(28.12.2023 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி)

ஒன்றிய அரசின் எந்தவொரு உயர் பொறுப்புகளிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்புச் சார்ந்தவர்கள் கிடையாது என்று ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் கூறுகிறது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், இராணுவம் என ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளிலும் முற்பட்ட வகுப்பினர்தான் நிறைந்துள்ளனர். இந்த நாட்டின் அதிகாரம் முழுமைக்கும் இன்றைக்கு பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு செல்லும்போது பெரியார் ஏன் இது உண்மையான விடுதலை கிடையாது, அதிகாரம் கைமாறி இருக்கிறது என்று கூறினார்? ஆங்கிலேயரிடமாவது நம் உரிமைகளைப் போராடி பெற்றுவிடலாம் என்று பெரியார் கூறினார்.

சுதந்தர நாளை துக்கநாளாக அறிவித்தவர் பெரியார். விடுதலை அடைந்து 75 ஆண்டுகளாகிறது. ஆனால் இன்னும் கல்விக்காக, வேலைவாய்ப்புகளுக்காக முட்டிமோதிக்கொண்டுதானே இருக்கிறோம். பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் மோடி பிரதமராக இருக்கும்போது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி வென்றது திமுக, விசிக உள்ளிட்ட தமிழ்நாட்டுக் கட்சிகள். ஆனால் இந்த பிற்படுத்தப்பட்டவரான மோடி ஆட்சியில் முற்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு எந்தவித போராட்டமுமின்றி கிடைத்தது. பிற்படுத்தப்பட்டவரான மோடிக்கு பிரதமர் பதவி என்பது அடையாளம், ஆனால் அதிகாரம் முழுவதும் பார்ப்பனர்களுக்கு. இதுதான் பாஜகவின் உண்மை முகம். இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நமக்கு பெரியார் தேவைப்படுகிறார்.

தன்னுடைய அசல் எதிரியை அடையாளம் காட்டி விட்டுச் சென்றதுதான் பெரியாரின் பெரிய வெற்றி. வன்னியர்களுக்கும் தலித்களுக்கும் பிரச்சனை, முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் பிரச்சனை என்று சொல்கிறார்கள். ஒரு குடிமகனின் அதிகபட்ச கனவு தன் குழந்தையை நன்றாக படிக்கவைத்து, நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும், இதுதான் இந்த நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் கனவு. இந்த நாட்டிலுள்ள 100 கோடிக்கும் மேற்பட்ட இந்துக்களின் கல்விக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் எதிராக இருப்பது யார்? இஸ்லாமியர்களா? ஒரு இந்து உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆவதற்கு தடையாக இருப்பது யார்? இஸ்லாமியர்களா? ஒரு இந்துவின் கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் இடையூறாக இல்லாத இஸ்லாமியர்கள் எப்படி இந்துக்களுக்கு எதிரியாக இருக்க முடியும்? அவர்கள் எதிரி அல்ல, இல்லாத ஒருவரை எதிரிகளாகக் காட்ட முற்படுகிறார்கள். ஆனால் பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைகளைப் பறித்துக்கொண்டிருக்கும் பார்ப்பனர்கள்தான் இந்துக்களின் அசல் எதிரி.

ஒரு பிற்படுத்தப்பட்டவருக்கு ஒரு தலித் எதிரியாக இருக்க முடியாது. ஏனென்றால் இவர்கள் இருவருடைய கனவும் கல்வி, வேலைவாய்ப்புகளை பெற்று முன்னேறுவதுதான். இருவருடைய உரிமைகளைப் பறித்தது யார்? பார்ப்பனர்கள். அதனால்தான் பெரியாரைக் கண்டால் அவர்களுக்கு பயம். இந்தியாவில் இருப்பதுபோல சாதிய இறுக்கம், வேறெந்த நாட்டிலும் கிடையாது, உலகத்தில் எங்கு வேண்டுமாலும் எந்தப் போராட்டத்தை வேண்டுமானாலும் நடத்திவிடலாம். ஆனால் இந்தியாவில் இந்த பார்ப்பன சக்திகளை எதிர்த்துப் போராடுவது என்பது கடினமானது. அதனால்தான் பெரியார் எந்த இடத்திலும் திசைமாறாமல் போராடினார். அப்படிப்பட்ட ஒரு மகத்தான ஒரு தலைவரைத் திரும்பத் திரும்ப நாம் நினைவுகூற வேண்டும். அவரை மீண்டும் மீண்டும் வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும். அவர் சொன்ன ஒவ்வொரு கருத்தையும் விவாதத்துக்கு உட்படுத்த வேண்டும். அந்த அளவுக்கு நாம் ஆழமாகப் பயணிக்க வேண்டியுள்ளது. பெரியாரை வீதிதோறும் எல்லா இடங்களிலும், எல்லா வடிவங்களிலும் கொண்டு சென்று நினைவுகூறுவோம்.

(நிறைவு)

ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ

Pin It