பிப்ரவரி முதல் வாரத்தில் பா.ஜ.க. தலைவர் அத்வானி - தனது இல்லத்தில் இஸ்ரேல் நாட்டு யூதர்கள், பார்ப்பனர்களை அழைத்து விருந்து வைத்துள்ளார். இந்துமத சாமியார்கள் சிலரோடு விருந்துக்கு அழைக்கப்பட்ட முக்கிய புள்ளி, சுப்ரமணிய சாமி. சுப்ரமணியசாமி, வாஜ்பாய் போன்ற பா.ஜ.க. தலைவர்களை விமர்சித்தாலும், ஆர்.எஸ்.எஸ். தலைமையிலுள்ள பார்ப்பனர்கள் மற்றும் யூதர்களோடு நெருக்கமானவர்.

சுப்ரமணிசாமியை அழைப்பதில்கூட - அத்வானிக்கு தயக்கம் தான். ஆனாலும் சுப்ரமணியசாமியைக் கட்டாயமாக அழைக்க வேண்டும் என்று அத்வானிக்கு எடுத்துச் சொன்னவர் சர்வதேச ‘கோடீசுவர’ சாமியாரான பார்ப்பனர் தயானந்த சரசுவதி. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இந்த செய்திகளை வெளியிட்டுள்ளது.

திருவரங்கத்தில் பெரியார் சிலையை வைக்கவே கூடாது என்று, எதிர்ப்பு இயக்கம் நடத்தி, பெரியார் சிலை உடைப்புக்கு தூண்டிவிட்டவரே இந்தப் பார்ப்பனர் தான். ஆனாலும், தயானந்த சரசுவதி மீது நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்று கலைஞர் ஆட்சியின் காவல்துறை திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.

சிலை உடைப்பு தொடர்பாக திருவரங்கம் காவல்துறையிடம் கொடுத்துள்ள புகாரிலே இவரது பெயர் இடம் பெற்றிருந்தும், கலைஞர் அரசுப் பார்ப்பனர் மீது கை வைக்க அஞ்சி ஒதுங்கிவிட்டது. ஆனால் பெரியார் தி.க.வினர் மீது மட்டும் பாதுகாப்புச் சட்டங்கள் பாய்ந்துள்ளன!

தி.மு.க.வின் ‘கொள்கை’

உ.பி.யில் முலாயம்சிங் தலைமையிலான ஆட்சியை 356 வது பிரிவைப் பயன்படுத்தி, கலைப்பதற்கான முயற்சிகளை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மேற்கொண்டது. புது டில்லி சென்றிருந்த முதல்வர் கலைஞரிடம் இதுபற்றி கேட்டதற்கு, உ.பி. பிரச்சினையில் காங்கிரஸ் நல்ல முடிவையே எடுக்கும் என்று கூறினார். தி.மு.க.வின் பார்வையில் நல்ல முடிவு என்றால் ‘356’ பிரிவை எதிர்ப்பது தான் என்று கருதுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.

இந்தப் பிரிவுக்கு அவ்வப்போது தி.மு.க எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறது. தி.மு.க. ஆட்சியே இரண்டு முறை இந்தப் பிரிவின் கீழ் பலிகடாவாக்கப்பட்டுள்ளது. முலாயம்சிங் ஆட்சி மீது 356 வது பிரிவு பாயப் போகிறது என்ற நிலையில் பி.டி.அய். செய்தி நிறுவனம், தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளராக இருக்கும் டி.கே.எஸ். இளங்கோவனிடம் கருத்து கேட்டது.

அவரோ 356வது பிரிவைப் பயன்படுத்துவதை, தி.மு.க. ஆதரிக்காது என்று கொள்கைப் பார்வையில் கருத்து கூறிவிட்டார். உடனே காங்கிரஸ் கட்சியிடமிருந்து அதிருப்திகள் வெளிவர கலைஞர் அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டார். தி.மு.க. தலைமை கழக செயலாளர் வெளியிட்ட கருத்து தி.மு.க.வின் கருத்து அல்ல என்றார். அப்படியானால் இதில் தி.மு.க.வின் கருத்து என்ன? இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் எந்த முடிவை எடுக்கிறதோ, அதுதான் தி.மு.க. வின் கருத்து என்று அறிவித்து விட்டார்.

அதேபோல் ஈழப் பிரச்சினையில் தி.மு.க.வின் கருத்தையும் ‘கறாராக’ச் சொல்லி விட்டார் கலைஞர். “இந்திய நாட்டு நலனையும், பாதுகாப்பையும் அதற்காக இந்திய நாட்டு மத்திய அரசு எடுக்கின்ற தேவையான நடவடிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு, இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் தலையிடுமென்று யாரும் கனவு காண வேண்டாம்” - என்று அறிவுறுத்தப்படுகிறது. (‘முரசொலி’ பிப்.24) என்று “வெட்டு ஒன்று துண்டு இரண்டு” என்று அறிவித்துவிட்டார். அதாவது தி.மு.க. - பெரியார் - அண்ணா கொள்கை வழி நடக்கும் என்று கனவுகூட யாரும் காணக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கிறார்.

மத்திய அரசின் கொள்கைதான் “தி.மு.க.வின் கொள்கை” என்பதுதான் பெரியார் - அண்ணா கொள்கையா என்று கேட்டால், அதற்கும் கலைஞர் பதில் சொல்லி விடுவார் - “பெரியாரும், அண்ணாவும் இப்போது இருந்திருந்தால், இதைத்தான் சொல்லியிருப்பார்கள்” என்று!

‘சென்னை சங்கமம்’

கவிஞர் கனிமொழி உருவாக்கியுள்ள ‘தமிழ் மய்யம்’ என்ற தொண்டு நிறுவனமும், தமிழகச் சுற்றுலாத் துறையும் இணைந்து சென்னையில் ஒருவார காலம் மக்களிடம் போய் தமிழர்களின் கலைவடிவங்களை கலைவிழாவாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

நலிவுற்று கிடந்த 700 கலைக் குழுக்களுக்கு நல்ல வாய்ப்பை உருவாக்கியிருப்பதோடு, வீட்டுக்குள் தொலைக்காட்சி சீரியல்களில், சினிமா மாயையில் மூழ்கிப் போய்க் கிடந்த மக்களை ஒரு வார காலம் வீதிக்குக் கொண்டு வந்து - மக்கள் கலைகளைப் பார்க்க வைத்திருக்கிறது, இந்நிகழ்ச்சி. வீதிகளுக்கு விழாவைக் கொண்டு வந்தது, இதன் சிறப்பு. துக்ளக் சோ - பார்ப்பனர், இந்த முயற்சிகளைக் கடுமையாக விமர்சித்திருப்பதே, தமிழர்கள், இதை ஆதரிக்க வேண்டும் என்பதற்கான சரியான அடையாளமாகும். கோயில் விழாக்களின் மூலமே இந்த கலை வடிவங்களைப் பரப்ப வேண்டும் என்கிறார் சோ!

கோயிலைத் தாண்டி, மக்களிடம் இந்தக் கலை வடிவங்கள் நேரடியாக வீதிக்கு வருவதை இவரால் சீரணிக்க முடியவில்லை போலும். இனி வரும் ஆண்டுகளில் தமிழர் திருநாளான பொங்கல் நாட்களின் போது இந்த ‘சங்கமம்’ நடக்கும் என்ற அறிவிப்பு, பாராட்டி வரவேற்கத்தக்கது. ஆனாலும் - ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறோம்.

பழந்தமிழர் கலைவடிவங்களில் புகுந்துள்ள சாதி-மூடத்தனங்களை நீக்கிவிட்டு, சமத்துவ பகுத்தறிவுக் கலாச்சாரப் பார்வையோடு கலைவடிவங்களையும், உள்ளடக்கத்தையும் மாற்றியமைப்பதில் தமிழ் மய்யம் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்த விரும்புகிறோம்.

லாலுவின் சாதனை

தொடர்ந்து கட்டண உயர்வில்லாத ஏழை மக்களுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் லல்லு பிரசாத்! பார்ப்பனர் பார்வையில் ‘தகுதி திறமை’யற்றவராக ‘கோமாளியாக’ சித்திரிக்கப்படுகிற லாலு, தனது அனுபவ அறிவால் சாதனைகளைக் குவிக்கிறார். லாலுவின் பணி தொடரட்டும்!

Pin It