kalam

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஜூலை 27ஆம் தேதி ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு சாய்ந்துவிட்டார். வேறு எந்த குடியரசுத் தலைவருக்கும் மக்களிடம் கிடைத்திடாத அனுதாபமும் இரங்கல் உணர்ச்சியும் கலாம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. அரசு அமைப்புகளும் ஊடகங்களும் முழுமையான அர்ப்பணிப்புடன் தங்கள் துயரங்களை வெளிப்படுத்தின. கிராமம், நகரம் வேறுபாடின்றி தமிழகம் முழுதும் கலாமுக்கு அஞ்சலி பதாகைகள் கண்ணீர் செலுத்தின. இது ஒரு வித்தியாசமான நிகழ்வுதான்.

பல அரசியல் தலைவர்களின் மரணங்களை தமிழகம் சந்தித்திருக்கிறது. செய்தி வந்தவுடனேயே தொண்டர்களில் சிலர் வன்முறைகளைக் கையில் எடுத்துக் கொள்வார்கள். கடைகளை அடைக்கச் சொல்லி தாக்குதல் நடக்கும்; பேருந்துகள் கல்வீச்சுகளுக்கு உள்ளாகும்; மூட மறுக்கும் கடைகள் சூறையாடப்படும்; தமிழ் நாட்டின் இந்த ‘அரசியல் கலாச்சாரம்’ அப்துல் கலாமின் மரணத்தில் விடைபெற்றுக் கொண்டது. அனைத்துமே அமைதியாக நடந்து முடிந்தன. கடைகளை தாமாகவே முன்வந்து மூடி, கலாமுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்கள். அரசியல் தலைவர்களின் நேர்மையில் மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்ற உண்மையும், கலாம் மரணத்துக்கு மக்கள் காட்டிய இரங்கல் உணர்த்தி நிற்கிறது.

கலாம் - ஒரு ஏழை படகோட்டியின் மகனாகப் பிறந்தார்; வறுமையில் வாடினார்; உழைத்தார்; படித்தார்; விஞ்ஞானியானார்; குடியரசுத் தலைவர் என்ற அதிகாரத்தின் உச்சத்தைத் தொட்டார். எதிர்ப்புகளே இல்லாத பொதுமைக்கான அடையாளத்தையும் பெற்றார்.

இந்திய அரசியலில் எல்லோருக்கும் இசைவான எதிர்ப்புகளே இல்லாத ஒரு ‘முகமாக’ கலாம், எப்படி மாற முடிந்தது? இதை சாத்தியப்படுத்தியது எது? கலாம் இரங்கல் நினைவின் ஊடாக அலசிப் பார்க்க வேண்டிய கருத்துகள் இவை:

பிறப்பால் கலாம் ஒரு முஸ்லிம். ஆனால், தனது மத அடையாளத்துக்கு அழுத்தம் தராதவராகவே இருந்தார். மாறாக, சமூகத்தில் கட்டமைக்கப்பட்டு மக்களின் பொதுப் புத்தியில் திணிக்கப்பட்ட பார்ப்பனியப் பெருமிதங்களோடு தன்னை இணைத்துக் கொண்டார். தமிழ் மறையான திருக்குறளை ஏற்றார். அதற்கு நேர் எதிரான பகவத் கீதையையும் போற்றினார். காஞ்சி சங்கரமடத்துக்கும் போனார். குடியரசுத் தலைவரான தனக்கு இருக்கை தரப்படாததையும் கருதிப் பார்க்காமல் நின்று கொண்டே தரிசனம் பெற்றார். திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவின் பார்ப்பனியம் பெருமைக்குரியதாக அடையாளப்படுத்தியிருக்கும் குறியீட்டு நிறுவனங்களாக இந்த இரண்டையும் குறிப்பிடலாம்.

இஸ்லாமியர்களாக இருந்தாலும், பார்ப்பனிய கலாச்சார அடையாளங்களோடு சமரசம் செய்து கொண்டால் அவர்கள் போற்றுதலுக்குரிய பெருமக்கள்; உண்மையான தேசபக்தர்கள் - கலாம் இதற்கு உடன்பட்டார். எனவே எல்லோருக்கும் ‘பொதுமை’ யானார்.

இரண்டாவது, இந்தியாவில் ஜாதி, தீண்டாமை, சமூக ஒடுக்குமுறைகள், வர்க்க ஏற்றத் தாழ்வுகள், தேசிய இனப் பிரச்சினைகள் என்று பிரச்சினைகள் ஏதுமில்லாதது போலவும், இந்தியாவில் வாழும் அனைவருமே ‘இந்தியர்களாகி’ - இந்தியா என்ற தேசம் ஒருமைப்பட்டுவிட்டதாகவும், இதை வல்லரசாக்குவதே அடுத்த இலக்கு என்றும், பார்ப்பனியம் புனைந்துள்ள பொய்மைகளை, அப்படியே எதார்த்தமாக கலாம் ஏற்றுக் கொண்டதாகும்.

இந்த நாட்டில் புரையோடிக் கிடக்கும் ஆழமான பிரச்சினைகளில் அது சமூக நீதியாகட்டும், ஜாதி தீண்டாமை வெறியாகட்டும்; பன்னாட்டு வணிகமா கட்டும்; இயற்கை வளங்கள் சுரண்டலாகட்டும் – எது குறித்தும் அப்துல்கலாம் கருத்து தெரிவிக்காத மனிதராகவே இருந்தார்.

கலாம் முன் வைத்த ‘தேசபக்தி’, தேசத்தின் வலிமையை பேசியது, இராணுவ வலிமையையும், அணு குண்டுகள் தயாரிப்பையும், அணுமின்சார உற்பத்தியையும் நியாயப்படுத்தியது; பார்ப்பனிய அரசுக்கு இதுதானே வேண்டும்? அவரை கொண்டாடி மகிழ்ந்தது.

மக்கள் பொதுப் புத்தியில் தனக்கான இடத்தை உறுதி செய்வதற்கு அப்துல்கலாமுக்கு பேராயுதமாக இருந்தது அவரது எளிமை. அரசு அமைப்பு தனக்கு வழங்கிய அதிகாரங்களுக்குள் முடக்கிக் கொள்ள விரும்பாத அவர், துணிவாக அவற்றை வெறுத்து ஒதுக்கி எளிமையை வாழ்வாக்கிக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையை இல்லாதவர்களுக்கு திறந்து விட்டார். மாளிகையை விட்டு வெளியேறிய பிறகும், சம்பிரதாயங்களை தகர்த்து ஆசிரியராகப் பணி தொடர்ந்தார். குழந்தைகள், இளைஞர்களுடன் உறவாடினார். மக்கள் நெஞ்சத்துக்குள் கலாம் நுழைவதற்கான கதவுகளை அவரது இந்த எளிமை அகலமாகவே திறந்து வைத்தது.

ஆனால், எளிமையும், நேர்மையும் உயர் பண்புகளும் மட்டுமே இந்த பார்ப்பனிய அரசு அமைப்புக்குள் தலைவர்களை புகழின் உச்சிக்கு ஏற்றி விடுமா? அதுதான் இல்லை. இந்த பண்புகள் பார்ப்பன அரசு கட்டமைப்புக்குப் பயன்பட்டால் மட்டுமே இது சாத்தியம்.

இதே எளிமை-நேர்மை-அறிவாற்றல்களில் மேன்மையுற்று, குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்தவர்தான் கே.ஆர். நாராயணன். ஆனால், அப்துல்கலாமைப் போல் ஏன் அவர் ‘ஆராதிக்கப்படாமல்’ போனார்? ஆழ்ந்து, அமைதியாக சிந்தித்தால் ஒரு உண்மை புலப்படும்.

கே.ஆர். நாராயணன், பார்ப்பன அரசமைப்போடு தன்னை கரைத்துக் கொள்ள தயாராக இல்லை. சமூகநீதிக்காக அவர் பேசினார். அரசியல் சட்டத்துக்கு மதச்சாயம் பூசுவதற்கான முயற்சிகள் நடந்தபோது, அவரது போர்க்குரல் கேட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகள், ஆளுநர் அதிகார மய்யங்களால் கலைக்கச் செய்த முயற்சிகளுக்கு அவர் உடன்படவில்லை; சங்கரமடம் பக்கம் திரும்ப மறுத்தவர். இப்படி ஏராளமாகப் பட்டியலிட முடியும்.

அதே நேரத்தில், கலாம் - பார்ப்பனியக் கட்டமைப்பிலிருந்து அவ்வப்போது விலகி நின்ற புள்ளிகளும் இருக்கவே செய்தன. அவரது தூக்குத் தண்டனை எதிர்ப்பைக் குறிப்பிடலாம். (ஆனாலும் தனஞ்செய் சட்டர்ஜி கருணை மனுவை நிராகரித்தவரும் கலாம் தான்). ஆனால், தமிழ் வழிக் கல்வி பற்றிய அவரது கருத்தைக் கூறலாம். கலாமுக்கு ஊடகங்களும் அரசு நிறுவனங்களும் சூட்டிய புகழ்மாலைகளில் இவை இடம் பெறவில்லை; சருகுகளாக உதறிவிடப்பட்டு விட்டன. அவரது உடல் அடக்கம் செய்த அதே நாளில் கலாமின் புகழ் பாடிக்கொண்டே அவரது கொள்கைக்கு எதிராக யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார். கலாமின் உடலோடு அவர் வலியுறுத்திய கருத்தும் சேர்த்தே தான் புதைக்கப்பட்டது.

நேர்மையும் எளிமையும் தியாகமும் நிறைந்த வாழ்க்கைகளோடு எதிர்நீச்சல் போட்ட எத்தனையோ தலைவர்கள் அனைத்து மக்களுக்கான ‘முகமாக’ மாற முடியவில்லை. காரணம், அவர்கள் முகமூடிகள் அணிய மறுத்தார்கள். ‘உத்தமர்’களாக, ‘புனிதர்’களாக ஏற்றிப் போற்றப்படும் பெருமைகள் கிடைக்க வேண்டுமானால் பார்ப்பனியமும் அரசும் புனைந்துள்ள அரசியல் கலாச்சார அடையாளங்களுக்குள் பொருத்திக் கொண்டால் மட்டுமே முடியும். கலாம், அதில் கச்சிதமாக பொருந்தினார். புகழும் பெருமையும் காலடியில் வந்து சேர்ந்தது.

ஒருவரின் மரணத்துக்கான இரங்கல் செய்தியில் புகழ்ச்சிகள் மட்டுமே இழையோட வேண்டியது அவசியமில்லை; ஆய்வுகளுக்கும் அதில் இடமுண்டு. பெரியார் விட்டுச் சென்ற பெருமைக்குரிய மரபு இது!

Pin It