அய்யய்யோ கேளுங்களேன் - இந்த
அநியாயத்த பாருங்களேன்
ஈழத்து மக்கள் மீது - ஈவு
இரக்க மில்லா வெறியாட்டம்
தாயகத்து மக்கள் மீது - அய்யா
தரம் தாழ்ந்த வெறியாட்டம்
இலங்கை ராணுவத்தின் - அய்யா
இதயமற்ற வெறியாட்டம் - அங்கு
போர் நிறுத்தம் வேணுமுங்க.

நாடாண்ட பரம்பரைங்க - இன்று
நாதியற்று நிக்குறோங்க
அரசாண்ட வம்சமுங்க - இன்று
அகதிகளாய் திரியுறோங்க
உலகெங்கும் வாழ்பவங்க - இன்று
உறவின்றி கெடக்குறோங்க
பூர்வகுடி தமிழருங்க - இன்று
புழுக்களாய் துடிக்குறோங்க - அங்கு
போர் நிறுத்தம் வேணுமுங்க.

உறக்கத்திலே இருந்தவங்க - அய்யா
உடல் சிதறி போனாங்க
தூழியிலே தூங்குச்சுங்க - புள்ள
துண்டு துண்டா போச்சுதுங்க
விளையாட போன புள்ள - அய்யா
வீடு வந்து சேரலிங்க
கை தனியா கால் தனியா - அந்த
காட்சி நெஞ்ச வதைக்குதுங்க - அங்கு
போர் நிறுத்தம் வேணுமுங்க.

பள்ளிக்கூட பிஞ்சுகள - அய்யா
படை திரண்டு கொல்லுறாங்க
குடியிருப்பு பகுதியில - அய்யா
குண்டு மழை பொழியுறாங்க
வழிபாட்டு தளங்களிலும் - பீரங்கி
வண்டிகளால் மோதுறாங்க
வியாபாரக் கூடங்களில் - அய்யா
வெடி குண்டு வீசுறாங்க - அங்கு
போர் நிறுத்தம் வேணுமுங்க.

வெடிகுண்டு சத்தத்தாலே - நாங்க
வெளவெளத்து போறோமுங்க
துப்பாக்கி சத்தத்தாலே - நாங்க
தூக்கமிழந்து போனோமுங்க
பூட்சுகளின் சத்தத்தாலே - அந்த
புத்தர்சிலை அதிர்ந்ததுங்க
பீரங்கி சத்தத்தாலே - மரண
பீதியில உறைந்தோமுங்க - அங்கு
போர் நிறுத்தம் வேணுமுங்க.

நான் வளர்த்த தென்னமரம் - அய்யா
நாசமாகி நிக்குதுங்க
நான் வளர்த்த கோழிக்குஞ்சு - அய்யா
நாடி செத்து போனதுங்க
எம்புள்ள பொம்மையெல்லாம் - அய்யா
எங்கு தான் போச்சுதுங்க
முப்பாட்டன் ஒழச்சதுங்க - வீடு
முற்றிலுமா சரிஞ்சதுங்க - அங்கு
போர் நிறுத்தம் வேணுமுங்க.

பச்ச புள்ள பசியாற - அம்மா
பாலில்லா தவிக்குதுங்க
தாய்பாலும் இல்லையிங்க - அம்மா
தாலாட்ட முடியலிங்க
அம்மானும் அப்பானும் - குழந்த
அழுது நெஞ்சு வறண்டதுங்க
பசி தாங்க முடியாமல் - அம்மா
பல குழந்த சாகுதுங்க - அங்கு
போர் நிறுத்தம் வேணுமுங்க.

தான் பெத்த மகளோடு - அம்மா
தகாத உறவாட ராணுவம் சொல்லுதுங்க - பெரும்
ரவுடித்தனம் பண்ணுதுங்க
தமிழீழ பெண்களிடம் - அம்மா
தரம் தாழ்ந்து நடக்குதுங்க
இளம் பெண்கள் படும் பாடு - அம்மா
ஈரக்குலை நடுங்குதுங்க - அங்கு
போர் நிறுத்தம் வேணுமுங்க.

உரிமை பேசும் நாட்டினிலே - அம்மா
உயிர் வாழ முடியலீங்க சட்டம்
பேசும் நாட்டினிலே - ரத்த
சகதியிலே நெளியிறோங்க
குடியரசு நாட்டினிலே -அம்மா
குடிமக்கள் அலறுகிறோங்க
தன்னாட்டு மக்களையே - அம்மா
தாக்குவது நியாயமாங்க - அங்கு
போர் நிறுத்தம் வேணுமுங்க.

சொல்லொணாத் துயரங்கள - அம்மா
சொந்த மண்ணில் அனுபவிச்சோம்
உயிர் பிழைக்க வழி தேடி - அம்மா
உங்களிடம் அண்ட வந்தோம்
தொப்புள் கொடி தமிழகத்தில் – பல
தொல்லையுடன் வாழ்ந்து வாறோம்
தாயகம் திரும்பிடத்தான் - பெரும்
தாகத்தில தவிக்கிறோம்க - அங்கு
போர் நிறுத்தம் வேணுமுங்க.

அன்னை தமிழ் பூமியிலே - நாங்க
அனாதைகளா ஆனோமுங்க
இந்தியா உதவனுங்க - எங்க
இன்னல்கள உணரனுங்க
சீனாவும் பாகஸ்தானும் - கொஞ்சம்
சிந்தனை பண்ணனுங்க
ஆயுத உதவிகளால் - எங்கள
அழித்தொழிக்க பாக்குறாங்க - அங்கு
போர் நிறுத்தம் வேணுமுங்க.

விடுதலை போராட்டங்க - எங்க
வீரமொன்னும் தாழாதுங்க
கடைசி தமிழன் வரை - அங்க
கலகக் குரல் தொடருமுங்க
கண்ணீரும் கருவியாகும் - எங்க
கதறலும் வெடிகுண்டாகும்
வனத்திலே தடம் பதிப்போம் - உலக
வரலாற்றில் இடம் பிடிப்போம் - அங்கு
போர் நிறுத்தம் வேணுமுங்க.

Pin It