மனிதனின் மேல் மதம் கொண்டிருக்கிற அதிகாரத்தை நிறுவ இன்னொரு எடுத்துக்காட்டாக ரோமிலுள்ள பிளபியன்களின் பிரச்சனையை எடுத்துக் கொண்டு என் கருத்தை மேலும் தெளிவுபடுத்த முயல்கிறேன். ரோமானிய குடியரசின் கீழ் இருந்த மேல்மட்ட செயற்குழுவில் தங்களுக்கும் ஒரு பங்கு வேண்டும் என்று பிளபியன்கள் போராடினர். பிளபியன்களின் சட்டபேரவையான கமிட்டியா சென்சாரியாட்டா என்ற சபையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் பிளபியன் கான்சல் ஒருவர் நியமனம் செய்யப்படுவதற்கான உத்திரவாதத்தை பெற்றார். நிர்வாகத்தை நடத்தி செல்வதில் பாட்ரிசியன் கான்சல்கள் பிளபியன்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக நடந்துவந்தார்கள் என எண்ணியதால் தங்களுக்காக சொந்த கான்சல் தேவை என உணர்ந்தனர். ரோமானிய குடியரசு சாசனத்தின் படி ஒரு கான்சலின் நடவடிக்கையை தடை செய்வதற்கான அதிகாரம் மற்றொரு கான்சலிடம் இருந்தது.

எனவே பிளபியன்கள் பெரியதொரு வெற்றியை அடைந்தனர் என்பது எளிதாக விளங்கும். ஆனால் உண்மையில் அவர்கள் ஆதாயம் ஏதும் அடைந்தனரா? இல்லை என்றே சொல்ல வேண்டும். பாட்ரிசியன் கான்சலைச் சார்ந்திராமல் தனித்து செயல்படக்கூடிய உறுதியான ஒரு பிளபியன் கான்சல் ஒருவரை ஒருபோதும் பிளபியன்களால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. சாதாரணமாக பிளபியன்கள் கான்சல் ஒருவரை பிளபியன்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்கிற சூழலில் ஒரு சரியான திறமையான கான்சலை அவர்களால் தேந்தெடுக்க முடிய வேண்டும். ஆனால் இது முடியவில்லை ஏன்? உறுதியான ஒரு பிளபியனை தங்களுடைய கான்சலாக தேர்ந்தெடுக்க பிளபியன்கள் முடியாமல் போனது ஏன்? மனித மனங்களில் மேல் மதம் எந்தளவுக்கு ஆட்சி செலுத்துகிறது என்பதைத்தான் இந்த கேள்விக்கான விடை வெளிப்படுத்துகிறது. ரோமானிய பொதுமக்களின் மத நம்பிக்கையின் படி டெல்பி என்னும் இடத்தில் குறி சொல்பவரால் தேவதைக்குச் சம்மதம் ஆனவராக அறிவிக்கப்படாத எந்த ஒரு மனிதனும் ஒரு அதிகாரியாக தன்னுடைய கடமையை ஆற்ற முடியாது, டெல்பி தேவதையின் கோவில்களில் பொறுப்பாளராக இருந்த பூசாரிகள் அனைவரும் பாட்ரிசியன்களே.

பாட்ரிசியன்களுக்கு எதிரான உறுதியான ஒரு கான்சலை - தற்போது இந்தியாவில் வழங்கி வருகிறபடி ‘இனப்பற்றுள்ள ஒரு கான்சலை - பிளபியன்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கான்சல்’ தேவதைக்கு சம்மதம் ஆனவர் அல்ல என்று அறிவிப்பதே குறி கூறுவோரின் மாறாத வழக்கமாக இருந்தது.

அம்பேத்கர்

Pin It