குலக் கல்வித் திட்டத்தை தன்னிச்சையாகத் திணித்த இராஜ கோபாலாச்சாரி, இராமானுஜர் யாரைக் கேட்டு தனது சித்தாந்தத்தை உருவாக்கினார் என்று திமிரோடு கேட்டதுதான் நினைவுக்கு வருகிறது. மோடியின் அக்னி பாத் என்ற இராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் திட்டத்தை இராஜாஜி, ஹிட்லர் பாணியில் கொண்டு வந்தார். இப்போது திரும்பிப் பெற முடியாது என்று திமிரோடு பேசுகிறது, ஒன்றிய ஆட்சி; நாடே பற்றி எரிகிறது.

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளோடு (அதையும் முடிக்காத நிலையில்) கற்றலுக்கு மூடு விழா நடத்தும் வடநாட்டு இளைஞர்கள் பெரும்பாலும் நம்பி இருக்கும் ஒரே வேலை வாய்ப்பு இராணுவத்தில் அடிமட்ட சிப்பாய்கள் அல்லது சேவை செய்யும் பணியாட்கள் வேலை தான். அவர்களின் ஒற்றை வேலை வாய்ப்பையும் குலைக்கும்போது பதற்றமும் எதிர்ப்பும் பற்றிக் கொண்டு விட்டது.

2016-2019 நிலவரப்படி, இராணுவத்தில் சேருவதில் இந்தியா விலேயே முதலிடம் வகிப்பது உ.பி. (18,906 பேர்), தமிழ்நாடு, அந்தமான், புதுச்சேரி மற்றும் நேபாளத்தைச் சேர்த்து 5300 பேர்தான் என்று இந்திய தகவல் பாதுகாப்பு அமைச்சகத்தின் புள்ளி விவரம் கூறுகிறது.

பொதுவாக, இராணுவ சிப்பாய்கள் வேலைக்கு வருவோரில் பெரும் பான்மையினர் ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ பிரிவினர்தான். ‘பிராமணர்கள்’ இப்போது உயர் அதிகாரிகள் பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். இந்திய இராணுவ கட்டமைப்பில் இப்போதும் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை, மாநில வாரியாகவும் ஜாதி வாரியாகவும் இராணுவ அமைப்புகளை உருவாக்குவது ஆகும். 1857இல் சிப்பாய் கலகம் என்ற பெயரில் இந்து - முஸ்லீம் மத உணர்வால் கலகம் வெடித்தபோது வங்காளிகள் ஒரே அணியாக செயல்பட்டதே காரணம் என்ற முடிவுக்கு வந்த பிரிட்டிஷார், இராணுவத்தை ஜாதி - மாநில அடிப்படையில் பிரித்து வைக்கும் நடைமுறைகளைத் தொடங்கி விட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதி மன்றத்தில் ஒன்றிய ஆட்சி தாக்கல் செய்த மனுவில் இந்திய இராணுவத்தை மாநில - ஜாதி அடிப்படையில் கூறுபோட்டு வைத்திருப்பதே இராணுவத்தின் வெற்றிக்கு அடிப்படை என்று ஒப்புக் கொண்டதோடு, குடியரசுத் தலைவர்கள் பாதுகாப்பு அணியிலும் அந்த முறையையே பின்பற்றுகிறோம் என்று கூறியது.

இப்போது, ‘அக்னி பாத்’ திட்டத்தில் ஒப்பந்தத்துக்கு ஆள் சேர்ப்பதில் இம்முறை கைவிட்டு, ‘அகில இந்திய அடிப்படை’யில் பணியமர்த்தம் நடத்த ஒன்றிய ஆட்சி முடிவு செய்து ஏற்கனவே நிலவும் நடைமுறையை மாற்றியமைக்க முன் வந்திருப்பது பரம இரகசியமாகவே இருக்கிறது. ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (ஜூன் 18, 2022) சுஷந்த் சிங் என்ற ஆய்வாளர் எழுதிய கட்டுரையில் இதை சுட்டிக் காட்டியிருக்கிறார். மாநில ஜாதி அடையாளத்துக்கு அப்பால் மத அடையாளத்துக்குள் இளைஞர்களைக் கொண்டு வந்து, அவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட இராணுவப் பயிற்சிகளை அளித்து சிவில் சமூகத்துக்கு அனுப்பி வைப்பதன் நோக்கம், பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோரில் 75 சதவீதம் பேரை இராணுவத்துக்குள் அனுமதிக்காமல், அவர்கள் வேறு வேலைகளைத் தேடிச் செல்லும் வாய்ப்புகளையும் பறித்து, வயது வரம்புகளையும் கடக்கச் செய்து, ஆயுதப் பயிற்சிகளோடு களத்தில் இறக்குவது, துப்பாக்கி முனையில் ‘இந்து’ இராஜ்யத்தை ஏற்படுத்துவதற்கான சதியா என்ற அச்சம் எழவே செய்கிறது.

‘இந்துக்களை இராணுவ மயமாக்கு; இராணுவத்தை இந்து மயமாக்கு’ எனும் சவர்க்கார் கோட்பாடு செயல் வடிவம் பெறுகிறதா?

1966இல் இராணுவத்தில் ஆள் சேர்க்க ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்பட்ட ‘கோட்டா’ முறை, ‘அக்னிபாத்’ திட்டத்தில் கைவிடப் படுவதால் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் ஆதிக்கத்துக்கு வழி வகுப்பதோடு கூட்டாட்சி அமைப்பையும் குலைத்து விடுகிறது.

ஆயுதப் பயிற்சியோடு ஊர்களில் வேலை வாய்ப்பின்றி நடமாடும் இளைஞர்கள், சமூக நெருக்கடிகள் உருவாகும்போது தன்னெழுச்சியாக போராடத் தொடங்குகிறார்கள். அப்போது இவர்கள் போராட்டத்தில் ஊடுருவி வன்முறைக் களமாக்கிடும் ஆபத்துகளை நிச்சயம் எதிர்பார்க்க லாம். யுகோஸ்லேவியாவிலிருந்து குவாண்டா வரை இராணுவப் பயிற்சி பெற்ற இளைஞர்களின் பங்களிப்புகளால் தான் மைனாரிட்டி மக்களுக்கான கலவரத் தீ மூண்டெழுந்தது என்பது வரலாறு.

‘ஒரு ரேங்க், ஒரு பென்ஷன்’ என்று மோடி தந்த பொறுப்பற்ற தேர்தல் வாக்குறுதியால், 8 இலட்சம் கோடி ரூபாய் கூடுதலாக இராணுவச் செலவு செய்ய வேண்டியிருந்தது. அத்திட்டத்தை தொடர முடியாத நிலையில் இராணுவத்துக்கு 54 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டு இராணுவத்தை நவீனப்படுத்து வதற்கான செலவுக்கு பணமின்றி மூச்சுத் திணறும் நிலையில் அதை சமாளிக்கவே ‘அக்னி பாதை’ வந்திருப்பதாக இராணுவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பண மதிப்பிழப்பு; சிறு தொழில் மீதான வட்டி வீத உயர்வு; ஜி.எஸ்.டி. வரி வசூல் முறை, விவசாய சட்டங்கள்; பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவ உயர் படிப்பில் இடஒதுக்கீடு என்று தான் கொண்டு வந்த திட்டங்களில் தோல்வி, பின்னடைவை சந்தித்த மோடி, இதிலும் தோல்வியையும் சந்திக்கப் போகிறார்!

- விடுதலை இராசேந்திரன்

Pin It