நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது ஜிஎஸ்டி குறித்து பாஜகவினரிடம் கேள்வி எழுப்பிய திருப்பூர் மாநகர கழக அமைப்பாளர் சங்கீதா மீது தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகிகள் சின்னச்சாமி, சீனிவாசன், ரவிச்சந்திரன் ஆகியோர் மீது 15 வேலம்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

வழக்குப் பதிவான நிலையில் தலை மறைவான குற்றவாளிகள் முன்பிணைக் கோரி தாக்கல் செய்த மனுவை திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் குற்றவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

29.04.2024 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.‌ பாதிக்கப்பட்ட சங்கீதாவுக்கு ஆதரவாக கழக வழக்கறிஞர் திருமூர்த்தி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இருப்பினும் குற்றவாளிகளான பாஜக நிர்வாகிகளுக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் தாழ்த்தியதோடு, திருப்பூர் மாநகர அமைப்பாளர் சங்கீதா மீது பொய் வழக்கினை பதிவு செய்த 15 வேலம்பாளையம் காவல் ஆய்வாளருக்கு திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து திருப்பூர் மாவட்ட தோழமை இயக்கத்தினருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு தெரிவித்தார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அதிமுக, இடதுசாரிகள் என அரசியல் கட்சிகள், இணையவாசிகள், பொதுமக்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை இராசேந்திரன்

Pin It