ஆசிரியர் பக்கங்கள்

மணிரத்தினத்திற்கு மரியாதை 

வெனிஸ் நகரில் செப்டம்பர் மாதம் 87வது திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இதில் இந்திய சினிமாவுக்குச் சிறந்த திரைப்படங்களை அளித்த மணிரத்னம் பாராட்டுப் பெறவிருக்கிறார். அவருக்குப் பரிசளிக்கப் போவதாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரியாதைக்குரிய பட்டமும் பரிசும் இதுவரை பிரபல இயக்குநர்கள் தாகேசி சிட்டானோ, அப்பாஸ்கியாரோஸ்டமி, சில்வஸ்டர் ஸ்டால்லன் ஆகிய மூவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இப்போது மணிரத்னம் பெறுகிறார். இந்தியாவின் இதிகாசங்களிலிருந்து கருவை எடுத்து அதை சமகாலக் கதைகளாக்கித் திரைப்படமாக்குவதில் மணிரத்னத்தின் திறமை மகத்தானது. வெனிஸ் திரைப்பட விழாவில் அவரது ராவணன் திரைப்படம் வெளியிடப்படவுள்ளது. விழா செப்டம்பர் 1 முதல் 11 முடிய நடைபெறுகிறது. இது இந்திய, தமிழகத் திரையுலகுக்குப் பெருமையளிக்கும் செய்தியாகும்.

மாவோயிஸ்ட் அட்டூழியம் தொடர்கிறது. 

ஏற்கெனவே 77 காவலர்களைக் கொலை செய்த மாவோயிஸ்டுகள் தற்போது பஸ்மீது குண்டு வீசி 56 பொது மக்களைக் கொலை செய்துள்ளனர். மேற்குவங்கம், சட்டீஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களில் இந்தக் கொலைக் கும்பல் இதுவரை 450 மார்க்சிஸ்ட்டுத் தோழர்களைக் கொலை செய்துள்ளது.

மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் வலுவான கூட்டணி உள்ளது. மம்தா பானர்ஜியின் கூலிப்படைபோல் செயல்பட்டு மார்க்சிஸ்ட் தலைவர்களையும் ஊழியர்களையும் மாவோயிஸ்டுகள் கொலை செய்து வருகிறார்கள். 2011ல் நடைபெறவுள்ள மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் மாவோயிஸ்டுகளைப் பயன்படுத்தி அங்கு மார்க்சிஸ்ட் ஆட்சியை வீழ்த்தி விடலாம் என்று மம்தா மனப்பால் குடிக்கிறார். மம்தாவின் உத்தரவுக்குக் கீழ்படிந்து உள்துறை அமைச்சர் சிதம்பரம் மாவோயிஸ்டு அட்டூழியங்களைப் புன்னகையோடு சகித்துக் கொள்கிறார். இந்த சகிப்புத் தன்மை மேற்குவங்கத் தேர்தல் வரை தொடரும் என்று தெரிகிறது.

இமாலய ஊழல்கள்

மத்திய அரசில் அமைச்சர்களின் ஊழல்களும் அதிகாரிகளின் ஊழல்களும் பத்தாயிரம் கோடி, ஒரு லட்சம் கோடி என்ற அளவுக்கு உயர்ந்து விட்டது. அண்மையில் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கேதான் தேசாவின் வீட்டைச் சோதனை செய்ததில் 1800 கோடி ரூபாய் ரொக்கமும், ஒன்றரை டன் தங்கமும் பிடிபட்டது. மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க 30 முதல் 50 கோடி வரை லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் லஞ்சம் பெறப்பட்டுள்ளது. இதில் அமைச்சராக இருந்தவர், தற்போது இருப்பவரின் வீடுகள் சோதனை செய்யப்படவில்லை.

அதேபோல் அமைச்சர் ராசா மீது 1.20 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி பல ஆயிரம் கோடி கமிசன் பெற்ற புகார் நாடாளுமன்றத்தையே அதிர வைத்தது. ராசா பதவி விலக வேண்டுமென்று அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்தன. ஆனால் போபோர்ஸ் புகழ் சோனியாவும், அவரது பொம்மையான மன்மோகனும் இதற்கெல்லாம் அசையவே இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவைப் பாதுகாப்பதற்கு கருணாநிதி தலைகீழாய் நிற்கிறார். கடந்தகாலத்தில் கருணாநிதி மீது நீதிபதி சர்க்காரியா கமிசன் விசாரணை நடத்தியபோது தன்னை மிகவும் பிற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கியதாய்க் கூறினார்.

இப்போது ராசாவை வேறு எந்த வகையிலும் காப்பாற்ற முடியாது என்பதால் ராசாவின் சாதியை இழுக்கிறார் கருணாநிதி. கக்கன் போன்ற ஒப்பற்ற தியாகிகள் அமைச்சராக இருந்து புகழோடு மறைந்தவர்கள் எங்கே - ராசா எங்கே? ஒவ்வொரு குற்றவாளியும் சாதியைத் துணைக்கு அழைத்துக் கொள்ள முடியும் என்றால் குற்றவியல் சட்டத்தையே குப்பைத் தொட்டியில் எறிய வேண்டியதுதான்.

சோனியா குடும்ப ஆட்சி ஊழலில் திளைத்து நிலைக்க பலரது இமாலய ஊழல்கள் மறைக்கப்படுகின்றன. மக்களின் வாழ்வும், தேசத்தின் செல்வமும் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 3ஜி ஏலத்தில் 70 ஆயிரம் கோடி மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு ராசா ஊழலால் கிடைக்கவில்லை என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் ஊழலில் மேலும் சில மத்திய அமைச்சர்கள் சரத்பவார், பிரபுல்பட்டேல் போன்றவர்களும் உள்ளனர். ஊழல்பேர்வழிகளை நீக்கினால் ஆட்சி கவிழ்ந்துபோகும் என்பது சோனியாவுக்குத் தெரியும்.


Pin It