தனியார்மயமாக்கல் இன்று இந்திய அரசினால் அனைத்துத் துறைகளிலும் மிகவும் முனைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு துறையும் நிலைகுலைந்து வருகிறது. அவ்வாறு அமல்படுத்தப்பட்டவற்றில் இந்தியாவில் உள்ள தொலைபேசித்துறையும் ஒன்று. தனியார்மயமாக்கலால் அத்துறை அடைந்த சீர்கேடுகள் குறித்தும் அதனால் நாம் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் குறித்தும், தேசிய தொலை தொடர்பு ஊழியர்கள் (NFTE) சம்மேளனத்தின் செயலாளர், சி.கே. மதிவாணன் சமூக விழிப்புணர்வு இதழுக்கு அளித்த விரிவான நேர்காணலில் இருந்து சில பகுதிகள்...

உலக மயமாக்கல் தொலைபேசித்துறை உட்பட எல்லாத் துறைகளிலும் நுழைந்து விட்டது. அது குறித்து கூறுங்கள்?

உலக மயமாக்கல் இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் சொல்லாக மாறி விட்டது. இந்த வார்த்தையே தொழிலாளிகளுக்கும், பாமர மக்களுக்கும் எதிரானது ஆகும். மறைந்த நரசிம்மராவ் பிரதமராகவும், தற்பொழுதைய பிரதமர் நிதி அமைச்சராகவும் இருந்தபொழுது இந்தியாவிற்குள் கொல்லைப்புற வழியாக நுழைந்த உலகமயமாக்கல் இன்று இந்தியாவின் அனைத்து துறைகளின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

இன்று உலகை ஆதிக்கம் செலுத்தும் சக்திகளால் பேசப்படுவது மூலதனத்திற்கான உலகமயமாக்கம்.தொழிலாளர்களுக்கும், சாமானிய மக்களுக்கும் இங்கு இடமில்லை. மூலதனமானது இன்று உலகில் எங்கும் செல்லலாம், வரலாம். அதற்கு தடை கிடையாது. ஆனால் தொழிலாளி எங்கும் செல்ல முடியாது. உலகம் சுருங்கி விட்டது என்கிறார்கள். சரி ஏன் அமெரிக்கா தனது நாட்டை அனைவருக்கும் திறந்து விட மறுக்கிறது? அமெரிக்க விசாவிற்கு எதற்கு இத்தனை கட்டுப்பாடுகள்? ஆகவே, இது பணம் வைத்திருப்பவர்களுக்கான உலகமயமாக்கல். இதன் ஒரு பகுதிதான் இந்திய தொலைபேசித் துறையில் அன்னிய முதலீடு.

இந்திய தொலைபேசித் துறையில் அன்னிய முதலீடு நுழைவதற்கான மூலகாரணமே, இந்திய தொலைபேசித் துறையின் மோசமான செயல்பாடுகள்தான் என்றும், கேட்டவுடன் இணைப்பு கொடுக்கப்படாதது, உரிய சேவை அளிக்காதது போன்றவைதான் காரணம் என்று சொல்கின்றனரே?

பெரும்பாலானோர் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் கூறுவது அரசு தொலைபேசித் துறையில் இணைப்பு கேட்டால் வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டியது இருந்தது. தனியார் வந்தவுடன்தான் இந்த நிலை மாறியது என்று. இந்த நிலைக்கு காரணமே உரிய அரசுகள்தான். அரசானது எங்கள் துறைக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. அதனால் எங்களால் போதுமான இணைப்புகள் வழங்க முடியாத நிலை இருந்தது. மக்கள் வருடக்கணக்கில் காத்திருக்கும் அவலம் நீடித்தது. ஆனால் அதே அரசுகள்தான் தனியார்களுக்கு இதைக் காரணம் காட்டி இந்தியாவில் முதலில் தொழில் செய்ய அனுமதித்தன. முதலில் கூறும்போது தனியார் நிறுவனங்கள் தொலைபேசித் துறையில் அரசின் சேவைக்கு உதவி புரிய வருகின்றனர் என்றனர். ஆனால் அதன் பின்பு தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டும் என்று மாற்றிக் கூறுகின்றனர்.

அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த ஒரு விசித்திரமான வழக்கு ஒன்றினை இங்கே கூறுவது சரியாக இருக்கும்.

அங்குள்ள நீதிமன்றம் ஒன்றில் குற்றவாளி ஒருவனுக்கு தண்டனை விதிப்பதற்கு முன்பு நீதிபதி ‘நீ ஏதாவது கூற விரும்புகிறாயா?'' என்று கேட்கிறார். அதற்கு அவன், ‘நீதிபதி அவர்களே நான் தாய், தந்தை யாருமற்ற அனாதை. ஆகவே எனக்கு தண்டனை வழங்கக் கூடாது'' என்கிறான். ஆனால் அவன் மீது சுமத்தப்பட்ட குற்றம் என்னவென்றால் அவனது பெற்றோரையே அவன் கொலை செய்தான் என்பதாகும்.

ஆகவே எங்களைச் செயல்பட முறையான நிதி ஒதுக்கீடு செய்யாத அரசுகளே, இத்துறையைத் தனியார் மயமாக்கி விட்டு அதற்கு எங்களைக் காரணம் சொல்கின்றன.

மத்திய அரசிற்குச் சொந்தமாக இருந்த தொலைபேசித்துறை இன்று பிஎஸ்என்எல் என்ற தனி நிறுவனமாக மாறிய பின்பு எவ்வாறு இருக்கிறது?

இப்பொழுது மத்திய அரசானது எங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யாது. எங்கள் நிறுவனத்தை நாங்களே நிர்வகிக்கிறோம். ஆனால் அரசின் அறிவிப்புகளையும், கொள்கைகளையும் இன்னும் செயல்படுத்தும் அமைப்பாக இருக்கிறோம்.

செல்போன் சேவை இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது பிஎஸ்என்எல் நிறுவனம் அந்தச் சேவையை அளிக்கவில்லை. மிக நீண்ட காலமாக 7 வருடங்கள் கழித்துதான் அதாவது, தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்தபின்புதான் நுழைந்தது. இதற்கு காரணம் என்ன?

இந்தியாவில் தொலைபேசி சேவை முன்பு அரசு வசம் இருந்தது. முதன் முதலாக செல்போன் சேவையில் தனியார் நிறுவனங்கள் உள்ளே நுழைந்தன. 70 வருட அனுபவம், போதுமான கட்டமைப்பு வசதி, தொழில் நுட்பம் இருந்தும் எங்களை செல்போன் சேவை அளிக்க மத்திய அரசானது திட்டமிட்டு அனுமதி மறுத்தது. அப்பொழுது வாஜ்பாய் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தது.

தந்தி, தரைவழி இணைப்பு போன்றவற்றை நாங்கள் தொடர்ந்து பார்க்குமாறும், அனுபவமற்ற தனியார் நிறுவனங்கள் செல்போன் வசதி அளிப்பதற்கும் பாரபட்சமான அனுமதி அளிக்கப்பட்டது.

தனியார் நிறுவனங்கள் மட்டும் இத்துறையில் ஈடுபட்டதால் அவைகள் அதிக அளவில் சந்தையைக் கைப்பற்றி விட்டன. மேலும், அதிக அளவில் நிமிடத்திற்கு 16 ரூ கட்டணம் நிர்ணயித்து வாடிக்கையாளர்களைச் சுரண்டின.

ஆனால் எங்களது தொடர்ச்சியான வற்புறுத்தல், போராட்டம் காரணமாக செல்போன் சேவையில் இறங்குவதற்கு அரசு எங்களை 7 வருடம் கழித்து அனுமதித்தது. இந்த 7 வருடத்திற்குள் தனியார் நிறுவனங்கள் மக்களை அதிக அளவு சுரண்டி விட்டன. பெருமளவு செல்போன் வாடிக்கையாளர்களையும் தம் வசப்படுத்தி விட்டன. அரசுத்துறை நிறுவனம் நுழைந்த பின்புதான் கட்டணம் பெருமளவு குறைந்தது. இந்த 7 வருட காலகட்டத்தில் 6 வருடம் பிஜேபி தலைமையிலான அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்தது.

நிர்வாக ரீதியாக பிஎஸ்என்எல் செயல்படுவதில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன?

நாங்கள் முன்பு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தோம். பின்பு பல பொய்யான காரணங்களைக் கூறி, எங்கள் எதிர்ப்பையும் புறக்கணித்து எங்களை சுயேட்சையான அமைப்பாக மாற்றினர். ஆனால் தனி அமைப்பாக மாறிய பின்பும் எங்களால் சுயேட்சையாக இயங்க முடியவில்லை. எங்களுக்கு நிர்வாக ரீதியாக எவ்வித சுதந்திரமும் கிடையாது. எந்த சிறிய முடிவு எடுக்க வேண்டுமானாலும் டெல்லிக்குத்தான் செல்ல வேண்டும்.

எடுத்துக்காட்டாக பிஎஸ்என்எல் டவர் தொடர்பான குறைபாடுகள். பிஎஸ்என்எல் செல்போன் சரியான கவரேஜ் இல்லை என்று சொல்கின்றனர்.

எங்களிடம் போதுமான பணம் இருக்கிறது. கட்டமைப்பு வசதி இருக்கிறது. ஆனால் போதுமான டவரை ஏன் செயல்படுத்த முடிவது இல்லை?

முதலில் டவர் நிறுவுவதற்கு இடம் பார்க்க வேண்டும். இட உரிமையாளர்கள் எங்களுக்கு இடமளிக்க முன்வருவது இல்லை.அப்படியே முன் வந்தாலும் கேட்ட அட்வான்ஸ் தர எங்களால் முடிவது இல்லை. அதற்கென ஒரு கமிட்டி இருக்கிறது. அதற்கு நாம் எல்லா விவரங்களையும் தெரிவித்து நாம் முன் வைக்க வேண்டும். அந்தக் கமிட்டி வாடகை, அட்வான்ஸ் போன்றவற்றிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அவர்கள் முடிவு எடுப்பதற்குள் காலம் அதிகமாகி விடும். அதற்குள் தனியார் நிறுவனங்கள் அதிக டவர்களை நிறுவி விடுவர். இதனால் எங்கள் வளர்ச்சி பாதிக்கிறது.

அடுத்ததாக தரைவழி இணைப்பு. இதில் நவீன உபகரணங்கள் புகுத்த வேண்டும் என்று நான்கு வருடங்களுக்கு முன்பே தொழிற்சங்கங்கள் ஆலோசனை கூறி விட்டன. காலர் ஐடி தொலைபேசியை அறிமுகம் செய்யலாம் என்பது எங்களது பரிசீலனை. ஆனால் இன்னும் நடைமுறைப்படுத்த இயலவில்லை.

நாங்கள் சிறப்பாகச் செயல்பட நவரத்னா அந்தஸ்து கேட்கிறோம். ஆனால் எங்களது வளர்ச்சியில் அக்கறை இல்லாத அரசுகள், அதைத் தருவதற்கு முன்வரவில்லை.

தொலைபேசித்துறையில் அன்னிய நேரடி முதலீடு 74% வரை அனுமதிக்கப்பட்டுள்ளதே? இது என்ன விதமான விளைவை ஏற்படுத்தும் என்கிறீர்கள்?

தேசத்திற்கும், அதன் இறையாண்மைக்கும் ஆபத்து. முன்பு 49% அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது 74 சதவிகிதத்தை மன்மோகன் சிங் அரசாங்கம் அனுமதித்துள்ளது. இதனால் அந்நிய நிறுவனங்கள் மிக அதிக அளவிலான பணத்தையும், அதன் மூலம் தொழில்நுட்பத்தையும் கொண்டு வருவர். மேலும் இங்குள்ள இந்திய தனியார் நிறுவனங்களே அன்னிய நாட்டு நிறுவனங்களிடம் தற்பொழுது சிக்கிக் கொண்டுள்ளனர். இதை எதிர்த்து போராட்டம் செய்த போது நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விநோதமான விளக்கம் அளித்தார். இந்தியரைத் தலைவராகக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்போம் என்றார்.

அந்நிய நிறுவனங்களிடம் லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றுக் கொண்டு வேலை செய்பவன் ‘இந்தியப் பற்றுடன்' வேலை செய்வான் என்று சிதம்பரம் கூறுவதைக் கேட்டால் சிரிப்பாக இல்லையா?

மேலும் அன்னிய நேரடி முதலீட்டினை இங்குள்ள யாரும் கேள்வி கேட்கவும் முடியாது. லாபத்தை எடுத்துச் செல்வதில் எவ்வித வரையறையும் கிடையாது.ஆகவே முழுமூச்சுடன் எதிர்க்க வேண்டும்.

மத்திய அரசு தொலைபேசித்துறையை பொறுத்த அளவில் என்ன விதமான கொள்கை வைத்திருக்கிறது?

இந்தத் துறையை ஒழித்துக் கட்டி விட வேண்டும். தனியாருக்கு தாரை வார்த்து விட வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள்.

ஒரு சிறு எடுத்துக்காட்டு சொல்கிறேன். பிஎஸ்என்எல். நிறுவனத்தின் பெரும்பலமே தரை வழி இணைப்புதான். இந்தியா முழுவதும் மிகப் பலமான தரைவழி கட்டமைப்பு பிஎஸ்என்எல் வசம் உள்ளது. இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. ஆனால் தவறான செயல்பாடுகள் மூலம் தரைவழி இணைப்பு மூலம் வரும் வருமானம் பெருமளவு குறைகிறது.

எடுத்துக்காட்டாக செல்போனில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு பேசினால் லோக்கல் கட்டணம். ஆனால், தொலைபேசியில் சென்னையில் இருந்து அரக்கோணம் பேசினால் எஸ்டிடி. இப்படிப்பட்ட அதிக கட்டணம் விதித்தால் யார் தரைவழித் தொலைபேசியை விரும்புவர்? மேலும் தொலைபேசிக்கு மாத வாடகை வசூல் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களை தொலைபேசி உபகரணங்களை வாங்குமாறு கூறிவிட்டால் இத்தகைய மாத வாடகை வசூல் செய்யத் தேவை இல்லை. ஆனால் செய்ய முடியவில்லை. இவ்வாறு மாத வாடகை, அதிக கட்டணம் போன்றவற்றால் வாடிக்கையாளர்கள் தொலைபேசியை விரும்புவது இல்லை. அனைவரும் செல்போனை நாடுகின்றனர். இதனால், பிஎஸ்என்எல் வருமானம் அதிக அளவில் குறைந்து கொண்டே வருகிறது. இதனை மாற்ற முன்வர வேண்டும்.

தொலைபேசித் துறையில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்கின்றன என்று சொல்கின்றனரே?

நிச்சயம் இல்லை. ஆனால் அப்படி ஒரு தவறான கருத்து அனைவரிடமும் உள்ளது. எடுத்துக்காட்டாக கட்டணத்தை எடுத்துக் கொண்டால் நாங்கள் வெளிப்படையாக பில்லிங் செய்கிறோம். எங்கள் வாடிக்கையாளர் எங்களது பில்லில் குறை இருப்பதாகத் தெரிவித்தால், நாங்கள் அவரிடம் புகார் பெற்று, உடனே அவர் பேசியதற்கு ஆதாரம் அளிப்போம் ஆனால் ‘இந்த நாட்டு மக்கள் அனைவரையும் தொலைபேசியில் பேச வைக்க வேண்டும் என்று கனவு கண்டாரே'' அம்பானி, அவரது நிறுவனத்தில் எனது நண்பர் வாடிக்கையாளர்.

அவருக்கு வந்த பில்லில் அதிகத் தொகை குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனே அவர் தனியார் தொலைபேசி நிறுவனத்திற்குச் சென்று புகார் தெரிவித்தார். அவர்கள் ஒன்றும் பேசவில்லை. உடனே அவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்து விட்டு மீதித் தொகையைக் கட்டுமாறு கூறினர். என் நண்பர் அதிர்ச்சியடைந்து விட்டார். விசாரணை எதுவும் இல்லை. உடனே தள்ளுபடி. ஏனென்றால் அங்கு முறையான கட்டணம் பில் செய்யப்படுவது கிடையாது. நினைத்தபடி நிர்ணயம் செய்கின்றனர்.

அடுத்ததாக, வாய்ஸ் மெயில் பாக்ஸ், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமலேயே இந்தச் சேவையை அவர்கள் மீது திணித்து விடுகின்றனர். நீங்கள் தனியார் நிறுவன தொலைபேசியில் அழைத்தால், பல சமயம் அவர்களுடன் பேச முடியாது. உங்கள் அழைப்பு வாய்ஸ் மெயில் பாக்சுக்கு தானாகவே சென்று விடும். ஆனால் அழைப்பு என்ற பெயரில் உங்களுக்குக் கட்டணம் விதிக்கப்பட்டு விடும். இது ஒரு சுரண்டல். அடுத்ததாகத் தொலைபேசியில் பேசும்பொழுது நமது காது கேட்கும் திறன், நமது உடலில் உள்ள காதிற்கு செவித்திறன் அளவு உள்ளது. அந்த அளவு ஒலியைக் கேட்டால் மட்டுமே நாம் உணர முடியும்.அதற்கு அதிகமான ஒலியைத் தொடர்ந்து கேட்டால் காது தனது கேட்கும் திறனை இழந்து விடும்.

செவித்திறன் அளவு 3 முதல் 3.45. டெசிபல்.

பிஎஸ்என்எல் மக்கள் நலனில் அக்கறை உள்ள நிறுவனம். ஆகவே செவித்திறன் எந்த அளவு கேட்பது நல்லதோ அந்த அளவு மட்டுமே ஒலியை நிர்ணயிப்போம். ஆனால் தனியார் நிறுவனங்கள் அதிக அளவு ஒலியை செட் செய்து விடுகின்றனர். ஆகவே தனியார் நிறுவன வாடிக்கையாளர்கள் அனைவரும் எங்களுக்கு மிகத் தெளிவாக பேச முடிகிறது என்று கூறுகின்றனர். இது அவர்களின் காதுக்குக் கேடானது.

ஆகவே எங்கள் செல்போன் மிகத் தெளிவாகப் பேச முடியும், அதிக அளவு சப்தமாக கேட்கிறது. என்று யாரேனும் தனியார் நிறுவன வாடிக்கையாளர் கூறினால், அது தற்காலிகமே. குறுகிய காலத்திற்குப் பின்பு அவர்கள் காது நிரந்தரமாகக் கேட்காது.

மேலும் நிமிடத்திற்கு 16 ரூ. கட்டணம் வைத்து கொள்ளை லாபம் ஈட்டிய தனியார் நிறுவனங்கள் பிஎஸ்என்எல் இத்துறைக்கு வந்த பின்பே கட்டணத்தை வெகுவாக குறைத்தன. ஆகவே பிஎஸ்என்எல் இருப்பதனால் மட்டுமே இந்தச் சலுகைகள் உங்களுக்கு கிடைக்கின்றன.

மேலும் சலுகைகள் அளித்து தனியார் நிறுவனங்கள் மக்களைக் கவர்வது முதலில் தங்கள் பக்கம் அவர்களை இழுக்கும் உத்திதான். பிறகு சந்தையில் போட்டி இல்லை என்று ஆன பின்பு அவர்கள் வைத்ததுதான் சட்டம். இதற்கு நல்ல எடுத்துக்காட்டு பெப்சி மற்றும் கோக் குளிர்பானங்கள். இத்துறையில் நுழையும்பொழுது என்னென்ன மாயாஜாலம் செய்து நுழைந்தனர். ஆனால் இன்று என்ன நிலையில் இருக்கின்றனர்? அவர்கள் வருகையால் காளிமார்க், வின்சென்ட் போன்ற உள்ளூர் குளிர்பானங்கள் நிலை என்ன ஆனது?

ரிலையன்ஸ் நிறுவனம் இத்துறையில் ஈடுபடும் பொழுது முறைகேடு செய்தது என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறதே? உண்மை என்ன?

செல்போன் துறையில் இரண்டு வகையான தொழில்நுட்பம் இருக்கிறது. ஒன்று ஜிஎஸ்எம் முறை. இதற்கு உரிமம் பெறுவதற்கு கட்டணம் அதிகம். தனியார் செல்போன் நிறுவனங்கள் அனைத்தும் இந்த முறையில் தங்கள் சேவையை அளித்து வருகின்றனர். ரோமிங் வசதி இத்திட்டத்தில் உள்ளதால் செல்போனை நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியும்.

இன்னொன்று சிடிஎம்ஏ முறை. இத்திட்டத்தைப் பயன்படுத்துவதற்கு உரிமம் வாங்க கட்டணம் குறைவு. இதன் மூலம் வில் போன் என்ற இணைப்பு மட்டுமே கொடுக்க முடியும். வில்போன் இணைப்பு என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே இயங்கும் தொலைபேசி. அந்த வட்ட எல்லையைத் தாண்டி வில்போன் இயங்காது. செயல் இழந்து விடும். அதாவது ரோமிங் வசதி கிடையாது. சுருக்கமாக கூறினால் வயர்லெஸ். இந்த முறையில் தொழில் நடத்துவதற்குத்தான் ரிலையன்ஸ் நிறுவனம் உரிமம் பெற்றது.

ஆனால், அவ்வாறு பெற்ற உரிமத்திற்கு மாறாக சட்ட விரோதமாக ரோமிங் சேவையை அளித்து செல்போன் போலவே செயல்பட்டது. இது மிகப் பெரிய மோசடி. இதனை எதிர்த்து மற்ற தனியார் நிறுவனங்களே உச்சநீதிமன்றம் சென்றன. இதற்குப் பிறகு நடந்ததுதான் மிகப் பெரிய அநீதி. நீங்களும் நானும் தவறு செய்தால் சட்டத்தை காட்டி தண்டனை வழங்குபவர்கள், ரிலையன்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்காகச் சட்டத்தையே மாற்றி எழுதினர்.

ஆம் அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக சிடிஎம்ஏ முறையில் தொழில் நடத்த அனுமதி பெற்றவர்களும் செல்போன் சேவையை அளிக்கலாம் என்று சட்டத்தையே திருத்தியது. இவ்வாறு இத்துறையில் நுழையும் பொழுதே ரிலையன்ஸ், தவறான வழியில் நுழைந்தது. அப்பொழுது பிரமோத் மகாஜன் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். இதனால் அரசுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி இழப்பு ஏற்பட்டது.

தற்பொழுது திரு. தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகியதால் தொலை தொடர்புத்துறை மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்கும் என்று ஊடகங்கள் கூறுகின்றனவே? அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?

இந்தத் துறையில் பலர் மந்திரியாக இருந்துள்ளனர். சமீப காலத்தில் சுஷ்மா சுவராஜ், ராம் விலாஸ் பஸ்வான் என்று பலர் மந்திரி பதவி வகித்துள்ளனர். தயாநிதி மாறனும் இந்தப் பதவியில் இருந்துவிட்டுச் சென்றுள்ளார். உண்மையைச் சொல்லப்போனால் இந்தப் பதவிக்கு வரும்போது இந்தத் துறை குறித்து ஒன்றும் தெரியாதவராகத்தான் இருந்தார். பதவியை விட்டு விலகும் பொழுதும், துறை குறித்தோ, துறையின் வளர்ச்சி குறித்தோ அவருக்கு ஒன்றும் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் அவர் இந்தத் துறை பின்னடைவைச் சந்திக்கக் காரணமாக இருந்தார்.

அவருக்கு இத்துறையின் வளர்ச்சியில் உள்ள ‘அக்கறை' குறித்துச் சொல்கிறேன். புது டெல்லியில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு தலைமையகம் இருக்கிறது. வேளாண்மை, ரயில்வே, விவசாயம் என்று ஒவ்வொன்றுக்கும் தலைமையகம் உள்ளது. தொலைதொடர்புத் துறைக்கு ‘சச்சார் பவன்' என்ற தலைமையகம் உள்ளது. இந்த மூன்று வருட காலத்தில் அவர் எங்கள் தலைமையகத்திற்கே வராதவர். அவர் எவ்வாறு எங்கள் துறையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டிருக்க முடியும்?

‘ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்'' என்பதில் யாருக்கு நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ தயாநிதி மாறனுக்கு இருந்தது. ஆகவேதான் அவர் தலைமையகத்திற்கு ஒருமுறைகூட வரவில்லை. தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டினார்.

தயாநிதி மாறன் வெற்றிகரமாக ஒன்இந்தியா என்ற திட்டத்தை நிறைவேற்றிக் காட்டியதாகக் கூறுகின்றனரே?

நல்ல கேள்வி. கிராமங்கள் தோறும் சாலை வசதி இல்லை. மக்கள் பட்டினியாய் இருக்கின்றனர். ஆனால் இங்கு ஒன்இந்தியா திட்டம் நிறைவேற்றப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் ஒரு ரூபாயில் பேசலாம். யார் இத்திட்டத்தினால் பலன் பெறுகிறார்கள்? பண முதலைகள், உயர் தட்டு வர்க்கத்தினர் போன்றோரே இத்திட்டத்தினால் பலன் பெற்றனர். பாமர மக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் இதனால் எவ்விதப் பலனும் கிடையாது. இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதால் அரசுக்கு 18000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால் இதனை ஊடகங்கள் வெற்றிகரமான திட்டம் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

ரிலையன்ஸ் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை, உள்ளூர் அழைப்புகளாக மாற்றி காண்பித்ததால் அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு எனக் கூறப்படுகிறது. அது பற்றி?

ஆம், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வரும் தொலைபேசி அழைப்புகள் ஒவ்வொன்றுக்கும் பிஎஸ்என்எல்க்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனமானது வெளிநாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை உள்ளூரில் இருந்து வருவது போல காண்பிக்கும் மோசடி வேலையில் ஈடுபட்டது. வெளிநாட்டில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் அனைத்தையும் இவ்வாறு மாற்றிக் காட்டும் மோசடி வேலையைப் பல ஆண்டுகள் செய்துள்ளது. நாங்கள் இதனைக் கண்டுபிடித்து அரசுக்குத் தெரியப்படுத்தினோம். இதனால் எங்கள் நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு. நாங்கள் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தோம். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொழில் உரிமத்தை ரத்து செய்யக் கோரினோம். மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார்.

ரிலையன்ஸ் நிறுவனம் செய்த பல ஆயிரம் கோடி முறைகேடுக்கும் பதிலாக சில நூறு கோடி மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது.

ரிலையன்ஸ் நிறுவனம் பிஎஸ்என்எல் கட்ட மைப்பைப் பயன்படுத்தப் புதியதாக திட்டம் கொடுத்துள்ளதே அது பற்றி?

Sharing infrastructure.. அதாவது எங்களது கட்டமைப்பு வசதியைப் பயன்படுத்திக் கொள்வது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் உள்கட்டமைப்பு வசதி இருக்கிறது. ரிலையன்ஸ் அனில் அம்பானி கூறுகிறார். பிஎஸ்என்எல் நிறுவனம் மக்கள் வரிப்பணத்தில் உருவான நிறுவனம். நானும் வரி செலுத்தி உள்ளேன் (!) ஆகவே எனக்கும் அதில் உரிமை இருக்கிறது. அதன் கட்டமைப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று அதற்கு உரிய வாடகையைத் தருவதாக கூறினார். உடனே மத்திய அரசு அனுமதி அளித்தது.

இத்துறையில் தனியார் நிறுவனங்கள் எங்களுக்கு போட்டி நிறுவனங்கள். உலகில் எங்குமே ஒரு நிறுவனத்தின் தொழில் நுட்படத்தையோ, அதன் கட்டமைப்பையோ அத்துறையில் உள்ள பிற நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிக்கும் போக்கு கிடையாது. ஆனால், இங்கு மட்டுமே இவ்வாறு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கட்டமைப்பை வெளி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இதன் மூலம் எங்கள் நிறுவனத்தை நவீன கட்டணக் கழிப்பிடமாக மாற்றி விட்டனர். எவ்வளவு பெரிய மோசடி! தற்பொழுது குஜராத் மாநிலத்தில் இது நடைமுறைக்கு வந்து விட்டது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் அரசின் கொள்கை என்னவாக உள்ளது?

இத்துறையை ஒழித்துக் கட்ட முயற்சி நடக்கிறது. தனியாருக்குத் தாரை வார்த்து கொடுக்கும் திட்டத்தைப் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றனர். போர்க்குணமிக்க ஊழியர்களும், தலைவர்களும் இருப்பதால் முடிந்தளவுக்கு எதிர்த்து வருகிறோம்.

தனி நிறுவனம் ஆன பின்னும் அரசின் கொள்கைகள் ஒட்டி இயங்குவதால் எங்கள் முன்னேற்றம் தடைபடுகிறது. எடுத்துக்காட்டாக பிரதமர் பாராளுமன்றத்தில் கிராமங்களுக்கு இந்த வருடம் இவ்வளவு தொலைபேசி இணைப்புகள் அளிக்கப்படும் என்று அறிவித்து விடுவார். நாங்கள் அதனை நடைமுறைப்படுத்துவோம். தனியார் நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் வழங்கும்பொழுது கிராமங்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இணைப்பு வழங்க வேண்டும் என்று உள்ளது. ஆனால், தனியார் நிறுவனங்கள் அதனை மதிப்பது இல்லை. அதற்குரிய அபராதம் மட்டும் கட்டி விடுகிறோம் என்கின்றனர். ஆனால் அவ்வாறு விதிக்கப்படும் அபராதம் மிகக் குறைவு.

இவ்வாறு கிராமப்புற பகுதிகளில் கவனம் செலுத்தாததனால் சென்ற வருடம் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.3200 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் தனியார் நிறுவனங்களின் முறையீட்டினால் ரூ.1200 கோடி அபராதம் செலுத்தினால் போதும் என தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால், நாங்கள் கிராமப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம். ஒரு கிராமத்திற்கு தொலைபேசி இணைப்பு அளிக்க ரூ.38,000 செலவு ஆகும். ஆனால் மாதம் ரூ.5000 மட்டும் வருவாய் கிடைக்கும். ஆனாலும் பிஸ்என்எல் மக்களுக்காக செயல்படும் நிறுவனம் என்பதால் சேவையை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறோம். பலமுனை தாக்குதல் எங்கள் நிறுவனத்தின் மீது நடத்தப்படுகிறது. நாங்கள் அதை எல்லாம் சமாளித்துக் கொண்டுள்ளோம்.

மூன்று வருட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்பாடு பற்றி என்ன கூறுகிறீர்கள்?

இந்த அரசானது உலக வங்கியின் கொள்கைகளை முழு மூச்சாக அமல்படுத்தி வருகிறது. அனைத்துத் துறைகளையும் தனியார் மயப்படுத்த தீவிரமாக இருக்கின்றனர். சிறப்புப் பொருளாதா மண்டலம், விமான நிலைய விரிவாக்கம் என்ற பெயரில் ஒவ்வொரு நாளும் சாமானிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும்,தொழிலாளர்களுக்கும் எதிரான தாக்குதல் நடைபெற்று வருகிறது. தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களுக்கு விரோதமாகத் திருத்தப்படுகின்றன.

ஒரு சிறு எடுத்துக்காட்டு சொல்கிறேன் கேளுங்கள்.

நாட்டின் தொலைத் தொடர்பில் முக்கிய நிறுவனமான நாங்கள் எங்களது கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் செய்த பின்பு அதுபற்றி விளக்க, எங்கள் துறை அமைச்சரைப் பார்க்கச் சென்றால் அவரைப் பார்ப்பதே கடினமாக உள்ளது. ஆனால் பம்பாயின் பங்குச் சந்தை தரகர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினால் இந்த நாட்டின் நிதி அமைச்சர் விமானத்தில் உடனே மும்பைக்குப் பறக்கிறார். அவர்கள் கேட்ட சலுகைகளை அறிவிக்கிறார். ஆனால் தொழிலாளர்களுக்கான வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தை உயர்த்த நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கிறோம். இன்னும் வெற்றி பெற முடியவில்லை.

இது ஒன்றே போதும். அரசின் செயல்பாட்டினை விளக்க. மூன்றாண்டு அரசின் செயல்பாடுகள் இது மக்களுக்கான அரசு அல்ல என்பதை தெளிவுபடுத்தும்.

சந்திப்பு: வழக்கறிஞர் கு.காமராஜ்
Pin It