புரட்சிக் காற்றே
நினைவிருக்கிறதா என்னை?
சக்தியைப் பாடி
பாரதி பக்தியைக் காட்ட நினைத்த பாட்டனே
எங்கள் பாரதிதாசனே

செந்தமிழ் நாடென்னும்
தேமதுரப் பாட்டெழுதிய
உன் பாரதி
பாரத எல்லைக்குள் நம்மைப்
பத்திரமாகப் பூட்டிவைத்தான் - அதையும்
பட்டா போட்டு நம்ப வைத்தான்.

சிங்களத்தை தீவு என்று
பிரித்துப் பார்த்தது அவன் பூகோளம்
நான் தான்
பகல்வே­மிட்ட
இந்திய இருட்டை
உனக்கு அடையாளப்படுத்தினேன்.
கஞ்சா மயக்கத்திலிருந்த
காரிருளை மீட்டுடெடுத்தேன்
அதையும்
உன் கவிதையாலேயே
செய்துமுடித்தேன்.

தமிழனின் ஆரியமாயை காமாலைக்கு
சஞ்சீவிப் பர்வதத்தின்
பச்சிலைச் சாறெடுத்து
பத்தியமில்லாமல்
வைத்தியம் பார்த்த
புரட்சிக் காற்றே!

கட்டைவிரலைக் காணிக்கையாக்கிய
ஏகலைவனின் எழுத்தாணியைக்
கடனாகப் பெற்றாயோ
காணிக்கையாய்ப் பெற்றாயோ
நீ தான் - உன்
குருவைத் தாண்டி வந்தாய் - தமிழர்
குலம் வாழ - அவர்
குருகுலம் தாண்டி நின்றாய்.
..............
தென் திசையைப் பார்க்கச் சொன்னாய்
அன்றந்த இலங்கையினை
ஆண்ட மறத்தமிழன்
என் தமிழர் மூதாதை
என் தமிழர் பெருமான்
இராவணன் காண் - என்று
நம் தமிழர் வரலாற்றை
இந்திய எல்லைக்கு அப்பாலும்
விரித்தாய் - அதனாலேயே
எங்கள் இதயத்தில்
இடம் பிடித்தாய்.
................
திங்களைப் போல் செங்கதிர்போல்
தென்றலைப் போல் செந்தமிழ்போல்
வாழ்க வாழ்கவே எங்கள்
வளமார் திராவிட நாடு
வாழ்க வாழ்கவென
சிறுத்தைகளைப் பாடவைத்த
சிம்புட் பறவையே
சிறகை விரி...
தேடு.
இந்திய முகங்களுக்குள்
தன் சுயமிழந்து போன
என்னையும் உன் மண்ணையும்.
..............
எங்கள் போர்முரசே
தென்திசையைப் பார்த்துத்
தோள்களெல்லாம் பூரித்ததாய்
ஆனந்தப் பட்டாயே
உன்னைப் போலவே
புறநானூறு பாடிய எம்
அகநானூற்று அவ்வைகளின்
கல்லறைகளிலிருந்து
வெடிக்கிறது
உன் கவிதைகள் காணாத
கண்ணிவெடிகள்
எம் தாயின் கண்ணீர்வெடிகள்
ரத்தம் தோய்ந்த புத்தனின்
கரங்கள்
எழுதுகிறது
தமிழன் என்றால் அகதி என்று.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று
முழக்கமிட்ட போர்முரசே!
உன் கவிதைகளைக் கனவுகளை
அக்கினிக்குஞ்சாய் நான்
அடைகாத்தேன்
உன்னைப் பிரசவிக்காமலேயே
தமிழ் அமுதூட்டிய
உன் ஆதித்தாயின்
வயிற்றில் பிறந்த காரணத்தாலேயே
அகதியானேன்.
உலக அரங்கில்
அமைதிப் புறாக்கள் பறக்கும்
ஆகாயத்தின் கீழ்
கதறக் கதற
ரத்தம் சொட்டச் சொட்ட
நிர்வாணமாய்க் கிடக்கிறது
எங்கள் வாழ்வும்
தமிழன் வளமும்.
.................
தமிழ்த் தேசியத்தைத்
தாங்கிப் பிடித்தவனே
உன் கனவுகளைச் சுமந்த
என் கருவறைகள் மீது
காந்தி தேசத்தின் ராமபாணம்.
வெடித்துச் சிதறிய - எம்
பனிக்குடத்தின் சாட்சியாக -
முலை வீசி எறிந்த - எம்
கொற்றவை சாட்சியாக -
உங்கள் ஸ்ரீஸ்ரீராமனுக்கு
 உயிர்ப்பிச்சை அளித்த
எங்கள் முப்பாட்டன்
இராவணன் சாட்சியாக
கடல் கடந்து ஒலிக்கிறது
‘கொலை வாளினை எடடா
கொடியோர் செயலறவே..
புதியதோர் உலகம் செய்வோம்’

தமிழச்சியின் கத்தி
ரத்தம் கீறி எழுதுகிறது
என் போர்வாளே..
பாவேந்தன் கனவல்ல - அவன்
பாடல்களும் கனவல்ல.

- புதிய மாதவி, மும்பை

Pin It