• ‘நீட்’ உள் இடஒதுக்கீட்டுக்கு காலம் தாழ்த்தாமல் ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும். - உச்சநீதிமன்றத்தில் வழக்கு

விசாரணையை நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்காமல் இருந்தால் சரி.

• ‘விஜயதசமி’ நாளில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு. - செய்தி

அரசுப் பள்ளிகளையெல்லாம் இந்துக்களுக்கான பள்ளிகளாக மாற்றி விட்டீர்களா?

• தமிழக ஆளுநர் கூறியதை நாங்கள் வெளியில் சொல்ல முடியாது.  - ஸ்டாலினிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

உண்மையான பேச்சு. ‘சொல்ல முடியாது’ என்பதை மட்டும் ‘தலைகாட்ட முடியாது’ என்று நாங்க மாத்திக்கிறோம்.

• கொரானா தடுப்பு ஊசி இலவசமாக வழங்கப்படும் என்று நான் கூறியவுடன், மக்கள் பேராதரவு கண்டு ஸ்டாலின் நடுங்கிப் போய் விட்டார்.  - முதல்வர் எடப்பாடி

அப்ப, ஸ்டாலினை நடுங்க வைக்கத்தான் இந்த அறிவிப்பா? நாங்க கொரானா வைரஸ்தான் நடுங்கப் போவுதுன்னு தவறாக நம்பிட்டோம்.

• மோடியின் வீடியோ பேச்சை சில நிமிடங்களிலேயே மக்கள் ஆயிரக்கணக்கில் ‘டிஸ் லைக்’ செய்து விட்டனர். - செய்தி

இது ஒரு பிரச்சினையா? அரவிந்த் கோஸ்வாமி, மாரிதாசிடம் சொன்னால் ‘லைக்’காக மாற்றிக் காட்டி விடுவார்கள்.

• மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை இரத்து செய்து, பஞ்சாப் சட்டமன்றம், மாநிலத்துக்கு தனியாக சட்டங்களை நிறைவேற்றியது. - செய்தி

எங்க ‘அம்மா ஆட்சி’யில் நாங்க நிறைவேற்றிய சட்டங்களை மத்திய அரசுதான் இரத்து செய்யும்; நாங்க வேடிக்கைதான் பார்ப்போம்...

• ஜெயலலிதா மரணத்தில் மர்மம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலத்தை 9ஆவது முறையாக நீட்டித்து தமிழக அரசு ஆணை.  - செய்தி

இந்தக் கோப்பை ஆளுநருக்கு அனுப்பியிருக்கலாம். அப்படியே கிடப்பில் அவர் போட்டிருப்பார்; வீண் செலவாவது குறைஞ்சிருக்கும்!

                     ***

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்

இங்கிலாந்தில் விடுலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு, இங்கிலாந்து இந்தத் தடையை விதித்தது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு புலிகள் துப்பக்கிகளை மவுனித்து விட்டதால், தடையை நீக்க வேண்டும் என்று இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்திடம் புலிகள் ஆதரவு இயக்கம் கோரிக்கை வைத்தது.

உள்துறை அமைச்சகம் கோரிக்கையை நிராகரித்து விட்டது. தொடர்ந்து இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்பு களுக்கான மேல்முறையீட்டு ஆணையத்திடம் (பி.ஏ.ஏ.சி.) மேல்முறையீடு செய்யப் பட்டது. ஆணையம் தடையை நீக்கி அக்.21ஆம் தேதி உத்தரவிட்டது. தடை நீக்கத்தை எதிர்த்து இலங்கை அரசு மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It