இலங்கையில் போர் நிறுத்தம் செய்வது குறித்து இந்திய அதிகாரிகள் வலியுறுத்தவில்லை என்று இலங்கை பாதுகாப்புத் துறை செயலரும், அதிபர் ராஜபட்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச தெரிவித்தார்.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகிய இருவரும் 24 ஆம் தேதி இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டனர். அதிபருடன் அவர்கள் பேச்சு நடத்தினர்.
அவருடன் நடத்திய பேச்சு குறித்து விவரம் எதுவும் அப்போது தெரிவிக்கப்படவில்லை. இந் நிலையில், ‘சண்டே அப்சர்வர்’ பத்திரிகைக்கு கோத்தபய ராஜபட்ச அளித்த பேட்டி ஞாயிற்றுக் கிழமை வெளியாகியுள்ளது. அதில் சண்டை நிறுத்தம் தொடர்பாகவோ அல்லது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதலை நிறுத்துவது குறித்தோ இந்திய அதிகாரிகள் வற்புறுத்தவில்லை. அரசின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது தொடர்பாகவே அவர்கள் பேச்சு நடத்தியதாக கோத்தபய ராஜபட்சே தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வின் நிர்பந்தம் காரணமாகவே இந்திய அரசு, இலங்கைக்கு நெருக்குதல் அளித்து வருவதாக செய்தி வெளியானது குறித்து கேட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். அவர் மேலும் கூறியதாவது:
விடுதலைப் புலிகள் மீதான ராணுவ நட வடிக்கையை நிறுத்துவது தொடர்பாக இலங்கைக்கு இந்திய அதிகாரிகள் எவ்வித நெருக்குதலும் தரவில்லை. விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள அப்பாவி மக்களை பத்திரமாக மீட்பது தொடர்பாகவே அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
போரில் அப்பாவி தமிழர்கள் உயிரிழப்பது குறித்து இந்திய அரசு சார்பில் அவர்கள் அப்போது கவலை தெரிவித்தனர். மனிதாபிமான உதவிகளை இந்திய அரசு எப்படி வழங்குவது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.
போர் பகுதியிலிருந்து அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தஞ்சம் புகுந்த தமிழர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள வசதிகள் குறித்து இந்திய அதிகாரிகள் இருவரும் அப்போது திருப்தி தெரிவித்தனர். மேலும் இந்தியா சார்பில் நிவாரண உதவியாக ரூ.200 கோடி அளிக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர் என்றார்.
தேர்தல் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் தமிழக அரசு இலங்கைப் பிரச்சினையை எழுப்பி வருகிறது. அதனால் இந்திய அரசும் அதை கவனத்தில் எடுத்துக் கொண்டு அவ்வப்போது இலங்கையுடன் பேச்சு நடத்துகிறது.
இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய மேற்கத்திய நாடுகளும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளை கருத்தில் கொண்டே போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கைக்கு நெருக்குதல் அளிக்கின்றன. புலம் பெயர்ந்த மக்கள் அளிக்கும் நிதியை அந்நாட்டு அரசியல் கட்சிகள் பெற்றுக்கொள்கின்றன. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோள் என்றார் கோத்தபய.
இந்தியாவின் உதவி: சிங்கள அமைச்சர் ஒப்புதல்
ஈழத் தமிழர்களின் படுகொலைக்குத் துணை போன காங்கிரசு அரசின் முகமூடியைக் கிழித்த இலங்கை அமைச்சர் - “இந்தியாவின் உதவியால்தான் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றோம்” என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் வெற்றி பெறுவதற்கு இந்திய அரசாங்கமே மிகப் பெரிய உதவிசெய்தது. இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இல்லையென்றால் விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டிருக்க முடியாது.
எனவே, இந்திய அரசாங்கத்திற்குப் புகழாரம் சூட்டி கட்சி வேறுபாடுகள் இன்றி இந்தியாவுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
புல்மோட்டையில் தற்காலிக மருத்துவ முகாம் அமைத்துள்ள இந்திய மருத்துவக் குழு, இந்திய ராணுவ மருத்துவக் குழு அல்ல. இந்திய இராணு வத்திற்கு மருத்துவம் செய்த இராணுவத்தினர் அல்லாத மருத்துவக் குழு தான் இங்கு வருகை தந்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சட்டத் திட்டங் களுக்கு உட்பட்டே இந்திய மருத்துவக் குழு இங்கு சேவை செய்யும். இந்தியா வழங்கிய நிவாரணப் பொருட்கள்கூட இலங்கையின் இறையாண்மைக்கு கட்டுப்பட்ட உதவிகள்தான் என்று இலங்கை நாடாளுமன்ற சுகாதாரத் துறை அமைச்சர்நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.
(மார்ச் 17ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வி.ஜே.முலொக்கு பண்டார தலைமையில் நடந்த இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தில், இலங்கைக்கு இந்திய மருத்துவர் குழு அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.வி.பி. கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திசநாயக்க பேசினார். அவருக்கு விளக்கமளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு கூறினார்.
இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசுக்கு இராணுவ உதவி, ஆயுத உதவிசெய்த சோனியாவின் காங்கிரசை தமிழகத்திலிருந்து விரட்டி அடிப்போம். நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவச் செய்வோம்.
இந்தியாவுக்கு இலங்கை பாராட்டு
இலங்கையில் தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா முழு ஆதரவு அளித்து வருகிறது என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை ராணுவ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
உலக அளவில் மனித உரிமைகளுக்கான காவலனாக தன்னை தானே அறிவித்துக் கொண்டுள்ள சில மேலை நாடுகளிடம் இருந்து போர் நிறுத்தம், பொது மன்னிப்பு போன்ற வெட்கங்கெட்ட கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. தீவிரவாதத்துக்கு எதிராக போராடி வரும் மூன்றாவது ஏழை உலக நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கின்றன.
ஆனால், இலங்கையில் தீவிரவாதத்தை முற்றிலுமாக அழித்து ஒழிப்பதில் இந்தியா முழு ஆதரவு அளித்து வருகிறது. அதுபோல சீனா, பாகிஸ்தான், ரஷியா, ஈரான், லிபியா, ஜப்பான் போன்ற நாடுகளும் இலங்கை அரசை ஆதரிக்கின்றன. அந்த நாடுகளுக்கு இலங்கை நன்றி தெரிவிக்கிறது.
இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : ‘தினத்தந்தி’ 4.5.2009
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
இலங்கை அரசு கூறுகிறது: இந்தியா போர் நிறுத்தம் கோரவில்லை
- விவரங்கள்
- பெரியார் முழக்கம் செய்தியாளர்
- பிரிவு: பெரியார் முழக்கம் - மே 2009