கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சேலத்தில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது

திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு பிப்.15, 2023 பகல் 11 மணியளவில் சென்னை தலைமை அலுவலகத்தில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம், ஆசிரியர் சிவகாமி, சென்னை உமாபதி, விழுப்புரம் அய்யனார், பரிமளராசன், காவலாண்டியூர் ஈசுவரன், மயிலாடுதுறை இளையராசா ஆகியோர் பங்கேற்றனர்.

ஏப்ரல் 29, 30 தேதிகளில் சேலத்தில் கழகத்தின் மாநில மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு அது குறித்து நிகழ்ச்சிகள், தலைப்புகள், மாநாட்டு நோக்கங்கள், மாநாட்டுக்கான பேச்சாளர்கள், மாநாட்டுக்கு நன்கொடை திரட்டும் வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. “இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு” என்று மாநாட்டின் தலைப்பு முடிவு செய்யப்பட்டது. மாநாட்டை இளம் பெண்கள், ஆண்கள் ஏராளமாகப் பங்கேற்கும் இளைஞர்கள் மாநாடாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

இளைய தலைமுறையினரை சனாதன பார்ப்பன சக்திகளுக்கு எதிராக அணி திரட்டுவதே நோக்கம் என்று நோக்கம் வரையறை செய்யப்பட்டது. ‘கருப்பு-சிவப்பு-நீலம்’ என்ற மூன்று சனாதன எதிர்ப்பு சிந்தனைகளையும் ஒருங்கிணைத்து கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவது என்றும் நாட்டில் தலைதூக்கி நிற்கும் மதவாத ஜாதிய ஒற்றையாட்சி ஆபத்துகளை விரிவாக விளக்கும் கருத்துகளை மாநாட்டில் முன் வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா சேர்ப்பு, மாநாட்டையொட்டி மாவட்டம் தோறும் நிதி திரட்டுதல், தோழர்களுடன் கழகப் பொறுப்பாளர்கள் சந்தித்தல் பற்றியும் விவாதிக்கப்பட்டன.

இயக்க வரலாறு, திராவிடர் விடுதலைக் கழகம் கடந்து வந்த பாதைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி, பெண்களுக்கான சிறப்பு அரங்குகள், வலை ஒளி (யூடியூப்) நடத்தும் தோழர்கள் கருத்தரங்கம், கழகக் குடும்பக் குழந்தைகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளை மாநாடுகளில் இடம் பெறச் செய்ய முடிவெடுக்கப்பட்டது. தலைமைக் கழக அலுவலகத்தில் உடனடியாக மேற் கொள்ளப்பட வேண்டிய கட்டிட சீரமைப்புப் பணிகளை தலைமை நிலைய செயலாளர் தபசி. குமரனும், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ நிதிநிலைக் குறித்து விடுதலை இராசேந்திர னும் தலைமைக் குழுவில் விளக்கினர்.

சுவரெழுத்துப் பணிகளை தமிழ்நாடு முழுவதும் தொடங்கவும் மாநாட்டு நோக்கம் நிகழ்வுகளை சித்தரிக்கும் முன்னறிவிப்பு குறும் படங்களை தயாரிக்கவும், மாநாட்டுக்கான சின்னம் (டுடிபடி) உருவாக்கவும் ஆலோசிக் கப்பட்டது. மதிய உணவுக்குப் பிறகும் மாலை 5 மணி வரை தலைமைக் குழு விவாதம் நடந்தது. மாநில மாநாடு நோக்கம் குறித்து தோழர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- பெ.மு. செய்தியாளர்