விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல; விடுதலை இயக்கம் என்று சுவிட்சர்லாந்து நாட்டின் கூட்டாட்சி குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை ஜூன் 16, 2018இல் வழங்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கூறி இந்த அமைப்புக்கு நிதி திரட்டிய தாகவும், அதில் உறுப்பினர்களாக இருந்து சுவிஸ் நாட்டில் செயல்பட்ட தாகவும், திரட்டிய நிதியில் மோசடி நடந்ததாகவும் குற்றம் சாட்டி 13 ஈழத் தமிழர்கள் மீது கடந்த ஜனவரி 2018இல் சுவிஸ் நாட்டில் வழக்குப் பதிவு செய்தது.

விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதால் போர் நடவடிக்கை களை மேலும் தீவிரமாக்கவும், நீண்ட காலம் போர் நடப்பதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காரணமாக இருந்தார்கள் என்றும் குற்றப் பத்திரிகை கூறியது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஈழத் தமிழர்கள் பெரும் பொருட் செலவில் வழக்கறிஞர் களை நியமித்து வழக்கை நடத்தினர். விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு தானா என்பது குறித்து நீண்ட விவாதங்கள் நடந்தன. இறுதியில் சுவிஸ் பெடரல் குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. வழக்கில் நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் சார்பில் வைக்கப்பட்ட வாதங்கள்:

விடுதலைப் புலிகளை ஒழிக்கும் நடவடிக்கைக்கு இலங்கை அரசு ‘கலக முறியடிப்பு’ என்று (ஊடிரவேநச ஐளேரசபநnஉல) என்று பெயர் சூட்டியது. இதனுடைய உண்மையான அர்த்தம், ஆயுதம் தாங்கிய போராளிகளை அழிப் பது மட்டுமல்ல; அந்தப் போராளிகள் உருவாக்கிய அரசியலையும் அழிப்ப தாகும். இலங்கை அரசின் அரசியல், நிர்வாகம், ஆயுத அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய விடுதலைப் புலிகள் தங்களுக்கான செயல்படும் தமிழீழ நடைமுறை ஆட்சியையும் நிறுவி இருந்தனர்.

2009ஆம் ஆண்டு தமிழீழ செயல் பாட்டு ஆட்சி முற்றாக ஒழிக்கப்பட்டு மீண்டும், இலங்கை அரசின் மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டது. அப்போது நடந்த இராணுவ மற்றும் அரசியல் (திணிப்பு) நடவடிக்கை களால் தமிழர்கள் புலம் பெயர்ந்து வேறு நாடுகளுக்கு குடியேறினார்கள். அப்படி குடியேறிய புலம் பெயர்ந்த தமிழர்களிடம் நிலை பெற்றிருந்த தங்களுக்கான ‘தாயகம்’ என்ற கோட் பாட்டை அழிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே புலம் பெயர்ந்த தமிழர்கள் மீதும் ‘கலக முறியடிப்பு’ நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. புலிகள் இயக்கத்தில் உறுப் பினராக இருந்தது; அதற்காக நிதி திரட்டுவது போன்ற நடவடிக்கைகள் குற்றச் செயல்களாக கருதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த ‘கலக முறியடிப்பு’ நடவடிக்கையின் கீழ்தான் வருகிறது இந்த வழக்கு.

இந்தப் பிரச்னையில் சுவிட்சர் லாந்து அரசு கடந்த காலங்களில் சமாதான முயற்சிகளுக்கு ஆதரவான நிலைப்பாடுகளையே மேற்கொண்டு வந்திருக்கிறது. 24.12.2000 அன்று விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவித்து அதற்குப் பிறகு மூன்று முறை நீடித்த பிறகும்கூட இலங்கை அரசு இந்தப் போர் நிறுத்தத்துக்கு முகம் கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் கட்டுநாயக்கா மற்றும் பண்டார நாயக்கா விமான நிலை யங்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய பிறகுதான், இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய முன் வந்தது. போர் நிறுத்தம் வருவதற்குக் காரணமே தமிழர் தரப்பில் மேற்கொண்ட முயற்சிகள் தான். அதற்குப் பிறகு இரு தரப்புக்கும் நடந்த பேச்சு வார்த்தைகளுக்கும் இந்த முயற்சியே அடிப்படையாக அமைந்தது. இந்தச் சூழ்நிலையில் சமாதான செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே சுவிஸ் அரசின் நிலைப்பாடு என்பதால், தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாகக் கருதி தடை விதிப்பது தவறான முடிவு என்று சுவிஸ் அரசு நிலைப்பாட்டை அப்போது எடுத்தது. 2005 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் சுவிஸ் பெடரல் வழக்கறிஞர் சங்கம் (அரசுத் தரப்பு சட்டத் துறை) இதை வெளிப்படையாகவே தெரிவித்தது.

‘சுனாமிப்’ பேரழிவு வந்தபோது விடுதலைப் புலிகள் தமிழீழப் பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட முன் வந்த நிலையில் அமெரிக்காவில் ‘வாஷிங்டன்’ நகரில் நடந்த நன்கொடையாளர்கள் மாநாட் டில் ஈழத் தமிழர் பிரதிநிதிகளைப் பங்கேற்க விடாமல் இலங்கை அரசுடன் சேர்ந்து, அமெரிக்க-அய்ரோப்பிய நாடுகள் சதி செய்து, விடுதலைப் புலிகள் மீது அய்ரோப்பிய ஒன்றியம் தடைவிதிக்கச் செய்தார்கள். 2008ஆம் ஆண்டு இலங்கை அரசு போர் நிறுத்தத்திலிருந்து விலகிக் கொண்டது. 2009ஆம் ஆண்டில் போர் மிகவும் கடுமையானது. இந்தக் கால கட்டங்களில் சுவிஸ் அரசு மவுனம் காத்தது. ஆனால் இப்போது புலிகள் பயங்கரவாதிகள்; அதற்கு நிதி திரட்டுவது குற்றம் என்று வழக்குப் பதிவு செய்துள்ளது.

சுவிஸ் நாட்டுக்கு புலம் பெயர்ந்து வந்த தமிழர்களை ‘இலங்கை குடி மக்கள்’ என்றே அங்கீகரித்து இடப் பெயர்வு தொடர்பான உடன்படிக்கை யில் இலங்கை அரசுடன் கையெழுத் திட்டது சுவிஸ் அரசு. இதன் மூலம் இவர்களின் ‘தமிழர்’ என்ற அடை யாளத்தை மறுத்தது. அது மட்டு மின்றி இலங்கை அரசுடன் சட்ட உதவிகள் பற்றிய கூட்டு செயல்பாடு களுக்கு சம்மதித்து, இந்த 13 ஈழத் தமிழர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களையும் இலங்கைக்கு சுவிஸ் நாடு பெடரல் சட்ட அமைச்சகம் வழங்கியது.

2005, 2007ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் குறித்த சரியான நிலைப்பாடுகளை எடுத்த பெடரல் அமைச்சக வழக்கறிஞர்களாக இருந் தவர்கள் இப்போது அப்பதவிகளில் இல்லை. மாறாக இப்போது இந்தத் துறையில் அதிகாரமிக்கவராக இருப்பவர் சர்வதேச நிதியம் (அய்.எம்.எஃப்) மற்றும் உலக வங்கி யுடன் பல வேலைத் திட்டங்களில் இணைந்து செயல்பட்டவர். இந்த அமைப்புகள் விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் செயல்பட்டதை ‘விக்கி லீக்ஸ்’ அம்பலப்படுத்தியிருக்கிறது என்று விடுதலைப் புலிகள் தரப்பில் வழக்கறிஞர்கள் வாதங்களை முன் வைத்தனர். வரலாற்று நிகழ்வுகளோடு இதைப் பரிசீலித்த நீதிபதி - இலங்கை யில் நடந்த போராட்டத்தை பயங்கர வாதம் என்றோ, தீவிரவாதிகள் போராட்டம் என்றோ கூற முடியாது. அது ஒரு விடுதலைப் போராட்டம். விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்தியப் போராட்டத்தை மட்டும் நடத்தவில்லை. அரசியல் இயக்கத் துக்கான கட்டமைப்பு செயல்பாடு களையும் கொண்டிருந்தது. பெண் களையும் உள்ளடக்கிய அவர்களது இராணுவ அமைப்பு முறையாக ஒழுங்கமைக்கப்பட்டு, ஒரு இராணு வத்துக்குரிய அனைத்து அம்சங் களையும் கொண்டிருந்திருக்கிறது.

கரும்புலிகள் ஒரு தற்கொலைப் படை என்று பொதுவெளியில் பேசப் பட்டாலும், அது ஒரு விசேடப் படைப் பிரிவாகவே கருத வேண்டும். விடுதலைப் புலிகள் தங்கள் பகுதியில் ஒரு நிழல் அரசையும் ஏற்படுத்தி நடைமுறைப் படுத்தியிருக்கிறார்கள். எனவே விடுதலைப் புலிகள் ஒரு விடுதலை இயக்கமே தவிர, பயங்கரவாத அமைப்பு என்று கூற முடியாது. குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு இந்த வழக்கு தொடர்ந்ததற்காக அரசு இழப்பீடு வழங்கவும், நீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஏனைய குற்றம் சாட்டப்பட்டவர்கள் வங்கி மோசடி யில் தெரிந்தே ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படு கிறது. இரண்டு ஆண்டுகள் அவர்கள் நன்னடத்தையை நிரூபிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் திருமதி நோத்தோ, விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை நிரூபிக்க சமர்ப்பித்த பல ஆவணங்களை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. இந்த ஆவணங்கள் வழக்கிற்குப் பொருந்தாதவை என்றார் நீதிபதி.

ஏற்கனவே இத்தாலியின் நாப் போலி மாநகர நீதிமன்றம், டென்மார்க் உயர்நீதிமன்றம், அய்ரோப்பிய நீதிமன்றம், விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல என்று தீர்ப்பளித்த நிலையில் இப்போது சுவிஸ் நாட்டின் தீர்ப்பும் வந்துள்ளது.

Pin It