அதிவேக இணைய சேவைகளை வழங்குவது 5ஜி அலைக்கற்றை. இதற்கான ஏலம் ஒருவாரமாக நடந்தது. இதன் மூலமாக அரசுக்கு 4.3 இலட்சம் கோடி ரூபாய் வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏலம் போனது 1.5 இலட்சம் கோடி ரூபாய்க்கு மட்டும் தான். மிகப்பெரும் இழப்பு அரசுக்கு ஏற்பட்டது. இது எப்படி நிகழ்ந்தது ?

 பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, அய்டியா, அதானி ஆகிய பெரும் குழுமங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, ஏலத்தொகை உயராமல் பார்த்துக் கொண்டன. இதற்கு ஒன்றிய ஆட்சி துணை போனது என்ற குற்றச்சாட்டுகள் இணையதளத்தில் வந்து கொண்டு இருக்கின்றன. மற்றொரு செய்தியையும் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் ;

2010ஆம் ஆண்டு ஒன்றிய அமைச்சரவையில் ஆ.இராசா தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது 2ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெற்றது. அப்போது 1 இலட்சத்து 76ஆயிரம் கோடி ருபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு விட்டது என்று தணிக்கைக் குழு தலைவராக இருந்த வினோத் ராய் குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தையே நடத்த விடாமல் பாரதிய ஜனதா கட்சி பல நாட்கள் முடக்கி போட்டது ; ஏடுகள் கூக்குரல்கள் போட்டன ; இராசா கைது செய்யப்பட்டார். இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

 ஆ.இராசா தனக்கான வழக்கறிஞராக தானே வாதாடினார். விசாரித்த நிதிமன்றம் ‘இந்தக் குற்றச்சாட்டில் ஒரு ஆதாரமாவது கிடைக்காதா என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்திருந்தேன் ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை, இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு’ என்று கூறி தள்ளுபடி செய்தது.

தவறான தகவலை நீதிமன்றத்தில் தந்ததற்காக வினோத் ராய் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார்.

அலைக்கற்றை மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடி என்று கூறப்பட்டது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. தற்போது மொத்தமாக 51,236 மெகாஹெட்ஸ் அலைக்கற்றை ரூ.1.5 லட்சம் கோடிக்கு ஏலம் போயிருக்கிறது.

ஜியோதான் அதிகபட்ச அளவில் ஏலம் எடுத்துள்ளது. மொத்தமாக, ஜியோ ரூ.88,078 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும், வோடாஃபோன், அய்டியா ரூ.18,799 கோடிக்கும், அதானி டேட்டா நெட்வொர்க் ரூ 212 கோடிக்கும் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்துள்ளன.

2ஜி அலைக்கற்றைக்கே 2010ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டு விட்டது என்று கூக்குரல்கள் போட்டார்கள், இன்றைக்கு 5ஜி அலைக்கற்றையின் மொத்த வருவாயே 1.5 இலட்சம் கோடி தான். ஆனால், ஏடுகள், ஊடகங்கள் கள்ள மவுனம் சாதித்துக் கொண்டிருக்கின்றன. ஏன் இந்த கள்ள மவுனம் ?

- விடுதலை இராசேந்திரன்

Pin It