சுந்தர ராமசாமி மரணம் பற்றி காலச்சுவடு, உயிர்மை ஆகியவை வெளியிட்ட சிறப்பிதழ்கள் மற்றும் பல இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை எல்லாம் வாசித்தேன். சென்ற‘அநிச்ச’ இதழில் கடைசி நேரத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட தோழர் நா. கருப்பனின் கடிதம் உட்பட.

தமிழ்த் திரையுலகத்தின் அப்பாவாக சிவாஜிகணேசன் ஆக்கப்பட்டது மாதிரி எழுத்துலகின் அப்பாவாக ராமசாமி ஆக்கப்படுதல் குறித்த கருப்பனின் எச்சரிக்கை நூறு சதம் சரியானது. ஆனால் அதே சமயத்தில் இது குறித்த ஆதங் கத்தை அவர் வெளியிடுவதற்கு அவர் மறைந்து போன சு.ராவைத்தேடியிருக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவர் உயிருடன் வாழ்ந்த காலத்தில் இதே போன்ற வேலைகளைச் செய்து கொண்டிருந்தவர்தான். பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒரு நல்ல தலித்புகைப்படக் கலைஞனை வைத்து போட்டோ ஆல்பம் தயாரித்து வெளியிட்டவர்தான் அவர். உயிருடன் இருந்தபோது ‘அப்பா’வாக வரிக்கும் போட்டியில் கண்ணனிடம் தோற்று ஓடிப்போன ஜெயமோகனும், மனுஷ்யபுத்ரனும் ஆடிய ஆட்டமும் வைத்த ஒப்பாரியும் ஆபாசத்தின் உச்சமாக இருந்தன.

ராமசாமி பற்றி எழுதிய அத்தனை எழுத்தாளர்களும் அவரைத் தனிப்பட்ட முறையில் புகழவே செய்தனர். யாரும் அவருடைய எழுத்தின் இடம் குறித்து மதிப்பிட முயற்சிக்க வில்லை. தனிப்பட்ட முறையில் அவர் இவர்களுக்குச் சாப்பாடு போட்டிருக்கலாம், சுவையாக உரையாடியிருக்கலாம். ஒரு சிலரை உற்சாகப்படுத்தி இருக்கலாம். அவருக்கு இன்னொரு பக்கமும் இருந்தது அவர் வாழ்ந்த நாளில் அவரது கண்முன் தான் ‘காலச்சுவடு’ இதழும் அவரது ஏகபுத்ரனும் எல்லா வேலைகளையும் செய்தனர். தங்களுக்குப்பிடிக்காத எழுத்தாளர் களைப் பத்திரிகை நிறுவனங்களிலிருந்து வெளியேற்றுகிற முயற்சி உட்பட. ‘இந்தியாடுடே’யில் ஒரு காரியத்தைச் சாதிப்பதற்காக ராமசாமி டில்லி வரை சென்றார். தனக்குப் பிடிக்காதவர்களை மூர்க்கமாகவும் ஆபாசமாகவும் திட்டத் தயங்காதவராகவும் அவர் இருந்தார்.

இறுதிச் சடங்கு இரணியல் செட்டியார்களது மயானத்தில் நடத்தப்பட்டதை அவரது புகழ்பாடிகள் மகா பெரிய விஷயமாகப் பேசுகின்றனர். வாழ்ந்த காலத்தில் தனது குடும்பத்திற்குள்ளோ, வெளியிலோ இறுக்கமான பார்ப்பனப் பிடிப்புகளை விடாதவர் அவர் என்பது சிந்திக்கத்தக்கது. நாகர்கோயிலைச் சேர்ந்த கொடிக்கால் செல்லப்பா என்கிற கம்யூனிஸ்ட் தோழர் ஒருவர் இஸ்லாமைத் தழுவினார். ஒரு இலக்கியச்சந்திப்பிற்கு வந்த அவரிடம் ராமசாமி எப்படி நடந்து கொண்டார். அது அந்தத்தோழரின் மனத்தை எந்த அளவிற்குப் புண்படுத்தியது என்பதை அவரே தனது ‘உங்கள் தூதுவன்’ இதழில் எழுதியிருந்தார். நிறப்பிரிகையில் அது மறுபிரசும் செய்யப்பட்டது சிலருக்கு நினைவில் இருக்கலாம்.

ஒரு வணிகராகவும் கூட வணிகர்களுக்குரிய எல்லாவிதமான அடாவடிகளுடன் அவர் செயல்பட்டுவந்தததை நாகர்கோயில் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். கல்வி குறித்து அவரது உரையாடல் நூலை விமர்சிக்கப் பேராசிரியர் கல்யாணி மறுத்தது குறித்து நான் ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தேன். கல்யாணிக்கும் எனக்குமான தொடர்பு சற்றே விடுபட்டிருந்ததை அவரது விசுவாசிகளின் மூலம் அறிந்த ராமசாமி கல்யாணியைப் பல முறை தொடர்பு கொண்டு, கெஞ்சி அதற்கு ஒரு மறுப்பு வெளியிட முயற்சித்தார். கல்யாணிக்கு வேறுசில அழுத்தங்களும் அவ்விஷயத்தில் இருந்தன. நல்ல வேளையாகக் கல்யாணி கூறியதற்குச் சாட்சியாக இருந்த பத்திரிகையாளர் உறுதியாக இருந்ததால் ராமசாமியின் முயற்சி தோற்றது. அவரது நிறைவேறாத ஏக்கங்களில் ஒன்றாக அது அமைந்தது. இப்படி நிறையச் சொல்லலாம்.

இதெல்லாம் நம் எழுத்தாளர்களுக்குத் தெரியாதா? அவர்களின் கண் முன் நடைபெற்றவை இல்லையா இவை?

நமது எழுத்தாளர்களுக்கு விரிந்த அனுபவங்கள், பலருடன் பழக்கங்கள் கிடையாது என்பதே இதிலிருந்து வெளிப்படுகிறது. மொத்தம் இவர்களுக்குப் பழக்கமானவர்களே பத்துப் பதினைந்து பேர்கள்தான் இருப்பார்கள் போலும். விரிந்த அனுபவமற்ற இவர்களின் எழுத்துக்களை எப்படி நம்புவது?

ஒரு பண்ணையடிமை முதன் முதலில் நிலப்பிரபுவின் வீட்டிற்குப்போன அனுபவத்தையும், கதவு வழியாக எட்டிப் பார்த்ததையும் சொல்வதைப்போல ஒருவர் அவரைச் சந்தித்ததை எழுதுகிறார். மற்றவர்களுக்கும் அவர் வீட்டில் காப்பி சாப்பிட்டது, சோறு சாப்பிட்டது, தூங்கியது... ஜெயலலிதா அவரது அன்னதான திட்டத்தின் கீழ் தமிழ் எழுத்தாளர்களைச் சேர்த்து கொள்ளலாம். மத்திய அரசு இவர்கள் எல்லோரையும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களாக அறிவித்து ஒரு ‘கார்டு’ கொடுக்கலாம் அந்தக் கார்டை காட்டினால் எந்த ஓட்டலும் அவர்களுக்குத் தயிர் சாதம் கொடுக்க வேண்டும் என உத்திரவிடலாம்

Pin It