சிறீபதி, தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய மகள் விருப்பப்படி ‘சமாதி’க்குள் புதைத்ததாகவும், அவள் ‘கடவுள்’ ஆகிவிட்டதாக தங்களிடம் கூறியதாகவும் தெரிவித்தார். தந்தை வினோத், இதே போன்ற கதையை முதலில் கூறினாலும், பிறகு, தனது மகளுக்கு நோய் இருந்ததாலும், ‘மருத்துவர்கள், மாந்திரீகர்கள்’ என்று பலரையும் அணுகிய பிறகும் நோய் தீரவில்லை என்பதால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறினார்.

இவர்கள் ‘நாட்’ என்ற பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர்கள். குழந்தைகளை உயிரோடு ‘சமாதி’க்குள் அனுப்பும் வழக்கம் இந்தப் பகுதியில் பரவலாக இருந்து வருகிறதாம்.

பார்ப்பன ‘எச்சில் இலை’ உருளுவதற்கு தடை

பார்ப்பனப் புரோகிதர்கள் சாப்பிட்டு வீசிய எச்சில் இலைகள்மீது உருண்டு புரளும் ‘அங்கப் பிரதட்சம்’ கருநாடக மாநிலத்தில் ஒருகோயிலில் பின்பற்றப்பட்டு வந்தது. கருநாடக மாநில அரசு தோல் வியாதியைப் பரப்பும் இந்த அநாகரீக பழக்கத்துக்கு தடை விதித்தது. ‘அங்கப் பிரதட்சம்’ செய்ய விரும்பும் பக்தர்கள், கோயில் பிரசாதத்தில் வேண்டுமானால் செய்து கொள்ளட்டும்; பார்ப் பனர்களின் எச்சில் இலை மீது உருள வேண்டாம் என்று கருநாடக அரசு விதித்த தடையை எதிர்த்து பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள்.

உச்சநீதிமன்றம், கருநாடக அரசு ஆணை பிறப்பித்தது சரியே என்று தீர்ப்பளித்து விட்டது.

Pin It