‘முன்னோடி-பின்னோடி’ வாதங்களுக்கு மறுப்பு (12)

தமிழறிஞர்கள் முன்னெடுத்தப் போராட்டத்தை பெரியார் தனதாக்கிக் கொண்டார் என்ற அடிப்படை யில்லாத வாதங்களை ஏராளமான வரலாற்றுத் தகவல்களுடன் மறுத்து தொடராக வெளிவந்த கட்டுரையின் நிறைவுப் பகுதி இது.

தொடர்ச்சியாக தமிழ்நாடு தனிநாடு, வடநாடு வெளிநாடு என்ற சிந்தனையையும், இந்தியா ஒரே நாடல்ல; பலநாடுகளின் கூட்டமைப்பே என்ற கருத்தையும், வடநாட்டார் பிடியில் இருந்து தமிழ்நாட்டைப் பிரித்து தனிநாடாக அமைத்துக் கொண்டால் ஒழிய, பார்ப்பன, பனியா முதலாளிகள் சுரண்டலிலிருந்து நாம் மீளவே முடியாது என்ற கருத்தையும் 1937இலேயே பெரியார் கொண்டிருந்தார் என்பதை எவர் ஒருவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

ஆனாலும், பெரியாருக்குத் தமிழ் மக்களிடையே உள்ள புகழ், பெருமை ஆகியவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், அல்லது தாம் விரும்பும் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சென்று அவற்றை ஏற்க வைக்க முடியாதவர்கள், பெரியார் பெற்றிருந்த நம்பிக்கையை மக்களிடம் பெற முடியாதவர்கள், “ஆடத் தெரியாதவள் கூடம் கோணல்” என்று கூறியதைப் போல அன்று முதல் இன்று வரை ஏதேனும் வக்கணை பேசியே வந்திருக்கிறார்கள்.

பெரியார், ‘திராவிட நாடு’ என்ற கோரிக்கையோடு இயங்கிய காலம் 1939 முதல் 1956 வரையான 17 ஆண்டுகளே. 1956 முதல் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தை முன்வைத்தே பேசினார், இயங்கினார். அண்ணா முன்வைத்த “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற கோரிக்கை 1963இல் கைவிடப் பட்டு விட்டது. 

அண்ணா கோரியதும் கூட, திராவிட நாடு என்ற ஒற்றை நாட்டை அல்ல;  “மொழிவழி பிரிந்து, இனவழி கூடக் கூடிய, பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய திராவிட- சமதர்ம - குடியரசுக் கூட்டாட்சியே” என்றே அண்ணா தெளிவாக கூறி வந்திருக்கிறார்.  29 மாநிலங்கள் கொண்ட இந்தியாவில் இருந்து பிரிந்து போகும் சுய நிர்ணய உரிமை கோருவோருக்கு, நான்கு மாநிலங்கள் அல்லது அரசுகள் கொண்ட திராவிட நாடு குறித்து ஏன் அவ்வளவு கோபம் என்பது ஒரு புரியாத புதிர்தான்.

எவ்வாறாயினும், கடந்த 50 ஆண்டுகளாக ‘திராவிட நாடு’ என்ற பேச்சே தமிழ்நாட்டில் இல்லை. 1939 முதல் 1956 வரை 17 ஆண்டுகள் மட்டுமே பெரியாரும்,  1939 முதல் 1963 வரை 24 ஆண்டு காலமே அண்ணாவும்  திராவிட நாட்டுக் கொள்கையைக் கொண்டிருந்தார்கள். அதிலும் பெரியார், 1956 இலிருந்து  1973இல் தனது இறுதிநாள் வரையிலும் தனித் தமிழ்நாட்டையே பேசி வந்திருக்கிறார். அண்ணா மறைந்து 45 ஆண்டுகளும், பெரியார் மறைந்து 41 ஆண்டுகளும் கடந்துவிட்டன . 

அவர்கள் 17, 24 ஆண்டுகள் கொண்டிருந்த கொள்கைகளை, அவர்கள் மறைந்து 41, 45 ஆண்டுகள் கழிந்த பின்னரும், தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்கத் தடையாக உள்ளன என்று பிதற்றித் திரிவதை, ‘ஆடத் தெரியாதவள்- கூடம் கோணல்’ என்பதைத் தவிர வேறு எப்படித்தான் விளக்குவது ?

அப்படிப்பட்ட ஆட்டக்காரக்களில் சிலர், எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி சுயமரியாதை இயக்கத்தை உண்மையாகத் தோற்றுவித்தவர் எஸ்.இராமநாதன்தான் என்றும், பெரியாரின் எழுத்துகள் எல்லாம் குத்தூசி குருசாமியின் எழுத்துகளே என்றும் இப்போதும் பேசிக் கொண் டிருக்கிறார்கள்.

1925 நவம்பர் இறுதியில் தான் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். ஆனால் 1925, மே மாத தொடக்கத்திலேயே ‘குடிஅரசு’ ஏட்டைத் தொடங்கி இருந்தார்.

அந்த சமயம், ஈரோட்டின் முக்கிய சந்திப்பில் இருந்தது ஒரு விநாயகர் கோவில். அதற்கு அருகே இருந்தது ஓர் அசைவ உணவு விடுதி. அதை அப்புறப் படுத்த வேண்டும் என்று சிலரின் அழுத்தத்தால், நகராட்சியும் வற்புறுத்தியது. அதற்கிணங்க கடையை சிறிது தள்ளி 50 அடிதூரத்துக்கு அப்பால் வைத்துக் கொண்டனர்.

அது குறித்து ‘குடிஅரசு’ தொடங்கப்பட்ட இரண்டாம் மாதத்திலேயே, 5.7.1925 இதழில் பெரியார் எழுதுகிறார். “‘சிவில்’ விநாயகருக்கு ‘மிலிடேரி’ உணவு பக்கத்திலிருப்பது இந்துக்களுக்குப் பிடிக்க வில்லை. இந்துக்களின் உணர்ச்சியை மகம்மதிய நண்பர்கள் மதித்து அவைகளை எடுத்துவிட வேண்டும் என்று கூறியதற்கு என் வந்தனம்”  என்று பாராட்டுகிறார். அந்த அசைவக் கடைகள்  50 அடிக்கு அப்பால் தள்ளி வைக்கப்பட்டு விட்டது என்றதும் கூச்சலிட்ட இந்துக்களும் அமைதி ஆனார்கள். வேறு உள்நோக்கங்களோடு செய்யப்பட்டதே இது என்பதை அறிந்து அதை எப்படி பதிவிடுகிறார் பாருங்கள். 

“ ‘விநாயகர்’ கூச்சல் வெறும் வார்த்தைகள் என்பது நிச்சயம். ‘மிலிடேரி’ உணவின் வாசனை 50 அடி தூரத்திலுள்ள விநாயகருக்கு எட்டாமல் போனால் அவருக்கு இந்துக்கள் “கௌரவமான கல்லறை அடக்கம்” செய்ய வேண்டியது தானே சரியாக இருக்க முடியும்” என்று, ஒரே நேரத்தில் இந்து மதவாதிகளின் சுயநல மத வெளிப்பாட்டையும், கடவுள்களின் ‘சர்வசக்தி’ பித்தலாட்டத்தையும்  எள்ளி நகையாடுகிறார் பெரியார்.

‘சுயராஜ்ய கட்சி’ என்ற பெயரால் காங்கிரசில் இருந்த பார்ப்பனர்கள் சத்தியமூர்த்தி தலைமையில் தேர்தலில் ஈடுபடும் ஆசையோடு ஒரு கட்சியை இங்கு தொடங்கி இருந்தனர். அந்த சுயராஜ்ய கட்சியைப் பற்றி 25.10.1925 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழின் தலையங்கத்தில் இவ்வாறு எழுதுகிறார், பெரியார் (அப்போது பெரியார் காங்கிரசில் தான் இருந்தார்) “சுயராஜ்ய கட்சி என்ற பேர் மாத்திரம் இருக்கிறதே அல்லாமல் சுயராஜ்ய கட்சிக்கென்று ஏற்பட்டிருக்கும் திட்டமென்ன? ராஜீயத் (அரசியல்) திட்டம் ஏதாவது இருக்கிறதா? பொருளாதரத் திட்டம் ஏதாவது இருக்கிறதா? சமூக முன்னேற்றத் திட்டம் ஏதாவது இருக்கிறதா? என ஊன்றிப் பார்த்தால், உத்தி யோகத்தை எல்லாம் தாங்களே கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் ராஜீயத் (அரசியல்) திட்டமாகவும், அதன் சம்பளமெல்லாம் தங்களுக்கே வர வேண்டும் என்பதைத் தான் பொருளாதாரத் திட்டமாகவும், இந்த உத்தியோகமும், சம்பளமும் பிராமணர்களாகிய தங்கள் ஜாதியாருக்கே வந்து விட வேண்டும் என்பது தான் சமூகத் திட்டமாகவும் வைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது” என்று எள்ளல் நடையில் எழுதிச் செல்கிறார்.

ஆனால், பெரியாரின் எள்ளல் நடை எழுத்துக் களெல்லாம் குத்தூசி குருசாமி எழுதியது தான், பெரியார் அவற்றைத் தன் பெயரில் வெளியிட்டுக் கொண்டார் என்று கூறித் திரிவோர் சிலர் இன்றும் இருக்கிறார்கள்.  அதல்லாமல் ‘சித்திரபுத்திரன்’ என்ற பெயரில் எழுதபட்டுள்ளவை அனைத்தும் குத்தூசி குருசாமி எழுதியது தான் என்று கூறுவோரும் உண்டு. 

  1925 முதலாக எழுதப்பட்டுள்ள ‘சித்திரப்புத்திரன்’ கட்டுரைகளை எல்லாம் யார் எழுதியிருப்பார்கள்? 1927 இறுதியில் பெரியாரிடம் வந்து சேர்ந்த குத்தூசி குருசாமி தான் என்று எப்படி இவர்களால் கூசாமல் புளுக முடிகிறது? ஏன் பெரியாருக்கு இயக்கத்தை நடத்த ஆலோசனைகள் கூறி வழி நடத்தியவரே குத்தூசிதான் என்போரும்கூட இருக்கிறார்கள்.

ஆனால் பெரியாரை விட்டு வெளியேறிய குத்தூசி குருசாமி ஏன் தொடர்ந்து ஓர் இயக்கத்தை நடத்த முடியவில்லை? பெரியாரிடம் இருந்தவரை ‘தனித் தமிழ்நாடு’ பேசியவர், வெளியேறிய பின்  ‘அகில இந்தியா’ பேசியதற்கு என்ன காரணம்? பதில் கூறுவார் உண்டோ?

சரி, அடுத்து எஸ்.இராமநாதன் தான் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கக் காரணமாக இருந்தவரும் வளர்த்தவருமா? அப்படிப்பட்ட கொள்கைக்காரர் ஏன் இராஜாஜியுடன் போய்ச் சேர்ந்தார்? சேர்ந்து அவர் அமைச்சரவையில் எப்படி அமைச்சரும் ஆனார்? அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் கட்டாய இந்திக் கொள்கையை இராஜாஜி கொண்டு வந்த போதுகூட, அதை ஜீவாவைப் போலவே ஆதரித்துக் கொண்டு, எப்படி அமைச்சராகத் தொடர முடிந்தது? என்பதற்குப் பதில் கூறுவார் எவரும் இல்லை. அந்த எஸ்.இராமநாதன் எவ்வாறு பணியாற்றினார் என்பதற்கு ‘ குடிஅரசு’லேயே விடையும் இருக்கிறது.

2.5.1925 அன்று தொடங்கப்பட்ட ‘குடிஅரசு’ ஏட்டின் முதலாமாண்டு நிறைவு நாளை ஒட்டி 2.5.1926 அன்று ‘நமது பத்திரிக்கை’ என்ற தலைப்பிட்டு பெரியார் ஒரு தலையங்கம் எழுதியுள்ளார். அதில், “குடிஅரசு தோன்றிய பிறகு அது ராஜீய (அரசியல்) உலகத்திலும் சமூக உலகத்திலும் பெரிய மாறுதல் ஏற்படுத்தியிருக்கிறது என்று பலர் நமக்கு எழுதி யிருப்பதை நாமும் உபயோகித்துக் கொள்கிறோம்.

‘குடிஅரசு’ ஆசிரியருக்கு உண்மை நண்பர்களாய் இருந்து வந்த ஸ்ரீமான்களான டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.கலியாணசுந்தர முதலியார் முதலியவர் களின் கூட்டுறவு ‘குடிஅரசு’க்குக் கிடைத்திருக்குமே  யானால், அல்லது குறைந்தபட்சம் அவர்களுடைய எதிர்ப்பாவது இல்லாது இருந்திருக்குமானால் இன்னும் பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கும்.

என்ன செய்வது? உள்ளதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டியது தான்” என்று நிலவிய சூழலை வருத்தத்துடன் குறிப்பிடும் பெரியார், “திரு.வி.க. காங்கிரஸின் பேரால் பிராமணர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க ஊரூராய், கிராமம் கிராமமாய், தெருத் தெருவாய்த் திரிந்து, தனது தொண்டை கிழியும்வரை (கிழிந்தாலும் கூட) பிரச்சாரம் செய்யப் போவதாய் சொல்லியிருக்கிறார்” என்று குறிப்பிட் டுள்ளார். அதன்படி, திரு.வி.க., வரதராஜுலு நாயுடு ஆகியோர் தமது கட்சியைப் பரப்ப, எவ்வளவு கடுமையாக, வீச்சாக உழைக்கிறார்கள் என்பது குறித்து தொண்டை கிழிந்தாலும் கூட என்பதை அடைப்புக்குறி போட்டு அழுத்தமாகக் குறிப்பிடு கிறார் பெரியார். அதே வேளை சுயமரியாதை இயக்கத்தில் தனக்கு ஆதரவாக உள்ள நண்பர்களைப் பற்றியும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

“ஸ்ரீமான்கள் சர்க்கரைச் செட்டியார், சுரேந்திர நாத் ஆர்யா, எஸ்.இராமநாதன், தண்டபாணிப் பிள்ளை போன்றவர்கள் மனதில் மாத்திரம் வேகமாக இருக்கிறார்களே ஒழிய, வெளியில் வந்து அவர்களைப் போல் வேலை செய்ய கவலையில்லாதவர்களாய் இருக்கிறார்கள். இந்த நிலைமையில், ‘குடிஅரசு’க்கு இருக்கும் பொறுப்பையும் கஷ்டத்தையும் நினைத்துப் பாருங்கள்” என்று கவலையோடு தொடர்கிறார் பெரியார்.

தாங்கள் ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதுமா? அதற்காக மனதளவில் ஆதங்கப் பட்டால், ஆவல்பட்டால் மட்டும் போதுமா? களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டாமா? என்பதே பெரியாரின் கேள்வி; பணியாற்ற வேண்டும் என்பதே அவரின் எதிர்பார்ப்பு; விழைவு; விருப்பம். அதே கதை தான் தோழர் மணியரசன் போற்றிப் புகழும் தமிழறிஞர்கள் இந்தி எதிர்ப்புப் போரில் நடந்து கொண்ட விதமும்.

கட்டாய இந்திக் கொள்கையை 1938 ஜூன் மாதம் தொடங்கும் கல்வி ஆண்டில் இருந்து, அன்றைய சென்னை மாகாணத்தில் உள் அடங்கியிருந்த தமிழகத்தில் 60; ஆந்திரத்தில் 54; கர்நாடகத்தில் 4; மலையாளத்தில் 7 என 125 உயர்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை இந்தி கட்டாயப் பாடமாக இருக்கும் என்ற அரசாணை 21.4.1938-இல் பிறப்பிக்கப்பட்டது. சில நாட்களில் அவ்வாணை குறித்த செய்திகள் அனைவருக்கும் போய்ச் சேர்ந்தது.

உடனடியாக பள்ளிகள் திறந்தவுடன் பள்ளி களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள், அமைச்சர்கள் வீடுகளுக்கு முன்னால் மறியல் என பல்வகை இந்தி எதிர்ப்பு செயல்திட்டங்கள் தீட்டப்பட்டன. பெரியாரும் தொடர்ச்சியாக 8.5.1938; 15.5.1938; 22.5.1938; 29.5.1938 ஆகிய நாளிட்ட ‘குடிஅரசு’ இதழ்களில் ‘இந்தி வந்துவிட்டது. இனி என்ன? ஒரு கை பார்க்க வேண்டியது தான்!’ ‘நெருக்கடி என்றுமில்லா நெருக்கடி!’ ‘தொண்டர்களே! சென்னை செல்க!’ ‘போர் மூண்டுவிட்டது. தமிழர் ஒன்று சேர்க!’ என்ற தலைப்புகளிட்டு தலையங்கங்களை எழுதி அனைவரும் கட்சி, மதம், ஜாதி வேற்றுமைகளையும் கடந்து இந்தி எதிர்ப்புப் போரில் குதித்து, வீச்சாக செயலாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

அப்படி  ‘இந்தி வந்துவிட்டது. இனி என்ன? ஒரு கை பார்க்க வேண்டியது தான்!’ என்ற தலைப்பிட்டு எழுதப்பட்ட முதல் வார தலையங்கத்தில் (8.5.1938) ‘மடாதிபதிகளுக்கு மன்னிப்பு’ என உள்தலைப்பிட்டு “தமிழ் மடாதிபதிகள் என்பவர்களே, நீங்கள் இது வரை நடந்து கொண்டதையும் மறந்து விடுகிறோம்”, …“உங்களிடம் பக்தி விசுவாசம் காட்டுபவர்களை எங்களிடம் விரட்டி விடுங்கள்” என்று வேண்டுகோள் வைக்கிறார்.

பொதுமக்களுக்கு மாபெரும் விண்ணப்பம் என்ற உள்தலைப்பில் “உங்கள் சௌகரியங்களுக்கு அடங்கின சகல பரிசுத்தமான ஆதரவுகளையும் அளியுங்கள். உங்களது வாலிப இளைஞர்களை போருக்குக் கச்சை கட்டி விரட்டி அடியுங்கள்” என வேண்டுகிறார்.

செல்வர்களுக்கு ஒரு வார்த்தை என குறிப்பிட்டு “உங்கள் பழைய நடத்தைகளை மறந்து விடுகிறோம்” என்று தொடங்கி, பழைய சுரண்டல் குற்றங்களுக்குப் பரிகாரம் என்ன தெரியுமா? “நடந்தது நடந்து விட்டது அதை பரிகரிக்க, உங்களால் செய்யக் கூடியது, நீங்கள் மானத்திலும் உயிரிலும் பெரிதாக மதிக்கும் உங்கள் செல்வத்தை இக்கருமத்திற்கு உதவி பெரிய வீரராகுங்கள்” என வலியுறுத்துகிறார்.

இளைஞர்களுக்கு வேண்டுகோள் என விளித்து, பல செய்திகளைக் கூறி  “அடிபடவும், இராப்பட்டினி பகல் பட்டினி கிடக்கவும், து(தொ)லை வழி நடக்க வும் தயார் செய்து கொள்ளுங்கள். போர்முனை சிப்பாய் போல் ஆக்கினைக்கு (கட்டளைக்கு) அடி பணியவும் தயார் செய்து கொள்ளுங்கள்” என்று முடிக்கிறார்.

பெரியோர்களுக்கு விண்ணப்பம் என்ற மற்றொரு உள்தலைப்பில் “பெரியோர்களே! முன் மாதிரி காட்ட வாருங்கள்! உங்களுடைய உள்ளங்களுக்கு புதிய அங்கியை மாட்டிக் கொள்ளுங்கள் - உங்கள் மார்பைப் பார்க்காதீர்கள், அடிச்சுவட்டைப் பாருங்கள். வீர இளைஞர்களுக்கு நீங்கள் வழிகாட்டு கிறவர்கள் என்பதை ஒவ்வொரு அடி வைக்கும் போதும் ஞாபகத்தில் வையுங்கள்” என்று முடிக்கிறார்.

அத்தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ள சில சொற்களைத் தான் அனைவர் கவனத்துக்கும் முன்வைக்க விரும்புகிறோம். அது தான் நாம் சுட்டிக் காட்ட விரும்பும் பகுதியும் கூட      

“தோழர்கள் எஸ்.எஸ். பாரதியார் (சோமச்சுந்தர பாரதியார்), உமாமகேசுவரம் பிள்ளை, கி.ஆ.பெ.விசுவ நாதம், வள்ளல் சிவஞான தேசிகர் போன்றவர்கள் கீழிறங்கி வந்து வினைஞர்களாகி மற்ற வாலிபர் களுக்கு வழிகாட்டிகளாக செல்ல வேண்டும்” என்பதே அது.

இச்சொற்றொடர் நமக்குக் கூறும் செய்தி தான் என்ன? மேலே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள எவர் ஒருவரும் இது நாள் வரையிலும் கீழிறங்கி வரவு மில்லை; கருத்தாளர்களாக இருக்கிறார்களே அன்றி வினைஞர்கள் (செயற்படுவோர்) ஆகவுமில்லை என்பதுதானே.

எல்லோருடைய ஒத்துழைப்பும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தேவை என்று கருதிய பெரியார்,  இது எப்போதோ ஒரு சமயம் எழுதப்பட்டதல்ல; இந்தி எதிர்ப்புப் போர் தொடங்க வேண்டியிருந்த அதி உச்ச நிலையில் எழுதப்பட்டது. எங்கோ தனியிடத் தில் இரகசியமாய்க் கூறப்பட்டதல்ல; அப்போது தமிழ்நாட்டின் முன்னணி வார ஏடாகவும், இந்தி எதிர்ப்பு செய்திகளை, போராட்டங்களை, திட்டங் களை அறிய தமிழ்நாடு  முழுதும் விரிவாக வாசிக்கப் பட்ட ‘குடிஅரசு’ ஏட்டில், கட்டாய இந்திப் பாட அரசாணை பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் வெளிவந்த முதல் இதழில் தலையங்கமாக எழுதப்பட்ட வரிகளே இவை.

இவ்வரிகள் இந்தி எதிர்ப்புப் போரை தமிழறிஞர் கள் நடத்தினார்களா? பெரியார் நடத்தினாரா? என்பதைத் தெளிவாக நமக்கு விளக்கும்.

மேலும், இத்தனைக்குப் பின்னரும், அம்மாதக் கடைசியில், 28.5.1938 அன்று திருச்சியில் கூடி நிறுவப்பட்ட தமிழ் மாநில இந்தி எதிர்ப்பு வாரியத் துக்கு  மேற்குறிப்பிட்ட, விமர்சிக்கப்பட்ட சோமசுந்தர பாரதியாரைத் தலைவராகவும், கி.ஆ.பெ. விசுவநாதத்தைச் செய லாளராகவும் அமர்த்தி விட்டு, மேலே குறிப்பிட்ட உமா மகேசுவரம் பிள்ளை,  ஊ. பு. அ. சவுந்தர பாண்டியன், கே.எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோ ரோடு தானும் ஒரு உறுப்பினராக இருந்துதான் பெரியார் செயல்பட்டுள்ளார். “ பதவி அல்ல அவரது நாட்டம்; பணி நடைபெற வேண்டும் என்பது மட்டுமே அவரது நாட்டம்” என்பதை எவர் ஒருவராலும் எளிதில் உணர முடியும்.

அதுபோலவே, தொடர்ந்து 42 நாட்கள் நடைபெற்ற திருச்சி-சென்னை வழிநடைப் பிரச்சாரப் படையில் கலந்து கொண்டோர் பட்டியலும், போராட்டத்தில் சிறை சென்றோர் பட்டியலும் இந்தி எதிர்ப்புப் போரை நடத்தியது பெரியாரும், அவரது சுயமரியாதை இயக்கமுமே என்பதைத் தெளிவாக உணர்த்தும்.

ஆக, ஆந்திர மாநிலம் என தெலுங்கர்கள் தங்களுக்கான தனி மாநிலம் கோரி வைத்த கோரிக்கைகளைப் போல தமிழர்களுக்கு என்றும் தனி மாநிலம் அமைய வேண்டும் என்ற தீர்மானம் மட்டுமே தமிழறிஞர் சோமசுந்தர பாரதியாரால் 1937-இல் சில நிகழ்ச்சிகளில் முன் மொழியப்பட்டது என்பது உண்மை தான்.

அதுவும்கூட பெரியார் அந்நிகழ்வுகளுக்கு முன்னதாகவே ஈரோடு கொல்லம்பாளையம் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் “ எப்பாடுபட்டாவது நம் நாட்டை வடநாட்டு சம்பந்தத்திலிருந்து பிரித்துக் கொண்டால் ஒழிய நமக்கு விடுதலையோ, மானமோ ஏற்படப் போவதில்லை”, என்று பேசிய பின்னர் தான். எப்படி இருப்பினும் பெரியார் விரும்பியது வடவர் ஆதிக்கமற்ற சுதந்திர தமிழ்நாட்டை; சோமசுந்தர பாரதியார் முன்மொழிந்தது சென்னை மாகாணத்தி லுள்ள தமிழ்ப் பகுதிகளைக் கொண்ட தனி தமிழ் மாநிலத்தைத் தான்.

எனவே நாவலர் நெடுஞ்செழியன் நினைவுப் பிசகாக, ஒரு இடத்தில் 1938 மே மாதம் கடற்கரைக் கூட்டம் என தவறுதலாகக் கூறியதை வைத்துக் கொண்டு தோழர் மணியரசன் பேசியுள்ளார். ஆனால், அதே  நெடுஞ்செழியன் எழுதிய பிற நூல்களில் பெரியார்தான் முதன்முதலாக தனித் தமிழ்நாடு பற்றி பேசியவர் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளதையும் கட்டுரையின் பிற இடங்களில் எடுத்துக் காட்டியிருந்தோம்.

ஆக, புரோகித மறுப்புத் திருமண முறையானா லும், இந்தி எதிர்ப்புப் போர் ஆனாலும், தனித் தமிழ்நாடு கோரிக்கை ஆனாலும் தமிழறிஞர்கள் முன்னெடுத்ததைப் பெரியார் தொடர்ந்தார்; வீச்சாக எடுத்துச் சென்றார்; மக்கள் மன்றத்துக்குக் கொண்டு சென்றார் என்பவை அனைத்தும் ஆதார மற்றவைகளே.

ஆனாலும், எந்த ஒரு மக்கள் போராட்டமானா லும் அது திடீரென உதித்து விடாது. அதற்கு முன்னதாக நிலவி வந்த புறச்சூழல் சாதகமாக அமையும் போதே வெடித்தெழும் என்பதை நாம் மறுக்கவில்லை. பெரியாருக்கு முன் னதாகவே இவையொத்த சிந்தனைகள் ஏதேனும் வடிவில் நிலவியிருக்கலாம்; அல்லது பேசப்பட்டிருக்க லாம். ஆனால், தோழர் மணியரசன் கூறுவதைப் போல் அது தமிழறிஞர்களால் அன்று.

நாம் இவற்றை எழுத வேண்டி வந்ததன் காரணம் கூட, 19.4.2014 அன்று தஞ்சையில் நடந்தேறிய அய்ந்தாவது உலகத் தமிழ்ப் பொது மாநாட்டில் தோழர் மணியரசன் ஆற்றிய உரை மட்டுமல்ல; அவர் பல வேளைகளில் பெரியார் மீது வைத்து வந்துள்ள ஆதாரமற்ற, திசைதிருப்பும் வாதங்களையும் கருத்தில் கொண்டு தான்.

பொது வாழ்க்கையில் சமூக முன்னேற்றம், விடுதலை குறித்த அனைத்தையும்  எந்த ஒரு இயக்கமும் தனியே நின்று  சாதித்து விட முடியாது. ஆனால், ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, பகுத்தறிவு, பொதுவுடைமை, தேசிய இன விடுதலை, தாய் மொழிக் கல்வி, மனித உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலிய அனைத்துத் துறைகளிலும் நாம் பெறும் வெற்றிகளே ஓர் இலட்சிய தமிழ்நாட்டை, தமிழ்ச் சமூகத்தைப் படைக்கும்.

அவ்வாறான ஒரு நிலை அடைவதற்குத் தடையாக மதவெறி அமைப்புகள், ஜாதி வெறியர்கள், ஆணாதிக்க வாதிகள், லாபவெறி பெருமுதலாளிகள், ஆதிக்க  இந்திய தேசியர்கள் என ஏராளமான எதிரிகள் உள்ளனர்.

மேற்சொன்ன இலட்சியங்களில் ஏதேனும் ஒன்றையோ, இரண்டையோ மட்டும் தான் ஒரு அமைப்பால் வீச்சாக முன்னெடுக்க முடியும். மற்றொரு அமைப்பு மற்ற ஒன்றிரண்டு இலட்சியங் களுக்கு உழைக்கும். நாம் முன்னெடுக்கும் இலட்சியத்தை நோக்கிய போராட்டங்களை எதிர்க்காத வரை நமக்கு சாதகம்தான் என்று கருதி, பணியாற்றுவதே சரியானதாக இருக்க முடியும்.

ஒரு இலட்சியத்துக்கு உழைக்கும் அமைப்பினரை நோக்கி, பிறதொரு இலட்சியத்தை முன்னெடுப் பவர்கள் எனது இலட்சியத்துக்கு நீங்கள் ஏன் உழைக்க மறுக்கிறீர்கள் என்று கேட்பது வேண்டாத ஒன்றே.

அதுவும் குறிப்பாக, புதைக்கப்பட்ட பிணங் களைத் தோண்டி எடுத்து முகர்ந்து பார்த்து குறை சொல்லும் போக்கு கைவிடப்பட வேண்டிய ஒன்றாகும்.

எவ்வித அரசியல் புரிதலும் அற்ற, ‘திடீர்’ தலைவர்கள், தலைகால் தெரியாமல் பிதற்றித் திரிவதைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. பூசிய சாயங்கள் அடுத்த மழையில் கரைந்ததும் உண்மை நிறம் வெளிப்பட்டு விடும்; வெளிப்பட்டுக் கொண்டும் இருக்கிறது. சுயநல எதிர்பார்ப்புகள், ஆசைகள் எதுவுமின்றி, இலட்சியத்துக்காக இழப்புகளைச் சகித்துக் கொண்டு இயங்கும் இயக்கங்களிடம் இவ்வகைப் போக்கு வேண்டாத ஒன்றே! எதிரிகளிடம் எய்ய வேண்டிய கணைகளை தோழமைகள் மீது  எய்வது தேவையா? அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நேரம் இது.

(நிறைவு)

Pin It