இரஷ்யநாட்டின் மூன்றில் இரு பகுதி அடர்ந்த காட்டுப்பகுதியாகவும் மீதம் ஒரு பகுதி நகரம், கிராமம், வயல்வெளிப்பகுதியாகவும் உள்ளது. கோடைக்காலத்தில் இக்காடுகளில் தீப்பற்றிக்கொள்வதும் அதை உடனடியாக அணைப்பதும் வழக்கம். இரஷ்யா சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த வரைக்கும் காட்டுத் தீ பற்றுவதும், அணைக்கப்படுவதும் ஒரு சாதாரணச் செய்தியாகவே இருந்தது. காட்டுத் தீயை அணைப்பதில் சோவியத்து ஒன்றியம் உலகிலேயே நிபுணத்துவம் மிகுந்த நாடாக விளங்கியது. இப்பணியில் 11,000 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 80,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள். இவர்கள் காட்டுப்பகுதியைத் தொடர்ந்து கண்காணித்து நெருப்பின் அறிகுறி தெரிந்தவுடனேயே அது பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருந்தார்கள். இதனால் காட்டுச் செல்வங்களான மரங்களும் காட்டு விளை பொருள்களும் தடங்கலின்றி கிடைத்துக் கொண்டிருந்தன.

சோவியத்து ஒன்றியம் சிதைந்து இரஷ்யா தனி நாடாகப் பிரிந்தபின் முதலாளித்துவப் பாதையில் நடைபோட ஆரம்பித்தது. முதலாளித்துவப் பாதையில் காவு கொடுக்கப்பட்ட பல மக்கள் நலத்திட்டங்களில் காடு பராமரிப்பும் ஒன்று. காட்டுப்பராமரிப்புக்காகச் செலவிடும் பணத்தையும் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தையும் கணக்கிட்டுப்பார்த்து முதலாளித்துவ அறிஞர்கள், அரசின் முதலீடு பாழாய்ப்போவதைக்(?)கண்டு துடிதுடித்துப் போனார்கள். காட்டுப் பராமரிப்பிற்காக ஈடுபடுத்தப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் செலவை வெகுவாகக் குறைக்கமுடியும் என்பதையும், ஆனால் மரங்கள் வளருவது குறையாது; தேனீக்கள் கூடுகட்டுவது குறையாது; இன்னும் காட்டுச் செல்வங்களின் வளர்ச்சியில் எந்தவிதக் குறைபாடும் இருக்காது என்பதையும் உணர்ந்தார்கள்.

காட்டுப் பராமரிப்பிற்கான செலவைக்குறைத்து அதேசமயத்தில் அதிலிருந்து கிடைக்கும் பொருள்களின் அளவு குறையாத வழியைக் கண்டுபிடிக்காத சோவியத்து அரசாங்கத்தின் நிருவாகத்தை எள்ளி நகையாடி, புதிய விதிகளைப் பரிந்துரைத்தார்கள். முதலாளித்துவ அறிஞர்களின் மேதாவித்தனத்தைக் (?)கண்டு ஆச்சரியப்பட்டுப்போன விளாதிமீர் புதின் 2000 ஆண்டில் காட்டுப் பராமரிப்பிற்கு ஈடுபடுத்தப்பட்டிருந்த 91,000 பணியாளர்களுக்குப் பதிலாக வெறும் 2000 பணியாளர்கள் போதும் என ஆணையிட்டார். ஆட்குறைப்புச் செய்யப்பட்ட பிறகு குறைந்த அளவு பணியாளர்களால் காட்டுத் தீ ஏற்படுவதை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாமல் போயிற்று. அதனால் காட்டுத் தீயினால் அதிக அளவு சேதங்கள் ஏற்பட ஆரம்பித்தன.

முதலாளித்துவ பொருளாதார முறையில் மனித உணர்விற்கு மதிப்பளித்துக்கொண்டிருக்க முடியுமா? காட்டுப் பராமரிப்பிற்காக மிச்சப்படுத்திய தொகையைக் கணக்கிட்டுப்பார்க்கும்போது சேதத்தினால் ஏற்பட்ட இழப்பு குறைவுதான் என்று கூறி சிக்கன நடவடிக்கை (?) தொடரப்பட்டது.  இவ்வாண்டு அதாவது 2010ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் காட்டுத் தீ மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது காட்டுப்பராமரிப்பிற்காக மிச்சப்படுத்திய பணத்தைவிட தீயினால் ஏற்பட்டிருக்கும் இழப்பு மிகமிக அதிகமாகிவிட்டது. உடனே இப்படி அதிகமான இழப்பு ஏற்பட்டதற்கு தங்களுடைய சிக்கன நடவடிக்கை கரணமல்லவென்றும் புவிவெப்ப உயர்வுதான் காரணமென்றும் முதலாளித்துவ அறிஞர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் காட்டுப்பராமரிப்பில் அரசாங்கம் காட்டிய அக்கறையின்மைதான் இம்மாதிரியான அசம்பாவிதங்களுக்குக் காரணம் என இரஷ்ய கல்வி மற்றும் அறிவியல் துறையின் காடு, சுற்றுச்சூழல் மற்றும் உற்பத்தித் திறன் மய்யத்தின் தலைவர் அலெக்சாண்டர் இசையேவ் 22.8.2010 அன்று கூறியுள்ளார். இவரைப் போன்றே சுற்றுச்சூழலில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட பலர் காட்டுப்பராமரிப்பில் அரசின் போக்கை எதிர்த்துள்ளனர்.

அலெக்சாண்டர் இசையேவ் தாம் சொல்லவந்ததை அழுத்தமாகக் கூறினாலும் அமைதியாகவே கூறியுள்ளார். ஆனால் பிற சமூகநல ஆர்வலர்கள் அரசின் போக்கை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். காட்டுப் பராமரிப்பில் ஈடுபடுத்தப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தபின்பு சட்ட விரோதமாக மரங்களை வெட்டுவதும் அதிகரித்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவர்கள் மீது அரசாங்கம் காவல்துறையினரை ஏவிவிட்டுள்ளது. இது போதாது என்று சட்ட விரோதமாக மரம் வெட்டும் கள்ள வணிகர்கள், அடியாட்களை ஏவிவிட்டு அவர்களைத் துன்புறுத்துகின்றனர். ஆனால் காட்டுப் பராமரிப்பில் இரஷ்யாவிற்கு இருந்த நிபுணத்துவத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற பேச்சே அடிபடவில்லை. சட்டவிரோதமாக மரத்தை வெட்டி கள்ள வணிகம் வளருவதில் மக்கள் மனப்பாங்கில் தீய ஒழுக்கம் வளருவதைப்பற்றியும் அரசாங்கமோ முதலாளித்துவ அறிஞர்களோ மனதைச் செலுத்தவில்லை. அவர்களுடைய சிந்தணையெல்லாம் முதலீட்டுக்கு இலாபம் கிடைக்குமா? என்பதைப்பற்றி மட்டும்தான் உள்ளது.

முதலாளித்துவ அறிஞர்கள் சோசலிச அமைப்பில் மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்காது என்று பலவாறாகக் குற்றம் சாட்டுவார்கள். முதலாளித்துவ அமைப்பில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக்கொள்வதில் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை உள்ளது என்றும் ஆகவே முதலாளித்துவ அமைப்பே மனித சமுதாயத்திற்குச் சாலச்சிறந்தது என்றும் பீற்றிக்கொள்வார்கள்.

இரஷ்யக் காட்டுத் தீ முதலாளித்துவ அறிஞர்களின் இதுபோன்ற அயோக்கியத்தனமான வாதங்களைச் சுட்டுச் சாம்பலாக்கிக் கொண்டிருக்கின்றது. சோவியத்து ஒன்றியத்தின் சோசலிச அமைப்பில் காட்டுப் பராமரிப்பில் நிபுணத்துவம் வளர்ந்து உலகின் மற்ற நாடுகளையெல்லாம் விஞ்சியிருந்தது.

இரஷ்யா முதலாளித்துவப் பாதையைத் தேர்ந்தெடுத்தபின் ஏற்கெனவே வளர்ந்திருந்த நிபுணத்துவம் அழிந்துள்ளது. சோசலிச அமைப்பில் மரம், தேன் போன்ற காட்டுச் செல்வங்கள் தடையின்றி நேராகக் கிடைத்துக்கொண்டிருந்தன. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் சிக்கன நடவடிக்கைக்குப்பிறகு (ஆட்குறைப்புக்குப் பிறகு) காட்டுச் செல்வங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை அடிப்படையாக வைத்து கள்ள வணிகம் வளர்ந்துள்ளது.

அதாவது, சோசலிச அமைப்பில் உண்மையான அறிவு வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. முதலளித்துவ அமைப்பில் கள்ள வணிகம் வளர்ந்துள்ளது. அதாவது ஏமாற்றும் வித்தை வளர்ந்துள்ளது. முதலாளித்துவ அறிஞர்களைப் பொறுத்தமட்டில் ஏமாற்று வித்தைதான் அறிவு வளர்ச்சியாகும் முதலாளிகளும் முதலாளிகளின் அடிவருடிகளும் இதை ஒப்புக் கொள்ளலாம்.

ஆனால் உழைக்கும் மக்களும் நல்லறிஞர்களும் ஏற்றுக்கொள்ள முடியுமா?

முதலாளித்துவ அறிஞர்களின் ஏமாற்று வித்தையில் மயங்காமல் உண்மையான அறிவு வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் சோசலிச அமைப்பை உருவாக்க உழைக்கும் மக்களும், நல்லறிஞர்களும் அணியமாக வேண்டும். அந்நாள் எப்பொழுது வருமோ?

Pin It