தமிழ்நாட்டில் சுயநிதிக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிடக் கூடுதல் கட்டணங்கள் வாங்கப்படுகின்றன என்பது கல்லில் செதுக்கியுள்ள உண்மை. இது பற்றி அரசுக்கு புகார் ஏதும் வரவில்லை என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறுவதாலேயே, கூடுதல் கட்டணங்கள் வாங்கப்படவில்லை என்று கூற முடியாது.

தனியார் நடத்தும் சுயநிதிக் கல்லூரிகள் நடத்தும், நன்கொடைக் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்துவதில், தமிழக அரசுக்குப் பொறுப்பும் கடமையும் உண்டு. இது மக்கள் பிரச்சனை என்பதை அரசு மறந்துவிடக் கூடாது.

தனியார், சுயநிதிக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்தும் உரிமை, மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டு, எம்.சி.அய்., டி.சி.அய்., ஏ.அய்.சி.டி.இ., என்.சி.டி.இ. போன்ற அமைப்புகளிடம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி கூறுவதும் உண்மைதான். மாநிலங்களின் பட்டியலில் இருந்த கல்வி உரிமை - 1976-ல் அவசர நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது, இதற்கு முக்கியக் காரணம். இதை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கு தி.மு.க. ஆட்சி, ஏன், எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்ற நியாயமான கேள்வியும் எழுகிறது.

இது தொடர்பாக மற்றொரு பிரச்சினையையும் சுட்டிக் காட்ட வேண்டும். தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிக்கு 1552 இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. மருத்துவ உயர்பட்டப் படிப்பில் 50 சதவீத இடங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. இடஒதுக்கீடுகள் ஏதுமின்றி, மத்திய அரசால் இவை நிரப்பப்படுகின்றன. இதற்கு எதிராக - சமூகநீதி அடிப்படையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வந்தாலும், மாநில அரசோ, மத்திய அரசோ ‘கண்டும் காணாதது’ போலவே இருந்து வருகின்றன.

தமிழ்நாடு - இடஒதுக்கீட்டில், இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலம் என்பது உண்மைதான். என்றாலும் அமுலாக்க நிலையில் நிலவும் அநீதிகளையும் சுட்டிக் காட்ட வேண்டும். அரசு கல்லூரிகளானாலும், தனியார் கல்லூரிகளானாலும், ஒவ்வொரு பாடப் பிரிவிலும் தனித்தனியாக, 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவது இல்லை.

ஒட்டு மொத்த இடங்களில் 69 சதவீத ஒதுக்கீடு செய்யப்படுவதாக கல்லூரிகள் அறிவிக்கின்றன. இதனால், வேலை வாய்ப்புக்குரிய பாடப் பிரிவுகளில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல், மாணவர்கள் சேருவதற்கு ஆர்வம் காட்டாத பாடப் பிரிவுகளில், இட ஒதுக்கீட்டின் கீழ் வரக்கூடிய மாணவர்கள், தள்ளப்படுகிறார்கள்.

‘பிளஸ்டூ’ வகுப்பு சேர்க்கையிலும், இந்த அநீதி நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் விரும்பி சேரக் கூடிய பாடப் பிரிவுகளை ‘சுயநிதிப் பிரிவுகளாக’ அறிவித்து, அதற்குக் கட்டணம், நன்கொடை செலுத்திப் படிக்க வேண்டிய நிலை, அரசு கல்லூரிகளில்கூட இருக்கிறது.

அய்.அய்.டி., ஏ.அய்.அய்.எம்.எஸ். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்து நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் வந்த பிறகும்கூட, பார்ப்பன சக்திகள், உச்சநீதிமன்றத்தின் வழியாக, இவ்வாண்டு இடஒதுக்கீட்டை அமுலாக்க விடாமல், தடுத்து நிறுத்தி விட்டனர்.

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற அகில இந்திய தேர்விலும், பார்ப்பன அதிகார வர்க்கம், துரோகமிழைத்து வருகிறது. திறந்த போட்டிக்கான இடங்களில் இடம் பெறும் வாய்ப்புப் பெற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களை, அதில் இடம் பெறச் செய்யாமல் இடஒதுக்கீடு கோட்டாவின் கீழே தேர்வு செய்து விடுகிறார்கள். இதனால், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான பிரதிநிதித்துவம் குறைந்து விடுகிறது. உச்சநீதிமன்றம் ஏற்கனவே இத்தகைய சேர்க்கை முறை கூடாது என்று தீர்ப்பளித்தாலும் கூட, நீதிமன்ற ஆணைகளே மீறப்படுகின்றன. கல்வியில் இந்த நிலை என்றால், வேலை வாய்ப்பில் என்ன நிலை?

தனியார் துறைகளில் மட்டுமே வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நிலையில், தனியார் துறையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தும் நடவடிக்கைகள் எதிலுமே, மத்திய மாநில அரசுகள் முனைப்புக் காட்டவில்லை. அவ்வப்போது, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதோடு, பிரச்சினை முடிக்கப்பட்டு விட்டது. உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு, பார்ப்பன சக்திகளும், ஊடகங்களும் உருவாக்கிய எதிர்ப்பு அலைகளில் - தனியார் துறை இடஒதுக்கீடு கோரிக்கை அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. பார்ப்பன ஆதிக்க சக்திகளின் நோக்கமே அதுதான்!

நாடாளுமன்றத்துக்கான தொகுதி ஒதுக்கீட்டிலும், அநீதிகள் தலைதூக்கியுள்ளன. தமிழ்நாட்டிலுள்ள ஏழு நாடாளுமன்றத்துக்கான தனித் தொகுதிகளை, ‘தொகுதி மறு சீரமைப்பு ஆணையம்’ மாற்றியமைத்துள்ளது. அந்தத் தொகுதிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைய வேண்டும். அப்படித்தான் தொகுதி மறு சீரமைப்புச் சட்டமும் கூறுகிறது. ஆனால், அப்படி ஒதுக்கீடு செய்யப்படாமல், கடலோரத்திலுள்ள வட மாவட்டத்துக்குள்ளேயே (திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, கடலூர், சிதம்பரம், நாகப்பட்டிணம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், பட்டியல் பிரிவில் இடம் பெற்றுள்ள தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர் சமூகப் பிரிவினரின், அரசியல் உரிமைகள் பறிக்கப்படுவதாக, அந்தப் பகுதிகளிலிருந்து எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. இந்தக் குரலின் நியாயத்தை மறுத்துவிட முடியாது. இந்தப் புதிய தொகுதி ஒதுக்கீடு அமுலுக்கு வந்து விட்டால், அடுத்து 2026 இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடக்கும்வரை, இதே நிலைதான் நீடிக்கும். தமிழ்நாட்டில் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ள பெரிய அரசியல் கட்சிகள் இப்பிரச்சினையில் மவுனமே சாதிக்கின்றன.

கல்வி, வேலை, அரசியல் துறைகளில் அனைத்துப் பிரிவினருக்கும் உரிய பங்கீடு வழங்கப்படவேண்டும் என்பதே, இடஒதுக்கீட்டின் அடிப்படையான நோக்கமாகும். ஆனால், செயற்பாட்டு தளத்திலும் அமுலாக்கத்திலும் அனைத்துப் பிரிவினருக்கும் சம உரிமை வழங்கப்படாத நடைமுறைகளைப் பின்பற்றிக் கொண்டு, மேலோட்டமாக ‘இடஒதுக்கீட்டுப் பெருமை’களை பேசிக் கொண்டிருப்பது. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். குறியீடுகளினாலேயே நாம் குதூகலம் அடைந்துவிடக் கூடாது.

குடியரசுத் தலைவர் பதவியில் ஒரு பெண் அமர்த்தப்படுவது, சிறப்புக்குரியதுதான். பாராட்டுக்குரியதுதான். இது பெண்கள் உரிமையை அங்கீகரிப்பதற்கான ஒரு குறியீடு. அவ்வளவே; குடியரசுத் தலைவர் பதவியில் ஒரு பெண் அமர்ந்து விட்டதாலே பெண்களுக்கு - 33 சதவீத ஒதுக்கீடு வந்துவிட்டதுபோல் பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்ததாலேயே இந்தியாவில் தலித் மக்கள், உரிமை பெற்று விட்டார்களா, என்ன?

Pin It