உலக நாடுகளுக்கிடையே அமைதியையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஐக்கிய நாடுகள் சபை. உலகப் போர் நிகழ்த்திய அழிவுகள் அதனால் மனித சமுதாயத்திற்கு ஏற்பட்ட அவலங்கள் ஆகியவைதான் ஐ.நா. சபையின் உருவாக்கத்திற்கு காரணிகளாக அமைந்தன.

ஐ.நா. சபையில் சுகாதார நிறுவனம், பாதுகாப்பு கவுன்சில், யுனிசெப் என்னும் குழந்தைகள் நிதியம், அகதிகள் பராமரிப்பு போன்ற பல்வேற துணை அமைப்புகளும் உள்ளன.

ஐ.நா. சபையின் துணை அமைப்பான மனித உரிமை கவுன்சிலுக்கான உறுப்பினர் தேர்வு அண்மையின் நடைபெற்றது. ஜெனீவா நகரில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் 181 வாக்குகள் பெற்று இந்தியா, மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், குவைத் உள்ளிட்ட 13 நாடுகளும் மனித உரிமை கவுன்சிலின் உறுப்பினர்களாக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகளாகும். மனித உரிமை கவுன்சிலின் உறுப்பு நாடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதன் மூலம் உலகின் எந்த மூலையிலும் மனித உரிமை மீறல் நடந்தால் அதை தட்டிக் கேட்கும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது.

மனித உரிமை கவுன்சிலின் உறுப்பு நாடாக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா. சபையின் தெற்காசிய மனித உரிமை மேற்பார்வையாளர் மீனாட்சி கங்குலி "இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதால் மிகச் சிறந்த முறையில் செயலாற்றும்...'' என்று கூறியுள்ளார்.

மிகப் பெரிய மனித உரிமை பேணும் நாடாக கூறிக் கொண்டு உலக நாடுகளின் மீது வல்லாதிக்கத்தை செலுத்தி தொடர்ந்து மனித உரிமைகளை மீறி வரும் அமெரிக்கா தான் நடவடிக்கைகளை தடுப்பதில் மனித உரிமைக் கவுன்சில் துளியளவும் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. வல்லோன் வகுத்ததே சட்டம் என்பது நடைமுறையில் இருக்கும்வரை மனித உரிமைக் கவுன்சில் என்பதெல்லாம் வெத்துவேட்டுத்தான்.

- சாலிஹா மைந்தன்

Pin It