ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து பதவிக்கு வந்த நரசிம்மராவ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். அவரது தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சியில் தான் ராஜீவ் கொலை தொடர்பான பல கோப்புகள் ‘மாயமாய்’ மறைந்து போயின. “அய்யோ, இளம் தலைவரை கொன்றுவிட்டார்களே” என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் காங்கிரசார், ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதில், எந்த கவலையோ, அக்கறையோ காட்டியதில்லை. ‘கோப்புகள் காணாமல் போய் விட்டது’ என்று கூறி, அதிலே அடங்கியிருந்த பல உண்மைகள் வெளியே வந்து விடக் கூடாது என்று காங்கிரஸ் ஆட்சி மூடி மறைத்தது. சர்வதேச ஆயுத வியாபாரிகளிடம் நெருக்கமாகத் தொடர்பு கொண்டு, ராஜீவ் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாகக் கருதப்படும் தனது நெருக்கமான நண்பரான சந்திரசாமியைக் காப்பாற்றவே நரசிம்மராவ் இந்தக் கோப்புகளை அழித்தார் என்று ‘அய்.பி.’ மற்றும் ‘ரா’ உளவுத் துறை அதிகாரிகள், ஒப்புக் கொள்வதாக ‘அவுட் லுக்’ பத்திரிகை (24.11.1997) எழுதியது.

கோப்புகளை அழித்தது மட்டுமல்ல, கோப்புகளையே திருத்தியும் எழுதினார்கள். அரசுக் கோப்புகளை இப்படி திருத்துவது சட்டப்படி குற்றம். ஆனால், நரசிம்மராவ் ஆட்சியில், அதுவும் நடந்தது. அதற்கு உடந்தையாக செயல்பட்டவர் யார் என்பது தான் வியப்புக்குரியது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் கருணை மனுக்களை நிராகரித்து தூக்கில் போடுவதற்கு பரிந்துரை செய்த, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தான், கோப்பைத் திருத்துவதற்கு துணை நின்றவர். ஜெயின் ஆணையத்தின் விசாரணையில் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவை செயலாளராக இருந்த வினோத் பான்டே என்ற அதிகாரி, ஜெயின் ஆணையத்தின் முன் சாட்சியமளிக்க வந்தார். அவரிடம், ராஜீவ் பாதுகாப்பு தொடர்பான ஒரு கோப்பைக் காட்டி, “இது நீங்கள் எழுதியது தானே” என்று சாட்சியத்தின் போது கேட்டார்கள். கோப்பைப் படித்துப் பார்த்த அந்த அதிகாரி திடுக்கிட்டுப் போனார். “ராஜீவ் காந்திக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது பற்றி நான் எழுதிய குறிப்புகள், இந்தக் கோப்பில் திருத்தப்பட்டுள்ளன” என்று நேரடியாகவே அவர் குற்றம் சாட்டினார். ஜெயின் ஆணையம், உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டது. அப்போது உள்துறை இணை அமைச்சர் ப. சிதம்பரம், “ஆமாம், உண்மைதான். வினோத் பாண்டே எழுதிய கோப்பு காணாமல் போய் விட்டதால், அதைத் தேட முடியாததால், நாங்களே புதிதாக ஒரு கோப்பை தயாரித்தது உண்மைதான்” என்று ஜெயின் ஆணையத்திடம் ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டார். (அவுட் லுக் 24.11.1997)

கோப்புகள் திருத்தப்பட்டது மட்டுமல்ல, கோப்புகள் தொலைக்கப்பட்டதும் உண்டு. இராஜீவ் மரண விசாரணையில் அவ்வளவு ‘கவலை’ எடுத்துச் செயல்பட்டனர் அதிகாரிகள். $குமார் என்ற சி.பி.அய். அதிகாரி, ராஜீவ் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக வெளிநாடுகளுக்கு சென்றார். இலண்டன் வழியாக இந்தியாவுக்கு திரும்பும்போது, இலண்டன் ஹீத்துரு விமான நிலையத்தில், இந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களைக் கொண்டிருந்த அவரது கைப் பெட்டி காணாமல் போய்விட்டது. வெளிநாடுகளுக்கு சென்று வழக்கு விசாணை தொடர்பாக தகவல்களடங்கிய ஆவணங்களை விமான நிலையத்திலிருந்து திருடிச் சென்றது யார்? ஏன் திருடிச் செல்ல வேண்டும்? திருட்டு, அந்த அதிகாரிக்கு தெரியாமல் நடந்ததா? அல்லது திருட்டுக்கு அவரும் உடந்தையா? இவ்வளவுக்கும் பிறகு, அந்த அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு புலனாய்வுத் துறையிடமிருந்து பதிலே இல்லை. ஹீத்துரு நகரிலுள்ள காவல் நிலையத்தில் ஒரு புகாரை மட்டும் பதிவு செய்து விட்டு $குமார், இந்தியா திரும்பி விட்டார்.

ராஜீவ் கொலை வழக்கு விசாரணை வெளிப்படையாக நடத்தப்படவில்லை. காந்தி கொலை வழக்கு விசாரணை, இந்திரா கொலை வழக்கு விசாரணை வெளிப்படையாக - பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் முன் நடத்தப்பட்டன. ஆனால், ராஜீவ் கொலை வழக்கு விசாரணை ரகசியமாகவே நடத்தப்பட்டது. அதுவும் கறுப்புச் சட்டமான ‘தடா’ சட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்களிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அந்த ஒப்புதல் வாக்குமூலங்களே குற்றத்துக்கான சாட்சிகளாக மாற்றப்பட்டன. தற்போது தூக்குத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தனக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை ‘தடா’ நீதிமன்றத்திலேயே மனுவாகத் தந்துள்ளார். (11.2.1992) கொடூரமான அந்த சித்திரவதைகளை விரிவாக இங்கே எழுதிட இயலாது என்பதால் உதாரணத்துக்கு ஒரு சிறு பகுதி:

“ஆய்வாளர்கள் மாதவன், ரமேஷ் ஆகியோர் முழங்காலை மடக்கியபடி கைகளை நீட்டியவாறு நிற்கச் சொல்வர். (அதாவது இருக்கையில் அமர்வது போன்ற பாவனையில்) அவ்வாறு நின்று கொண்டே இருக்க வேண்டும். அப்போது, எனது பின்னங்கால்களில் (ஆடுதசை) கழியால் அடிப்பார்கள். ஆய்வாளர் செல்லத்துரை ஒரு பிவிசி பைப்பில் சிமெண்ட் அடைத்து, அதன் மூலம் எனது கை முட்டிகளை நீட்டச் சொல்லி அடிப்பார். இதில் ஆய்வாளர்கள் மாதவன், செல்லத்துரை ஆகியோர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் புகழ் பெற்றிருந்தனர். மற்றவர்களும் பயன்படுத்துவது உண்டு, என்றாலும் இவ்விருவரும் அதில் உயரத்தில் நின்றனர் என்றே கூற வேண்டும். அவை கூறுவதற்கும் கூசக் கூடியவை என்பதால் அவற்றைக் குறிப்பிடுவதை தவிர்க்க விரும்புகிறேன்.

காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் கிருட்டிணமூர்த்தி என்றொருவர் இருந்தார். அவரும் என்னைத் துன்புறுத்தினார். அவரின் பாணி வேறுபட்டது. சுவர் ஓரமாக முதுகைச் சாய்த்து உட்காரச் சொல்வார். பின்னர் ஒரு காலை ஒரு பக்கச் சுவருடன் ஒட்டினார்போல் ஒரு காவலரை பிடிக்கச் சொல்வார். மற்றொரு காலை மற்ற பக்கச் சுவருக்கு அதாவது 1800 பாகைக்கு விரிப்பார். அவ்வாறு விரியும்போது ஏற்படும் வேதனை அளவிட முடியாததாக இருந்தது.

ஆய்வாளர் டி.என். வெங்கடேசுவரனும் என்னைத் துன்புறுத்தியவர். அவர் பென்சில் அல்லது சிறு கட்டைகளை விரல் இடுக்கில் வைத்து அழுத்திப் பிடித்துத் திருகுவார். ஊசிகளை விரல் நகங்களுக்கிடையே ஓட்டுவார். ஷூ கால்களால் எனது கால்களின் சுண்டு விரல்களில் ஏறி மிதிப்பார். இது போன்ற நுணுக்கமான கொடுமைகளைச் செய்வார்.

சிபிஐ துறையினர் எம்மைத் துன்புறுத்து வதில் ஏற்படும் இன்பத்தை எவ்வாறு விரும்பினர் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட உதாரணம் ஒன்று உண்டு. ஒரு நாள் ஆய்வாளர் என்னை அழைப்பதாகக் கூறி நானிருந்த அறையிலிருந்து துன்புறுத்தல் அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னைக் கீழே உட்காரச் சொன்னார்கள். பின்னர் திடீரென எனது இடது பக்க முகத்தில் செருப்புக் காலால் எட்டி உதைத்து ஒரு அதிகாரி கூறினார், ‘ஏண்டா நாடு விட்டு நாடு அகதியா வந்த நீங்கள் இங்கு எங்கள் தலைவரை கொலையா செய்கிறீர்கள்?’ என்றார். எனக்கு அழுகை வந்தது. அருகில் அமர்ந்திருந்த ஆய்வாளர் மாதவன் சிரித்தபடியே, ‘இவன் சிலோன்காரன் இல்லை, தமிழ்நாட்டுக்காரன்தான்’ என்றார். உடனே என்னைத் திரும்பவும் உள்ளே அனுப்பிவிட்டனர்.

இதை ஏன் கூறுகிறேன் என்றால், யார் என்ற விவரம்கூடத் தெரியாமல், என்ன குற்றமிழைத்தார் என்றும் அறியாமல் யாரை யாவது அப்பாவிகளைத் துன்புறுத்தி, குற்றவாளிகளாக்கி, பெயரெடுக்கும் மனப்பான்மை யோடு காவல் துறையினர் இருந்தனர் என்பதைக் காட்டவே குறிப்பிட்டேன். அவ்வாறு என்னை உதைத்த அதிகாரியின் பெயர் ஆய்வாளர் மோகன்ராஜு.”

(நூல்: தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்)

ஆயுள் தண்டனை பெற்று சிறையில் வாடும் ராபர்ட் பயாஸ் எழுதியுள்ள “விடுதலைக்கு விலங்கு” எனும் நூலில் தனக்கு இழைக்கப்பட்ட பல்வேறு சித்திரவதைகளை விவரித்துள்ளார். அதில் ஒன்றை மட்டும் பதிவு செய்கிறோம்.

“எங்களை விசாரித்த புலனாய்வுத் துறையினர், தண்டனை முறைகளைப் பற்றிக் கடுமையாக ஆராய்ச்சி செய்து தேர்ந்த நிபுணர்களாக இருந்தனர். இது போன்ற துன்புறுத்தலான விசாரணை முறைகளுக்குக் காவல்துறையினர் பிரத்தியேகப் பயிற்சி எடுக்கிறார்கள். ஒரு மனிதனை மற்றொரு மனிதன் எப்படி விதவிதமாக துன்புறுத்தலாம் என்பதற்குப் பயிற்சிகள். நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. காலை நீட்டி வைத்து குதிகாலில் லத்தியால் அடித்ததால், கொஞ்ச நேரத்தில் எனக்கு குதிகாலில் இரத்தம் கட்டுவது போல இருந்தது. அப்படி இரத்தம் கட்டிவிட்டால் கால் பெரிதாக வீங்கிவிடும். கால் பெரிதாக வீங்கிவிட்டால் என்னை மீண்டும் துன்புறுத்த இயலாது என்பதை புரிந்து வைத்துக் கொண்டு, கொஞ்ச நேரம் என்னைக் குதிக்கச் சொன்னார்கள், பிறகு மீண்டும் அடித்தார்கள்.

இவ்வாறு என் மீதான துன்புறுத்தல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தபோது, அதிகாரி இரமேஷ் என்னை சுவருடன் சாய்த்து, தலைகீழாக நிற்க வைத்து அடிக்கத் துவங்கினார். என் உள்ளங்காலில் இருந்து உடலெங்கும் பரவி ஓடிய இரத்த ஓட்டம் என் உச்சந்தலையை நோக்கி விரைந்தது போன்ற கடுமையான தலைவலி, சிறிது நேரத்தில் நான் மயங்கி கீழே விழுந்தேன். காந்தன் பயன்படுத்திய ஒயர்லெசு செட் என்னிடம்தான் இருக்கிறது என யாரோ கூறியிருக்கிறார்கள் எனக் கூறி அந்த ஒயர்லெசு செட் எங்கே எனக் கேட்டு, ஆய்வாளர் செல்லத்துரை, டி.எஸ்.பி. சிவாஜி, விஜயக்குமார் ஆகியோர் மயக்கத்தில் இருந்த என்னை மீண்டும் அடித்தார்கள். எனக்கு முன்பின் தெரியாத ஒருவரை அழைத்து வந்து, அந்த ஒயர்லெசு செட் பற்றி எனக்கும் அவருக்கும் தான் தெரியும் எனக் கூறி விசாரித் தார்கள். அவர் என்னைப் பார்த்துவிட்டு, இவரை யார் என்றே தெரியாது எனக் கூறினார். உடனே அதிகாரிகள் என்னை, அவரை அடிக்கச் சொன்னார்கள். நான் முடியாது என மறுத்தேன். இவர்கள் மீண்டும் அடிக்கத் துவங்கினார்கள், நான் மீண்டும் மயங்கினேன்.

இத்தனை சித்திரவதைகளுக்கு மத்தியிலும் எனக்குக் குடிக்கத் தண்ணீர்த் தரக் கூடாது என்பதில் அதிகாரிகள் மிகத் தெளிவாக இருந்தார்கள். தாகம் என்றால், நீங்கள் நினைப்பது போல் ஒரு குவளை நீர் அருந்தினால் தணிந்து விடும் தாகம் அல்ல. ஏற்கெனவே உடலெங்கும் வற்றியிருந்த நீர்ச்சத்தினால் உடலில் நீர் வடிவங்களாக இருக்கின்ற, எச்சில், உதிரம் போன்றவற்றை உடல் தானாகவே கிரகிக்கத் துவங்கும். இதனால் கடுமையான சோர்வும், தசை இடுக்குகளில் இருக்கின்ற நீர்ச்சத்துக் குறையத் தொடங்கியவுடன் ஏற்படும் உடல்வலி போன்றவை உயிரை வாட்டி எடுக்கும். அதைத்தான் நான் தாகம் என்ற ஒற்றைச் சொல்லில் உங்களிடம் கூறியிருக்கிறேன்.”

(நூல்: ‘விடுதலைக்கு விலங்கு’)

இந்த வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் டி.ஆர். கார்த்திகேயன், ‘ராஜீவ் காந்தி படுகொலை புலனாய்வு’ என்ற நூலை எழுதியுள்ளார். அதில் ‘தடா’ சட்டம் தான் தங்கள் விசாரணைக்கு கிடைத்த பெரும் வாய்ப்பு என்பதை ஒப்புக் கொள்கிறார்.

“ராஜீவ் படுகொலை வழக்கில், தடா சட்டம் பயன்படுத்தப்பட்டதால், சாதாரணமாய் வழக்குகளை விசாரிக்கும் போலீசுக்குக் கிடைக்காத சில செளகரியங்கள் கிடைத்தன. கோர்ட்டின் அனுமதியுடன் அறுபது நாட்கள் வரை, குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீஸ் பாதுகாப்பில் வைத்து விசாரணை செய்ய முடியும். (வழக்கமாக இது 15 நாட்கள்)

இந்திய சாட்சிய சட்டப்படி போலீஸ் அதிகாரியிடம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலம் அங்கீகரிக்கப்படுவதில்லை. விதிவிலக்காக காவல் துறை அதிகாரியிடம், சாகும் தருவாயில் கொடுக்கப்படும் வாக்குமூலங்களும், ஒப்புதல் வாக்குமூலங்களில் ஒரு தடயம் கண்டுபிடிக்கப்படுமானால் அத்தகைய பகுதி மட்டும் அமைந்தன. ஆனால், தடா சட்டத்தில் காவல் துறை கண்காணிப்பாளர் தகுதியிலுள்ள அல்லது அதற்கு மேற்பட்ட தகுதியிலுள்ள அதிகாரிகள், ஒப்புதல் வாக்கு மூலம் பதிவு செய்தால் அதை வழக்குகளின் சாட்சியங்களாக அனுமதிக்கப்படும்.”

(நூல்: ராஜீவ் படுகொலை - புலனாய்வு - கார்த்திகேயன்)

இப்படி தடா சட்டம் தான் தங்களுக்கு சவுகரியங்களை ஏற்படுத்தித் தந்தது என்று ஒப்புக் கொள்கிறார் கார்த்திகேயன். ‘தடா’ சட்டப்படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் தான் தங்களை நிரபராதிகளாக நிரூபித்துக் கொள்ள வேண்டும். விசாரணை நடத்துவோருக்கு எந்த முறைகேடுகளையும் செய்யும் சட்ட வாய்ப்புகள் உண்டு. இப்படித்தான் ஒரு நாட்டின் மிகப் பெரும் தலைவர் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையின் சட்டங்கள், மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்துவிட்டு, நடந்து முடிந்திருக்கிறது.

(தொடரும்)  

Pin It