கொங்கு மண்டலத்தில் திராவிட இயக்கத்தை வளர்த்த தூண்களில் ஒருவரான மு. கண்ணப்பன் வரலாறு நூலாக வெளி வந்திருக்கிறது. 

39 தலைப்புகளில் ஏராளமான தகவல்களைத் திரட்டி சுவைபட எழுதியிருக்கிறார், நூலாசிரியர் வழக்கறிஞர் ஒ.சுந்தரம். 

மு. கண்ணப்பன், இயக்கத்தில் மாணவப் பருவத்திலே இணைத்துக் கொண்டு 23 வயதிலேயே ஊராட்சி மன்றத் தலைவராகி, 1953லேயே இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை மாணவர்களைத் திரட்டிப் போராடி பள்ளிப் பருவத்திலேயே திராவிட இயக்கக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார். 

1956ஆம் ஆண்டு திருச்சியில் கூடிய தி.மு.க. இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்றதோடு மட்டுமின்றி, ‘தி.மு.க. தேர்தல் அரசியலில் போட்டியிட வேண்டுமா?’ என்று நடத்திய வாக்கெடுப்பில், போட்டியிடக் கூடாது என்று வாக்களித்த 4203 தோழர்களில் மு. கண்ணப்பனும் ஒருவர். ‘ஓட்டுக்காக இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்’ என்று, தான் கருதியதாக மு. கண்ணப்பன் கூறுகிறார். 

1962இல் அண்ணா அறிவித்த விலைவாசி உயர்வு எதிர்ப்புக்கான மறியலில் பங்கேற்று, 4 மாத கடுங்காவல் சிறைத் தண்டனை பெற்றவர். நீதிமன்றம் வரும்போதெல்லாம் கைகளில் விலங்கு பூட்டியே காவல்துறை அழைத்து வந்திருக்கிறது. கிரிமினல் கைதியாகவே சிறையில் நடத்தப்பட்டவர். தான் மிகவும் நேசித்த தந்தையார் மரணத்தின்போது உறவினர்கள் கட்டாயப்படுத்திய நிலையிலும் மொட்டை அடித்து, மதச் சடங்குகளை செய்ய மறுத்திருக்கிறார். 

1965ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கைப்பற்றிய ஒரே ஊராட்சி ஒன்றியம் பொள்ளாச்சி. காங்கிரசிடமிருந்து கைப்பற்றினார் மு. கண்ணப்பன். வளர்ச்சித் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க மறுத்தபோது பதவியைத் துறக்கவும் தயாரானார். 

1967இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது சட்டமன்ற உறுப்பினரான மு. கண்ணப்பன், தமிழக அரசின் சின்னத்தில் இடம் பெற்றுள்ள ‘சத்யமேவ ஜயதே’ என்ற இந்தி வார்த்தையையும், ‘கவர்ன்மென்ட்’ என்ற ஆங்கில சொல்லையும் நீக்கி, தமிழில் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அண்ணாவுக்கும் இதே சிந்தனை இருந்ததால் ‘வாய்மையே வெல்லும்’ என்று தமிழக அரசின் இலச்சினையை மாற்றியமைத்தார், அண்ணா. 

1971ஆம் ஆண்டு கலைஞர் அமைச்சரவையில் அறநிலையத் துறை அமைச்சராக இருந்தபோது நிகழ்த்திய வரலாற்று சாதனை - கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறையைக் கொண்டு வந்ததாகும். சைவ மடாதிபதிகள் கூட்டம் ஒன்றில் இந்தக் கோரிக்கை வைத்தபோது பெரியார் - அண்ணாவின் கொள்கை உணர்வில் ஊன்றிப் போனதால் அதே கூட்டத்தில் ஆகஸ்டு 15 முதல் தமிழ் வழிபாட்டு முறையை அரசு அமுல்படுத்தும் என்று, முதலமைச்சரைக்கூட கலந்து பேச வேண்டும் என்று கருதிப் பார்க்காது, இயல்பாகவே அறிவித்திருக்கிறார். ஏடுகளில் அது பெரிய செய்தியானவுடன்தான் தனது அறிவிப்பு அவ்வளவு முக்கியமானது என்பதே தனக்கு புரிந்தது என்று கூறும் மு. கண்ணப்பன், முதல்வர் கலைஞர் துணிவுடன் தான் வெளியிட்ட அறிவிப்பைப் பாராட்டியதாகவே கூறுகிறார். 

தமிழ் வழிபாட்டு மொழியாக அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகு திருவண்ணாமலை கோயிலுக்கு அமைச்சராக பார்வையிட சென்றபோது அர்ச்சகர் வடமொழி மந்திரங்களை உச்சரித்தபோது கோபத்தின் உச்சிக்குச் சென்ற அமைச்சர் கண்ணப்பன், ‘நிறுத்து வடமொழியை’ என்று கூறியிருக்கிறார். அச்சத்தில் உழன்ற அர்ச்சகர் தமிழில் வழிபாடு நடத்த தடுமாறியபோது, மாவட்ட ஆட்சித் தலைவரே அர்ச்சகராகி தமிழில் வழிபாடுகளை அமைச்சர் முன்னிலையில் நடத்தியிருக்கிறார். 

அனைத்து ஜாதியினரும் ஆகமக் கோயில்களில் அர்ச்சகராகும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் வந்தபோது (15.4.1974) அறநிலையத் துறை அமைச்சராக இருந்த பெருமை மு. கண்ணப்பனுக்கு உண்டு. அதேபோல் கோயில் அறங்காவலர் பதவிகளில் கட்டாயமாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதி இடம் பெற வேண்டும் என்று தி.மு.க. ஆட்சியில் சட்டமியற்றியபோதும் அந்தத் துறையின் அமைச்சராக இவர் தான் இருந்தார். தஞ்சை கோயிலைக் கட்டிய இராஜராஜசோழன் சிலையை கோயிலுக்குள் வைக்க மத்திய தொல்பொருள் துறை அனுமதி மறுத்த நிலையில் இராஜராஜன் சிலையை கோயிலுக்கு வெளியே நிறுவி நடுவண் அரசின் அதிகாரத்துக்கு எதிர்ப்புக் காட்ட முதல்வர் கலைஞர் முடிவெடுத்தார். அப்போதும் அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர் மு. கண்ணப்பன். அந்த விழாவுக்கும் அவரே ஏற்பாடுகளைச் செய்தார்.

1975இல் அவசர நிலையை பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார், தி.மு.க.வைக் கடுமையாக ஒடுக்கப் பட்டது. ஆட்சியும் கலைக்கப் பட்டது. நெருக்கடியான அக்கால கட்டத்தில் கலைஞரின் கார் ஓட்டியாக செயல்பட கண்ணப்பன் முன் வந்தார். அமைச்சர் பதவியில் இருந்தாலும் தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கும் தலைமைக்கும் என்றும் கட்டுப்பட்டவன் என்ற உயர்ந்த கொள்கை உணர்வை வெளிப்படுத்திய நிகழ்வு இது. கலைஞர் இதை உளம் திறந்து பாராட்டினார். அடுத்த 15ஆவது நாளிலேயே மு. கண்ணப்பன் மீது ‘மிசா’ சட்டம் பாய்ந்தது. இப்படி ஏராளமான வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியிருக்கிறது இந்த நூல்.

‘மு. கண்ணப்பன - வாழ்வும் பணியும்’ என்ற தலைப்பில் இந்த நூல் வந்திருந்தாலும் திராவிட இயக்கத்தின் வரலாற்றுக்கு முன்னுரிமை தரப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பாகும். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் அதில் இணைத்துக் கொண்ட செயலூக்கமுள்ள தோழர்களின் எளிமை - போர்க் குணம் - வரலாற்றை அறிதலிலும் - வாசிப்பதிலும் தோழர்கள் காட்டிய தீவிர ஈடுபாடுகளை இந்த நூலை வாசிக்கும் போது உணர முடிகிறது. 

தலைவர்கள் - நாடுகளின் பார்வையில் எழுதப்படும் வரலாறுகளைவிட களப் பணியாளர்களையும் அவர்கள் செயல்பட்ட பகுதியையும் முன் வைத்து எழுதப்படும் வரலாறுகளே சரியான சமூகச் சூழலை பிரதிபலிக்கும். அதிகாரத்துக்கு வந்த ஒரு அரசியல் கட்சி, அதன் தொடக்கக் காலங்களில் நடத்திய கொள்கைப் பயணங்களையும் இலட்சிய உறுதிகளையும் ஒரு போதும் மறந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையும் இந்த நூலின் பக்கங்களில் புதைந்து கிடக்கிறது.

மு. கண்ணப்பன் அரசியல் பயணத்தின் நிகழ்வுகளை - அதன் வரலாற்றுப் பின்புலத்தோடு விளக்குவதில் நூலாசிரியர் ஒ. சுந்தரம் கவனம் செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

வெளியீடு :

சிவகாமி பதிப்பகம், பொள்ளாச்சி

பக். : 336; விலை : ரூ. 200

தொடர்புக்கு : 

9087979431 / 04259-227420

Pin It