சமீபத்தில் இந்து மதவாதிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். கமலகாசன் நடித்து வெளிவந்துள்ள ‘மன்மதன் அம்பு’ திரைப் படத்தில் பெண்கள் நோன்பு இருப்பதில் உள்ள மூடத்தனங்களை அம்பலப்படுத்தும் பாடல் ஒன்று அத்திரைப்படத்தில் இருக்கிறதாம் - அதை அகற்றக் கோரி வழக்கு. இப்போது கமலகாசனும் பாடலை எதிர்ப்புக்குப் பணிந்து நீக்கி விட்டார்.

மதவாதிகள் என்றாலே மக்களுக்கு தெளிவு வந்துவிடக் கூடாது என்ற விஷயத்தில் மிகவும் தெளிவாக இருப்பார்கள். அதிலும் இந்து மதத்திலுள்ள பார்ப்பன உயர்சாதிக்காரர் களும், மார்வாடிகளும், வியாபாரிகளும் அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் மக்களுக்கு உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள் என்பதற்கு இந்த வழக்கும் கூட ஒரு உதாரணம்.

நோன்பு என்பது பக்தர்கள் கடவுளிடம் ஏதேனும் கோரிக்கை நிறைவேற்றக் கோரி தங்கள் வசதிக்கேற்ப உணவு முறையை மாற்றி உண்பதுதான். இதைக் கொச்சைப் படுத்தும் பாடலை அகற்றக் கோரும் பக்தர்கள், கடவுளையே கேவலப்படுத்தும் பாடல்கள் இன்றும் - வானொலி, தொலைக் காட்சி மற்றும் கோவில்களில் தினமும் வெளியாவதை ஏன் தடுக்கவில்லை? அந்தப் பாடல்களை எழுதியவர், இசை யமைத்தவர், பாடியவர், ஒளிபரப்பு கிறவர்கள் மீது ஏன் வழக்கு தொடர வில்லை?

கடவுள்களின் வேடமணிந்து தெருக் களில் பிச்சை யெடுத்து வரும் நபர்களைப் பற்றி ஏன் கவலைப்படவில்லை. கடவுள் வேடமணிந்து பிச்சையெடுப்பது பக்தர் களின் மனதை புண்படுத்தவில்லையா?

ஆண்டுதோறும் தந்தை பெரியார் இட்ட ஆணையை செயல்படுத்துவதுபோல் பிள்ளையாரை கடலிலும், குளத்தி லும் போட்டு உடைப்பது பக்தர்கள் செய்யக் கூடிய காரியமா?

இதோ சில பக்திப் பாடல்கள்....

“தாயே யசோதா உந்தன் ஆயர்குலத் துதித்த

மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும்

ஜாலத்தைக் கேளடி - தாயே

பாலனென்று தாவி யணைத்தேன்....

மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டான்

பாலனல்லடி உன்மகன் - ஜாலமாக செய்ததெல்லாம்

நாலு பேர்கள் கேட்கச் சொன்னால்

நாண மிக மாட்டுதடி - தாயே யசோதா?

(இது ராமனாக அவதாரம் எடுத்த கிருஷ்ணனின் யோக்யதை!)

அடுத்து முருகனுக்கே கட்டளை யிடும் முட்டாள் தனமான கந்த சஷ்டி கவசம்...

“பேசிய வாய் தனை பெருவேல் காக்க

செப்பிய நாவை செவ்வேல் காக்க

பிட்டம் (குண்டி) இரண்டும் பின்வேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க...”

நல்லவேளை கீழே விழும் மலத்தை கீழ்வேல் காக்க என்று எழுத மறந்துவிட்டான் போலும்.

“சேர் இள முலைமார் செவ்வேல் காக்க

ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க”

முருகனிடம் என்னுடையதையும், என் மனைவியுடை யதையும் காத்துக் கொண்டிரு என்று வேண்டுகிறான்.

உண்மை நிலவரம் என்னவெனில், “கந்தன் வேல் தனை காவல்துறை காக்க” என்று காவல்துறை யினர் வேல் திருட்டுப் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

உண்மையிலேயே முருகன் என்று ஒரு கடவுள் இருந்தால் பாடலை எழுதியவன், படிக்கிறவன்களை விட்டு வைப்பானா?

திருப்பாவை என்ற நூலில் ஆண்டாள் என்ற ஒரு பெண் எழுதியதாகச் சொல்லப்படும் பாடல்கள்:

“கற்று கறவைகள் பல கறந்து

குற்றமென்றும் இல்லாத

கோவலர் தன் பொற்கொடியே!

புற்றவு அல்குல் புனமயிலே”

காலையில் குளிக்கப் போகும்போது பெண்களை எழுப்பும் பாடல்... புற்றில் உள்ள பாம்பின் படம் எவ்வளவு பெரிதாக இருக்குமோ அந்த அளவு பெண்குறியை உடையவளே எழுந்து வா என்று பாடுகிறாள். ஒரு பெண்ணை வர்ணிப்பதற்கு வேறு உறுப்பு எதுவும் கிடைக்கவில்லையா? அதே திருப்பாவையில்

குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டிலின்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்”

தன்னை வணங்க வந்த பக்தையின் கொங்கையின் மேல் வைத்துக் கிடந்தானாம்? எதை வைத்துக் கிடந்தான் என்று தெரியவில்லை. வாயைத் திறக்கணுமாம்! இதெல்லாம் பக்திப் பாட்டு....

“ஆயர் பாடி மாளிகையில் தாய்மடியில்

கற்றினைப்போல் - மாயக்கண்ணன்

தூங்குகிறான் தாலேலோ -

பின்னலிட்டகோபியரின் கன்னத்திலே கன்னம்வைத்து

மன்மதன் போல் லீலை செய்தான் தாலேலோ”

இது இன்றும் வானொலியில் போடப்படும் பக்திப் பாடல்.

“தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணனால்

தெருவிலே

பெண்களுக்கு ஓயாத தொல்லை” - பாரதியார்

வெண்ணையை திருடுவான், பெண்களை கேலி செய்வான், புடவையில் சேறை வாரி இறைப்பான், பின்னலை பின்னின்று இழுப்பான் இப்படி ஈவ்டீசிங் செய்யும் வேலைகளைத் தெளிவாக விளக்கும் பாடல்.

இதுபோல இன்னும் ஆயிரக்கணக்கான மோசமான கதைகளும், புராணங்களும், பாடல்களும் இந்த இந்து மதவாதிகளுக்கு ஏன் தென்படவில்லை?

சிறுதொண்டநாயனைப் போல தன் பிள்ளையை வெட்டி கறி சோறுபோடும் பக்தன் இல்லாமல் போனது எதனால்? இறைவனுக்கு தன் மனைவியை கூட்டிக் கொடுத்த இயற் பகை நாயனைப்போல் இன்று எவனாவது செய்வானா? சட்டமும் சமுதாயமும் அவனை ஏற்றுக் கொள்ளுமா?

கர்நாடகாவில் மதுபான விடுதிக்குச் சென்ற பெண்களை கலாச்சார சீரழிவு என்று அடித்த இந்துத்துவா வாதிகள், கோபுரங்களிலும், தேரிலும் உள்ள சிலைகளை கவனிக்கவில்லையா? இது இவர்களுடைய கலாச்சாரத் திற்கு இழிவாகத் தெரியவில்லையா?

உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோவை சித்ரவதை செய்து கொன்ற மதவாதிகள்கூட இன்று உலகம் உருண்டையென்று “புதிய ஏற்பாடு” பைபிளில் திருத்தி யிருக்கிறார்கள். அதுபோல இந்துமதவாதிகளே நீங்களும் கோபுரங்களிலும், புராணங்களிலும், பாடல்களிலும் உள்ள உங்களின் சக்தியுள்ள கடவுளின் மேல் சொல்லப்பட் டிருக்கிற அயோக்கியத்தனங்களை எப்போது அகற்றப் போகிறீர்கள்? இது நோன்பு இருப்பதைவிட அதிலுள்ள மூடத்தனங்களைவிட கேவலமாகத் தெரியவில்லையா?

உச்சநீதிமன்றமே கூறுகிறது: துரோணாச்சாரிகட்டைவிரல் கேட்டது - வெட்கக் கேடானது!

ஏகலைவன் கட்டை விரலை துரோ ணாச்சாரி குருதட்சணையாகக் கேட்டது வெட்கக்கேடான - அவமான கரமான செயல் என்றும், பழங்குடி மக்களுக்கு இந் நாட்டில் அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜனவரி 5 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடி வகுப்பைச் சார்ந்த நந்தாபாய் (25) என்ற பெண், உயர்சாதிக்காரர் ஒருவருடன் பால் உறவு தொடர்பு கொண்டிருந்தார் என்பதற்காக அந்தப் பெண்ணை நிர்வாணமாக வீதிகளில் ஊர்வலமாக வரச் செய்த 5 சாதி வெறியர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. மேல் முறையீட்டில் மாவட்ட நீதிமன்றத்தின் தண்டனையை (பம்பாய் உயர்நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது) உறுதி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டே கட்ஜ் மற்றும் பெண் நீதிபதி ஜியான் சுதா மிஸ்ரா, தங்களது விரிவான தீர்ப்பில் மானுடவியல் வரலாறு பற்றி விரிவாக எழுதியுள்ளனர். திராவிடர்களுக்கு முன்பே இங்கே பூர்வீகக் குடிகளாக இருந்தவர்கள், பழங்குடி மக்கள் தான் என்று கூறும் நீதிபதிகள், இந்தியா வில் பெரும்பான்மை மக்கள் குடியேறி யவர்களே என்றும், இந்தியா, பல்வேறு மொழி, கலாச்சாரம், பண்பாடுகளைக் கொண்ட நாடு என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்தியாவை ஒன்றுபடுத்திக் காப்பாற்ற வேண்டுமானால், அனைத்து சமூக, கலாச்சார இனங்களையும் சமமாக மதித்து சகிப்புத் தன்மை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும்.

(It is absolutely essential if we wish to keep our country united to have tolerance and equal respect for all communities and sects) - என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள் ளனர். ‘சமத்துவம்’ என்பதை ஒப்புக்காக பேசிக் கொண்டிருப்பதால் உண்மையான சமத்துவத்தை வழங்கிட முடியாது. வரலாற்று ரீதியாக அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு சிறப்புப் பாதுகாப்புகளையும் உதவிகளையும் வழங்கியாக வேண்டும். இதற்காகத்தான் நமது அரசியல் சட்டத்தில் 15(4), 15(5), 16(4), 16(4ய), 46 போன்ற சிறப்பு பிரிவுகள் (இவை கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடுகள் மற்றும் சமவாய்ப்பை வலியுறுத்தும் பிரிவுகள்) இடம் பெறச் செய்யப்பட்டுள்ளன என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

(However, giving formal equality to all groups or communities in India would not result in genuine equality. The historically disadvantaged groups must be given special protection and help so that they can be uplifted from their poverty and low social status. It is for this reason that special provisions have been made in our Constitution in Articles 15(5), 15(5), 16(4), 16(4A), 46, etc. for the uplift of these groups

பழங்குடி மக்களுக்கு அநீதி இழைக்கப் பட்டதற்கு உதாரணமாக மகாபாரதத்தில் ஏகலைவன் கட்டை விரலை துரோணாச் சாரி குருதட்சணையாக கேட்டதை நீதிபதிகள் எடுத்துக் காட்டியுள்ளனர்.

“துரோணாச்சாரியின் இந்த செயல் வெட்கக் கேடானது; அவமானகரமானது; ஏகலைவனுக்கு அவர் வில் வித்தையைக் கற்றுக் கூட தரவில்லை. எனவே, கட்டை விரலை குருதட்சணையாகக் கேட்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? அதுவும் வலது கை கட்டை விரலை!

இதன் மூலம், துரோணாச்சாரிக்கு வேண்டிய அவரது சீடனான அர்ஜூனனை விட, ஏகலைவன் திறமையாக வில் வீசும் திறன் பெற்றுவிடக் கூடாது என்பது தானே!

“This was a shameful act on the part of Dronacharya. He had not even taught Eklavya, so what right had he to demand guru dakshina, and that too of the right thumb of Eklavya so that the latter may not become a better archer than his favourite pupil Arjun?”

- உச்சநீதிமன்றமே பார்ப்பனீயத்தின் அக்கிரமத்தை, அநீதியை தீர்ப்பில் பதிவு செய்துள்ளது.

இஸ்லாம் மதத்தில் நாத்திகவாதிகள்

இஸ்லாம் மதத்தில் நாத்திகவாதிகள் உண்டா? என்று கேட்டால் இருக்காது என்பது தான் பதிலாக இருக்கும். ஆனால், நாத்திகவாதம் அங்கேயும் தலையெடுத்திருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் தகவல். அதுவும் எங்கே? பாகிஸ்தானில்! மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பாகிஸ்தான் இஸ்லாமிய இளைஞர்கள் கடவுள் மறுப்புக் கொள்கையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

‘நாங்கள் இஸ்லாமைத் துறந்து நாத்திகர்களாவோம்’ என்று அறிவித்திருக்கிறார்கள். எண்ணிக்கையில் இவர்கள் குறைவாக இருந்தாலும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கட்டளைகளும் கட்டுப்பாடுகளும் அவர்களின் சிந்தனை மாற்றத்துக்குக் காரணம் என்று கருதப்படுகிறது. ஹஸ்ரத் நாகுதா என்னும் முன்னாள் பாகிஸ்தான் முஸ்லிம் இதைத் தொடங்கியிருக்கிறார். ‘ஏன் நாத்திகர் ஆனீர்கள்?’ என்னும் கேள்விக்கு ஹஸ்ரத்தின் பதில்:

“நான் சவுதியில் இருந்தேன். இரண்டு முறை ஹஜ் பயணம் மேற்கொண்டவன் நான். நாளொன்றுக்கு 5 முறை தொழுகை நடத்தியவன் நான். எனக்கு 18 வயதானபோது நான் முஸ்லிமாக இருப்பதற்குக் காரணம் என் பெற்றோர் முஸ்லிம்களாக இருந்ததன்றி வேறு காரணம் இல்லையென்பதை உணர்ந்தேன்.”

ஹஸ்ரத் லாகூரைச் சேர்ந்த கம்ப்யூட்டர் புரோகிராமர். ‘கடவுள் இருக்கிறார் என்பதை நான் உணர எந்த விதமான சான்றுகளும் கிடைக்கவில்லை. சான்று கிடைக்காத ஒன்றை நம்ப என் மனம் இடந்தரவில்லை’ என்கிறார் இன்னொருவர்.  இந்த வாதங்கள் வேகமாகப் பரவி இஸ்லாமிய சமுதாயத்தில் ஊடுருவி விடுமோ என்னும் அச்சம் கடுங்கோட்பாளர்களிடையே தொடங்கி இருக்கிறது. புதிய சிந்தனையாளர்கள் மொத்தம் 100 பேர்தான் என்றாலும், அச்சம் அச்சம் தானே! ஆதாரம்: ‘தினமணி கதிர்’ 19.9.2010.

தகவல்: தங்க சங்கரபாண்டியன்

அய்யப்ப பக்தர்களுக்கு சில கேள்விகள்

1. அய்யப்பன் பிறந்த கதை அறிவுக்குப் பொருந்துமா?

2. ஆணும் ஆணும் (அரியும்-அரனும்) சேர்ந்தால் பிள்ளை பிறக்குமா?

3. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை எனப் பாடும் பக்தர்கள் சொகுசு வண் டியில் சபரிமலைக்கு செல்வது ஏன்?

4. சாமியே சரணம் என்று கூறும் பக்தர்களே! உங்கள் பேருந்துகளும் மற்ற வண்டிகளைப் போல கரணம் அடிப்பது ஏன்?

5. சக்தியுள்ள கடவுள் அய்யப்பன் என்றால் தமிழ்நாட்டுக் கடவுள்களுக்கெல்லாம் சக்தி இல்லாமல் போய் விட்டதா?

6. தமிழ்நாட்டுக் கடவுள்களை புறக் கணித்து விட்டு அய்யப்பனை வழி படும் பக்தர்களே! தமிழ்க் கடவுள் களின் தரிசனம் மீது சலிப்பு ஏற்பட்டு விட்டதா?

7. தமிழ்க் கடவுள் என்று முருகனைக் கொண்டாடும் பக்தர்களே! இந்த சீசனில் மட்டும் அய்யப்பன் புகழ் பாடுவது ஏன்? முருகன் வெளி நாட்டுக்குச் சென்று விட்டாரா?

8.                    40 நாட்கள் மட்டும் விரதமிருக்கும் பக்தர்களே! வருடத்தில் மற்ற நாட்களில் எப்படி இருப்பீர்கள்?

9. முல்லைப் பெரியாறு தண்ணீரை தமிழ் நாட்டுக்குத் தரமறுக்கும் மலை யாளிக்கு, இரு முடி என்ற பெயரில் தமிழ்நாட்டுப் பொருள்களை கொண்டு போய் கொடுக்கிறீர்களே, இது நியாயமா?

10. அய்யப்பனை தரிசிக்க கேரளாவுக்கு படையெடுக்கும் பக்தர்களே! தமிழ் நாட்டுக் கடவுள்களை, கோயில்களை என்ன செய்யலாம்?

- பெரியார் திராவிடர் கழகம் மடத்துக்குளம்

Pin It