எம்.ஜி.ஆர். நூற்றாண்டு!

அடித்தட்டு மக்களின் செல்வாக்குப் பெற்ற தலைவராக திகழ்ந்தவர், மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ‘மக்கள் திலகம்’ என்றும், ‘புரட்சித் தலைவர்’ என்றும் அழைக்கப்பட்ட அவரது ஆட்சிக் காலத்தில் சாதனைகளும் உண்டு; கொள்கைத் தடுமாற்றங்களும் உண்டு.

பெரியார் நூற்றாண்டு விழா, அவரது ஆட்சிக் காலத்தில்தான் - அரசு விழாவாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டது. பெரியார் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அரசு அங்கீகரித்தது. பெரியார் பொன் மொழிகளை நூலாக வெளியிட்டு பரப்பியதோடு, தமிழகம் முழுதும் முக்கிய நகரங்களில் பெரியார் நினைவாக ‘பகுத்தறிவுச் சுடர்’ நிறுவப் பட்டது. பெரியார் வாழ்க்கை வரலாற்றை விளக்கிடும் கலை நிகழ்வுகள் பல நகரங்களில் நடத்தப்பட்டன. வீதிகளில் இருந்த ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன.

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தியதும் எம்.ஜி.ஆர். ஆட்சியின் மகத்தான சாதனை. ஆனால், இடஒதுக்கீடு குறித்த தெளிவான புரிதல் அவருக்கு இல்லாமல் போனதால் பார்ப்பனர்கள் எம்.ஜி.ஆரிடம் தங்களுக் கிருந்த செல்வாக்கைப் பயன் படுத்தி, பிற்படுத்தப்பட்டோரை நிர்ணயிக்க பொருளாதார வரம்பை அமுலாக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். அதையேற்று 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை 1979ம் ஆண்டு அவர் அறிவித்தார். தமிழகமே கொந்தளித்தது. பிறகு, மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து, அந்த உத்தரவை நீக்கம் செய்ததோடு, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் அளவையும் 50 சதவீதமாக உயர்த்தினார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எம்.ஜி.ஆர். காட்டிய ஆதரவு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியதாகும். களத்தில் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெருமளவில் தனது சொந்தப் பொறுப்பில் நிதி உதவி செய்ததோடு, மிகப் பெரும் உதவிகளையும் வழங்கினார். ஈழத் தமிழர் மீது இலங்கை அரசு நடத்திய இராணுவ தாக்குதலைக் கண்டித்து, தான் கருப்புடை தரித்ததோடு தனது அமைச்சரவையிலிருந்த அமைச்சர் களையும் கருப்புச் சட்டைப் போட வைத்தார். அன்றைய மத்திய காங்கிரஸ் ஆட்சி தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஒப்பந்தங்களை திணித்து ஏற்குமாறு மிரட்டியபோது, முதல்வர் எம்.ஜி.ஆர். போராடும் விடுதலைப் புலிகளுக்கே ஆதரவாக இருந்தார்.

எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய சத்துணவுத் திட்டம், கல்வித் துறையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. பள்ளிக்கூடம் பக்கமே திரும்பாமல், கூலி வேலைக்கு செல்லும் கட்டாயத் திலிருந்த கிராமப்புற ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வரச் செய்தது இத்திட்டம். உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு அனைத்து மாநில அரசுகளும் இத்திட்டத்தைப் பின்பற்ற பரிந்துரைத்தது. இப்படி பல சாதனைகள் நிகழ்ந்தாலும், திராவிடர் இயக்கத்தின் அடிப்படையான பகுத்தறிவு பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கைளை எம்.ஜி.ஆர். ஆட்சி நீர்த்துப் போகச் செய்தது என்பதும் உண்மை.

உலகத் தமிழ் மாநாட்டை தொடங்கி வைக்க காஞ்சி சங்கராச்சாரி அழைக்கப்பட்டார். சங்கராச்சாரி நடத்திய இந்து பண்பாட்டு விழாவில் முதல்வராக எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். காஞ்சிபுரத்தில் பெரியார் சிலை வைக்க தி.மு.க. ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்ட பிறகு, ஆட்சி மாற்றம் நடந்தது. ஆட்சிக்கு வந்த முதல்வர் எம்.ஜி.ஆர். காஞ்சி சங்கர மடத்துக்கு அருகே இந்த இடம் இருப்பதால் அங்கே பெரியார் சிலையை அனுமதிக்க முடியாது என்று கூறினார். “நான் சங்கராச்சாரியாரோடு கலந்து பேசிய பிறகுதான் இந்த முடிவுக்கு வந்தேன்; சங்கராச்சாரி ஒரு துறவிக்கு உரிய அடையாளமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்; அந்த மடத்துக்கு அருகே பெரியார் சிலை வைக்க அனுமதிக்க முடியாது” என்றார். பிறகு உயர்நீதிமன்றம் வழியாக அனுமதி பெற்று அதே இடத்தில் பெரியார் சிலை நிறுவப்பட்டது. தனது அமைச்சரவையில் பார்ப்பனர் ஒருவரை (டாக்டர் ஹண்டே) முதன்முதலாக அமைச்சராக்கினார். தன்னை மூகாம்பிகை பக்தராக அடையாளப்படுத்திக் கொண்டார். காஞ்சி மூத்த சங்கராச்சாரி இந்தியா முழுதும் சுற்றுப் பயணம் செய்து, காஞ்சி மடத்துக்கு திரும்பியபோது, தமிழக எல்லையில் தமிழக அரசு சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அறநிலையத் துறை அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன், சங்கராச்சாரியை ரிக்ஷாவில் அமர வைத்து அவரே ரிக்ஷாவை இழுத்து வந்தார். ‘பார்ப்பனர்-பார்ப்பரனல்லாதார் பிரச்சினை எல்லாம் முடிந்துவிட்டது’ என்று அமைச்சர் வீரப்பன் பேசினார். திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் அவரது ஆட்சி உருவாக்கிய இந்த ‘உடைப்பு’தான் பிறகு ஜெயலலிதா ஆட்சியில் மேலும் மோசமாகி ‘இந்து புரோகித’ கட்சியாகவே தன்னை அ.இ.அ.தி.மு.க. அடையாளப்படுத்திக் கொண்டது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டில் இந்த நிறை குறைகளை சரியாக மதிப்பீடு செய்வது மிகவும் அவசியமானதும் தேவையானதுமாகும். எதிர்காலத்திலாவது திராவிட அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைப் பாதையை செப்பனிடுவதற்கு இது பயன்படும்.

தமிழக அரசுக்கு கழகம் வேண்டுகோள்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவாக நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்க!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாட முடிவெடுத்திருக்கும் நிலையில் ஒரு வேண்டுகோளை திராவிடர் விடுதலைக் கழகம் அ.இ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா அவர்களுக்கும், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் முன் வைக்க விரும்புகிறது. தமிழ்நாட்டில் நீண்டகால சிறைவாசிகளையும் இராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாழும் 7 தமிழர்களையும் மாநில அரசுக்கு உரிய உரிமையைப் பயன்படுத்தி விடுதலை செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதை செய்தால் அது புதிய ஆட்சிக்கு பெருமை சேர்ப்பதோடு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டுக்கும் சரியான நினைவுப் பரிசாக வரலாற்றில் நிலைத்து நிற்கும்.

ஏற்கெனவே அண்ணா நூற்றாண்டின்போதும் கலைஞர் சட்டமன்றப் பணியின் 50ஆம் ஆண்டு நிறைவை யொட்டியும் ‘சுதந்திரம்’ பெற்று 25ஆம் ஆண்டு நிறைவுக்காகவும் தமிழகத்தில் இதேபோல் சிறைவாசிகளின் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

Pin It