இன்றைக்கு எங்கள் அக்காள்-தங்கை, எங்கள் அண்ணன்-தம்பி, எங்களைப் பெற்றெடுக்காத தாய் தந்தை போன்றவர்கள் அவர்கள் எல்லாம் இலங்கைத் தரணியில் சிங்கள வெறியர்களால் இராணுவ உதவியோடு - போலீஸ் துணையோடு - கொல்லப்படுகிறார்கள் - மானபங்கப்படுத்தப்படுகிறார்கள். ஒரு கர்ப்பிணியின் வயிறு வெட்டப்படுகிறது. அவள் கருப்பையிலே இருக்கின்ற குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது. அதைத் தூக்கி வெளியில் வீசுகிறார்கள். சிதறி உடைகிறது அந்தக் குழந்தை! இப்படிப்பட்ட கோரக்காட்சிகள் ஒன்றா! இரண்டா!

அப்படிப்பட்ட கோரக் காட்சிகளை எல்லாம் நாங்கள் சகித்துக் கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது? நாங்கள் ஒட்டிக் கொண்டிருக்க - இந்தியாவோடு இணைந்து இருக்க - இந்தியா வேறு - தமிழ்நாடு வேறு என்றில்லாமல் இந்தியா தான் தமிழ்நாடு - தமிழ்நாடுதான் இந்தியா என்று கருதிக் கொண்டிருக்க - நீங்கள் தமிழர்களுக்கு செய்தது என்ன?

உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டிற்கு வேகமாக வரத் தயக்கம் காட்டுவது ஏன்? உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டின் எல்லைக்கு அப்பால் போய் நின்று விடுகிறதே என்ன காரணம்?

இவைகளைக் கேட்கக் கூடாதா? இவைகளைக் கேட்டால் பிரிவினையா?

- 1988 இல் கலைஞர் உரை

(தி.மு.க. வெளியீடான ‘எட்டப்பர்கள் எச்சரிக்கை’ நூலிலிருந்து)

Pin It