“நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக கோயில்களை கட்டுவது, கடவுளையே அவமதிப்பதாகும். பொது மக்கள் பாதையை முடக்குவதற்கு கடவுள் ஒரு போதும் விரும்ப மாட்டார்” என்று உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா கூறியுள்ளார். 2006ஆம் ஆண்டு நடைபாதைக் கோயில்களை அகற்றக் கோரும் பொது நலன் வழக்கில் மாநில அரசுகள் உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு ‘சம்மன்’ அனுப்ப உச்சநீதிமன்றம் முடிவு செய்தபோது, மாநில அரசு வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய நிலையில் உச்சநீதி மன்றம் ‘சம்மன்’ அனுப்புவதை தவிர்த்தது.

அதே 2006ஆம் ஆண்டில் குஜராத் உயர்நீதிமன்றம், அம்மாநிலத்தில் கட்டப்பட்ட அனைத்து சட்டவிரோத நடை பாதை கோயில்களையும் இடித்துத் தள்ள மாநகராட்சிகளுக்கு உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மத்திய பா.ஜ.க. ஆட்சி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் மீண்டும் கடுமையான கருத்துகளை முன் வைத்துள்ளது. இரண்டு வாரத்துக்குள் நடைபாதை கோயில்களை அகற்றுவதில் மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளை தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்; இல்லையேல் தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்துக்கு நேரில் வர வேண்டியிருக்கும் என்று நீதிபதிகள் வி. கோபால கவுடா, அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு எச்சரித்துள்ளது. 

Pin It